யோசுவா 14 : 1 (RCTA)
கானான் நாட்டில் இஸ்ராயேல் மக்கள் உரிமையாக்கிக் கொண்ட நாடுகளை அவர்களுக்குக் கொடுத்தவர் யாரெனில்; குருவான எலெயசாரும், நூனின் மகன் யோசுவாவும், இஸ்ராயேலின் கோத்திரங்களிலுள்ள குடும்பத் தலைவருமேயாம்.
யோசுவா 14 : 2 (RCTA)
மோயீசன் மூலமாய் ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அவர்கள் திருவுளச்சீட்டுப் போட்டு ஒன்பது கோத்திரத்தாருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள்.
யோசுவா 14 : 3 (RCTA)
ஏனெனில், மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கு மோயீசன் யோர்தானுக்கு அப்புறத்தைச் சொந்தமாகக் கொடுத்திருந்தார். லேவியருக்கோ அவர்கள் சகோதரர்களின் நடுவே சொந்தமாகப் பூமி ஒன்றும் கொடுக்கப்படவில்லை.
யோசுவா 14 : 4 (RCTA)
ஆனால் மனாசே, எபிராயீம் என்ற சூசையின் புதல்வர் இருகோத்திரங்களாய்ப் பிரிக்கப்பட்டு அந்த லேவியருக்குப் பதிலாகச் சொந்தப் பூமியைப் பெற்றனர். லேவியர்கள் பூமி யாதொன்றையும் பெறவில்லை என்றாலும், குடியிருக்க நகர்களையும், ஆடு மாடு முதலியவற்றை வளர்க்க நகருக்கு அருகில் பேட்டைகளையும் பெற்றனர்.
யோசுவா 14 : 5 (RCTA)
ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டிருந்தபடி இஸ்ராயேல் மக்கள் செய்து நாட்டைப் பங்கிட்டுக் கொண்டனர்.
யோசுவா 14 : 6 (RCTA)
அக்காலத்தில் யூதாவின் மக்கள் கல்கலாவிலிருந்த யோசுவாவிடம் வந்தனர். கெனேசையனான எப்போனேயின் மகன் காலேப் அவரை நோக்கி, "காதேஸ்பார்னே என்ற இடத்தில் ஆண்டவர் என்னைக் குறித்தும் கடவுளின் மனிதன் மோயீசனுக்குச் சொன்னதை நீர் அறிவீர்.
யோசுவா 14 : 7 (RCTA)
நாட்டை உளவு பார்க்க ஆண்டவருடைய அடியான் மோயீசன் காதேஸ்பார்னேயிலிருந்து என்னை அனுப்பின போது எனக்கு வயது நாற்பது. எனக்கு உண்மையாகப் பட்டதை அவரிடம் தெரிவித்தேன்.
யோசுவா 14 : 8 (RCTA)
ஆனால் என்னோடு வந்த என் சகோதரர்கள் மக்களை மனம் கலங்கச் செய்தார்கள். நானோ என் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றி நடந்தேன்.
யோசுவா 14 : 9 (RCTA)
அந்நாளில் மோயீசன், 'நீ என் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றினதால், உன் கால்பட்ட நாடு உனக்கும் உன் புதல்வர்களுக்கும் என்றென்றும் சொந்தமாயிருக்கும்' என்று ஆணையிட்டுக் கூறினார்.
யோசுவா 14 : 10 (RCTA)
அப்போது அவர் சொன்னபடி இதோ ஆண்டவர் இன்று வரை என்னை உயிரோடு வைத்துக் காத்து வந்துள்ளார். இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் அலைந்து திரிகையில், ஆண்டவர் அவ்வார்த்தையை மோயீசனிடம் சொல்லியிருந்தார். அது நடந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று எனக்கு வயது எண்பத்தைந்து.
யோசுவா 14 : 11 (RCTA)
மோயீசன் என்னை உளவு பார்க்க அனுப்பின நாளில், எனக்கிருந்த ஆற்றல் இன்று வரை இருக்கிறது. நடக்கவும் போர் புரியவும் எனக்கு முன்பு இருந்த சக்தி இன்றும் இருக்கிறது.
யோசுவா 14 : 12 (RCTA)
ஆதலால், ஆண்டவர் எனக்குக் கொடுப்பதாகச் சொன்ன இந்த மலை நாட்டை நீர் எனக்குத் தர வேண்டும். அவர் அவ்விதம் வாக்குறுதி கொடுத்ததற்கு நீரே சாட்சி. அம்மலை நாட்டில் ஏனாக்கியர் வாழ்த்து வருகின்றனர். அவர்களுடைய அரண் சூழ்ந்த பெரிய நகர்கள் பல உண்டு. ஆண்டவர் என்னோடு இருப்பாரேயானால் அவர் எனக்கு வாக்களித்திருக்கிறபடி அவர்களை அழிக்க என்னால் முடியும் " என்றான்.
யோசுவா 14 : 13 (RCTA)
அதைக்கேட்டு யோசுவா அவனை ஆசீர்வதித்து எபிரோனை அவனுக்குச் சொந்தமாகக் கொடுத்தார்.
யோசுவா 14 : 14 (RCTA)
இவ்வாறு கெனெசையனான ஜெப்போனேயின் மகன் காலேப் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளைப் பின்பற்றியதால் இன்று வரை எபிரோனைச் சொந்தமாகக் கொண்டுள்ளான்.
யோசுவா 14 : 15 (RCTA)
முன்பு எபிரோனுக்குக் கரியாத் அர்பே என்ற பெயர் வழங்கிற்று. ஏனாக்கியருக்குள் மிகப் பெரியவனாய் மதிக்கப்பட்டு வந்த அர்பே அங்கே புதைக்கப்பட்டிருந்தால் அம்மலைக்கு அப்பெயர் வழங்கிற்று. அப்பொழுது நாட்டில் போர்கள் ஓய்ந்து போயின.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15