யூதா 1 : 1 (RCTA)
இறைவனால் அழைக்கப்பட்டு, தந்தையாகிய கடவுளின் அன்பிலும், இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்கிறவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியனும் யாகப்பரின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
யூதா 1 : 2 (RCTA)
இரக்கம், சமாதானம், அன்பு உங்களுக்குப் பெருகுக!
யூதா 1 : 3 (RCTA)
அன்புக்குரியவர்களே, உங்களுக்கும் எங்களுக்கும் கிடைத்துள்ள மீட்பைக் குறித்து எழுத மிக ஆவலாய் இருந்தேன். எக்காலத்துக்கும் நிலைத்திருக்கும்படி இறை மக்களுக்கு அன்று அருளப்பட்ட விசுவாசத்திற்காகப் போராடும்படி உங்களை ஊக்குவிக்க இதை எழுதும் தேவை ஏற்பட்டது.
யூதா 1 : 4 (RCTA)
ஏனெனில், திருட்டுத்தனமாகச் சிலர் உங்கள் நடுவில் புகுந்துள்ளனர்; இவர்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக வேண்டுமென்று முற்காலத்திலேயே மறைநூல் கூறியிருந்தது. இறைப்பற்றில்லாத இவர்கள் நம் கடவுள் தந்த அருள் வாழ்வின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காம வெறியில் உழல்கின்றனர்; நம் ஒரே தலைவரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவை மறுக்கின்றனர்.
யூதா 1 : 5 (RCTA)
நீங்கள் ஏற்கெனவே இதையெல்லாம் நன்கு அறிந்திருந்தாலும் உங்களுக்கு ஒன்றை நினைப்பூட்ட விரும்புகிறேன்; ஆண்டவர் எகிப்து நாட்டிலிருந்து தம் மக்களை மீட்டாரெனினும், பின்னர் விசுவசியாதவர்களை அழித்துவிட்டார்.
யூதா 1 : 6 (RCTA)
அவ்வாறே, தங்கள் மேலான நிலையில் நிலைக்காமல், தம் உறைவிடத்தை விட்டுவிட்ட வானதூதர்களையும், முடிவில்லாக் காலத்துக்கும் கட்டுண்டவர்களாய், மாபெரும் நாளின் தீர்ப்புக்காகக் காரிருளில் அடைத்து வைத்துள்ளார்.
யூதா 1 : 7 (RCTA)
அவர்களைப்போல் சோதோம் கொமோராவும் சுற்றுப்புற நகரங்களும் கெட்ட நடத்தையில் மூழ்கி இயற்கைக்கு ஒவ்வாத சிற்றின்பத்தைத் தேடின; அதனால் முடிவில்லா நெருப்பின் தண்டனைக்குள்ளாகி நமக்கொரு பாடமாக உள்ளன.
யூதா 1 : 8 (RCTA)
அந்தப் போதகர்களும் அவ்வாறே செய்கின்றனர். எதெதையோ கனவுகண்டு உடலைப் பாவ மாசுக்கு உள்ளாக்குகின்றனர்; ஆண்டவரது மாட்சியை புறக்கணிக்கின்றனர்; வானவர்களைப் பழித்துரைக்கின்றனர்.
யூதா 1 : 9 (RCTA)
அதிதூதரான மிக்கேல் மோயீசனின் உடலைப் பற்றிப் பேயோடு வாதாடியபோது அவனைப் பழித்துரைத்துக் கண்டனம் செய்யத் துணியாமல், "ஆண்டவர் தாமே உன்னைக் கண்டிக்கட்டும்" என்றுமட்டும் சொன்னார்.
யூதா 1 : 10 (RCTA)
இவர்களோ தாங்கள் அறியாததையும் பழிக்கின்றனர்; பகுத்தறிவற்ற விலங்குகளைப் போல, இயல்புணர்ச்சியால் இவர்கள் அறிந்திருப்பதும் அவர்களுக்கு அழிவையே விளைவிக்கும்.
யூதா 1 : 11 (RCTA)
இவர்களுக்கு ஐயோ கேடு! காயின் சென்ற வழியில் இவர்களும் சென்றார்கள்; பாலாமைப்போல ஆதாயத்துக்காகத் தவறு செய்ய இவர்கள் முழு ஆத்திரத்தோடு ஓடினார்கள்; கோராவைப்போல் கிளர்ச்சி செய்து அழிந்தார்கள்.
