யோவான் 5 : 1 (RCTA)
இதன்பின் யூதர்களின் திருவிழா வந்தது. இயேசுவும் யெருசலேமுக்குச் சென்றார்.
யோவான் 5 : 2 (RCTA)
யெருசலேமில் ' ஆட்டுக்குள ' த்தைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் அமைந்த ஒரு கட்டடம் உண்டு. அதற்கு எபிரேய மொழியில் பெத்சாயிதா என்பது பெயர்.
யோவான் 5 : 3 (RCTA)
இம்மண்டபங்களில் - குருடர்கள், நொண்டிகள், வாதநோயாளிகள் முதலிய - பிணியாளிகள் எல்லாரும் கூட்டமாய்ப் படுத்துக்கிடப்பர். இவர்கள் குளத்து நீர் கலங்குவதற்காகக் காத்திருப்பார்கள்.
யோவான் 5 : 4 (RCTA)
ஏனெனில், ஆண்டவரின் தூதர் அக்குளத்தினுள் சிலவேளைகளில் இறங்கித் தண்ணீரைக் கலக்குவார். தண்ணீர் கலங்கியபின் முதலில் இறங்குபவன், எவ்வித நோயுற்றிருந்தாலும் குணமடைவான்.
யோவான் 5 : 5 (RCTA)
முப்பத்தெட்டு ஆண்டுகளாகப் பிணியுற்றிருந்த ஒருவன் அங்கே படுத்துக்கிடந்தான்.
யோவான் 5 : 6 (RCTA)
இயேசு அவனைக் கண்டு, அவன் வெகுகாலமாக அந்நிலையில் இருந்துள்ளதை அறிந்து, "குணமாக விரும்புகிறாயா ?" என்று அவனைக் கேட்டார்.
யோவான் 5 : 7 (RCTA)
பிணியாளி, "ஆண்டவரே, தண்ணீர் கலங்கும்போது, என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆளில்லை; நான் போவதற்குமுன் வேறொருவன் இறங்கிவிடுகிறான்" என்றான்.
யோவான் 5 : 8 (RCTA)
இயேசு அவனை நோக்கி, "எழுந்து, படுக்கையைத் தூக்கிக்கொண்டு நட" என்றார்.
யோவான் 5 : 9 (RCTA)
உடனே அவன் குணமடைந்து, தன் படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கலானான்.
யோவான் 5 : 10 (RCTA)
அன்று ஓய்வுநாள். குணம்பெற்றவனை யூதர்கள் நோக்கி, "இன்று ஓய்வுநாள், படுக்கையைத் தூக்கிச்செல்வது முறையன்று" என்றார்கள்.
யோவான் 5 : 11 (RCTA)
அவன் மறுமொழியாக, "என்னைக் குணமாக்கியவரே படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னார்" என்றான்.
யோவான் 5 : 12 (RCTA)
அவர்கள் அவனிடம், " படுக்கையைத் தூக்கிக்கொண்டு நடக்கச்சொன்னவர் யார்? " என்று வினவினர்.
யோவான் 5 : 13 (RCTA)
குணமானவனுக்கோ அவர் யாரென்று தெரியவில்லை. ஏனெனில் அவ்விடத்தில் கூட்டமாயிருந்ததால், இயேசு அங்கிருந்து ஏற்கெனவே நழுவிப் போய்விட்டார்.
யோவான் 5 : 14 (RCTA)
பின்பு இயேசு அவனைக் கோயிலில் கண்டு, "இதோ! குணம் அடைந்துள்ளாய்; இதிலும் கேடானதெதுவும் உனக்கு நேராதபடி இனி பாவம் செய்யாதே" என்றார்.
யோவான் 5 : 15 (RCTA)
அவன் போய், தன்னைக் குணமாக்கியவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
யோவான் 5 : 16 (RCTA)
இயேசு இதை ஓய்வுநாளில் செய்ததற்காக யூதர்கள் அவருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.
