நியாயாதிபதிகள் 6 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்தனர். அவரும் அவர்களை மதியானியர் கையில் ஏழாண்டுகள் விட்டு விட்டார்.
நியாயாதிபதிகள் 6 : 2 (RCTA)
அவர்கள் இவர்களால் வெகு துன்பம் அடைந்தனர். எனவே இவர்களை எதிர்க்க மலைகளில் குகைகளைச் செய்து பாதுகாப்புள்ள இடங்களைத் தேடிக் கொண்டனர்.
நியாயாதிபதிகள் 6 : 3 (RCTA)
இஸ்ராயேலர் விதைத்த பின் மதியானியரும் அமலேசித்தரும் கீழ்த்திசையின் மற்ற இனத்தாரும் அங்கு வந்து குடியேறினர்.
நியாயாதிபதிகள் 6 : 4 (RCTA)
அங்கேயே தம் கூடாரங்களையடித்து காஜா வரை பயிரையெல்லாம் அழித்தனர். இஸ்ராயேலரின் வாழ்வுக்கு வேண்டிய ஆடு மாடுகள், கழுதைகள் ஆகியவற்றில் எதையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
நியாயாதிபதிகள் 6 : 5 (RCTA)
ஏனெனில் அவர்கள் தம் கூடாரங்களோடும் மிருகங்களோடும் வந்தார்கள். அப்போது கணக்கற்ற மனிதரும் ஒட்டகங்களும் வந்திறங்கி வெட்டுக்கிளிகளைப் போல நிறைந்து தம் கைப்பட்டதெல்லாம் அழித்தனர்.
நியாயாதிபதிகள் 6 : 6 (RCTA)
மதியானியருக்கு முன்பாக இஸ்ராயேலர் மிகவும் தாழ்வடைந்தனர்.
நியாயாதிபதிகள் 6 : 7 (RCTA)
ஆகையால் அவர்கள் மதியானியரை எதிர்க்க ஆண்டவரை உதவி கேட்டு மன்றாடினர்.
நியாயாதிபதிகள் 6 : 8 (RCTA)
அவரோ அவர்களிடம் இறைவாக்கினர் ஒருவரை அனுப்பி, "இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் கூறுவதாவது: 'நாம் உங்களை எகிப்திலிருந்து வரச்செய்து அடிமை நாட்டிலிருந்து மீட்டோம்.
நியாயாதிபதிகள் 6 : 9 (RCTA)
எகிப்தியர், இன்னும் உங்களை வதைத்த எல்லா எதிரிகளின் கையினின்றும் உங்களை விடுவித்தோம். நீங்கள் வந்தவுடன் அவர்களைத் துரத்தி அவர்கள் நாடுகளை உங்களுக்குக் கையளித்தோம்.
நியாயாதிபதிகள் 6 : 10 (RCTA)
நாமே உங்கள் ஆண்டவராகிய கடவுள். நீங்கள் வாழும் நாட்டாரான அமோறையரின் தெய்வங்களுக்கு அஞ்ச வேண்டாம் என்று கூறியிருந்தோம். ஆயினும், நமது பேச்சை நீங்கள் கேட்கவில்லை" என்று அறிவித்தார்.
நியாயாதிபதிகள் 6 : 11 (RCTA)
பிறகு ஆண்டவரின் தூதர் வந்து, எஸ்ரி குடும்பத் தலைவனான யோவாசுக்குச் சொந்தமான எபிராவிலிருந்த கருவாலி மரத்தடியில் உட்கார்ந்தார். யோவாசின் மகன் கெதெயோன் மதியானியருக்குத் தப்பியோடக் கோதுமையை அடித்துச் சேர்க்கையில்,
நியாயாதிபதிகள் 6 : 12 (RCTA)
ஆண்டவரின் தூதர் அவனுக்குத் தோன்றி, "மனிதருள் மாவீரனே, ஆண்டவர் உன்னோடு இருப்பாராக" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 13 (RCTA)
கெதெயோன் அவரை நோக்கி, "ஐயனே, ஆண்டவர் எங்களோடு இருப்பாராகில் இவையெல்லாம் எங்களுக்கு நிகழ்வானேன்? ஆண்டவர் எம்மை எகிப்தினின்று மீட்டார் என்று எம் தந்தையர் கூறினதும் சொன்னதுமான மற்ற அதிசயங்கள் எங்கே? இப்போதோ ஆண்டவர் எங்களைக் கைவிட்டு விட்டார்; மதியானியருக்கு எங்களைக் கையளித்தார்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 14 (RCTA)
ஆண்டவர் அவனை நோக்கி, "இதோ உறுதியுடன் நீ சென்று மதியானியர் கைகளினின்று இஸ்ராயேலை மீட்பாய்; நாமே உன்னை அனுப்பினோம் என்று அறிந்து கொள்" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 15 (RCTA)
ஆனால், அவன், "ஆண்டவரே நான் இஸ்ராயேலை எப்படி மீட்பேன்? மனாசே வமிசத்தில் என் குடும்பமே வலுக்குறைந்தது. நானோ என் தந்தை வீட்டில் மிகச் சிறியவன்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 16 (RCTA)
அதற்கு ஆண்டவர், "நாம் உன்னோடு இருப்போம்; மதியானியார் எல்லாரையும் ஒரு மனிதனைப் போல் முறியடிப்பாய்" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 17 (RCTA)
அவனோ, "உமது இரக்கம் எனக்கு உண்டானால் என்னிடம் பேசுபவர் நீரே என்பதற்கு அடையாளம் காண்பியும்.
