யோவான் 4 : 1 (RCTA)
அருளப்பரைவிட இயேசு மிகுதியான சீடர்களைச் சேர்த்து ஞானஸ்நானம் கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்வியுற்றனர்.
யோவான் 4 : 2 (RCTA)
இதை அறிந்த ஆண்டவர் யூதேயாவை விட்டு மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். -
யோவான் 4 : 3 (RCTA)
உண்மையிலே ஞானஸ்நானம் கொடுத்தவர் இயேசு அல்லர், அவருடைய சீடர்களே. -
யோவான் 4 : 4 (RCTA)
அவர் சமாரியா நாட்டுவழியாகச் செல்லவேண்டியிருந்தது.
யோவான் 4 : 5 (RCTA)
வழியில் சமாரியா நாட்டிலுள்ள சீக்கார் என்னும் ஊருக்கு வந்தார். அவ்வூருக்கருகே யாக்கோபு தம் மகன் சூசைக்கு அளித்த நிலம் உண்டு.
யோவான் 4 : 6 (RCTA)
அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. பயணத்தால் களைத்திருந்த இயேசு அக்கிணற்றருகே அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல்.
யோவான் 4 : 7 (RCTA)
சமாரியப்பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ள வந்தாள். "எனக்குத் தண்ணீர் கொடு" என்று இயேசு அவளிடம் கேட்டார்.
யோவான் 4 : 8 (RCTA)
அவருடைய சீடரோ உணவு வாங்குவதற்காக ஊருக்குள் சென்றிருந்தனர்.
யோவான் 4 : 9 (RCTA)
அச் சமாரியப்பெண் அவரைப் பார்த்து, "யூதனாகிய நீர் என்னிடம் தண்ணீர் கேட்பதெப்படி ? நான் சமாரியப்பெண் ஆயிற்றே! " என்றாள். - ஏனெனில், யூதர் சமாரியரோடு பழகுவதில்லை. -
யோவான் 4 : 10 (RCTA)
இயேசுவோ மறுமொழியாகக் கூறினார்: "கடவுளுடைய கொடை இன்னதென்பதையும், ' தண்ணீர் கொடு ' என்று உன்னிடம் கேட்பவர் இன்னாரென்பதையும் நீ உணர்ந்திருந்தால், ஒருவேளை நீயே அவரிடம் கேட்டிருப்பாய். அவரும் உயிருள்ள தண்ணீரை உனக்களித்திருப்பார்"
யோவான் 4 : 11 (RCTA)
அவளோ, "ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறோ ஆழமானது. அப்படியிருக்க எங்கிருந்து உமக்கு உயிருள்ள தண்ணீர் கிடைக்கும் ?
யோவான் 4 : 12 (RCTA)
நம்முடைய தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ ? அவரே எங்களுக்கு இந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தார். அவரும் அவர்பிள்ளைகளும் கால்நடைகளும் இதன் தண்ணீரைக் குடித்தார்கள்" என்றாள்.
யோவான் 4 : 13 (RCTA)
இயேசு அவளை நோக்கிக் கூறியது: "இத்தண்ணீரைக் குடிக்கும் எவனும் மீண்டும் தாகங்கொள்வான்.
யோவான் 4 : 14 (RCTA)
நான் தரும் தண்ணீரைக் குடிப்பவனோ என்றுமே தாங்கொள்ளான். நான் அவனுக்கு அளிக்கும் தண்ணீரோ, அவன் முடிவில்லா வாழ்வடைய அவனுக்குள் பொங்கியெழும் ஊற்றாகும்"
யோவான் 4 : 15 (RCTA)
அதற்கு அவள், "ஐயா, அத்தகைய தண்ணீரை எனக்குக் கொடும். அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது, தண்ணீர் மொள்ள இவ்வளவு தொலைவு வரத் தேவையும் இருக்காது" என்றாள்.
யோவான் 4 : 16 (RCTA)
இயேசு அவளிடம், "போய், உன் கணவனை இங்கு அழைத்துவா" என,
யோவான் 4 : 17 (RCTA)
அவள், "எனக்குக் கணவனில்லையே" என்றாள். இயேசுவோ, " ' எனக்குக் கணவனில்லை ' என்று நீ சொன்னது சரிதான்.
