யோசுவா 7 : 1 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் ஆண்டவருடைய கட்டளையை மீறி விலக்கப்பட்ட சில பொருட்களைக் கவர்ந்து சென்றனர். எப்படியெனில், யூதா கோத்திரத்து ஜாரேயுடைய புதல்வன் ஜப்தியின் மகனாகிய கர்மீக்குப் பிறந்த ஆக்கான் விலக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக்கொண்டான். எனவே, இஸ்ராயேல் மக்கள்மேல் ஆண்டவர் கோபம் கொண்டார்.
யோசுவா 7 : 2 (RCTA)
யோசுவா எரிக்கோவிலிருந்து பேத்தலுக்குக் கிழக்கேயுள்ள ஆயி நகருக்கு ஆட்களை அனுப்பி, "நீங்கள் போய் அந்நாட்டை உளவு பார்த்து வாருங்கள்." என்றார். அதன்படி அவர்கள் ஆயி நாட்டை உளவு பார்க்கச் சென்றனர்.
யோசுவா 7 : 3 (RCTA)
அவர்கள் திரும்பி வந்தபோது, யோசுவாவை நோக்கி, "அங்குப் பகைவர் வெகு சிலரே இருக்கிறார்கள். எனவே நகரைப் பிடித்து அழிக்க இரண்டு அல்லது மூவாயிரம் வீரர்கள் போதும்; சேனை முழுவதும் போக வேண்டிய தேவையில்லை" என்றனர்.
யோசுவா 7 : 4 (RCTA)
எனவே, மூவாயிரம் போர்வீரர் அங்குச் சென்றனர்; ஆனால் அவர்கள் போனவுடன் புறமுதுகு காட்டி ஒடினர்.
யோசுவா 7 : 5 (RCTA)
ஆயி நகர வீரர்கள் அவர்களை வென்று அவர்களில் முப்பத்தாறு பேரைக் கொன்றனர்; அத்தோடு நகர வாயில் துவக்கிச் சாபரீம் வரை அவர்களைத் துரத்தி வந்தனர். அப்போது, சிலர் மலைச்சரிவில் விழுந்து மாண்டனர். இதைக் கேட்ட மக்களின் இதயம் கலங்கி வலிமை குன்றிப் போயிற்று.
யோசுவா 7 : 6 (RCTA)
அப்போது யோசுவா தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, தாமும் இஸ்ராயேலின் பெரியோர்களும் மாலை வரை தங்கள் தலையின் மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு ஆண்டவரின் உடன்படிக்கைப் பெட்டிக்கு முன் தரையில் முகம் குப்புற விழுந்து கிடந்தனர்.
யோசுவா 7 : 7 (RCTA)
அப்பொழுது யோசுவா, "ஆ! ஆண்டவராகிய கடவுளே, இம்மக்களை அமோறையர் கையில் ஒப்படைத்து எம்மைக் கொன்று குவிக்கவா நீர் எங்களை யோர்தானைக் கடக்கச் செய்தீர்? நாங்கள் முன்போல் நதியின் அக்கரையிலேயே தங்கியிருந்திருந்தோம்! ஆ!
யோசுவா 7 : 8 (RCTA)
ஆண்டவரே, இஸ்ராயேலர் தங்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஒடக் கண்ட நான் என்ன சொல்வேன்?
யோசுவா 7 : 9 (RCTA)
இதைக் கேட்டுக் கானானையரும், நாட்டு மக்கள் யாவரும் ஒன்றாகக்கூடி எங்களை வளைத்து எங்கள் பெயரே பூமியில் இல்லாத படி ஒழித்து விடுவார்களே. அப்போது உமது மகத்தான பெயருக்கு நீர் என்ன செய்வீர்?" எனறு வேண்டினார்.
யோசுவா 7 : 10 (RCTA)
அப்போது ஆண்டவர் யோசுவாவை நோக்கிக் கூறியதாவது: "எழுந்திரு, ஏன் குப்புற விழுந்து கிடக்கிறாய்?
யோசுவா 7 : 11 (RCTA)
இஸ்ராயேலர் பாவம் செய்தனர்; எமது உடன்படிக்கையை அவர்கள் மீறி, விலக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றை எடுத்துக் கொண்டனர். திருடியதோடு, பொய்யும் சொல்லி, அவர்கள் தங்கள் பொருட்களோடு அவற்றை ஒளித்து வைத்துள்ளனர்.
யோசுவா 7 : 12 (RCTA)
இஸ்ராயேலர் சாபக் கேட்டுக்கு ஆளானதால் தங்கள் பகைவரை எதிர்த்து நிற்க முடியாது, புறமுதுகு காட்டி ஒடினர். நீங்கள் அத்தீச்செயல் புரிந்தவனைத் தண்டிக்கும் வரை நாம் உங்களோடு இருக்க மாட்டோம், எனவே, நீ எழுந்து மக்களைப் புனிதப்படுத்து.
யோசுவா 7 : 13 (RCTA)
அவர்களுக்கு நீ சொல்ல வேண்டியதாவது: 'நாளைக்கு உங்களைப் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில், இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுள் உங்களைப் பார்த்து: இஸ்ராயேலே, சாபக்கேடு உன் மேல் இருக்கிறதால், இப்பாவம் எவனால் வந்ததோ அவன் உன்னிடமிருந்து மடியும் வரை, நீ உன் எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாது.
