யோவான் 9 : 1 (RCTA)
இயேசு போய்க்கொண்டிருக்கும்போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார்.
யோவான் 9 : 2 (RCTA)
"ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.
யோவான் 9 : 3 (RCTA)
இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.
யோவான் 9 : 4 (RCTA)
"பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகின்றது. அப்பொழுது எவனும் வேலைசெய்ய முடியாது.
யோவான் 9 : 5 (RCTA)
இவ்வுலகில் இருக்கும்வரை நான் உலகிற்கு ஒளி" என்றார்.
யோவான் 9 : 6 (RCTA)
இதைச் சொன்னபின், தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறுண்டாக்கி, அச்சேற்றை அவனுடைய கண்கள்மேல் பூசி,
யோவான் 9 : 7 (RCTA)
அவனை நோக்கி, "நீ போய்ச் சீலோவாம் குளத்தில் கழுவு" என்றார். (சீலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். ) அவன் போய்க் கழுவினான், பார்வையோடு திரும்பி வந்தான்.
யோவான் 9 : 8 (RCTA)
அக்கம்பக்கத்தாரும், முன்பு அவனைப் பிச்சைக்காரனாகப் பார்த்துவந்தவர்களும், "இவன்தானே அங்கே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன்?" என்றனர்.
யோவான் 9 : 9 (RCTA)
சிலர், "இவன்தான்" என்றும், சிலரோ, "அவனல்லன், அவனைப் போலிருக்கிறான்" என்றும் சொல்லிக்கொண்டனர். அவனோ, "நான்தான்" என்றான்.
யோவான் 9 : 10 (RCTA)
அவர்கள், "உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று கேட்டனர்.
யோவான் 9 : 11 (RCTA)
அவன், "இயேசு என்பவர் சேறுண்டாக்கி என் கண்களில் பூசி, 'சீலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு' என்றார். நான் போய்க் கழுவினேன், பார்வை பெற்றேன்" என்றான்.
யோவான் 9 : 12 (RCTA)
அவர்கள், "அவர் எங்கே?" என்று அவனைக் கேட்க, அவன் "தெரியாது" என்றான்.
யோவான் 9 : 13 (RCTA)
முன்பு குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடம் கூட்டிக்கொண்டு போயினர்.
யோவான் 9 : 14 (RCTA)
இயேசு சேறுண்டாக்கி அவனுக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள்.
யோவான் 9 : 15 (RCTA)
எனவே பரிசேயரும், "எப்படிப் பார்வை அடைத்தாய்?" என்ற அதே கேள்வியைக் கேட்டனர். அவனோ அவர்களிடம், "என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்" என்றான்.
யோவான் 9 : 16 (RCTA)
பரிசேயர்களுள் சிலர், "அவன் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில்லை" என, சிலர், "பாவியானவன் இத்தகைய அருங்குறிகளை எப்படிச் செய்யமுடியும் ?" என்றனர். எனவே, அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
யோவான் 9 : 17 (RCTA)
அவர்கள் மீண்டும் குருடனை நோக்கி, "உனக்குப் பார்வை அளித்தவனைக் குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?" என, அவன், "அவர் ஓர் இறைவாக்கினர்" என்றான்.
யோவான் 9 : 18 (RCTA)
பார்வையடைந்தவனுடைய பெற்றோரை அழைத்துக் கேட்கும்வரை யூதர்கள், அவன் குருடனாயிருந்து பார்வை பெற்றான் என்பதை நம்பவில்லை.
யோவான் 9 : 19 (RCTA)
உங்கள் மகன் பிறவிக்குருடன் என்று சொல்லுகிறீர்களே, இவன்தானா? இவனுக்கு இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது?" என்று அவர்களை வினவினர்.
யோவான் 9 : 20 (RCTA)
அதற்கு அவனுடைய பெற்றோர், "இவன் எங்கள் மகன்தான். பிறவியிலேயே குருடன்தான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்.
யோவான் 9 : 21 (RCTA)
ஆனால், இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இவனுக்குப் பார்வை கொடுத்தவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவனையே கேட்டுக்கொள்ளுங்கள். அவன் வயது வந்தவன்; நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.
