யோசுவா 9 : 1 (RCTA)
இதைக் கேட்டு, யோர்தானுக்கு இப்பக்கம் மலைகளிலும் சமவெளிலும், பெரிய கடலின் ஒரத்திலும், லீபான் குன்று அருகேயும் குடியிருந்தவர்களும், ஏத்தையர், அமோறையர், கானானையர், பெரேசையர், ஏவையர், ஜெபுசையர் ஆகியோரின் அரசர்களும்,
யோசுவா 9 : 2 (RCTA)
தங்களுக்குள் பேசி, ஒருமனப்பட்டு யோசுவாவோடும் இஸ்ராயேலரோடும் உறுதியாய்ப் போர்புரியக் கூடி வந்தனர்.
யோசுவா 9 : 3 (RCTA)
ஆனால், எரிக்கோவுக்கும் ஆயியிக்கும் யோசுவா செய்திருந்ததைக் கபயோனின் குடிகள் கேள்விப்பட்டு, ஒரு சூழ்ச்சி செய்தனர்.
யோசுவா 9 : 4 (RCTA)
எப்படியெனில், அவர்கள் தங்கள் வழிக்கு உணவாகத் தின்பண்டங்களையும் பழைய கோணிப்பைகளையும் கிழித்து தைக்கப்பட்ட திராட்சை இரசச் சித்தைகளையும் கழுதைகளின்மேல் ஏற்றி, பழுது பார்க்கப்பட்ட பழைய மிதியடிகளைக் கால்களில் போட்டு, பலநிறமுள்ள ஒட்டுப்போட்ட ஆடைகளை உடுத்திக் கொண்டனர்.
யோசுவா 9 : 5 (RCTA)
வழி உணவுக் கென்று அவர்கள் கொண்டு சென்றிருந்த அப்பங்கள் உலர்ந்து துண்டு துண்டாகப் போயின.
யோசுவா 9 : 6 (RCTA)
அவர்கள் கல்கலாவில் பாளையத்திலிருந்த யோசுவாவிடம் போய் அவரையும் இஸ்ராயேலின் முழுச்சபையையும் நோக்கி, "நாங்கள் அதிக தூரமான நாட்டிலிருந்து வந்துள்ளோம். உங்களோடு சமாதான உடன் படிக்கை செய்துகொள்ள விரும்புகிறோம்" என்றனர். இஸ்ராயேலின் பெரியோர்கள் அவர்களுக்கு மறுமொழியாக,
யோசுவா 9 : 7 (RCTA)
நீங்கள் எங்களுக்குச் சொந்தமாய்க் கொடுக்கப்படும் நாட்டில் குடியிருக்கிறீர்கள் போலும். நாங்கள் எப்படி உங்களோடு உடன்படிக்கை செய்யலாம்?" என்றனர்.
யோசுவா 9 : 8 (RCTA)
அவர்கள் யோசுவாவை நோக்கி, "நாங்கள் உமக்கு அடிமைகள்" என்று சொன்னார்கள். அதற்கு யோசுவா, "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்றார்.
யோசுவா 9 : 9 (RCTA)
அவர்கள், "உம் அடியார்களாகிய நாங்கள் உம் ஆண்டவராகிய கடவுளின் பெயரைச் சொல்லி, வெகு தூரமான நாட்டிலிருந்து வந்துள்ளோம். ஏனெனில், நாங்கள் அவருடைய வலிமையையும் புகழையும், அவர் எகிப்தில் செய்த யாவற்றையும்,
யோசுவா 9 : 10 (RCTA)
யோர்தானின் அக்கரைப் பகுதிகளில் வாழ்ந்து வந்த அமோறையரின் இரு அரசர்களுக்கும், அதாவது எசெபோனின் அரசனாய் இருந்த செகோனுக்கும், அஸ்தரேத்திலிருந்த பாசானின் அரசனான ஒகுக்கும் அவர் செய்த யாவற்றையும் கேள்வியுற்றோம்.
யோசுவா 9 : 11 (RCTA)
ஆகையால் எங்கள் பெரியோர்களும் எங்கள் நாட்டுக் குடிகள் அனைவரும் எங்களைப் பார்த்து, தூரப்பயணத்துக்கு வேண்டிய உணவை நீங்கள் உங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு இஸ்ராயேலரிடம் போய், 'நாங்கள் உங்கள் அடிமைகள். எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்' என்று உங்களுக்குச் சொல்லச் சொன்னார்கள்.
யோசுவா 9 : 12 (RCTA)
உங்களிடம் வர எங்கள் வீட்டிலிருந்து புறப்பட்ட அன்று தான் இந்த அப்பங்களைச் சுடச்சுட எடுத்துக்கொண்டு வந்தோம். இப்பொழுது அவை நெடுநாள் பயணத்தில் உலர்ந்து பழையனவாகித் துண்டு துண்டாய்ப் பிய்ந்து போயின.
யோசுவா 9 : 13 (RCTA)
நாங்கள் இத்திராட்சை இரசச் சித்தைகளை நிரப்பின போது அவைகள் புதியனவாயிருந்தன. இப்பொழுது இதோ, கிழிந்து போயின. நாங்கள் உடுத்திக்கொண்ட ஆடைகளும், போட்டுக் கொண்ட மிதியடிகளும் நெடுந்தூரப் பயண நாட்களில் எவ்வளவு பழையனவாய்த் தேய்ந்து போயின, பாருங்கள்" என்றனர்.
