யோனா 1 : 1 (RCTA)
அமாத்தி என்பவரின் மகனான யோனாஸ் என்பவருக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
யோனா 1 : 2 (RCTA)
நீ புறப்பட்டு நினிவே என்னும் மாநகருக்குப் போய், அவர்கள் செய்யும் தீமை நம் திருமுன் எட்டிற்று என்று அவர்களுக்கு அறிவி" என்றார்.
யோனா 1 : 3 (RCTA)
யோனாசோ ஆண்டவரின் திருமுன்னிருந்து தார்சீசுக்குத் தப்பியோடிப் போக எண்ணிப் புறப்பட்டார்; ஆகவே யோப்பா பட்டினத்திற்குப் போய், தார்சீசுக்குப் போகத் தயாராய் இருந்த ஒரு கப்பலைக் கண்டு, கட்டணத்தைக் கொடுத்து ஆண்டவருடைய திருமுன்னிருந்து தப்பி அவர்களோடு தார்சீசுக்குப் போகக் கப்பலேறினார்.
யோனா 1 : 4 (RCTA)
ஆனால் ஆண்டவர் கடலின் மேல் பெருங்காற்றை அனுப்பினார்; கடலில் பெரும் புயல் உண்டாயிற்று; கப்பலோ உடைந்து போகும் நிலையில் தத்தளித்தது.
யோனா 1 : 5 (RCTA)
அப்போது கப்பலில் இருந்தவர்கள் திகில் கொண்டவர்களாய்த் தத்தம் கடவுளைக் கூவி மன்றாடினர்; கப்பலின் பளுவைக் குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளை வாரிக் கடலில் எறிந்தார்கள்; யோனாசோ கப்பலின் அடித்தளத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தார்.
யோனா 1 : 6 (RCTA)
கப்பல் தலைவன் அவரிடம் வந்து, "என்ன இது, நீ உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாயே? எழுந்திரு, உன் கடவுளைக் கூவி மன்றாடு; ஒருவேளை நாம் அழிந்து போகாதபடி அந்தக் கடவுள் நம்மை நினைத்தருள்வார்" என்றான்.
யோனா 1 : 7 (RCTA)
கப்பலில் இருந்தவர்கள் ஒருவர் ஒருவரைப் பார்த்து, "எவனை முன்னிட்டு நமக்கு இந்தத் தீங்கு வந்தது என்றறியத் திருவுளச் சீட்டுப் போடுவோம், வாருங்கள்" என்றனர்; அவ்வாறு அவர்கள் போட்ட சீட்டு யோனாசின் பேரில் விழுந்தது.
யோனா 1 : 8 (RCTA)
அப்போது அவர்கள் அவரைப் பார்த்து, "இந்த ஆபத்து எங்களுக்கு வரக் காரணம் என்ன? உன் தொழிலென்ன? நீ எந்த ஊர்? எங்கே போகிறாய் ? உன் இனத்தார் யார்? சொல்" என்றார்கள்.
யோனா 1 : 9 (RCTA)
அதற்கு அவர் அவர்களை நோக்கி, "நான் ஓர் எபிரேயன்; கடலையும் நிலத்தையும் படைத்தவரான விண்ணகக் கடவுளாகிய ஆண்டவரின் அடியான்" என்று விடையளித்தார்.
யோனா 1 : 10 (RCTA)
அப்போது அவர்கள் மிகவும் அஞ்சி, "நீ என்ன செய்தாய்?" என்று கேட்டார்கள்; அவர்களோ அவர் ஆண்டவரின் திருமுன்னிருந்து தப்பியோடுகிறார் என்பதை அவரிடமிருந்தே கேட்டறிந்தனர்.
யோனா 1 : 11 (RCTA)
கடல் அலைகள் பொங்கியெழுந்தமையால், அவர்கள், "கடல் எங்கள் மட்டில் அமைதியடையும் படிக்கு உனக்கு நாங்கள் செய்ய வேண்டிதென்ன?" என்று அவரிடம் கேட்டார்கள்.
யோனா 1 : 12 (RCTA)
அதற்கு அவர், "என்னைத் தூக்கிக் கடலில் எறிந்து விடுங்கள்; அப்போது உங்கள் மேல் கடல் அமைதி கொள்ளும்; ஏனெனில் என்னை முன்னிட்டுத் தான் இந்தக் கடும் புயல் உங்கள் மேல் வந்தது என்பதை நான் அறிவேன்" என்றார்.
யோனா 1 : 13 (RCTA)
ஆயினும், கப்பலைக் கரைக்குக் கொண்டு வர முனைந்து தண்டு வலித்தனர்; ஆனால் இயலவில்லை. ஏனெனில் கடல் அலைகள் மேலும் மேலும் பொங்கிக் கொந்தளித்தன.
யோனா 1 : 14 (RCTA)
ஆகவே, அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கூக்குரலிட்டு, "ஆண்டவரே, இந்த மனிதனின் உயிரை முன்னிட்டு எங்களை அழிய விடாதேயும்; மாசற்ற இரத்தப் பழியை எங்கள் மேல் சுமத்தாதேயும்; ஏனெனில், ஆண்டவரே, உமக்கு விருப்பமானதை நீர் தான் செய்கிறீர்" என்று மன்றாடினர்.
யோனா 1 : 15 (RCTA)
பிறகு அவர்கள் யோனாசைத் தூக்கிக் கடலில் எறிந்தார்கள்; கொந்தளிப்பும் ஓய்ந்தது.
யோனா 1 : 16 (RCTA)
அந்த மனிதர்கள் ஆண்டவர் மட்டில் பெரிதும் அச்சங் கொண்டு ஆண்டவருக்குப் பலியிட்டு நேர்ச்சைகளும் செய்து கொண்டார்கள்.
யோனா 1 : 17 (RCTA)
(2:1) யோனாசை விழுங்கும்படி ஆண்டவர் ஒரு பெரிய மீனுக்குக் கட்டளை கொடுத்திருந்தார்; யோனாசோ அந்த மீன் வயிற்றிலே மூன்று பகலும் மூன்று இரவும் இருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17