யோவான் 5 : 17 (RCTA)
இயேசு அவர்களிடம், "என் தந்தை இந்நேரம்வரை செயலாற்றுகிறார். நானும் செயலாற்றுகிறேன்" என்றார்.
யோவான் 5 : 18 (RCTA)
இப்படிச் சொன்னதால், யூதர்கள் அவரைக் கொல்ல வேண்டுமென்று மேலும் உறுதிபூண்டனர். ஏனெனில், ஓய்வுநாள் சட்டத்தை மீறுவதோடு கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று சொல்லி, தம்மைக் கடவுளுக்குச் சமமாக்கிவந்தார்.
யோவான் 5 : 19 (RCTA)
இயேசு அவர்களை நோக்கிக் கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மகன் தாமாகவே ஒன்றும் செய்ய முடியாது. தந்தை செய்யக் காண்கிறதையே செய்வார். எதெதை அவர் செய்கிறாரோ, அதையெல்லாம் மகனும் அவ்வாறே செய்கிறார்.
யோவான் 5 : 20 (RCTA)
தந்தை மகனை நேசித்து, தாம் செய்வதெல்லாம் அவருக்குக் காட்டுகிறார். இவற்றிலும் பெரிய செயல்களை அவருக்குக் காட்டுவார்; அவற்றைக் கண்டு நீங்களும் வியப்புறுவீர்கள்.
யோவான் 5 : 21 (RCTA)
தந்தை இறந்தவர்களை எழுப்பி, அவர்களுக்கு உயிரளிப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்க்கு உயிரளிக்கின்றார்.
யோவான் 5 : 22 (RCTA)
தந்தை எவனுக்கும் தீர்ப்பிடுவதில்லை.
யோவான் 5 : 23 (RCTA)
எல்லாரும் தம்மை மதிப்பதுபோல மகனையும் மதிக்கவேண்டுமென்று, தீர்ப்பிடும் உரிமை முழுவதையும் தந்தை மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவன் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பதில்லை.
யோவான் 5 : 24 (RCTA)
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எனது வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரிடத்தில் விசுவாசம் கொள்பவன், முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான். அவன் தீர்ப்புக்குள்ளாகாமல், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துசென்றுவிட்டான்.
யோவான் 5 : 25 (RCTA)
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நேரம் வருகின்றது, - ஏன், வந்தேவிட்டது. - அப்பொழுது கடவுளுடைய மகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர்.
யோவான் 5 : 26 (RCTA)
ஏனெனில், தந்தை தம்மிலே உயிர்கொண்டுள்ளதுபோல மகனும் தம்மிலே உயிர்கொண்டிருக்கும்படி அவருக்கு அளித்துள்ளார்.
யோவான் 5 : 27 (RCTA)
தீர்ப்பிடும் அதிகாரத்தையும் அவருக்கு அளித்துள்ளார்; ஏனெனில், அவர் மனுமகன்.
யோவான் 5 : 28 (RCTA)
இதைக்குறித்து வியப்புறாதீர்கள்; இதோ! நேரம் வருகிறது. அப்போது கல்லறையில் இருப்பவர்கள் எல்லாரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவர்.
யோவான் 5 : 29 (RCTA)
அப்போது நல்லது செய்தவர் வாழ்வுபெற உயிர்த்தெழுவர். பொல்லாது செய்தவர் தண்டனைத்தீர்ப்புப் பெற உயிர்த்தெழுவர்.
யோவான் 5 : 30 (RCTA)
நானாகவே ஒன்றும் செய்ய முடியாது; தந்தை சொற்படியே தீர்ப்பிடுகிறேன். என் தீர்ப்பு நீதியானது. ஏனெனில், என் விருப்பத்தை நாடாமல், என்னை அனுப்பியவர் விருப்பத்தையே நாடுகிறேன்.
யோவான் 5 : 31 (RCTA)
"என்னைப்பற்றி நானே சாட்சியம் கூறினால், எனது சாட்சியம் செல்லாது.
