யோவான் 6 : 1 (RCTA)
இதன்பின், இயேசு கலிலேயாக் கடலின் அக்கரைக்குச் சென்றார். - அதற்குத் திபெரியாக் கடல் என்றும் பெயர்.
யோவான் 6 : 2 (RCTA)
அவர் பிணியாளிகளுக்குச் செய்துவந்த அருங்குறிகளைக் கண்டதனால், பெருங்கூட்டம் அவரைப் பின்தொடர்ந்தது.
யோவான் 6 : 3 (RCTA)
இயேசு மலைமேல் ஏறி, அங்குத்தம் சீடர்களோடு அமர்ந்தார்.
யோவான் 6 : 4 (RCTA)
யூதர்களின் திருவிழாவாகிய பாஸ்கா அண்மையிலிருந்தது.
யோவான் 6 : 5 (RCTA)
இயேசு ஏறெடுத்துப்பார்த்து, பெருங்கூட்டம் ஒன்று தம்மிடம் வருவதைக் கண்டு, "இவர்கள் எல்லாருக்கும் உணவளிப்பதற்கு எங்கிருந்து அப்பம் வாங்குவது ?" என்று பிலிப்புவைக் கேட்டார்.
யோவான் 6 : 6 (RCTA)
தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிக்கவே இவ்வாறு கேட்டார்.
யோவான் 6 : 7 (RCTA)
அதற்குப் பிலிப்பு, "இருநூறு வெள்ளிக்காசுக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கொரு சிறு துண்டுகூட வராதே" என்றார்.
யோவான் 6 : 8 (RCTA)
அவருடைய சீடருள் ஒருவரும், சீமோன் இராயப்பருடைய சகோதரருமான பெலவேந்திரர்,
யோவான் 6 : 9 (RCTA)
"இங்கே ஒரு பையனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பமும் இரண்டு மீனும் உள்ளன. ஆனால், இத்தனை பேருக்கு இது எப்படி போதும் ?" என்று சொன்னார்.
யோவான் 6 : 10 (RCTA)
இயேசுவோ, "மக்களைப் பந்தியமர்த்துங்கள்" என்றார். அங்கே நல்ல புல்தரை இருந்தது. எல்லாரும் அமர்ந்தனர். அவர்களுள் ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம்.
யோவான் 6 : 11 (RCTA)
இயேசு அப்பங்களை எடுத்து, நன்றிகூறி, பந்தியமர்ந்தவர்களுக்குப் பகிர்ந்தளித்தார். அவ்வாறே மீன்களையும் கொடுத்தார். வேண்டியமட்டும் வாங்கியுண்டார்கள்.
யோவான் 6 : 12 (RCTA)
அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி மீதியான துண்டுகளைச் சேர்த்துவையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார்.
யோவான் 6 : 13 (RCTA)
அவர்களும் அவ்வாறே சேர்த்து, மக்கள் எல்லாரும் உண்டபின், ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினர்.
யோவான் 6 : 14 (RCTA)
இயேசு செய்த இந்த அருங்குறியைக் கண்டு, மக்கள், "உலகிற்கு வரப்போகும் இறைவாக்கினர் உண்மையிலே இவர்தாம்" என்றார்கள்.
யோவான் 6 : 15 (RCTA)
ஆகவே, அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டுபோய், அரசனாக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து, இயேசு அவர்களை விட்டு விலகித் தனியாக மீண்டும் மலைக்குச் சென்றார்.
யோவான் 6 : 16 (RCTA)
இரவானதும் அவருடைய சீடர் கடலுக்கு வந்து, படகு ஏறி, அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்குப் புறப்பட்டனர்.
யோவான் 6 : 17 (RCTA)
ஏற்கெனவே இருண்டிருந்தது. இயேசுவோ இன்னும் அவர்களிடம் வந்துசேரவில்லை.
யோவான் 6 : 18 (RCTA)
புயற்காற்றெழுந்தது; கடல் பொங்கிற்று.
யோவான் 6 : 19 (RCTA)
அவர்கள் ஏறக்குறைய மூன்று நான்கு கல் தொலைவு படகு ஓட்டியபின், இயேசு கடல்மேல் நடந்து படகுக்கருகில் வருவதைக் கண்டு அஞ்சினர்.
