யோவான் 19 : 1 (RCTA)
பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய், சாட்டையால் அவரை அடிக்கச்செய்தான்.
யோவான் 19 : 2 (RCTA)
மேலும் படைவீரர் முள்ளால் ஒரு முடியைப் பின்னி, அவருடைய தலையில் வைத்து, அவருக்குச் சிவப்புப்போர்வை உடுத்தினர்.
யோவான் 19 : 3 (RCTA)
அருகில் வந்து, "யூதரின் அரசே, வாழி!" என்று சொல்லிக்கொண்டு, அவருடைய கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.
யோவான் 19 : 4 (RCTA)
பிலாத்து மீண்டும் வெளியே வந்து, மக்களைப் பார்த்து, "இதோ! நான் அவனை உங்கள்முன் வெளியே கொண்டுவருகிறேன். அவனிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லையென அறிந்துகொள்ளுங்கள்! " என்றார்.
யோவான் 19 : 5 (RCTA)
ஆகவே, இயேசு முண்முடி தாங்கி, சிவப்புப் போர்வை அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களை நோக்கி, "பாருங்கள், இதோ! மனிதன்" என்றார்.
யோவான் 19 : 6 (RCTA)
அவரைக் கண்டதும் தலைமைக்குருக்களும் காவலர்களும், "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்! " என்று கத்தினர். அப்போது பிலாத்து, "நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறைந்துகொள்ளுங்கள்: நானோ இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்றார்.
யோவான் 19 : 7 (RCTA)
அதற்கு யூதர், "எங்களுக்குச் சட்டம் ஒன்று உண்டு; அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில், தன்னைக் கடவுளின் மகன் ஆக்கிக்கொண்டான்" என்றனர்.
யோவான் 19 : 8 (RCTA)
இவ்வார்த்தையைக் கேட்டுப் பிலாத்து இன்னும் அதிகமாக அஞ்சினார்.
யோவான் 19 : 9 (RCTA)
மீண்டும் அரண்மனைக்குள் சென்று இயேசுவை நோக்கி, "நீ எங்கிருந்து வந்தவன் ?" என்று கேட்க, இயேசு மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.
யோவான் 19 : 10 (RCTA)
அப்போது பிலாத்து, "என்னிடம் ஒன்றும் சொல்லமாட்டாயா ? உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரமுண்டு, விடுவிக்கவும் அதிகாரம் உண்டு, தெரியாதா ?" என்றார்.
யோவான் 19 : 11 (RCTA)
இயேசுவோ, "மேலிருந்து உமக்கு அருளப்படாதிருந்தால், என்மேல் உமக்கு எவ்வதிகாரமும் இராது. ஆதலால் என்னை உம்மிடம் கையளித்தவன்தான் பெரிய பாவத்துக்குள்ளானான்" என்றார்.
யோவான் 19 : 12 (RCTA)
அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினார். யூதர்களோ, "இவனை விடுவித்தால், நீர் செசாருடைய நண்பர் அல்ல. தன்னை அரசனாக்கிக்கொள்ளும் எவனும் செசாரை எதிர்க்கிறான்" என்று கூவினார்கள்.
யோவான் 19 : 13 (RCTA)
பிலாத்து இவ்வார்த்தைகளைக் கேட்டு, இயேசுவை வெளியே அழைத்துவந்து நீதியிருக்கைமீது அமர்ந்தார். அது ' கல்தளம் ' என்ற இடத்தில் இருந்தது. அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் கபத்தா என்பது பெயர்.
யோவான் 19 : 14 (RCTA)
அன்று பாஸ்காவுக்கு ஆயத்தநாள்; ஏறக்குறைய நண்பகல். அப்போது பிலாத்து யூதர்களை நோக்கி, "இதோ! உங்கள் அரசன்! " என்றார்.