யோசுவா 9 : 14 (RCTA)
இதைக் கேட்ட இஸ்ராயேலர் ஆண்டவருடைய ஆலோசனையைக் கேட்டு அறியாமலேயே அவர்களுடைய உணவுப் பொருட்களில் சிறிது வாங்கிக் கொண்டனர்.
யோசுவா 9 : 15 (RCTA)
யோசுவா அவர்களுடன் சமாதானம் செய்து தாம் அவர்களை உயிரோடு காப்பாற்றுவதாக ஆணையிட்டு, அவர்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டார், ஏனைய மக்கட் தலைவர்களும் அவ்வாறே அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறினர்.
யோசுவா 9 : 16 (RCTA)
இவ்வுடன்படிக்கை செய்த மூன்று நாட்களுக்குப் பின், இவர்கள் அருகிலேயே குடியிருக்கிறார்கள் என்றும், தங்கள் மத்தியிலே வாழப்போகிறார்கள் என்றும் அவர்கள் கேள்விப்பட்டனர்.
யோசுவா 9 : 17 (RCTA)
உண்மையில் இஸ்ராயேல் மக்கள் பாளையம் விட்டுப் புறப்பட்டு மூன்றாம் நாளில் அவர்களுடைய நகரங்களுக்கு வந்து சேர்ந்தனர். கபயோன், கபீரா, பேரோத், கரியாத்தியாரீம் என்பனவே அந்நகர்களாம்.
யோசுவா 9 : 18 (RCTA)
மக்கட் தலைவர்கள் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளின் பெயரால் ஆனையிட்டு அவர்களுக்குத் தஞ்சம் கொடுத்திருந்த படியால் இஸ்ராயேலர் அவர்களைக் கொன்று போடவில்லை. ஆதலால், சாதாரண மக்கள் எல்லாரும் தலைவர்களுக்கு எதிராக முறு முறுத்துப் பேசினர்.
யோசுவா 9 : 19 (RCTA)
மக்கட் தலைவர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளின் பெயரால் அவர்களுக்கு வாக்களித்துள்ளோம். ஆதலால் நாம் அவர்களைத் தொடக் கூடாது.
யோசுவா 9 : 20 (RCTA)
ஆனால் நாம் செய்யப் போகிறதைக் கேளுங்கள். ஆண்டவருடைய கோபம் நம்மேல் வராமலிருக்க, நாம் கொடுத்த வாக்குறுதியின்படி அவர்களை உயிரோடு காப்பாற்றுவோம்.
யோசுவா 9 : 21 (RCTA)
ஆயினும், அவர்கள் இஸ்ராயேல் மக்கள் எல்லாருக்கும் விறகு வெட்டியும், தண்ணீர் கொணர்ந்தும் வாழ்ந்து வருவார்" என்று மறுமொழி சொன்னார்கள்.
யோசுவா 9 : 22 (RCTA)
இப்படிச் சொன்னதைக் கேட்டு, யோசுவா கபயோனியரை அழைத்து, "எங்கள் நடுவே குடியிருக்க, நீங்கள் பொய்சொல்லி: 'நாங்கள் உங்களுக்கு வெகு தூரமாயிருக்கிறவர்கள்' என்று எங்களை ஏமாற்றி வஞ்சிக்கத் தேடினது ஏன்?
யோசுவா 9 : 23 (RCTA)
ஆகவே, நீங்கள் சாபத்துக்கு உள்ளானீர்கள். என் ஆண்டவருடைய ஆலயத்துக்கு விறகு வெட்டவும், தண்ணீர் கொண்டு வரவும் கடவீர்கள். இவ்வூழியம் தலைமுறை தலைமுறையாய் உங்களை விட்டு நீங்கமாட்டாது" என்றார்.
யோசுவா 9 : 24 (RCTA)
அதற்கு அவர்கள், "நாட்டை எல்லாம் உங்களிடம் ஒப்படைக்கவும், நாட்டின் எல்லாக் குடிகளையும் அழித்துப் போடவும், உம் ஆண்டவராகிய கடவுள் தம் அடியானான மோயீசனுக்கு வாக்களித்திருந்தார் என்ற செய்தி உம் அடியார்களுக்கு அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் மிகவும் அஞ்சி எஙகள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு இவ்வாறு செய்தோம். உங்களுக்கு அஞ்சியே நாங்கள் இச்சதியாலோசனை செய்தோம்., இப்போதும் நாங்கள் உங்கள் கையில் இருக்கின்றோம்.
யோசுவா 9 : 25 (RCTA)
எது நன்மையும் நீதியுமாகத் தோன்றுகிறதோ அதை நீர் எங்களுக்குச் செய்யும்" என்றனர்.
யோசுவா 9 : 26 (RCTA)
யோசுவா அப்படியே செய்தார். இஸ்ராயேல் மக்கள் அவர்களைக் கொன்று போடக் கூடாது என்று அவர் கட்டளையிட்டு அவர்களைக் காப்பாற்றினார்.
யோசுவா 9 : 27 (RCTA)
ஆனால் அவர்கள் எல்லா மக்களுக்கும், ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திலுள்ள ஆண்டவருடைய பலிபீடத்துக்கும் பணிவிடையாளராகி, விறகு வெட்டுவது, தண்ணீர் கொண்டுவருவது போன்ற பொதுவேலை செய்வார்கள் என்று யோசுவா அன்றே கட்டளையிட்டார். அப்படியே அவர்கள் இன்று வரை அப்பணிவிடையைச் செய்து வருகிறார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27