புலம்பல் 1 : 1 (RCTA)
முதல் புலம்பல்: ஆலேஃப்: மக்கள் மலிந்த நகரமாயிருந்தவள் எவ்வளவோ தனியள் ஆனாளோ! மக்கள் இனங்களின் பேரரசி கைம்பெண் நிலைக்கு நிகரானாள்; மாநிலங்களுக்குத் தலைவியாயிருந்தவள் அடிமை நிலைக்கு உள்ளானாள்.
புலம்பல் 1 : 2 (RCTA)
பேத்: இரவெல்லாம் இடைவிடாது அழுத கண்ணீர் அவள் கன்னங்களில் ஒடி வழிகின்றது; காதலர் அவளுக்குப் பலரிருந்தும், தேற்றுவோன் அவருள் எவனுமில்லை, நண்பர்கள் யாவரும் அவளை வஞ்சித்துப் பகைவராய் மாறிப் போனார்கள்.
புலம்பல் 1 : 3 (RCTA)
கீமேல்: யூதா, நாடுகடத்தப்பட்டுத் துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் ஆளானாள்; புறவினத்தார் நடுவில் குடியிருக்கின்றாள், அமைதி காணாதிருக்கின்றாள்; கொடுங்கோலர் அவளைத் துரத்திப் போய்த் துன்பத்தின் நடுவில் பிடித்தார்கள்.
புலம்பல் 1 : 4 (RCTA)
தாலேத்: திருவிழாக்களுக்கு வருவோர் இல்லாமையால் சீயோன் செல்லும் வழிகள் புலம்புகின்றன; அவள் வாயில்கள் யாவும் கைவிடப்பட்டன, அவளுடைய அர்ச்சகர்கள் விம்முகின்றனர்; அவளுடைய கன்னிப் பெண்கள் துயருறுகின்றனர், அவளோ வேதனையால் நெருக்கப்படுகிறாள்.
புலம்பல் 1 : 5 (RCTA)
ஹே: அவளுடைய எதிரிகள் தலைமை பெற்றார்கள், பகைவர்கள் வாழ்க்கையில் வளம் பெற்றார்கள்; அவளது எண்ணற்ற அக்கிரமத்தை முன்னிட்டு ஆண்டவரே அவளைத் துன்புறுத்தினார். அவளுடைய குழந்தைகள் கொடியவன் முன்னால் அடிமைத்தனத்திற்கு ஆளானார்கள்.
புலம்பல் 1 : 6 (RCTA)
வெள: சீயோன் மகளின் சிறப்பெல்லாம் அவளை விட்டு நீங்கின; அவளுடைய தலைவர்கள் அனைவரும் மேய்ச்சலற்ற கலைமான்கள் போலாயினர்; துரத்துபவனின் முன்னிலையில் ஆண்மையிழந்து ஒடினார்கள்.
புலம்பல் 1 : 7 (RCTA)
ஸாயின்: துன்பத்தின் கசப்பு நிறைந்த நாட்களில் பண்டை நாளில் அனுபவித்த இன்ப சுகங்களை, யெருசலேம் இன்று நினைத்துப் பார்க்கிறாள்; அவளுடைய மக்கள் பகைவர் கையில் சிக்கி உதவி செய்வாரின்றி அவள் வீழ்ந்த போது, அவளைப் பார்த்துப் பகைவர் நகையாடினர்.
புலம்பல் 1 : 8 (RCTA)
ஹேத்: யெருசலேம் மாபாவம் செய்ததினால், தீட்டுப்பட்டவள் ஆகிவிட்டாள்; அவளை மதித்து வந்தவர் எல்லாரும் அவள் அம்மணத்தைக் கண்டு வெறுத்தார்கள். அவளோ விம்மி அழுது கொண்டு பின்புறம் திரும்பிக் கொள்கின்றாள்.
புலம்பல் 1 : 9 (RCTA)
தேத்: அவளது அசுத்தம் முன்றானையிலும் ஒட்டிக் கொண்டது, தன் முடிவு இப்படியாகுமென அவள் நினைக்கவில்லை; அவளது வீழ்ச்சியோ கொடுமையானது, தேற்றுவார் அவளுக்கு யாருமில்லை; "ஆண்டவரே, பாரும் உன் வேதனையை, பகைவன் இறுமாந்து நிற்கின்றான்!"
புலம்பல் 1 : 10 (RCTA)
இயோத்: அவளுடைய அரும் பெரும் பொருட்கள் அனைத்தின் மேலும் பகைவன் கை வைத்து விட்டான், யார் உம்முடைய பரிசுத்த இடத்தில் நுழைதலாகாதென்று நீர் கட்டளை கொடுத்திருந்திரோ அவர்களே- அந்தப் புறவினத்தாரே- அதனில் நுழைவதைக் கண்டாள்.
புலம்பல் 1 : 11 (RCTA)
காஃப்: அவளுடைய மக்களெல்லாம் உணவு தேடிப் பெருமூச்சு விடுகின்றனர், உயிரைக் காக்கும் உணவுக்காக, அவர்கள் தம் அரும் பொருளெல்லாம் விற்றுவிட்டார்கள்; "ஆண்டவரே, பாரும், கண்ணோக்கியருளும்; ஏனெனில் நான் தாழ்மையுற்றேன்!"