யோவான் 19 : 15 (RCTA)
அவர்களோ, "ஒழிக, ஒழிக! இவனைச் சிலுவையில் அறையும்! " என்று கத்தினார்கள். அதற்குப் பிலாத்து, "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைவதா?" என்று கேட்க, தலைமைக்குருக்கள், "செசாரைத் தவிர வேறு அரசர் எங்களுக்கில்லை" என்று சொன்னார்கள்.
யோவான் 19 : 16 (RCTA)
அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் கையளித்தார். ஆகவே, அவர்கள் அவரைக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
யோவான் 19 : 17 (RCTA)
இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு - எபிரேய மொழியிலே கொல்கொத்தா - எனப்படும் இடத்திற்குச் சென்றார்.
யோவான் 19 : 18 (RCTA)
அதற்கு ' மண்டை ஓடு ' என்பதுபொருள். அங்கு இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவரோடு வேறு இருவரை இரு பக்கங்களிலும், இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள்.
யோவான் 19 : 19 (RCTA)
பிலாத்து அறிக்கை ஒன்று எழுதிச் சிலுவையில் பொருத்தச்செய்தார்; "நாசரேத்தூர் இயேசு யூதரின் அரசன்" என்று அதில் எழுதியிருந்தது.
யோவான் 19 : 20 (RCTA)
இயேசுவைச் சிலுவையில் அறைந்த இடம் நகருக்கு அருகில் இருந்ததால், யூதர் பலர் அவ்வறிக்கையைப் படித்தனர். அது எபிரேயம், இலத்தின், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதியிருந்தது.
யோவான் 19 : 21 (RCTA)
யூதரின் தலைமைக்குருக்கள் பிலாத்துவிடம் சென்று, " ' யூதரின் அரசன் ' என்று எழுதவேண்டாம்; ' யூதரின் அரசன் நான் ' என்று அவன் கூறியதாக எழுதும்" என்று கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19 : 22 (RCTA)
ஆனால் பிலாத்து, "நான் எழுதியது எழுதியதுதான்" என்றார்.
யோவான் 19 : 23 (RCTA)
அவரைச் சிலுவையில் அறைந்தபின், படைவீரர் அவருடைய உடைகளை நான்கு பாகமாகப் பிரித்து, ஆளுக்கொன்று எடுத்துக்கொண்டனர். அங்கியையும் எடுத்துக்கொண்டனர்; அந்த அங்கி மேலிருந்து அடிவரை தையலில்லாமல் நெய்யப்பட்டிருந்தது.
யோவான் 19 : 24 (RCTA)
அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, "இதைக் கிழிக்கவேண்டாம்; இது யாருக்கு வரும் என்று பார்க்கச் சீட்டுப்போடுவோம்" என்றார்கள்."என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள், என் உடைமீது சீட்டுப்போட்டார்கள்" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது. படைவீரர் இப்படிச் செய்துகொண்டிருந்தபோது,
யோவான் 19 : 25 (RCTA)
இயேசுவின் சிலுவையருகில் அவருடைய தாயும், அவர் தாயின் சகோதரியும் கிலோப்பாவின் மனைவியுமான மரியாளும், மதலேன் மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
யோவான் 19 : 26 (RCTA)
இயேசு தம் தாயையும் அருகில் நின்றதம் அன்புச் சீடரையும் கண்டு, தம் தாயை நோக்கி, "அம்மா, இதோ! உம் மகன்" என்றார்.
யோவான் 19 : 27 (RCTA)
பின்பு சீடரை நோக்கி, "இதோ! உன் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவளைத் தம் வீட்டில் ஏற்றுக்கொண்டார்.
யோவான் 19 : 28 (RCTA)
பின்பு, எல்லாம் நிறைவேறியது என்று அறிந்த இயேசு, "தாகமாயிருக்கிறது" என்றார்; மறைநூல் நிறைவேறவே இப்படிச் சொன்னார்.
யோவான் 19 : 29 (RCTA)
அங்கே ஒரு பாத்திரம் நிறையக் காடி இருந்தது. அதில் கடற்காளானைத் தோய்த்து, ஈசோப்பில் பொருத்தி, அதை உயர்த்தி அவரது வாயில் வைத்தார்கள்.