யோவான் 9 : 22 (RCTA)
யூதர்களுக்கு அஞ்சியே அவனுடைய பெற்றோர் இவ்வாறு கூறினர். ஏனெனில், அவரை மெசியாவாக எவனாவது ஏற்றுக்கொண்டால், அவனைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்கவேண்டுமென யூதர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.
யோவான் 9 : 23 (RCTA)
அதனால்தான் அவனுடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன், அவனையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
யோவான் 9 : 24 (RCTA)
குருடனாயிருந்தவனை மீண்டும் அழைத்து அவனிடம், "நீ கடவுளை மகிமைப்படுத்து; அவன் பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.
யோவான் 9 : 25 (RCTA)
அவனோ, "அவர் பாவியோ, அல்லரோ, எனக்குத் தெரியாது. ஒன்றுதான் தெரியும்; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்" என்றான்.
யோவான் 9 : 26 (RCTA)
மீண்டும் அவர்கள், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று வினவ,
யோவான் 9 : 27 (RCTA)
அவன், "ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கவனிக்கவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கவேண்டும்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?" என்றான்.
யோவான் 9 : 28 (RCTA)
அவர்கள் அவனைத் திட்டி, "நீதான் அந்த ஆளுடைய சீடன். நாங்களோ மோயீசனுடைய சீடர்.
யோவான் 9 : 29 (RCTA)
கடவுள் மோயீசனோடு பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். இவன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.
யோவான் 9 : 30 (RCTA)
அதற்கு அவன், "என்ன விந்தையாயிருக்கிறது! எனக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். இவர் எங்கிருந்து வந்தார் என்பது தெரியாதென்கிறீர்களே!
யோவான் 9 : 31 (RCTA)
பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இறைப்பற்றுள்ளவனாய் அவர் விருப்பத்தின்படி நடக்கிறவனுக்கே செவிசாய்க்கிறார். இது நமக்கு நன்றாய்த் தெரியும்.
யோவான் 9 : 32 (RCTA)
பிறவியிலேயே குருடனாயிருந்த ஒருவனுக்கு யாரும் பார்வையளித்ததாக ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை.
யோவான் 9 : 33 (RCTA)
இவர் கடவுளிடமிருந்து வராதிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது" என்றான்.
யோவான் 9 : 34 (RCTA)
அப்போது அவர்கள், "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குப் போதிக்கிறாய்?" என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
யோவான் 9 : 35 (RCTA)
அவர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்வியுற்றார். பின்பு அவனைக் கண்டபொழுது, "மனுமகனில் உனக்கு விசுவாசம் உண்டா ?" என,
யோவான் 9 : 36 (RCTA)
அவன், "ஆண்டவரே, அவர் யார் எனச் சொல்லும், நான் அவரில் விசுவாசம் கொள்வேன்" என்றான்.
யோவான் 9 : 37 (RCTA)
இயேசு, அவனை நோக்கி, "நீ அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடன் பேசுகிறவரே அவர்" என்று கூற,
யோவான் 9 : 38 (RCTA)
அவன், "ஆண்டவரே, விசுவசிக்கிறேன்" என்று சொல்லி அவரைப் பணிந்து வணங்கினான்.
யோவான் 9 : 39 (RCTA)
அப்போது இயேசு, "நான் தீர்ப்பிடவே இவ்வுலகத்திற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வைபெறவும், பார்வையுள்ளோர் குருடராகவுமே நான் வந்தேன்" என்று கூறினார்.
யோவான் 9 : 40 (RCTA)
அவருடனிருந்த பரிசேயர் சிலர் இதைக் கேட்டு, "நாங்களுமா குருடர்?" என்று வினவ,
யோவான் 9 : 41 (RCTA)
இயேசு, "நீங்கள் குருடராய் இருந்தால், உங்களுக்குப் பாவம் இராது. ஆனால், 'எங்களுக்கு கண் தெரிகிறது' என்கிறீர்கள். ஆதலால், உங்கள் பாவத்திலேயே நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41