நியாயாதிபதிகள் 3 : 1 (RCTA)
இஸ்ராயேலரையும் கானானையரின் போரை அறியாதவர்களையும் சோதிப்பதற்கும்,
நியாயாதிபதிகள் 3 : 2 (RCTA)
அவர்களுடைய பிள்ளைகள் எதிரிகளை எதிர்க்கக் கற்றுக்கொண்டு போர் செய்யும் வழக்கத்தைப் பயில்வதற்கும் ஆண்டவர் விட்டு வைத்த இனங்களாவன:
நியாயாதிபதிகள் 3 : 3 (RCTA)
பிலிஸ்தியருடைய ஐந்து ஆளுநர்களும், கானானையர் அனைவரும், பால்- ஏர்மோன் மலை முதல் ஏமாத் வரைக்கும் லீபான் மலைவாழ் சிதோனியர்களும், ஏவையர்களுமே.
நியாயாதிபதிகள் 3 : 4 (RCTA)
இஸ்ராயேலர் மோயீசன் வழியாகத் தம் முன்னோருக்குச் செவிமடுக்கிறார்களா என்று சோதிக்க ஆண்டவர் மேற்சொன்னவர்களை விட்டு வைத்தார்.
நியாயாதிபதிகள் 3 : 5 (RCTA)
ஆகையால் கானானையர், ஏத்தையர், அமோறையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசேயர் மத்தியிலே இஸ்ராயேல் மக்கள் வாழ்ந்து வந்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 6 (RCTA)
எனவே, இவர்கள் அவர்களின் பெண்களைத் தமக்கு மனைவிகளாக்கியும் தம் பெண்களை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்தும் அவர்களின் தெய்வங்களை வழிபட்டும் வந்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 7 (RCTA)
ஆண்டவர் திருமுன் பாவம் புரிந்து தங்கள் கடவுளை மறந்து போய்ப் பாவாலீமையும் அஸ்த்தரோத்தையும் வழிபட்டனர்.
நியாயாதிபதிகள் 3 : 8 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேலர் மேல் கோபம் கொண்டு மெசெப்பொத்தேமியாவின் அரசனான குசான்ரசாத்தாயிம் என்பவனுக்கு அவர்களைக் கையளிக்கவே, இஸ்ராயேல் மக்கள் எட்டு ஆண்டுகள் அவனுக்கு அடிமைகளாய் இருந்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 9 (RCTA)
மேலும் அவர்கள் ஆண்டவரை மன்றாட, அவர் அவர்களை மீட்கக் காலேபின் தம்பி செனேசின் மகன் ஒத்தோனியலைத் தேர்ந்துகொண்டார்.
நியாயாதிபதிகள் 3 : 10 (RCTA)
ஆண்டவரின் ஆவி அவருடன் இருந்தது. அவர் இஸ்ராயேலருக்கு நீதி வழங்கி வந்தார். அவர் போருக்குப் புறப்பட்டபோது, சீரிய அரசனான குசான்ராசாத்தாயீமை ஆண்டவர் அவனிடம் கையளிக்கவே, அவனை முறியடித்தார்.
நியாயாதிபதிகள் 3 : 11 (RCTA)
நாற்பது ஆண்டுகள் நாட்டில் அமைதி நிலவியது, அப்போது செனேசின் மகன் ஒத்தோனியேல் இறந்தான்.
நியாயாதிபதிகள் 3 : 12 (RCTA)
ஆண்டவருக்கு எதிராக இஸ்ராயேல் மக்கள் மீண்டும் பாவம் செய்தனர். அப்பொழுது அவர் மோவாப் அரசன் ஏக்லோனை அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டார்,. ஏனென்றால் அவர் முன்னிலையில் அவர்கள் தீயன புரிந்திருந்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 13 (RCTA)
அவர் அம்மோன் மக்களையும் அமேக் புதல்வரையும் அவனோடு சேர்த்து விட்டார். அவன் அவர்களோடு சென்று பனைமரத்து ஊரை உரிமையாக்கிக் கொண்டான்.
நியாயாதிபதிகள் 3 : 14 (RCTA)
இஸ்ராயேல் மக்களோ மோவாப் அரசன் ஏக்லோனுக்குப் பதினெட்டு ஆண்டுகள் அடிமைகளாய் இருந்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 15 (RCTA)
பின்பு அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிடவே அவர் அவர்களை மீட்பதற்கு ஜெமினி மகன் ஜேராவின் மகனும்., வலக்கையைப் போல் இடக்கையைப் பயன்படுத்து பவனுமான ஆவோத்தைத் தேர்ந்துகொண்டார். இஸ்ராயேல் மக்கள் அவர் வழியாக மோவாபின் அரசன் ஏக்லோனுக்குக் காணிக்கைகளை அனுப்பினார்.
நியாயாதிபதிகள் 3 : 16 (RCTA)
அவர் ஒரு முழ நீளமும் இரு புறமும் கூர்மையுள்ளதுமான கத்தி ஒன்றும் செய்து தம் போர்வையின் வலப்பக்கத்தில் வைத்துக் கொண்டார்.