யோவான் 19 : 30 (RCTA)
காடியைச் சுவைத்தபின் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்றார். பின்பு தலைசாய்த்து ஆவியைக் கையளித்தார்.
யோவான் 19 : 31 (RCTA)
அன்று பாஸ்காவுக்கு ஆயத்த நாள். - அடுத்த நாள் ஓய்வுநாளாகவும் பெருவிழாவாகவும் இருந்தது. - அந்த விழாவின்போது சிலுவையில் சவங்கள் இருத்தலாகாதென்று, கால்களை முறித்துப் பிணங்களை எடுத்துவிடப் பிலாத்துவினிடம் யூதர் விடைகேட்டனர்.
யோவான் 19 : 32 (RCTA)
ஆகவே, படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையுண்டிருந்த இருவரின் கால்களையும் முறித்தனர்.
யோவான் 19 : 33 (RCTA)
பின்பு இயேசுவிடம் வந்தனர்; அவர் ஏற்கெனவே இறந்திருப்பதைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை.
யோவான் 19 : 34 (RCTA)
ஆனால், படைவீரன் ஒருவன் அவருடைய விலாவை ஈட்டியால் குத்தினான்; உடனே இரத்தமும் நீரும் வெளிவந்தன.
யோவான் 19 : 35 (RCTA)
இதைப் பார்த்தவனே இதற்குச் சாட்சியம் கூறியுள்ளான். - அவனுடைய சாட்சியம் உண்மையானதே; தான் கூறுவது உண்மை என்பது அவனுக்குத் தெரியும். - எனவே, நீங்களும் விசுவாசம் கொள்வீர்களாக.
யோவான் 19 : 36 (RCTA)
"அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிபடாது" என்று எழுதியுள்ள மறைநூல் வாக்கு நிறைவேறுவதற்கே இவ்வாறு நிகழ்ந்தது.
யோவான் 19 : 37 (RCTA)
மீண்டும், "தாங்கள் ஊடுருவக்குத்தியவரை நோக்குவார்கள்" என்பது மறைநூலின் வேறொரு வாக்கு.
யோவான் 19 : 38 (RCTA)
அரிமத்தியாவூர் சூசை என்று ஒருவர் இருந்தார். அவரும் இயேசுவின் சீடர். - ஆனால் யூதர்களுக்கு அஞ்சி அதைக் காட்டிக்கொள்ளவில்லை. - மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப்பின், அவர் இயேசுவின் சடலத்தை எடுத்துவிடப் பிலாத்திடம் விடைகேட்டார். பிலாத்து விடையளித்தார். அவர் வந்து இயேசுவின் சடலத்தை எடுத்தார். -
யோவான் 19 : 39 (RCTA)
முன்னொருநாள் இரவில் இயேசுவைப் பார்க்கப்போன - நிக்கொதேமுகூட அங்கு வந்தார். அவர் வெள்ளைப் போளமும் அகில்தூளும் கலந்து நூறு இராத்தல் கொண்டுவந்தார்.
யோவான் 19 : 40 (RCTA)
இயேசுவின் சடலத்தை எடுத்து, யூதரின் அடக்க முறைப்படி பரிமளப்பொருட்களுடன் துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
யோவான் 19 : 41 (RCTA)
அவர் சிலுவையில் அறையுண்ட இடத்தில் தோட்டம் ஒன்று இருந்தது. அத்தோட்டத்தில், புதுக் கல்லறை ஒன்று இருந்தது. அதில் யாரையும் அதுவரை வைத்ததில்லை.
யோவான் 19 : 42 (RCTA)
அருகிலேயே அந்தக் கல்லறை இருந்ததாலும், அன்று யூதரின் பாஸ்காவுக்கு ஆயத்த நாளானதாலும் இயேசுவை அதில் வைத்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42