நியாயாதிபதிகள் 11 : 1 (RCTA)
அக்காலத்தில் காலாத்தியனான ஜெப்தே வன்மை மிக்க போர்வீரனாய் இருந்தான். அவன் காலாத்துக்கு ஒரு விலைமாதின் வயிற்றில் பிறந்தவன்.
நியாயாதிபதிகள் 11 : 2 (RCTA)
காலாத்துக்கு ஒரு மனைவி இருந்தாள். அவள் மூலம் அவனுக்குப் புதல்வர் இருந்தனர். இவர்கள் வளர்ந்த பின் ஜெப்தேயை நோக்கி, "நீ வேறொரு தாய்க்குப் பிறந்தவன்; தந்தை வீட்டில் உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அவனைத் துரத்தி விட்டனர்.
நியாயாதிபதிகள் 11 : 3 (RCTA)
அப்போது ஜெப்தே அவர்களைப் பிரிந்து, ஓடிப்போய்த் தோப் நாட்டில் வாழ்ந்தான். திக்கற்றவரும் கொள்ளையடிப்போருமான பலர் அவனோடு சேர்ந்து அவனைத் தம் தலைவனாகக் கொண்டு பின் சென்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 4 (RCTA)
அக்காலத்தில் அம்மோன் புதல்வர் இஸ்ராயேலரோடு போர் தொடுத்தனர்.
நியாயாதிபதிகள் 11 : 5 (RCTA)
அவர்கள் இவர்களைக் கொடுமைப் படுத்தினதால் காலாத் நாட்டுப் பெரியோர் தமக்குத் துணையாக தோப் நாட்டு ஜெப்தேயை அழைக்கச் சென்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 6 (RCTA)
அங்கே அவனை நோக்கி, "நீ எம் தலைவனாக வந்திருந்து அம்மோன் புதல்வரோடு போர்தொடு" என்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 7 (RCTA)
அதற்கு அவன், "என்னைப் பகைத்து என் தந்தை வீட்டினின்று என்னைத் துரத்தினது நீங்கள் அல்லவா? இப்போது தேவையை முன்னிட்டுத் தானே என்னிடம் வந்துள்ளீர்கள்?" என்றான்.
நியாயாதிபதிகள் 11 : 8 (RCTA)
காலாத் நாட்டுப் பெருமக்கள் ஜெப்தேயை நோக்கி, "நீ எம்மோடு புறப்பட்டு அம்மோன் புதல்வரை எதிர்த்து, காலாத்திலிருக்கும் அனைவருக்கும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதற்காக உன்னைத் தேடி வந்தோம்" என்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 9 (RCTA)
மீண்டும் ஜெப்தே, "அம்மோன் புதல்வரோடு போர் புரிய நீங்கள் என்னை நேர்மையோடு அழைப்பீர்களானால், ஆண்டவர் அவர்களை என்னிடம் கையளிப்பாரானால், நான் உங்கள் தலைவனாய் இருப்பேனா?" என்று கேட்டான்.
நியாயாதிபதிகள் 11 : 10 (RCTA)
அதற்கு அவர்கள், " நாங்கள் சொன்னதை நிறைவேற்றுவோம் என்ற எமது கூற்றைக் கேட்ட ஆண்டவரே இதற்கு நடுவரும் சாட்சியுமாய் இருக்கிறார்" என்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 11 (RCTA)
ஆகையால், ஜெப்தே காலாத்தின் பெரியோரோடு சென்றான். எல்லா மக்களும் அவனைத் தம் தலைவனாக்கினர். ஜெப்தே மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் தன் நிபந்தனைகளை எல்லாம் திரும்பவும் கூறினான்.
நியாயாதிபதிகள் 11 : 12 (RCTA)
அப்பொழுது அவன், "நீ எனக்கு எதிராக எழுந்து என் நாட்டைக் கொள்ளையடித்துப் பாழாக்க உனக்கும் எனக்கும் வழக்கு என்ன?" என்று நேரில் கேட்கும்படி அம்மோன் புதல்வரின் அரசனுக்குத் தூதரை அனுப்பினான்.
நியாயாதிபதிகள் 11 : 13 (RCTA)
அதற்கு அவன், "இஸ்ராயேலர் எகிப்தினின்று வருகையில் ஆர்னோன் முதல் ஜாபோக், இன்னும் யோர்தான் வரையுள்ள என் நாட்டை எடுத்துக்கொண்ட அந்த வழக்குத்தான். இப்போது நீ அதைச் சமாதானமாய் எனக்குத் திரும்பக் கொடுத்து விடு" என்றான்.
நியாயாதிபதிகள் 11 : 14 (RCTA)
ஜெப்தே மீண்டும் தூதரை அனுப்பி, அம்மோன் அரசனுக்கு இவ்வாறு அறிவிக்கும்படி கட்டளையிட்டான்:
நியாயாதிபதிகள் 11 : 15 (RCTA)
'ஜெப்தே சொல்லுவதாவது: இஸ்ராயேலர் மோவாப் நாட்டையும் அம்மோன் புதல்வர் நாட்டையும் பிடித்துக் கொள்ளவில்லை.
