யோவான் 8 : 1 (RCTA)
இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
யோவான் 8 : 2 (RCTA)
விடியற்காலையில் அவர் கோயிலுக்கு வர, மக்கள் எல்லாரும் அவரிடம் வந்தார்கள். அவர் அமர்ந்து, அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
யோவான் 8 : 3 (RCTA)
விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணொருத்தியை மறைநூல் வல்லுநரும் பரிசேயரும் கொண்டுவந்து நடுவில் நிறுத்தி,
யோவான் 8 : 4 (RCTA)
"போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டாள்.
யோவான் 8 : 5 (RCTA)
இப்படிப்பட்டவர்களைக் கல்லாலெறிந்து கொல்லவேண்டுமென்பது மோயீசன் நமக்குக் கொடுத்த சட்டம். நீர் என்ன சொல்லுகிறீர் ?" என்றனர்.
யோவான் 8 : 6 (RCTA)
அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது கண்டுபிடிக்கும்படி, அவரைச் சோதிக்க இப்படிக கேட்டனர். இயேசுவோ குனிந்து, விரலாலே தரையில் எழுதத்தொடங்கினார்.
யோவான் 8 : 7 (RCTA)
அவர்கள் அந்தக் கேள்வியைத் திரும்பத்திரும்பக் கேட்டதால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவமில்லாதவன் முதலில் அவள்மேல் கல் எறியட்டும்" என்றார்.
யோவான் 8 : 8 (RCTA)
மீண்டும் குனிந்து தரையில் எழுதலானார்.
யோவான் 8 : 9 (RCTA)
அவர் சொன்னதைக் கேட்டதும் முதியவர் தொடங்கி ஒருவர்பின் ஒருவராக அவர்கள் போய்விட்டார்கள். கடைசியில் இயேசுமட்டும் இருந்தார்; அப்பெண்ணோ அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தாள்.
யோவான் 8 : 10 (RCTA)
அவர் நிமிர்ந்துபார்த்து, "மாதே, எங்கே அவர்கள் ? உனக்கு எவரும் தீர்ப்பிடவில்லையா ?" என்று கேட்டார்.
யோவான் 8 : 11 (RCTA)
அவளோ, "ஒருவரும் தீர்ப்பிடவில்லை, ஆண்டவரே" என, இயேசு, "நானும் தீர்ப்பிடேன். இனிமேல் பாவஞ்செய்யாதே, போ" என்றார்.
யோவான் 8 : 12 (RCTA)
இதற்குப்பின் இயேசு மக்களைப்பார்த்துக் கூறினார்: "நானே உலகின் ஒளி; என்னைப் பின்செல்பவன் இருளில் நடவான். உயிரின் ஒளியைக் கொண்டிருப்பான்."
யோவான் 8 : 13 (RCTA)
பரிசேயரோ அவரிடம், "உம்மைப்பற்றி நீரே சாட்சியம் கூறுகின்றீர்; உம்முடைய சாட்சியம் செல்லாது" என்றனர்.
யோவான் 8 : 14 (RCTA)
இயேசு மறுமொழியாகச் சொன்னதாவது: "என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினும் என் சாட்சியம் செல்லும். ஏனெனில், நான் எங்கிருந்து வந்தேன், எங்கே செல்கிறேன் என்று எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன் என்றோ எங்கே செல்கிறேன் என்றோ உங்களுக்குத் தெரியாது.
யோவான் 8 : 15 (RCTA)
நீங்கள் உலகுக்கு ஏற்றவாறு தீர்ப்பிடுகிறீர்கள்; நானோ எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.
யோவான் 8 : 16 (RCTA)
அப்படி நான் தீர்ப்பிட்டாலும், என் தீர்ப்பு செல்லும். ஏனெனில், தீர்ப்பிடுவதில் நான் தனியாயில்லை, என்னை அனுப்பிய தந்தையும் என்னோடு இருக்கிறார்.
யோவான் 8 : 17 (RCTA)
இருவருடைய சாட்சியம் செல்லும் என்று உங்கள் சட்டத்திலே எழுதியுள்ளது அன்றோ ?
யோவான் 8 : 18 (RCTA)
என்னைப்பற்றிச் சாட்சியம் நானும் கூறுகிறேன்; என்னை அனுப்பிய தந்தையும் கூறுகிறார்."
யோவான் 8 : 19 (RCTA)
அவர்களோ, "உம் தந்தை எங்கே ?" என்று கேட்க, இயேசு மறுமொழியாகச் சொன்னார்: "நீங்கள் என்னையும் அறிவீர்கள், என் தந்தையையும் அறிவீர்கள். என்னை நீங்கள் அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள்."
யோவான் 8 : 20 (RCTA)
இயேசு கோயிலில் போதிக்கையில், காணிக்கையறை அருகில் இப்படிக் கூறினார். அவருடைய நேரம் இன்னும் வராததால், எவனும் அவரைப் பிடிக்கவில்லை.
யோவான் 8 : 21 (RCTA)
இயேசு மீண்டும் அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் செல்கிறேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனால், உங்கள் பாவத்தில் மடிவீர்கள். நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது."