யோசுவா 7 : 14 (RCTA)
நாளைக் காலையில் நீங்கள் ஒவ்வொரு கோத்திரமாக வரவேண்டும். அப்பொழுது எக்கோத்திரத்தின் மேல் சீட்டு விழுமோ, அக்கோத்திரத்தின் ஒவ்வொரு வம்சமும், வம்சத்தின் ஒவ்வொரு குடும்பமும், குடும்பத்தின் ஒவ்வொரு மனிதனும் வரவேண்டும்.
யோசுவா 7 : 15 (RCTA)
பிறகு குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்படுவன் ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி இஸ்ராயேலில் மதிகேடான செயலைச் செய்ததால், அவனுடைய உடைமைகள் அனைவற்றோடும் சுட்டெரிக்கப்படுவான் என்று திருவுளம்பற்றினார்' என்பாய்."
யோசுவா 7 : 16 (RCTA)
அதன்படி யோசுவா அதிகாலையில் எழுந்து இஸ்ராயேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரச்செய்து திருவுளச் சீட்டுப் போட்டார். (விலக்கப்பட்ட பொருட்களைக் கவர்ந்தது) யூதா கோத்திரமே என்று கண்டுபிடிக்கப் பட்டது.
யோசுவா 7 : 17 (RCTA)
பிறகு யூதா கோத்திரத்தின் ஒவ்வொரு வம்சமும் வந்தபோது, அவற்றினுன் ஜாரே வம்சம் கண்டுபிடிக்கப்பட்டது. மறுபடியும் குடும்பங்களை விசாரிக்கையில் ஜப்தி குடும்பம் குறிக்கப்பட்டது.
யோசுவா 7 : 18 (RCTA)
இவனது வீட்டு மனிதர் ஒவ்வொருவரையும் தனியே அழைத்துச் சோதித்த போதோ, யூதா கோத்திரத்து ஜாரேயின் புதல்வன் ஜப்திக்கு மகனாயிருந்த கர்மீக்குப் பிறந்த ஆக்கான் குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டான்.
யோசுவா 7 : 19 (RCTA)
அப்போது யோசுவா ஆக்கானை நோக்கி, "மகனே, நீ இப்போது இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளை மாட்சிப்படுத்து. அவருக்கு முன்பாக ஒன்றும் ஒளியாமல் நீ செய்த பாவத்தை எனக்குச் சொல்" என்றார்.
யோசுவா 7 : 20 (RCTA)
அப்போது ஆக்கான் யோசுவாவுக்கு மறு மொழியாக, "உண்மையில் நான் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு எதிராகப் பாவம் செய்தேன்.
யோசுவா 7 : 21 (RCTA)
அதாவது, கொள்ளைப் பொருட்களில் மிக அழகிய சிவப்புச் சால்வையையும், இருநூறு வெள்ளிச் சீக்கலையும், ஜம்பது சீக்கல் நிறையுள்ள ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டபோது அவற்றின் மேல் ஆசை வைத்தேன். எனவே, அவற்றை எடுத்துச் சென்று என் கூடாரத்தின் நடுவே மண்ணுக்குள் மறைத்து வைத்தேன்; வெள்ளியையும் குழி தோண்டிப் புதைத்து வைத்தேன்" என்றான்.
யோசுவா 7 : 22 (RCTA)
உடனே யோசுவா ஆட்களை அனுப்பினார். அவர்கள் கூடாரத்திற்கு ஒடிச் சென்று சோதித்துப் பார்த்தபோது, எல்லாவற்றையும் அதே இடத்தில் கண்டு பிடித்தனர்; வெள்ளியும் அஙகே தான் இருந்தது.
யோசுவா 7 : 23 (RCTA)
அவற்றைக் கூடாரத்திலிருந்து எடுத்து வந்து யோசுவாவிடமும், எல்லா இஸ்ராயேல் மக்களிடமும் காட்டினர்; பின்னர் ஆண்டவர் திருமுன் அவற்றை வைத்தனர்.
யோசுவா 7 : 24 (RCTA)
அப்போது யோசுவாவும் இஸ்ராயேலர் எல்லாரும் ஜாரே புதல்வனான ஆக்கானையும், வெள்ளி, சால்வை, பொன்பாளம் முதலியவற்றையும், அவனுடைய புதல்வர் புதல்விகளையும், ஆடு மாடு கழுதைகளையும், உடைமைகளையும் கைப்பற்றி ஆக்கோர் என்னும் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு போனார்கள்.
யோசுவா 7 : 25 (RCTA)
அஙகே யோசுவா, "நீ எங்களைத் துன்புறச் செய்ததால் இன்று கடவுள் உன்னைத் தன்டிப்பாராக" என்றார். எனவே இஸ்ராயேலர் அனைவரும் அவன்மேல் கல்லை எறிந்து, அவன் உடைமைகளை எல்லாம் தீயிலிட்டு எரித்தார்கள்.
யோசுவா 7 : 26 (RCTA)
பிறகு ஏராளமான கற்களை அவன்மேல் போட்டு மூடினார்கள். அக் கற்குவியல் இன்று வரை உள்ளது. அதனால் ஆண்டவருடைய கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. இதன் பொருட்டு அவ்விடம் இன்று வரை ஆக்கோர் பள்ளத்தாக்கு எனப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26