யோவான் 21 : 1 (RCTA)
பின்னர், இயேசு சீடருக்குத் திபேரியாக் கடலருகே மீண்டும் தோன்றினார்; தோன்றியது இவ்வாறு:
யோவான் 21 : 2 (RCTA)
சீமோன் இராயப்பர், திதிமு என்ற தோமையார், கலிலேயா நாட்டுக் கானாவூர் நத்தனயேல், செபெதேயுவின் மக்கள், இயேசுவின் சீடர்களுள் வேறு இருவர் ஆகிய இவர்கள் கூடியிருந்தார்கள்.
யோவான் 21 : 3 (RCTA)
அப்போது சீமோன் இராயப்பர் அவர்களை நோக்கி, "மீன் பிடிக்கப் போகிறேன்" என்றார். மற்றவர்களும், "உன்னோடு நாங்களும் வருகின்றோம்" என்றார்கள். போய்ப் படகிலேறினார்கள். அன்று இரவு அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
யோவான் 21 : 4 (RCTA)
விடியற்காலையில் இயேசு கரையில் நின்றார். ஆனால் அவரை இயேசு என்று சீடர் அறிந்துகொள்ளவில்லை.
யோவான் 21 : 5 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "பிள்ளைகளே, மீன் ஒன்றும் படவில்லையா ?" என்று கேட்டார். அவர்கள், "ஒன்றுமில்லை" என்றனர்.
யோவான் 21 : 6 (RCTA)
அப்போது அவர், "படகின் வலப்பக்கமாய் வலை வீசுங்கள்; மீன்படும்" என்றார். அப்படியே வலை வீசினார்கள்; மீன்கள் ஏராளமாய் விழுந்ததால் அவர்கள் வலையை இழுக்க முடியவில்லை.
யோவான் 21 : 7 (RCTA)
இயேசு அன்புசெய்த சீடர், "அவர் ஆண்டவர்தாம்! " என இராயப்பருக்குச் சொன்னார். "அவர் ஆண்டவர்தாம்" என்று சீமோன் இராயப்பர் கேட்டவுடன், தம் ஆடையைக் களைந்துவிட்டிருந்ததால் மேலாடையைக் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார்.
யோவான் 21 : 8 (RCTA)
மற்றச் சீடர்களோ வலையை மீன்களுடன் இழுத்துக்கொண்டு படகிலே வந்தார்கள். ஏனெனில், அவர்கள் கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. ஏறக்குறைய இருநூறுமுழம் தொலைவில் தான் இருந்தார்கள்.
யோவான் 21 : 9 (RCTA)
கரையில் இறங்கியவுடன் கரிநெருப்பு மூட்டியிருப்பதையும், அதன்மேல் மீன் வைத்திருப்பதையுங் கண்டார்கள்; அப்பமும் இருந்தது.
யோவான் 21 : 10 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்கள் சில கொண்டுவாருங்கள்" என்றார்.
யோவான் 21 : 11 (RCTA)
சீமோன் இராயப்பர் படகேறி வலையைக் கரைக்கு இழுத்துவந்தார். அதில் பெரிய மீன்கள் நிறைந்திருந்தன. அவை நூற்றைம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலைகிழியவில்லை.
யோவான் 21 : 12 (RCTA)
இயேசு அவர்களைப் பார்த்து, "சாப்பிட வாருங்கள்" என்றார். அவர் ஆண்டவர் என்றறிந்து சீடருள் எவரும், "நீர் யார் ?" என்று அவரைக் கேட்கத் துணியவில்லை.
யோவான் 21 : 13 (RCTA)
இயேசு அருகில் வந்து அப்பத்தை எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார்.
யோவான் 21 : 14 (RCTA)
இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தபின், தம் சீடர்க்கு இப்பொழுது தோன்றியது மூன்றாம்முறை.
யோவான் 21 : 15 (RCTA)
அவர்கள் சாப்பிட்டு முடிந்தபின், இயேசு சீமோன் இராயப்பரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாய் எனக்கு அன்புசெய்கிறாயா ?" என்று கேட்டார். அவர் அதற்கு, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆட்டுக்குட்டிகளை மேய்" என்றார்.
யோவான் 21 : 16 (RCTA)
இரண்டாம் முறையாக இயேசு அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, நீ எனக்கு அன்புசெய்கிறாயா ?" என, அவர் அவரை நோக்கி, "ஆம், ஆண்டவரே, நான் உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றார். இயேசுவோ அவரிடம், "என் ஆடுகளைக் கண்காணி" என்றார்.
யோவான் 21 : 17 (RCTA)
மூன்றாம் முறையாக அவரை நோக்கி, "அருளப்பனின் மகனான சீமோனே, என்னை நீ நேசிக்கிறாயா ?" என்று கேட்டார். "என்னை நேசிக்கிறாயா ?" என்று அவர் மூன்றாம் முறையாகக் கேட்டதால், இராயப்பர் மனம்வருந்தி இயேசுவை நோக்கி, "ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே; நான் உம்மை நேசிக்கிறேன் என்பது உமக்குத் தெரியும்" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளை மேய்.
யோவான் 21 : 18 (RCTA)
"உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு, உனக்கு விருப்பமான இடத்திற்குச் சென்றாய்; வயது முதிர்ந்தபொழுதோ நீ கைகளை விரித்துக்கொடுப்பாய், வேறொருவன் உன்னைக் கட்டி உனக்கு விருப்பமில்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வான்" என்றார்.
யோவான் 21 : 19 (RCTA)
இராயப்பர் எத்தகைய மரணத்தால் கடவுளை மகிமைப்படுத்துவார் என்பதைக் குறிப்பிட்டு இவ்வாறு சொன்னார். இதைச் சொன்னபின், "என்னைப் பின்செல்" என்றார்.
யோவான் 21 : 20 (RCTA)
இராயப்பர் திரும்பிப்பார்த்து, இயேசு அன்புசெய்த சீடர் பின்னால் வருவதைக் கண்டார். - இராவுணவின்போது அவர்மார்பிலே சாய்ந்து, "ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுப்பவன் யார் ?" என்று கேட்டவர் அவரே.
யோவான் 21 : 21 (RCTA)
அவரைக் கண்டு இராயப்பர் இயேசுவிடம், "ஆண்டவரே, இவனுக்கு என்ன ஆகும் ?" என்று கேட்டார்.
யோவான் 21 : 22 (RCTA)
அதற்கு இயேசு, "நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ? நீயோ என்னைப் பின்செல்" என்றார்.
யோவான் 21 : 23 (RCTA)
இதிலிருந்து அந்தச் சீடர் இறக்கமாட்டார் என்ற பேச்சு சகோதரர்களிடையே பரவியது. ஆனால் இயேசு, "நான் வருமளவும் இவன் இப்படியே இருக்கவேண்டும் என்பது எனக்கு விருப்பமாயிருந்தால் உனக்கென்ன ?" என்று கூறினாரேயன்றி, இறக்கமாட்டான் என்று கூறவில்லை.
யோவான் 21 : 24 (RCTA)
இச்சீடரே இவற்றுக்குச் சாட்சி. இவரே இவைகளையெல்லாம் எழுதிவைத்தவர். இவருடைய சாட்சியம் உண்மை என்று அறிவோம்.
யோவான் 21 : 25 (RCTA)
இயேசு செய்தவை வேறு பல உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுத வேண்டிய நூல்களை உலகமே கொள்ளாது என்று கருதுகிறேன்.
❮
❯