நியாயாதிபதிகள் 11 : 16 (RCTA)
அவர்கள் எகிப்தினின்று வெளியேறிய போது பாலை நிலத்தின் வழியாகச் செங்கடல் வரை நடந்து காதேசுக்கு வந்தார்கள்.
நியாயாதிபதிகள் 11 : 17 (RCTA)
அப்போது அவர்கள் ஏதோம் அரசனுக்குத் தூதரை அனுப்பி: 'நாங்கள் உன் நாட்டின் வழியாகப் போக அனுமதி அளி' என்றனர். அவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. மோவாப் அரசனுக்குத் தூதரை அனுப்பிக் கேட்க, அவனும் அவர்களுக்கு வழிவிடவில்லை.
நியாயாதிபதிகள் 11 : 18 (RCTA)
எனவே, அவர்கள் காதேசில் தங்கிப் பிறகு, ஏதோம் நாட்டையும் மோவாப் நாட்டையும் சுற்றி, மோவாப் நாட்டின் கிழக்குப் பக்கமாக வந்து ஆர்னோனுக்கு அப்புறத்தில் பாளையம் இறங்கினார்கள். மோவாப் நாட்டின் எல்லைக்குள் அவர்கள் நுழையவில்லை. உண்மையில் ஆர்னோன் மோவாப் நாட்டின் எல்லையாகும்.
நியாயாதிபதிகள் 11 : 19 (RCTA)
மீண்டும் எசேபோனில் வாழ்ந்து வந்த அமோறையரின் அரசன் செகோனுக்கு இஸ்ராயேல் மக்கள் தூதரை அனுப்பி, 'உன் நாட்டின் வழியாக நதிவரை போக எமக்கு அனுமதி அளி' என்றனர்.
நியாயாதிபதிகள் 11 : 20 (RCTA)
அவனும் இஸ்ராயேலரின் வேண்டுகோளைப் புறிக்கணித்துத் தன் எல்லைகளைக் கடக்க அனுமதியாது, பெரும் சேனைகளைத் திரட்டி ஜாசாவில் அவர்களோடு வன்மையுடன் போரிட்டான்.
நியாயாதிபதிகள் 11 : 21 (RCTA)
ஆண்டவர் அவனையும் அவன் சேனைகளையும் இஸ்ராயேலருக்குக் கையளிக்கவே, இவர்கள் அவனை முறியடித்து அப்பகுதியில் வாழ்ந்து வந்த அமோறையரின் நாட்டையெல்லாம் தம் உரிமையாக்கினர்.
நியாயாதிபதிகள் 11 : 22 (RCTA)
அப்படியே இஸ்ராயேலர் ஆர்னோன் முதல் ஜாபோக்வரையிலும், பாலை நிலம் முதல் யோர்தான் வரையிலுமுள்ள நாட்டையும் தம் உரிமையாக்கினர்.
நியாயாதிபதிகள் 11 : 23 (RCTA)
இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் தம் மக்களாம் இஸ்ராயேலர் மூலம் அமோறையரை முறியடித்திருக்க, நீ அந்நாட்டை உரிமையாக்கிக் கொள்வது முறையா?
நியாயாதிபதிகள் 11 : 24 (RCTA)
உன் தேவன் காமோசுக்குச் சொந்தமான எதுவும் உனக்கும் சொந்தம்தானே? எம் ஆண்டவராகிய கடவுள் வெற்றியின் மூலம் சொந்தமாக்கின நாடு எமக்கும் சொந்தம் அன்றோ?
நியாயாதிபதிகள் 11 : 25 (RCTA)
மோவாப் அரசன் சேபோர் மகன் பாலாக்கைவிட நீ வலிமை மிக்கவனோ? அவன் உன்னைப் போல் இஸ்ராயேலின் மேல் முறையிட்டான் என்றும், இதற்காகப் போரிட்டான் என்றும் உன்னால் எண்பிக்க முடியுமா?
நியாயாதிபதிகள் 11 : 26 (RCTA)
இஸ்ராயேலரோ எசேபோனிலும் அதன் ஊர்களிலும், அரோயேரிலும் அதன் சிற்றூர்களிலும், யோர்தானை அடுத்த எல்லா நகர்களிலும் முந்நூறு ஆண்டுகளாய் வாழ்கின்றனரே, இத்தனை காலமாய் உன் உரிமையை அடைய நீ ஏன் முயலவில்லை? எனவே, நான் உனக்கு அநீதி இழைக்கவில்லை.
நியாயாதிபதிகள் 11 : 27 (RCTA)
நீயே எனக்குக் கெடுதி செய்து அநியாயமாகப் போரிட வந்துள்ளாய். நடுவராகிய ஆண்டவரே இன்று இஸ்ராயேலுக்கும் அம்மோன் புதல்வருக்கும் நடுநின்று தீர்ப்பிடுவாராக" என்றான்.