யூதா 1 : 12 (RCTA)
உங்களுடைய அன்புவிருந்துகளில் உங்களோடு கலந்து கொள்ளத் துணியும் இவர்கள் உங்களை மாசுபடுத்துகின்றனர். தங்களை மட்டும் கவனித்துக்கொள்ளும் மேய்ப்பர்கள் இவர்கள். இவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படும் நீரற்ற மேகங்கள்; இலையுதிர்ந்த கனிகளற்ற. அடியோடு பட்டுப்போன, வேரோடு பிடுங்கப்பட்ட மரங்கள்;
யூதா 1 : 13 (RCTA)
தங்கள் வெட்கக் கேடுகளை நுரையாகத் தள்ளும் கொந்தளிக்கும் கடலலைகள்; வழி தவறி அலையும் விண்மீன்கள். இருளுலகம் அவர்களுக்கென்றே ஒதுக்கப் பட்டுள்ளது.
யூதா 1 : 14 (RCTA)
ஆதாமுக்குப்பின் ஏழாந் தலைமுறையான ஏனோக்கு இவர்களைப்பற்றியே, "இதோ ஆண்டவர் எல்லாருக்கும் தீர்ப்பிட எண்ணற்ற தம் தூதர்களோடு வந்தார்;
யூதா 1 : 15 (RCTA)
இறைப்பற்றில்லாதவர்கள் தமக்கு எதிராகச் செய்த எல்லாச் செயல்களுக்காகவும், பாவிகள் தமக்கு எதிராகப் பேசிய ஆணவச் சொற்களுக்காகவும், அவர்களைக் கண்டிக்க வந்தார்" என்று முன்னுரைத்துள்ளார்.
யூதா 1 : 16 (RCTA)
இவர்கள் முணுமுணுத்துக் குறை கூறுபவர்கள்; தங்கள் இச்சைப்படி வாழ்பவர்கள்; பகட்டாகப் பேசுபவர்கள்; தங்கள் நலனை முன்னிட்டு இச்சகம் பேசுபவர்கள்.
யூதா 1 : 17 (RCTA)
அன்புக்குரியவர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் முன்பே கூறியதை நினைவில் கொள்ளுங்கள்:
யூதா 1 : 18 (RCTA)
"தங்கள் தீய இச்சைப்படி நடக்கும் ஏளனக்காரர் இறுதிக் காலத்தில் தோன்றுவர்" என்று அவர்கள் உங்களுக்குக் கூறினர்.
யூதா 1 : 19 (RCTA)
அந்த ஏளனக்காரர்கள் பிரிவினை உண்டு பண்ணுபவர்கள், இயல் புணர்ச்சியின்படி நடப்பவர்கள்; அவர்களிடம் தேவ ஆவியே இல்லை.
யூதா 1 : 20 (RCTA)
அன்புக்குரியவர்களே, மிகப் பரிசுத்த விசுவாசத்தை அடிப்படையாய்க் கொண்டு உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்புங்கள்; பரிசுத்த ஆவியின் ஆற்றலால் செய்யுங்கள்.
யூதா 1 : 21 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் இரக்கத்தில் முடிவில்லா வாழ்வை அளிக்கும் நாளை எதிர்பார்ப்பவர்களாய்,
யூதா 1 : 22 (RCTA)
கடவுளன்பில் நிலைத்திருக்கப் பார்த்துக் கொள்ளுங்கள். தயங்கிக் கிடக்கும் சிலர் உள்ளனர்; அவர்களுக்கு இரக்கங்காட்டுங்கள்.
யூதா 1 : 23 (RCTA)
வேறு சிலரைத் தீயினின்று வெளியேற்றிக் காப்பாற்றுங்கள். வேறு சிலருக்கு இரக்கங்காட்டும்போது எச்சரிக்கையாய் இருங்கள்: பாவ இச்சையால் மாசு படிந்த அவர்களுடைய ஆடையை முதலாய் அருவருத்துத் தள்ளுங்கள்.
யூதா 1 : 24 (RCTA)
தவறி விழாமல் உங்களைக் காக்கவும், தம் மாட்சிமையின் முன்னிலையில் அக்களிப்போடு உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்ல, நம் மீட்பராகிய ஒரே கடவுளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்,
யூதா 1 : 25 (RCTA)
மகிமையும் மாட்சியும் ஆற்றலும் ஆட்சியும் அன்றும் இன்றும் என்றும் உரியன! ஆமென்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25