யோவான் 6 : 20 (RCTA)
அவரோ, "நான்தான், அஞ்சாதீர்கள்" என்று அவர்களுக்குச் சொன்னார்.
யோவான் 6 : 21 (RCTA)
அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால் படகு அதற்குள் அவர்கள் சேரவேண்டிய கரை போய்ச் சேர்ந்தது.
யோவான் 6 : 22 (RCTA)
பின்தங்கியிருந்த மக்கள் மறுநாளும் கடலின் அக்கரையிலேயே இருந்தனர். முந்தின நாள் அங்கே ஒரு படகுதான் இருந்தது என்பதும், அதில் சீடர் மட்டும் போனார்களேயன்றி, இயேசு அவர்களோடு அப்படகில் ஏறவில்லை என்பதும் அவர்கள் நினைவுக்கு வந்தது.
யோவான் 6 : 23 (RCTA)
ஆண்டவர் நன்றிகூறித் தந்த அப்பத்தை உண்ட இடத்திற்கு அருகில் திபேரியாவிலிருந்து வேறு படகுகள் இதற்குள் வந்து சேர்ந்தன.
யோவான் 6 : 24 (RCTA)
இயேசுவும் அவருடைய சீடர்களும் அங்கு இல்லாததைக் கண்டு, மக்கள் அப்படகுகளில் ஏறிக் கப்பர்நகூமுக்கு அவரைத் தேடிவந்தார்கள்.
யோவான் 6 : 25 (RCTA)
கடலின் இக்கரையில் அவரைப் பார்த்து, "ராபி, எப்பொழுது இங்கு வந்தீர் ?" என்று கேட்டனர்.
யோவான் 6 : 26 (RCTA)
இயேசு மறுமொழியாக: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் என்னைத் தேடுவது அருங்குறிகளைக் கண்டதாலன்று, அப்பங்களை வயிறார உண்டதால்தான்.
யோவான் 6 : 27 (RCTA)
அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; முடிவில்லாத வாழ்வளிக்கும் நிலையான உணவுக்காக உழையுங்கள். அதை மனுமகன் உங்களுக்குக் கொடுப்பார்; ஏனெனில், அவருக்கே தந்தையாகிய கடவுள் தம் அதிகாரத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தார்" என்றார்.
யோவான் 6 : 28 (RCTA)
அவர்கள் அவரை நோக்கி, "கடவுளுக்கேற்ற செயல்களைச் செய்ய நாங்கள் என்ன செய்யவேண்டும் ?" என,
யோவான் 6 : 29 (RCTA)
இயேசு, "அவர் அனுப்பியவரை விசுவசிப்பதே கடவுளுக்கேற்ற செயல்" என்றார்.
யோவான் 6 : 30 (RCTA)
அவர்கள், "உம்மை நாங்கள் விசுவிசிக்க ஓர் அருங்குறி பார்க்கவேண்டும்; என்ன அருங்குறி செய்வீர் ? என்ன செயல் ஆற்றுவீர் ?
யோவான் 6 : 31 (RCTA)
' அவர்கள் உண்பதற்கு வானத்திலிருந்து உணவு அருளினார் ' என்று எழுதியுள்ளதற்கேற்ப எங்கள் முன்னோர் பாலைவனத்தில் மன்னாவை உண்டனரே" என்று கேட்டனர்.
யோவான் 6 : 32 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: வானத்திலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோயீசன் அல்லர்; வானத்திலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.
யோவான் 6 : 33 (RCTA)
ஏனெனில், வானினின்று இறங்கி வந்து உலகிற்கு உயிர் அளிப்பவரே கடவுள் தரும் உணவு" என்றார்.
யோவான் 6 : 34 (RCTA)
அவர்களோ, "ஆண்டவரே, இவ்வுணவை எப்பொழுதும் எங்களுக்குத் தாரும்" என்றனர்.
