நியாயாதிபதிகள் 12 : 1 (RCTA)
அப்பொழுது எபிராயிம் வம்சத்தில் கலகம் உண்டானது. அவர்கள் வடக்கே சென்று ஜெப்தேயை நோக்கி, "அம்மோன் புதல்வருக்கு எதிராய் நீ போருக்குப் போகையில் நாங்களும் உன்னுடன் வர எங்களை ஏன் அழைக்கவில்லை? அதன் பொருட்டு உன் வீட்டைச் சுட்டெரித்துப் போடுவோம்" என்றனர்.
நியாயாதிபதிகள் 12 : 2 (RCTA)
அதற்கு அவள், "என் மக்களுக்கும் எனக்கும் அம்மோன் புதல்வரோடு பெரும் பூசல் இருந்து வந்தது. எனக்கு உதவியாக நான் உங்களை அழைத்தேன். நீங்கள் அதற்கு இசையவில்லை;
நியாயாதிபதிகள் 12 : 3 (RCTA)
அதைக் கண்டபோது நான் என் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்மோன் புதல்வர் நாட்டுக்குப் போய் அவர்களை எதிர்த்தேன். ஆண்டவரும் அவர்களை என் கையில் ஒப்படைத்தார். நீங்கள் எனக்கு எதிராய் எழுந்து வர நான் என்ன குற்றம் செய்தேன்?" என்று சொல்லி,
நியாயாதிபதிகள் 12 : 4 (RCTA)
காலாதிலிருந்த அனைவரையும் சேர்த்துக் கொண்டு எபிராயிமரோடு போரிட்டு அவர்களை முறியடித்தான். அதற்குக் காரணம், எபிராயிமர் காலாதைக் குறித்து, "காலாத் எபிராயிமை விட்டு ஓடிப் போனவன்; அவன் எபிராயீமுக்கும் மனாசேயுக்கும் நடுவே வாழ்கிறான்" என்று இகழ்ந்து கூறியிருந்தனர்.
நியாயாதிபதிகள் 12 : 5 (RCTA)
எபிராயிமர் திரும்ப வேண்டிய வழியாகிய யோர்தானின் துறைகளைக் காலாதித்தர் பிடித்திருந்தனர். ஓடிப்போன எபிராயிமரில் யாராவது அங்கு வந்து, "நான் அக்கரை போக அனுமதியுங்கள்" என்ற போது காலாதித்தர் அவனை நோக்கி, "நீ எபிராயிமனோ?" என்பார்கள். அதற்கு அவன் "இல்லை" என்றால், அவர்கள், "ஷிபோலெத் என்று சொல்" என்பார்கள் அதற்கு 'கதிர்' என்று பொருள்.
நியாயாதிபதிகள் 12 : 6 (RCTA)
அவன் ' ஷிபோலெத் ' என்று சரியாய் உச்சரிக்க முடியாமல் 'சிபோலெத்' என்று சொன்னால், அவர்கள் அவனை உடனே பிடித்து யோர்தானின் துறையிலேயே கொன்று போடுவர். அக்காலத்தில் எபிராயிமரில் நாற்பத்திரண்டாயிரம் பேர் மாண்டனர்.
நியாயாதிபதிகள் 12 : 7 (RCTA)
காலாதித்தனான ஜெப்தே இஸ்ராயேலை ஆறு அண்டுகள் ஆண்ட பின் இறந்து, காலாத் நகரில் புதைக்கப்பட்டான்.
நியாயாதிபதிகள் 12 : 8 (RCTA)
அதன் பிறகு பெத்லகேம் ஊரானான அபேசான் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.
நியாயாதிபதிகள் 12 : 9 (RCTA)
அவருக்கு முப்பது புதல்வரும் முப்பது புதல்வியரும் இருந்தனர். அவர் தம் புதல்வியரை வெளி இடங்களில் மணம் முடித்துக் கொடுத்தார்; அதே போன்று வெளியிடத்துப் பெண்களைத் தம் புதல்வர்க்கு மணம் முடித்து வைத்தார். அவர் இஸ்ராயேலுக்கு ஏழு ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
நியாயாதிபதிகள் 12 : 10 (RCTA)
பின்பு அவர் இறக்கவே, பெத்லகேமில் அடக்கம் செய்யப்பட்டார்.
நியாயாதிபதிகள் 12 : 11 (RCTA)
அவருக்குப் பிறகு, ஜாபுலோனித்தனான ஆயியாலோன் தோன்றி இஸ்ராயேலுக்குப் பத்து ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
நியாயாதிபதிகள் 12 : 12 (RCTA)
அவரும் இறந்து ஜாபுலோனில் புதைக்கப்பட்டார்.
நியாயாதிபதிகள் 12 : 13 (RCTA)
அவருக்குப் பிறகு பாராத்தோனித்தனான இலேமின் மகன் அப்தோன் இஸ்ராயேலுக்கு நீதி வழங்கி வந்தார்.
நியாயாதிபதிகள் 12 : 14 (RCTA)
அவருக்கு நாற்பது புதல்வரும், அவர்கள் மூலம் முப்பது பேரப் பிள்ளைகளும் இருந்தார்கள். அவர்கள் கழுதைக் குட்டிகளின் மேல் ஏறி வந்தனர். அவர் இஸ்ராயேலுக்கு எட்டு ஆண்டுகள் நீதி வழங்கி வந்தார்.
நியாயாதிபதிகள் 12 : 15 (RCTA)
அவரும் இறந்து அமெலேக் மலையில் எபிராயிமைச் சேர்ந்த நாட்டிலுள்ள பாராத்தோனில் புதைக்கப்பட்டார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15