யோவான் 8 : 22 (RCTA)
யூதர்களோ, " ' நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வர முடியாது ' என்று சொல்லுகிறானே, இவன் என்ன, தற்கொலை செய்து கொள்ளப்போகிறானோ ?" என்றார்கள்.
யோவான் 8 : 23 (RCTA)
அவரோ அவர்களை நோக்கிக் கூறினார்: "நீங்கள் மண்ணைச் சார்ந்தவர்கள்; நானோ விண்ணைச் சார்ந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள்; நானோ இவ்வுலகைச் சார்ந்தவனல்லேன்.
யோவான் 8 : 24 (RCTA)
ஆகையால்தான், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள் என்று நான் கூறினேன். நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசியாவிடில், உங்கள் பாவங்களிலே மடிவீர்கள்."
யோவான் 8 : 25 (RCTA)
அவர்களோ, "நீர் யார் ?" என்று வினவ, இயேசு கூறினார்: "நான் யாரென்று உங்களுக்குத் தொடக்கமுதல் சொல்லிவந்தேனோ, அவர்தாம் நான்.
யோவான் 8 : 26 (RCTA)
உங்களைப்பற்றிப் பேசவும் தீர்ப்பிடவும் பல காரியங்கள் உள்ளன; ஆனால், என்னை அனுப்பியவர் உண்மையானவர்; நான் அவரிடமிருந்து கேட்டவற்றையே உலகிற்கு எடுத்துச்சொல்லுகிறேன்."
யோவான் 8 : 27 (RCTA)
இப்படிச் சொன்னதில் அவர் தம் தந்தையைக் குறிப்பிட்டார் என்று அவர்கள் உணரவில்லை.
யோவான் 8 : 28 (RCTA)
ஆகவே இயேசு அவர்களை நோக்கிக் கூறினார்: "மனுமகனை நீங்கள் உயர்த்திய பின்பு, நானே இருக்கிறேன், நானாகவே எதையும் செய்வதில்லை; என் தந்தை எனக்குக் கற்பித்ததையே நான் எடுத்துச்சொல்லுகிறேன் என்று அறிந்து கொள்வீர்கள்.
யோவான் 8 : 29 (RCTA)
என்னை அனுப்பினவர் என்னோடு இருக்கிறார்; அவர் என்னைத் தனியே விட்டுவிடவில்லை; ஏனெனில் நான் அவருக்கு உகந்ததையே எப்பொழுதும் செய்கிறேன்."
யோவான் 8 : 30 (RCTA)
அவர் இவற்றைச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 8 : 31 (RCTA)
பின்னர், தம்மை விசுவசித்த யூதர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருப்பீர்களாகில், உண்மையாகவே என் சீடராயிருப்பீர்கள்.
யோவான் 8 : 32 (RCTA)
உண்மையை அறிவீர்கள்; அவ்வுண்மையும் உங்களுக்கு விடுதலையளிக்கும்."
யோவான் 8 : 33 (RCTA)
அவர்கள், "ஆபிரகாமின் வழிவந்தவர்கள் நாங்கள்; ஒருபோதும் யாருக்கும் அடிமைகளாயிருந்ததில்லை; அப்படியிருக்க, 'நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று நீர் சொல்வதெப்படி?" என்று கேட்டனர்.
யோவான் 8 : 34 (RCTA)
இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: பாவம் செய்கிற எவனும் பாவத்திற்கு அடிமை.
யோவான் 8 : 35 (RCTA)
வீட்டில் அடிமைக்கு நிலையான இடமில்லை; மகனுக்கோ எப்பொழுதும் இடமுண்டு.
யோவான் 8 : 36 (RCTA)
எனவே, மகன் உங்களுக்கு விடுதலையளித்தால்தான், உங்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும்.
யோவான் 8 : 37 (RCTA)
நீங்கள் ஆபிரகாமின் வழிவந்தவர்கள் என்பது எனக்குத் தெரியும்; ஆயினும், என் வார்த்தை உங்களில் இடம்பெறாததால், நீங்கள் என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள்.
யோவான் 8 : 38 (RCTA)
நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்லுகிறேன்; நீங்களோ உங்கள் தந்தையிடம் கேட்டறிந்ததைச் செய்கிறீர்கள்."
யோவான் 8 : 39 (RCTA)
அப்பொழுது அவர்கள், "ஆபிரகாமே எங்கள் தந்தை" என்றார்கள். அவர்களுக்கு இயேசு கூறினார்: "நீங்கள் ஆபிரகாமின் மக்களாயிருந்தால், ஆபிரகாமின் செயல்களைச் செய்வீர்கள்.
யோவான் 8 : 40 (RCTA)
ஆனால், கடவுள் எனக்குக் கூறிய உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை இப்பொழுது கொல்லத் தேடுகிறீர்கள்; ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே.
யோவான் 8 : 41 (RCTA)
நீங்கள் செய்துவருவதோ உங்கள் தந்தையின் செயல்கள்தாம்." அவர்கள், "நாங்கள் வேசித்தனத்தில் பிறந்தவர்கள் அல்ல. எங்களுக்கு ஒரே தந்தை உண்டு: கடவுளே அவர்" என்றனர்.