யோவான் 6 : 35 (RCTA)
அதற்கு இயேசு கூறினார்: "நானே உயிர் தரும் உணவு. என்னிடம் வருகிறவனுக்குப் பசியே இராது; என்னில் விசுவாசங்கொள்பவனுக்கு என்றுமே தாகம் இராது.
யோவான் 6 : 36 (RCTA)
ஆனால், நான் உங்களுக்குச் சொன்னதுபோல, நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவசிப்பதாயில்லை.
யோவான் 6 : 37 (RCTA)
தந்தை எனக்குத் தருவதெல்லாம் என்னிடம் வந்துசேரும். என்னிடம் வருபவனையோ நான் தள்ளிவிட்டேன்.
யோவான் 6 : 38 (RCTA)
ஏனெனில், என் விருப்பத்தை நிறைவேற்ற அன்று, என்னை அனுப்பினவருடைய விருப்பத்தை நிறைவேற்றவே நான் வானத்திலிருந்து இறங்கிவந்தேன்.
யோவான் 6 : 39 (RCTA)
என்னை அனுப்பினவருடைய விருப்பமோ: அவர் எனக்குத் தந்ததில் எதையும் நான் அழியவிடாமல், கடைசி நாளில் உயிர்ப்பிக்க வேண்டுமென்பதே.
யோவான் 6 : 40 (RCTA)
ஆம், என் தந்தையின் விருப்பம் இதுவே: மகனைக் கண்டு, அவரில் விசுவாசம் கொள்பவன் எவனும் முடிவில்லா வாழ்வு பெறவேண்டும்; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்."
யோவான் 6 : 41 (RCTA)
"வானினின்று இறங்கிவந்த உணவு நானே" என்று அவர் சொன்னதால் யூதர்கள் முணுமுணுத்து,
யோவான் 6 : 42 (RCTA)
"சூசையின் மகனாகிய இயேசு அன்றோ இவன் ? இவனுடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியுமே! ' நான் வானினின்று இறங்கி வந்தேன் ' என்று இவன் சொல்வதெப்படி ?" என்றார்கள்.
யோவான் 6 : 43 (RCTA)
அதற்கு இயேசு கூறியது: "உங்களுக்குள்ளே முணுமுணுக்கவேண்டாம்.
யோவான் 6 : 44 (RCTA)
"என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது; நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.
யோவான் 6 : 45 (RCTA)
' கடவுளிடமிருந்தே அவர்கள் எல்லாரும் கற்றுக்கொள்வர் ' என்று இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது; தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட எவனும் என்னிடம் வருகிறான்.
யோவான் 6 : 46 (RCTA)
தந்தையை யாரேனும் நேரடியாகக் கண்டார் என்றல்ல, கடவுளிடமிருந்து வந்தவர் தவிர வேறு ஒருவரும் கண்டதில்லை. இவர் ஒருவரே தந்தையைக் கண்டுள்ளார்.
யோவான் 6 : 47 (RCTA)
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: விசுவசிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்.
யோவான் 6 : 48 (RCTA)
நானே உயிர் தரும் உணவு.
யோவான் 6 : 49 (RCTA)
பாலைவனத்தில் உங்கள் முன்னோர் மன்னாவை உண்டனர்; ஆயினும் இறந்தனர்.
யோவான் 6 : 50 (RCTA)
ஆனால், நான் குறிப்பிடும் உணவை உண்பவன் சாகான். இதற்காகவே இவ்வுணவு வானினின்று இறங்கியது.
யோவான் 6 : 51 (RCTA)
நானே வானினின்று இறங்கிவந்த உயிருள்ள உணவு. இதை எவனாவது உண்டால், அவன் என்றுமே வாழ்வான். நான் அளிக்கும் உணவு உலகம் உய்வதற்காகப் பலியாகும் என் தசையே."
யோவான் 6 : 52 (RCTA)
"நாம் உண்பதற்கு இவன் தன் தசையை எவ்வாறு அளிக்கக்கூடும் ?" என்று யூதர் தமக்குள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க,
யோவான் 6 : 53 (RCTA)
இயேசு அவர்களை நோக்கிச் சொன்னார்: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுமகனின் தசையை உண்டு, அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது.