யோவான் 4 : 18 (RCTA)
கணவர் உனக்கு ஐவர் இருந்தனர். இப்பொழுது உன்னோடிருப்பவனோ உன் கணவன் அல்லன். நீ சொன்னது உண்மையே" என்றார்.
யோவான் 4 : 19 (RCTA)
அதற்கு அவள், "ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்.
யோவான் 4 : 20 (RCTA)
எங்கள் முன்னோர் இம்மலையில் தொழுதனர். நீங்களோ தொழ வேண்டிய இடம் யெருசலேமிலேதான் என்கிறீர்கள்" என்றாள்.
யோவான் 4 : 21 (RCTA)
இயேசு அவளை நோக்கிக் கூறினார்: "மாதே, என்னை நம்பு. நேரம் வருகிறது: அப்பொழுது நீங்கள் பரம தந்தையைத் தொழுவது இம்மலையிலுமன்று, யெருசலேமிலுமன்று.
யோவான் 4 : 22 (RCTA)
நீங்கள் தொழுவது இன்னதென்று உங்களுக்குத் தெரியாது. நாங்கள் தொழுவது இன்னதென்று எங்களுக்குத் தெரியும். ஏனெனில், மீட்பு வருவது யூதர்களிடமிருந்தே.
யோவான் 4 : 23 (RCTA)
நேரம் வருகின்றது - ஏன், வந்தேவிட்டது; - அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி தந்தை இத்தகையோரையே தேடுகிறார்.
யோவான் 4 : 24 (RCTA)
கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்."
யோவான் 4 : 25 (RCTA)
அதற்கு அவள், "மெசியா - அதாவது, கிறிஸ்து - வருவார் என்று எனக்குத் தெரியும், அவர் வரும்பொழுது எங்களுக்கு அனைத்தையும் அறிவிப்பார்" என,
யோவான் 4 : 26 (RCTA)
இயேசு, "உன்னோடு பேசும் நானே அவர்" என்றார்.
யோவான் 4 : 27 (RCTA)
அதற்குள் அவருடைய சீடர் வந்து, அவர் ஒரு பெண்ணோடு பேசுவதைக் கண்டு வியப்படைந்தனர். ஆயினும், "என்ன வேண்டும் ?" என்றோ, "அவளோடு என்ன பேசுகிறீர் ?" என்றோ எவரும் கேட்கவில்லை.
யோவான் 4 : 28 (RCTA)
அப்பெண் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குச் சென்று,
யோவான் 4 : 29 (RCTA)
"நான் செய்ததெல்லாம் ஒருவர் எனக்குச் சொன்னார். அவரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ ?" என்று எல்லாரிடமும் சொன்னாள்.
யோவான் 4 : 30 (RCTA)
அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு, அவரைப் பார்க்கப் போனார்கள்.
யோவான் 4 : 31 (RCTA)
இதற்கிடையில் அவருடைய சீடர், "ராபி, உண்ணும்" என்று அவரைக் கேட்டுக்கொண்டனர்.
யோவான் 4 : 32 (RCTA)
அவரோ, "உங்களுக்குத் தெரியாத உணவு ஒன்று எனக்குள்ளது" என்றார்.
யோவான் 4 : 33 (RCTA)
அதைக் கேட்டுச் சீடர்கள், "யாராகிலும் அவருக்கு உணவு கொண்டுவந்திருப்பார்களோ ?" என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
யோவான் 4 : 34 (RCTA)
இயேசுவோ: "என்னை அனுப்பினவரின் விருப்பத்தின்படி நடந்து, அவரது வேலையைச் செய்து முடிப்பதே என் உணவு.
யோவான் 4 : 35 (RCTA)
அறுவடைக்கு இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன என்று நீங்கள் சொல்லுவது உண்டன்றோ ? இதோ! உங்களுக்குச் சொல்லுகிறேன்: கண்களை ஏறெடுத்து வயல்களைப் பாருங்கள்; பயிர் அறுவடைக்கு முற்றியிருக்கின்றது!
யோவான் 4 : 36 (RCTA)
அறுப்பவன் இப்பொழுதே கூலி பெற்றுவருகிறான். விளைச்சலை முடிவில்லா வாழ்வுக்குச் சேகரிக்கிறான். இதனால் விதைப்பவனும் அறுப்பவனும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர்.
யோவான் 4 : 37 (RCTA)
நீங்கள் வருந்தி உழைக்காததை அறுக்க உங்களை அனுப்பினேன்.