நியாயாதிபதிகள் 11 : 28 (RCTA)
ஆயினும் அம்மோன் புதல்வரின் அரசன் தூதர் மூலம் ஜெர்தே சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
நியாயாதிபதிகள் 11 : 29 (RCTA)
அப்போது ஆண்டவரின் ஆவி, ஜெப்தேயின், மேல் வந்தது. அவன் காலாத், மனாசே, மாஸ்பா நாடெங்கும் சுற்றிவந்து, அங்கிருந்து அம்மோன் புதல்வரிடம் சென்று,
நியாயாதிபதிகள் 11 : 30 (RCTA)
ஆண்டவருக்கு அளித்த வாக்குறுதியாவது: "நீர் அம்மோன் மக்களை என் கைவயமாக்குவீராகில்,
நியாயாதிபதிகள் 11 : 31 (RCTA)
நான் அம்மோன் புதல்வரிடமிருந்து சமாதானமாய்த் திரும்பி வரும்போது என்னை எதிர்கொள்ள என் வீட்டு வாயிலில் எவர் வருவாரோ அவரை நான் ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுப்பேன்" என்பதாம்.
நியாயாதிபதிகள் 11 : 32 (RCTA)
பிறகு ஜெப்தே அம்மோன் புதல்வரோடு போரிட அவர்களது நாட்டுக்குப் போனான். ஆண்டவரும் அவர்களை அவன் கைவயமளித்தார்.
நியாயாதிபதிகள் 11 : 33 (RCTA)
ஆரோயர் முதல் மென்னித் எல்லை வரை, திராட்சைத் தோட்டங்கள் செழித்துள்ள ஆபேல் வரை ஜெப்தே இருபது நகர்களைப் பிடித்து அழித்தொழித்தான். எனவே, அம்மோன் புதல்வர் இஸ்ராயேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டனர்.
நியாயாதிபதிகள் 11 : 34 (RCTA)
பிறகு ஜெப்தே மாஸ்பாவிலிருந்த தன் வீட்டுக்குத் திரும்பி வரும் போது, இதோ! அவனுடைய ஒரே மகள் தம்புரு அடித்து நடனமாடும் பலரோடு அவனை எதிர் கொண்டு வந்தாள். அவளையன்றி அவனுக்கு வேறு பிள்ளை இல்லை.
நியாயாதிபதிகள் 11 : 35 (RCTA)
அவன் அவளைக் கண்டவுடனே தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு, "ஐயோ, என் மகளே, என்னையும் ஏமாற்றி, நீயும் ஏமாந்து போனாய்! நான் ஆண்டவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேனே! அந்த வாக்குறுதியை என்னால் மீறமுடியாதே!" என்றான்.
நியாயாதிபதிகள் 11 : 36 (RCTA)
அதற்கு அவள், "தந்தாய், நீர் ஆண்டவருக்கு வாக்களித்திருக்கிறீர். உம் எதிரிகளைப் பழி வாங்கவும், அவர்களை வெல்லவும் அவர் உமக்குச் செய்தருளினாரே. நீர் அளித்துள்ள வாக்குறுதிபடியே எனக்கும் செய்யும்" என்று கூறினாள்.
நியாயாதிபதிகள் 11 : 37 (RCTA)
மீண்டும் தன் தந்தையை நோக்கி, "என் ஒரு விண்ணப்பத்தை மட்டும் நீர் கேட்டருள வேண்டும். அதாவது, நான் இரு மாதங்கள் மலைகளின் மேல் சுற்றித் திரிந்து, நானும் என் தோழியரும் என் கன்னிமையை முன்னிட்டுக் கதறியழ அனுமதியும்" என்றாள்.
நியாயாதிபதிகள் 11 : 38 (RCTA)
அதற்கு அவன், "போய்வா" என்று அவளை இரு மாதங்களுக்கு அனுப்பிவிட்டான். அவளும் தன் தோழியருடன் போய்த் தன் கன்னிமையின் பொருட்டு மலைகளின் மேல் துக்கம் கொண்டாடி,
நியாயாதிபதிகள் 11 : 39 (RCTA)
இரு மாதங்களுக்குப்பிறகு தன் தந்தையிடம் திரும்பி வந்தாள். அப்போது அவன் தான் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி அவளுக்குச் செய்தான். அவள் மனிதனை அறியாதிருந்தாள். அது முதல் இஸ்ராயேலில் வழக்கம் ஒன்று தோன்றி அனுசரிக்கப்பட்டு வந்தது.
நியாயாதிபதிகள் 11 : 40 (RCTA)
அதாவது, ஆண்டுதோறும் இஸ்ராயேல் பெண்டீர் ஒன்று சேர்ந்து காலாதித்தனான ஜெப்தேயின் மகளைக் குறித்து நான்கு நாள் துக்கம் கொண்டாடுவார்கள்.
❮
❯