நியாயாதிபதிகள் 6 : 18 (RCTA)
நான் போய், பலி கொணர்ந்து ஒப்புக்கொடுக்கும் வரை இவ்விடத்தை விட்டு அகலாதேயும்" என்றான். அவரும் மறுமொழியாக, "உன் வருகைக்காகக் காத்திருப்போம்" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 19 (RCTA)
கெதெயோன் போய் ஆட்டுக் குட்டியைச் சமைத்து ஒரு படிக் கோதுமை மாவில் புளியாத அப்பங்கள் செய்து, கறியை ஒரு கூடையிலும், கறிக்குழம்பை ஒரு பானையிலும் வைத்து அனைத்தையும் கருவாலி மரத்தடிக்குக் கொணர்ந்து ஆண்டவருக்கு ஒப்புக் கொடுத்தான்.
நியாயாதிபதிகள் 6 : 20 (RCTA)
ஆண்டவரின் தூதர் அவனை நோக்கி, "நீ கறியையும் அப்பங்களையும் அக்கல்லின் மேல் வைத்துக் குழம்பை அவற்றின் மேல் ஊற்று" என்றார். அவன் அப்படியே செய்தான்.
நியாயாதிபதிகள் 6 : 21 (RCTA)
ஆண்டவனின் தூதர் தம் கைக்கோலை நீட்டிக் கறியையும் அப்பங்களையும் தொடவே, கல்லினின்று தீ எழும்பிக் கறியையும் அப்பங்களையும் சுட்டெரித்தது. ஆண்டவரின் தூதரோ அவன் கண்களினின்று மறைந்தார்.
நியாயாதிபதிகள் 6 : 22 (RCTA)
கெதெயோன், அவர் ஆண்டவரின் தூதர் தான் எனக்கொண்டு, "ஐயோ! என் ஆண்டவராகிய கடவுளே! ஆண்டவரின் தூதரை நான் நேரில் கண்டேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 23 (RCTA)
ஆண்டவர் அவனை நோக்கி, "உனக்குச் சமாதானம் உண்டாகட்டும். அஞ்சாதே, சாகமாட்டாய்" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 24 (RCTA)
எனவே, கெதெயோன் அவ்விடத்திலேயே பலிபீடத்தைக் கட்டி, அதை 'ஆண்டவரின் சமாதானம்' என்று அழைத்தான். அது இன்று வரை அப்படியே வழங்கி வருகிறது.
நியாயாதிபதிகள் 6 : 25 (RCTA)
அவன் எஸ்ரி வம்சத்துக்கு உரிய எபிராவில் இருக்கும் போதே, அன்றிரவு ஆண்டவர் அவனை நோக்கி, "உன் தந்தையின் எருதையும் ஏழு வயதுள்ள மற்றொரு எருதையும் பிடித்துக் கொண்டு உன் தந்தைக்குரிய பாவால் பீடத்தை உடைத்து, அதைச் சுழ்ந்துள்ள மரத்தையும் வெட்டிவிடு.
நியாயாதிபதிகள் 6 : 26 (RCTA)
முன் நீ பலியிட்ட இக்கல்லின் உச்சியில் உன் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, இரண்டாவது எருதைக் கொணர்ந்து, தோப்பில் நீ வெட்டும் விறகுகளை அடுக்கி, அதன் மேல் தகனப்பலியிடு" என்றார்.
நியாயாதிபதிகள் 6 : 27 (RCTA)
ஆகவே, கெதெயோன் தன் ஊழியரில் பத்துப்பேரை அழைத்து, ஆண்டவர் தனக்குச் சொன்னபடி செய்தான்; ஆனால் தன் தந்தை வீட்டாருக்கும் அந்நகர மனிதருக்கும் அஞ்சிப் பகலில் ஒன்றும் செய்யாது இரவில் அதைச் செய்து முடித்தான்.