யோவான் 4 : 38 (RCTA)
மற்றவர்கள் உழைத்தார்கள். அவ்வுழைப்பின் பயனை அடைந்தவர்களோ நீங்கள். ' விதைப்பவன் ஒருவன், அறுத்துக்கொள்பவன் வேறொருவன் ' என்னும் முதுமொழி இவ்வாறு உண்மையாயிற்று."
யோவான் 4 : 39 (RCTA)
"நான் செய்ததெல்லாம் எனக்குச் சொன்னார்" என்று சாட்சியம் கூறிய பெண்ணுடைய வார்த்தையின்பொருட்டு, அவ்வூரிலேயே சமாரியர் பலர் அவரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 4 : 40 (RCTA)
சமாரியர் அவரிடம் வந்து, தங்களோடு தங்கும்படி அவரை வேண்டினர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார்.
யோவான் 4 : 41 (RCTA)
அவருடைய வார்த்தையின்பொருட்டு இன்னும் பலர் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 4 : 42 (RCTA)
"உன் வார்த்தையின்பொருட்டன்று நாங்கள் விசுவசிப்பது; நாங்களே அவர் சொன்னதைக் கேட்டு, அவர் உண்மையாகவே உலகின் மீட்பர் என அறிந்துகொண்டோம்" என்று அப்பெண்ணிடம் சொன்னார்கள்.
யோவான் 4 : 43 (RCTA)
அவ்விரண்டு நாளுக்குப்பின், அவர் அங்கிருந்து கலிலேயாவுக்குப் போனார்.
யோவான் 4 : 44 (RCTA)
இறைவாக்கினருக்குத் தம் சொந்த நாட்டில் மதிப்பில்லை என்று இயேசுவே கூறியிருந்தார்.
யோவான் 4 : 45 (RCTA)
திருவிழாவின்போது யெருசலேமிலே அவர் செய்ததெல்லாம் கண்டிருந்த கலிலேயர், அவர் கலிலேயாவுக்கு வந்தபொழுது அவரை வரவேற்றனர். ஏனெனில், அவர்களும் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர்.
யோவான் 4 : 46 (RCTA)
அவர் கலிலேயாவிலுள்ள கானாவூருக்கு மீண்டும் வந்தார். அங்கேதான் முன்பு தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிக்கொடுத்தார். கப்பர்நகூம் ஊரில் அரச அலுவலர் ஒருவர் இருந்தார். அவருடைய மகன் பிணியுற்றிருந்தான்.
யோவான் 4 : 47 (RCTA)
இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்திருப்பதைக் கேள்வியுற்ற அவர் அவரிடம் சென்று, தம் மகனைக் குணமாக்கவரும்படி அவரை வேண்டினார்; அவருடைய மகன் சாகக்கிடந்தான்.
யோவான் 4 : 48 (RCTA)
இயேசுவோ அவரிடம், "அருங்குறிகளையும் அற்புதங்களையும் கண்டாலன்றி நீங்கள் விசுவசிக்கமாட்டீர்கள்" என்றார்.
யோவான் 4 : 49 (RCTA)
அரச அலுவலர் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, என் குழந்தை இறந்துபோகுமுன்னே வாரும்" என்றார்.
யோவான் 4 : 50 (RCTA)
இயேசு அவரிடம், "நீர் போகலாம், உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்றார். அவர், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டார்.
யோவான் 4 : 51 (RCTA)
வழியிலேயே அவருடைய ஊழியர் எதிரே வந்து, பிள்ளை பிழைத்துக்கொண்டான் என்று அறிவித்தனர்.
யோவான் 4 : 52 (RCTA)
எத்தனை மணிக்கு நலமடையலானான் என்று அவர் அவர்களை வினவ, "நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்குக் காய்ச்சல் விட்டது" என்றனர்.
யோவான் 4 : 53 (RCTA)
"உம் மகன் உயிரோடிருக்கிறான்" என்று இயேசு சொன்னதும் அதே நேரத்தில்தான் என்பது தந்தையின் நினைவுக்கு வந்தது. ஆகவே, அவரும் அவருடைய குடும்பம் முழுவதும் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 4 : 54 (RCTA)
இதுவே இயேசு செய்த அருங்குறிகளில் இரண்டாவது. இதை யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தபின் செய்தார்.
❮
❯