யோனா 4 : 1 (RCTA)
ஆனால் யோனாசுக்கு இது சிறிதும் பிடிக்கவில்லை; அவர் மிகுந்த சினங்கொண்டார்.
யோனா 4 : 2 (RCTA)
அவர் ஆண்டவரை நோக்கி முறையிட்டு: "ஆண்டவரே, என் நாட்டில் இருக்கும் போதே நான் இதைத் தானே சொன்னேன்! இதை முன்னிட்டுத் தான் நான் தார்சீசுக்கு ஓடிப்போக முயற்சி செய்தேன்; ஏனெனில், நீர் பரிவும் இரக்கமும் உள்ள கடவுள் என்றும், நீடிய பொறுமையும் நிறைந்த அன்பும் கொண்டவர் என்றும், செய்யவிருக்கும் தீங்கைக் குறித்த மனம் மாறுகிறவர் என்றும் எனக்கு அப்பொழுதே தெரியுமே!
யோனா 4 : 3 (RCTA)
ஆகையால், ஆண்டவரே, உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்: என் உயிரை எடுத்து விடும்; நான் வாழ்வதினும் சாவது நன்று" என்று வேண்டிக் கொண்டார்.
யோனா 4 : 4 (RCTA)
அதற்கு ஆண்டவர், "நீ சினங்கொள்வது சரியா?" என்றார்.
யோனா 4 : 5 (RCTA)
பின்பு யோனாஸ் நகரத்தினின்று வெளியேறி, நகரத்திற்குக் கிழக்கே போய்த் தங்கினார்; அங்கே தமக்கு ஒரு பந்தற் போட்டு, நகரத்திற்கு நிகழப் போவதைக் காணும் வரையில் பந்தலின் நிழலில் காத்திருந்தார்.
யோனா 4 : 6 (RCTA)
கடவுளாகிய ஆண்டவர் ஆமணக்குச் செடியொன்றை முளைக்கச் செய்து, அது யோனாசின் தலைக்கு மேல் படர்ந்து நிழல் தந்து அவருடைய சோர்வைப் போக்கும்படி செய்தார்; யோனாசும் அந்த ஆமணக்குச் செடியைக் கண்டு மிக மகிழ்ந்தார்.
யோனா 4 : 7 (RCTA)
ஆனால் மறு நாள் வைகறையில் ஆண்டவர் ஒரு புழுவை அனுப்பினார்; அது ஆமணக்குச் செடியை அரிக்கவே, செடி உலர்ந்து போயிற்று.
யோனா 4 : 8 (RCTA)
பொழுது எழுந்ததும், கிழக்கிலிருந்து வெப்பக் காற்று வரும்படி கடவுள் கட்டளையிட்டார்; உச்சி வெயில் யோனாசின் தலை மேல் தாக்க, அவர் சோர்ந்து போனார்; அவர் சாக விரும்பி, "நான் வாழ்வதினும் சாவது நன்று" என்று சொன்னார்.
யோனா 4 : 9 (RCTA)
அப்போது ஆண்டவர் யோனாசைப் பார்த்து, "நீ அந்த ஆமணக்குச் செடியைக் குறித்துச் சினங்கொள்வது சரியா?" என்று கேட்டார்; அதற்கு அவர், "நான் சாவை விரும்பும் அளவுக்குச் சினங்கொள்வது சரியே" என்று மறுமொழி சொன்னார்.
யோனா 4 : 10 (RCTA)
ஆண்டவர் அவரைப் பார்த்து, " நீ நட்டு வளர்க்காமலே, தானாக ஒரே இரவில் முளைத்தெழுந்து, ஒரே இரவில் உலர்ந்து போன அந்த ஆமணக்குச் செடிக்காக நீ இவ்வளவு வருந்துகிறாயே!
யோனா 4 : 11 (RCTA)
வலக்கை எது, இடக்கை எது என்ற வேறுபாடு கூடத் தெரியாத இலட்சத்து இருபதாயிரம் பேருக்கு மிகுதியான மனிதர்களும், பெருந்தொகையான மிருகங்களும் இருக்கிற இந்த நினிவே மாநகரத்தின் மேல் நாம் இரங்காதிருப்போமோ?" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11