யோவான் 5 : 32 (RCTA)
என்னைப்பற்றிச் சாட்சியங்கூற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைப்பற்றிச் கூறும் சாட்சியம் செல்லும்; இதை நானறிவேன்.
யோவான் 5 : 33 (RCTA)
நீங்கள் அருளப்பரிடம் ஆள் அனுப்பினீர்கள், அவரும் உண்மைக்குச் சாட்சியம் கூறினார்.
யோவான் 5 : 34 (RCTA)
எனக்கோ மனிதன் தரும் சாட்சியம் தேவையில்லை. ஆனால் நீங்கள் மீட்புப்பெறும்படி இதை நினைவூட்டுகிறேன்.
யோவான் 5 : 35 (RCTA)
அருளப்பர் எரிந்து சுடர்விடும் விளக்கு; அவருடைய ஒளியில் நீங்கள் சற்றுநேரமே களிப்புற விரும்பினீர்கள்.
யோவான் 5 : 36 (RCTA)
அருளப்பருடைய சாட்சியத்திலும் மேலான சாட்சியம் எனக்கு உண்டு: நான் செய்துமுடிக்க தந்தை எனக்கு அருளியுள்ள செயல்களே, நான் செய்துவரும் அச்செயல்களே, தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்குச் சான்று.
யோவான் 5 : 37 (RCTA)
இங்ஙனம், என்னை அனுப்பின தந்தையே என்னைப்பற்றிச் சாட்சியம் தந்துள்ளார். ஆயினும் நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவர் உருவத்தைக் கண்டதுமில்லை;
யோவான் 5 : 38 (RCTA)
அவருடைய வார்த்தை உங்களிடத்தில் நிலைத்திருப்பதாயில்லை. ஏனெனில், அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவசிப்பதில்லை.
யோவான் 5 : 39 (RCTA)
"மறைநூலை ஆய்ந்துபார்க்கிறீர்கள், அதில் முடிவில்லா வாழ்வு கிடைப்பதாக நினைக்கிறீர்கள் அல்லவா! அதுவே என்னைப்பற்றிச் சாட்சியம் தருகிறது.
யோவான் 5 : 40 (RCTA)
இருப்பினும், வாழ்வு பெறும்படி என்னிடம் வர உங்களுக்கு விருப்பமில்லை.
யோவான் 5 : 41 (RCTA)
மனிதர் தரும் மகிமை எனக்குத் தேவையில்லை.
யோவான் 5 : 42 (RCTA)
உங்களைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்: கடவுளன்பு உங்களிடம் இல்லை.
யோவான் 5 : 43 (RCTA)
நான் என் தந்தையின் பெயரால் வந்துள்ளேன்; நீங்களோ என்னை ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால், இன்னொருவன் தன் பெயராலேயே வருவானாகில், அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
யோவான் 5 : 44 (RCTA)
ஒரே கடவுள் தரும் மகிமையை நாடாது, ஒருவருக்கொருவர் தரும் மகிமையைத் தேடிக்கொள்கிறீர்களே; நீங்கள் எப்படி விசுவசிக்கக் கூடும் ?
யோவான் 5 : 45 (RCTA)
தந்தையிடத்தில் உங்களைக் குற்றஞ்சாட்டுபவன் நான் என்று எண்ணாதீர்கள்: உங்களைக் குற்றஞ்சாட்டுபவர் ஒருவர் உண்டு; அவர்தாம் நீங்கள் நம்பியிருக்கிற மோயீசன்.
யோவான் 5 : 46 (RCTA)
மோயீசனை நீங்கள் விசுவசித்தால், என்னையும் விசுவசிப்பீர்கள். ஏனெனில், அவர் என்னைப்பற்றித்தான் எழுதினார்.
யோவான் 5 : 47 (RCTA)
அவர் எழுதியதை விசுவசியாவிட்டால், என் வார்த்தைகளை எவ்வாறு விசுவசிப்பீர்கள் ?"

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47