புலம்பல் 1 : 12 (RCTA)
லாமேத்: "இவ்வழியாய்க் கடந்து செல்வோரே, நீங்கள் அனைவரும் நின்று பாருங்கள்: என்னை வாதிக்கும் துயருக்கொப்பாய் வேறேதேனும் துயருண்டோ? அந்தத் துயரை ஆண்டவரே- தம் பெருங் கோபத்தின் நாளில் எனக்குத் தந்தார்.
புலம்பல் 1 : 13 (RCTA)
மேம்: "வானிலிருந்து என் மேல் தீயைப் பொழிந்தார், என் எலும்புகளுக்குள் அதை இறங்கச்செய்தார்; என் கால்களுக்கு வலை வீசினார், என்னைப் பின்புறமாய் வீழ்த்தினார்; அவர் என்னைப் பாழாக்கினார், நாளெல்லாம் துயரத்தில் அமிழ்ந்திருக்கச் செய்தார்.
புலம்பல் 1 : 14 (RCTA)
நூன்: "என் அக்கிரமங்களின் நுகத்தடி என்னை அழுத்துகின்றது, அவற்றைப் பிணைத்தவை அவர் கைகளே; அவை என் கழுத்தில் வைக்கப்பட்டன. என் வலிமையெல்லாம் இழக்கச் செய்தார்; நான் எதிர்க்க முடியாத எதிரிகள் கையில் ஆண்டவர் என்னைக் கையளித்தார்.
புலம்பல் 1 : 15 (RCTA)
சாமேக்: "திறமை மிக்க வீரர் அனைவரையும், ஆண்டவர் என்னிடமிருந்து எடுத்து விட்டார். இளங்காளைகளை அழிக்க எனக்கெதிராய் மாபெரும் கூட்டத்தை வரச் செய்தார்; திராட்சை ஆலையில் மிதிப்பது போலக் கன்னிப் பெண் யூதாவை ஆண்டவர் மிதித்தார்.
புலம்பல் 1 : 16 (RCTA)
ஆயீன்: "ஆதலால் தான் நான் அழுகின்றேன், என் கண்களும் கண்ணீர் பெருக்குகின்றன; ஏனெனில் தேற்றுகிறவர் எனக்குத் தெலைவிலிருக்கிறார், புத்துயிரூட்டக் கூடியவர் அகன்று போனார்; என் மக்கள் நொறுங்குண்டு நாசமானார்கள், ஏனெனில் பகைவன் கை வலுத்துவிட்டது."
புலம்பல் 1 : 17 (RCTA)
பே: தன் கைககளை சீயோன் நீட்டுகின்றாள், அவனைத் தேற்றுவார் யாருமில்லை. சுற்றுப்புறப் பகைவர்களை யாக்கோபுக்கு எதிராய் எழும்பும்படி ஆண்டவர் ஆணை தந்தார்; யெருசலேம் அவர்கள் நடுவினிலே, அசுத்தமான ஒரு பொருளுக்கு ஒப்பானாள்.
புலம்பல் 1 : 18 (RCTA)
சாதே: "ஆண்டவர் நீதி தவறாதவர், அவரது ஆணையை நான் எதிர்த்தேன்; மக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள், எனது துன்பத்தைப் பாருங்கள், என் கன்னிப் பெண்களும் இளங்காளைகளும் அடிமைகளாய்க் கடத்தப்பட்டனர்.
புலம்பல் 1 : 19 (RCTA)
கோப்: "என்னுடைய காதலர்களை நான் கூப்பிட்டேன், ஆனால் அவர்கள் என்னை ஏய்த்தார்கள்; உயிரைக் காத்துக் கொள்ள உணவைத் தேடி நகரத்தினுள் போயிருக்கும் போதே என்னுடைய அர்ச்சகர்கள், முதியோர்கள் ஆகியோர் அங்கேயே மாய்ந்து போயினர்.
புலம்பல் 1 : 20 (RCTA)
ரேஷ்: "ஆண்டவரே, பாரும், நான் துன்புறுகிறேன், என் வயிறு கலங்கி நடுங்குகிறது; என் இதயம் குழம்பிக் கலங்குகிறது, ஏனெனில் நான் துரோகம் செய்தேன்; வெளியிலே வாள் வெட்டி வீழ்த்துகின்றது, வீட்டிலே இருப்பது சாவதைப் போன்றுள்ளது.
புலம்பல் 1 : 21 (RCTA)
ஷின்: "நான் விம்முவதை நீர் கேட்டருளும், தேற்றுவார் எனக்கு யாருமில்லை; என் துன்பத்தைப் பகைவரெல்லாம் கேள்விப்பட்டார், நீர் இதைச் செய்ததற்காக அகமகிழ்ந்தார்; நீர் குறிப்பிட்ட நாள் வரச் செய்யும், அப்போது அவர்கள் என்னைப் போல் ஆவார்கள்.
புலம்பல் 1 : 22 (RCTA)
தௌ: "அவர்கள் செய்த தீமையெல்லாம் உம்முன் வரட்டும்; என்னுடைய எல்லா அக்கிரமங்களுக்காகவும் என்னை நீர் எவ்வாறு தண்டித்தீரோ, அவ்வாறே அவர்களையும் தண்டித்தருளும்; ஏனெனில் என் விம்மல்கள் மிகப் பல, என் மனத் துயர் மிகக் கொடிது."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22