நியாயாதிபதிகள் 3 : 17 (RCTA)
அவர் மோவாப் அரசன் ஏக்லோனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார். ஏக்லோன் மிகத் தடித்திருந்தான்.
நியாயாதிபதிகள் 3 : 18 (RCTA)
அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தபின், ஆவோத் தம்மோடு வந்தவர்களுடன் திரும்பினார்.
நியாயாதிபதிகள் 3 : 19 (RCTA)
பிறகு அவர் சிலைகள் இருந்த கல்கலாவிலிருந்து மீண்டும் அரசனிடம் வந்து, "வேந்தே, நான் உம்மிடம் தனித்துப் பேச வேண்டும்" என்றார். அரசனும் மௌனம் கட்டளையிட்டான். சுற்றிலுமிருந்த அனைவரும் வெளியேறினர்.
நியாயாதிபதிகள் 3 : 20 (RCTA)
அப்போது ஆவோத் வேனிற்கால அறையில் அமர்ந்திருந்த அரசனை நெருங்கி, "இறைவனின் வார்த்தையை உம்மிடம் சொல்ல வந்துள்ளேன்" என்றார். அரசன் அரியணையை விட்டு உடனே எழுந்தான்.
நியாயாதிபதிகள் 3 : 21 (RCTA)
அப்போது ஆவோத் இடக்கையை நீட்டி வலப்புறத்திலிருந்த கத்தியை எடுத்து அவனை வயிற்றில் குத்தினார்.
நியாயாதிபதிகள் 3 : 22 (RCTA)
அவர் குத்தின வலுவினால் பிடியும் கத்தியோடு காயத்துக்குள் சென்று கொழுத்த தசையினால் இறுக்கப்பட்டது. ஆவோத் கத்தியை வெளியே எடுக்கவில்லை. கத்தினபடியே உடலில் விட்டு விட்டார். உடனே குதம் வழியாக மல சலம் வெளிப்பட்டன.
நியாயாதிபதிகள் 3 : 23 (RCTA)
ஆவோத் வெகு கவனத்தோடு அறையின் கதவுகளைப் பூட்டிவிட்டார்.
நியாயாதிபதிகள் 3 : 24 (RCTA)
பின்புறக் கதவு வழியே வெளியேறினார். அரசனின் ஊழியர் உட்புகுந்து அறையின் கதவு மூடியிருப்பதைக் கண்டு அரசர் வெளிக்குப் போயிருப்பார் என்று தமக்குள் சொல்லிக்கொண்டனர்.
நியாயாதிபதிகள் 3 : 25 (RCTA)
அவர்கள் வெகுநேரம் காத்திருந்து சலித்துப் போய், ஒருவரும் திறந்து விடாததைக் கண்டு தாமே சாவியைக் கொணர்ந்து திறந்தனர், வேந்தர் தரையில் செத்துக் கிடக்கக் கண்டனர்.
நியாயாதிபதிகள் 3 : 26 (RCTA)
அவர்கள் மனம் குழம்பியிருக்கையில் ஆவோத் தப்பியோடி, முன்பு எங்கிருந்து திரும்பி வந்தாரோ அந்தச் சிலைகளின் இடத்தைக் கடந்து செய்ராத்துக்கு வந்து சேர்ந்தார்.
நியாயாதிபதிகள் 3 : 27 (RCTA)
உடனே எபிராயீம் மலையில் எக்காளம் ஊதினார் இஸ்ராயேல் மக்கள் அவரோடு கிளம்பி வந்தனர். அவரோ அவர்களை முன் நடத்திச் சென்றார்.
நியாயாதிபதிகள் 3 : 28 (RCTA)
அவர் அவர்களை நோக்கி, "என் பின் வாருங்கள்; நம் எதிரிகளான மோவாபியரை ஆண்டவர் நமக்குக் கையளித்துள்ளார்" என்றார். அவர்கள் அவரைத் தொடர்ந்து போய் மோவாப் நாடு சேரும் வழியாகிய யோர்தான் நதித்துறை எல்லாம் வளைத்துப் பிடித்து மோவாபியரில் ஒருவனும் வெளியில் வராதபடி தடுத்தனர்.
நியாயாதிபதிகள் 3 : 29 (RCTA)
பிறகு, அவர்களில் ஆற்றலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட பதினாயிரம் பேரையும் கொன்றனர். அவர்களில் ஒருவன் கூடத் தப்ப முடியவில்லை.
நியாயாதிபதிகள் 3 : 30 (RCTA)
அந்நாளில் மோவாபியர் இஸ்ராயேலர் கையால் தாழ்வுற்றனர். நாடு எண்பது ஆண்டுகள் அமைதியாய் இருந்தது.
நியாயாதிபதிகள் 3 : 31 (RCTA)
ஆவோத்துக்குப் பிறகு ஆனாத்து மகன் சாம்கார் தோன்றிப் பிலிஸ்தியரில் அறுநூறு பேர்களைக் கலப்பைக் கொழுவால் கொன்றார். அவரும் இஸ்ராயேலரைப் பாதுகாத்து வந்தார்.
❮
❯