யோவான் 8 : 42 (RCTA)
இயேசுவோ அவர்களை நோக்கிக் கூறினார்: "கடவுள் உங்கள் தந்தையாயிருப்பின் எனக்கு அன்பு செய்வீர்கள்; ஏனென்றால், நான் கடவுளிடமிருந்து புறப்பட்டு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவர்தாம் என்னை அனுப்பினார்.
யோவான் 8 : 43 (RCTA)
நான் சொல்வதை ஏன் நீங்கள் கண்டுணர்வதில்லை? நான் சொல்வதை கேட்க உங்களால் முடியாமற்போவதால்தான்.
யோவான் 8 : 44 (RCTA)
அலகையே உங்களுக்குத் தந்தை; உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்களுக்கு விருப்பம். ஆதிமுதல் அவன் ஒரு கொலைகாரன்: அவனிடம் உண்மையில்லாததால் அவன் உண்மையின்பால் நிலைத்துநிற்கவில்லை. அவன் பொய் சொல்லும்பொழுது தன்னுள் இருப்பதையே பேசுகிறான். ஏனெனில், அவன் பொய்யன், பொய்க்குத் தந்தை.
யோவான் 8 : 45 (RCTA)
நான் உண்மையைக் கூறுவதால்தான் நீங்கள் என்னை விசுவசிப்பதில்லை.
யோவான் 8 : 46 (RCTA)
என்னிடத்தில் பாவமுண்டென உங்களுள் யார் எண்பிக்கக்கூடும்? நான் உங்களுக்கு உண்மையைக் கூறினால், என்னை ஏன் விசுவசிப்பதில்லை?
யோவான் 8 : 47 (RCTA)
கடவுளால் பிறந்தவன் அவருடைய சொல்லுக்குச் செவிமடுக்கிறான். நீங்களோ கடவுளால் பிறக்கவில்லை. ஆதலால் செவிமடுப்பதில்லை" என்றார்.
யோவான் 8 : 48 (RCTA)
யூதர்களோ அவரைப் பார்த்து, "நீ சமாரியன், பேய்பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரிதானே?" என்றனர்.
யோவான் 8 : 49 (RCTA)
இயேசுவோ, "நான் பேய்பிடித்தவன் அல்லேன் என் தந்தைக்கு நான் மதிப்பளிக்கிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
யோவான் 8 : 50 (RCTA)
நான் என் மகிமையைத் தேடுவதில்லை. அதை எனக்குத் தேடித்தருபவர் ஒருவர் இருக்கிறார், இதில் தீர்ப்பிடுகிறவர் அவரே.
யோவான் 8 : 51 (RCTA)
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாகான்" என்றார்.
யோவான் 8 : 52 (RCTA)
எனவே யூதர்கள், "நீ பேய்பிடித்தவன் என்பது இப்பொழுது தெளிவாகிறது. ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் அவ்வாறே இறந்தனர். நீயோ, 'ஒருவன் என் வார்த்தையைக் கடைப்பிடிப்பானாகில் என்றுமே சாவுக்குள்ளாகமாட்டான்' என்று சொல்லுகிறாய்.
யோவான் 8 : 53 (RCTA)
நம் தந்தை ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் இறந்தார். இறைவாக்கினர்களும் இறந்தனர். உன்னை யாரென நினைத்துக்கொள்கிறாய்?" என்று வினவினர்.
யோவான் 8 : 54 (RCTA)
அதற்கு இயேசு, "நான் என்னையே மகிமைப்படுத்தினால், என் மகிமை வீண் மகிமை. என் தந்தையே என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரையே நீங்கள் நம் கடவுள்' என்று சொல்லுகிறீர்கள்.
யோவான் 8 : 55 (RCTA)
எனினும், நீங்கள் அவரை அறியவில்லை, நானோ அவரை அறிவேன். அவரை நான் அறியேன் என்றால் உங்களைப்போல நானும் பொய்யனாவேன். ஆனால் நான் அவரை அறிவேன்; அவருடைய வார்த்தையையும் கடைப்பிடிக்கிறேன்.
யோவான் 8 : 56 (RCTA)
உங்கள் தந்தை ஆபிரகாம் எனது நாளைக் காட்சியில் கண்டு களிகூர்ந்தார்; அந்நாளைக் கண்டார்; பெருமகிழ்ச்சி கொண்டார்" என்றார்.
யோவான் 8 : 57 (RCTA)
யூதர்கள், "உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைப் பார்த்திருக்கிறாயோ?" என்றனர்.
யோவான் 8 : 58 (RCTA)
இயேசுவோ அவர்களிடம், "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஆபிரகாம் உண்டாவதற்கு முன்பே நான் இருக்கிறேன்" என்றார்.
யோவான் 8 : 59 (RCTA)
இதைக் கேட்டு அவர்கள் அவர்மேல் எறியக் கல் எடுத்தனர். இயேசுவோ மறைவாக நழுவிக் கோயிலிலிருந்து வெளியேறினார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59