யோவான் 6 : 54 (RCTA)
என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். நானும் அவனைக் கடைசி நாளில் உயிர்ப்பிப்பேன்.
யோவான் 6 : 55 (RCTA)
என் தசை மெய்யான உணவு, என் இரத்தம் மெய்யான பானம்.
யோவான் 6 : 56 (RCTA)
என் தசையைத் தின்று, என் இரத்தத்தைக் குடிப்பவன் என்னில் நிலைத்திருக்கிறான், நானும் அவனில் நிலைத்திருக்கிறேன்.
யோவான் 6 : 57 (RCTA)
உயிருள்ள தந்தை என்னை அனுப்பினார், நானும் அவரால் வாழ்கின்றேன். அதுபோல் என்னைத் தின்பவனும் என்னால் வாழ்வான்.
யோவான் 6 : 58 (RCTA)
வானினின்று இறங்கிவந்த உணவு இதுவே; இது நம் முன்னோர் உண்ட உணவுபோல் அன்று: அவர்களோ இறந்தார்கள்; இவ்வுணவைத் தின்பவனோ என்றுமே வாழ்வான்."
யோவான் 6 : 59 (RCTA)
கப்பர்நகூமிலுள்ள செபக்கூடத்தில் போதிக்கையில் இதையெல்லாம் சொன்னார்.
யோவான் 6 : 60 (RCTA)
அவருடைய சீடருள் பலர் இதைக் கேட்டு, "இந்தப் பேச்சு மிதமிஞ்சிப்போகிறது, யார் இதைக் கேட்பார் ?" என்றனர்.
யோவான் 6 : 61 (RCTA)
இதைப்பற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்துகொண்டு, "இது உங்களுக்கு இடறலாக உள்ளதோ ?
யோவான் 6 : 62 (RCTA)
இதற்கே இப்படியென்றால், மனுமகன் முன்னர் இருந்த இடத்திற்கு ஏறிச்செல்வதை நீங்கள் கண்டால் என்ன சொல்வீர்களோ!
யோவான் 6 : 63 (RCTA)
"உயிர் அளிப்பது ஆவியே, ஊனுடல் ஒன்றுக்கும் உதவாது. நான் சொன்ன சொற்கள் உங்களுக்கு ஆவியும் உயிருமாகும்.
யோவான் 6 : 64 (RCTA)
"ஆனால், விசுவசியாதவர் சிலர் உங்களிடையே இருக்கின்றனர்" என்று அவர்களுக்குச் சொன்னார். ஏனெனில், விசுவசியாதவர் யார், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று இயேசு தொடக்கத்திலிருந்தே அறிந்திருந்தார்.
யோவான் 6 : 65 (RCTA)
மேலும், " 'என் தந்தை அருள்கூர்ந்தாலொழிய எவனும் என்னிடம் வர இயலாது' என இதன்பொருட்டே நான் உங்களுக்குச் சொன்னேன் " என்றார்.
யோவான் 6 : 66 (RCTA)
அன்றே அவருடைய சீடருள் பலர் அவரை விட்டுப் பிரிந்தனர். அதுமுதல் அவர்கள் அவரோடு சேரவில்லை.
யோவான் 6 : 67 (RCTA)
இயேசு பன்னிருவரை நோக்கி, "நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா ?" என்றார்.
யோவான் 6 : 68 (RCTA)
அதற்குச் சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம் ? முடிவில்லா வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன.
யோவான் 6 : 69 (RCTA)
நீரே கடவுளின் பரிசுத்தர்; இதை நாங்கள் விசுவசிக்கிறோம்; இதை நாங்கள் அறிவோம்" என்று மறுமொழி கூறினார்.
யோவான் 6 : 70 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "பன்னிருவராகிய உங்களை நான் தேர்ந்துகொண்டேன் அன்றோ ? ஆயினும், உங்களுள் ஒருவன் பேயாய் இருக்கிறான்" என்றார்.
யோவான் 6 : 71 (RCTA)
அவர் இதைச் சொன்னது சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசைப்பற்றியே. ஏனெனில், பன்னிருவருள் ஒருவனாகிய அவன் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தான்.
❮
❯