நியாயாதிபதிகள் 6 : 28 (RCTA)
மறுநாள் காலையில் அந்நகர மனிதர் எழுந்த போது பாவால் பீடம் அழிந்து மரம் வெட்டப்பட்டிருக்கக் கண்டனர். அப்பொழுது கட்டப்பட்டிருந்த பீடத்தின் மேல் மற்றொரு எருது வைக்கப்பட்டிருந்தையும் கண்டனர்.
நியாயாதிபதிகள் 6 : 29 (RCTA)
அப்போது, அவர்கள் ஒருவர் ஒருவரிடம், "இப்படிச் செய்தவன் யார்?" என்றார்கள். இச்செயலைச் செய்தவன் யாரென்று கேட்ட போது, யோவாசின் மகனான கெதெயோன் தான் இவற்றையெல்லாம் செய்தான் என்று சொல்லப்பட்டது.
நியாயாதிபதிகள் 6 : 30 (RCTA)
அப்போது அவர்கள் யோவாசை நோக்கி, "உன் மகனை இவ்விடம் கொண்டு வா, அவன் சாகவேண்டும்; ஏனெனில் அவன் பாவால் பீடத்தை அழித்து விட்டான்; தோப்பு மரங்களையும் வெட்டிவிட்டான்" என்றனர்.
நியாயாதிபதிகள் 6 : 31 (RCTA)
அதற்கு அவன், "பாவாலுக்காகச் சண்டையிட்டு அவன் பழிதீர்ப்பவர் நீங்களோ? அவனுக்கு எதிரியாய் இருப்பவன் நாளை விடியுமுன் சாகட்டும். பாவால் ஒரு தெய்வமானால், அவனே பீடத்தை அழித்தவனைப் பழி வாங்கட்டும்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 32 (RCTA)
பாவாலே தன் பீடத்தை அழித்தவனைப் பழிவாங்கட்டும் என்று யோவாசு கூறினதால், அன்று முதல் கெதெயோன் ஜேரோபாவால் என்று அழைக்கப்பட்டான்.
நியாயாதிபதிகள் 6 : 33 (RCTA)
ஆகவே, மதியானியரும் அமலேசித்தரும் கீழை நாட்டார் அனைவரும் ஒன்று கூடினார்கள். யோர்தான் நதியைக் கடந்து ஜெஸ்ராயேல் பள்ளத்தாக்கில் பாளையம் இறங்கினர்.
நியாயாதிபதிகள் 6 : 34 (RCTA)
அப்போது கெதெயோன் ஆண்டவரால் ஏவப்பட்டு எக்காளம் ஊதி, அபியேசர் குடும்பம் தன்னைப் பின்பற்றிவர அழைத்தான்.
நியாயாதிபதிகள் 6 : 35 (RCTA)
மனாசே வம்சத்தார் எல்லாருக்கும் தூதர்களை அனுப்ப, அவர்களும் அவனைப் பின் பற்றினார். வேறு தூதர் ஆசேர், சாபுலோன், நெப்தலியிடம் செல்லவே, அவர்களும் வந்து சேர்ந்தனர்.
நியாயாதிபதிகள் 6 : 36 (RCTA)
அப்போது கெதெயோன் கடவுளை நோக்கி, "நீர் சொன்னபடி என்னைக் கொண்டு இஸ்ராயேலரை மீட்பாரானால்,
நியாயாதிபதிகள் 6 : 37 (RCTA)
நான் இந்த ஆட்டு மயிரைக் களத்தில் போடுவேன்; பனி மயிரிலே மட்டும் பெய்து, பூமியெல்லாம் ஈரம் இல்லாதிருக்குமானால், நீர் சொன்னபடி இஸ்ராயேலை என் கையால், மீட்பேன் என்று அறிந்து கொள்வேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 38 (RCTA)
அவ்வாறே நடந்தது. அவன் இரவில் எழுந்திருந்து மயிரைப் பிழிந்து ஒரு சட்டி நிறையப் பனியை நிரப்பினான்.
நியாயாதிபதிகள் 6 : 39 (RCTA)
மறுபடி கெதெயோன் கடவுளை நோக்கி, "ஆட்டு மயிரைக் கொண்டு இன்னும் ஓர் அடையாளம் கேட்கத் துணிவேனேயானால், ஆண்டவரே, நீர் என்மேல் கோபம் கொள்ளாதீர்; மயிர்மட்டும் காய்ந்திருக்கவும், பூமி எங்கும் பனியால் நனைந்திருக்கவும் மன்றாடுகிறேன்" என்றான்.
நியாயாதிபதிகள் 6 : 40 (RCTA)
அன்றிரவு அவன் கேட்டபடியே கடவுள் செய்தார்; ஆட்டுமயிர் காய்ந்திருக்கத் தரையில் மட்டும் பனி விழுந்திருந்தது.
❮
❯