யோவான் 18 : 1 (RCTA)
இயேசு இவற்றைக் கூறியபின், தம் சீடரோடு கெதரோன் அருவியைக் கடந்துபோனார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடரோடு அதில் நுழைந்தார்.
யோவான் 18 : 2 (RCTA)
அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசுக்கும் அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடரும் அடிக்கடி அங்குக் கூடுவதுண்டு.
யோவான் 18 : 3 (RCTA)
யூதாஸ் படைவீரர்களையும், தலைமைக்குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் அழைத்துக்கொண்டு, விளக்குகளோடும், பந்தங்களோடும் படைக்கருவிகளோடும் அங்கே வந்தான்.
யோவான் 18 : 4 (RCTA)
தமக்கு நிகழப்போவதையெல்லாம் அறிந்த இயேசு முன்சென்று, "யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார்.
யோவான் 18 : 5 (RCTA)
அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல, இயேசு "நான்தான்" என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு இருந்தான்.
யோவான் 18 : 6 (RCTA)
"நான்தான்" என்று அவர் சொன்னதும், அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.
யோவான் 18 : 7 (RCTA)
"யாரைத் தேடிவந்தீர்கள் ?" என்று மீண்டும் அவர்களைக் கேட்டார். அவர்கள், "நாசரேத்தூர் இயேசுவை" என்று சொல்ல,
யோவான் 18 : 8 (RCTA)
இயேசு, "நான்தான் என்று உங்களுக்குச் சொன்னேனே; என்னை நீங்கள் தேடிவந்திருந்தால் இவர்களைப் போகவிடுங்கள்" என்றார்.
யோவான் 18 : 9 (RCTA)
"நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் ஒருவனையும் நான் அழிவுறவிடவில்லை" என்று அவர் கூறியிருந்தது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.
யோவான் 18 : 10 (RCTA)
சீமோன் இராயப்பரிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக்குருவின் ஊழியனைத் தாக்கி, அவனது வலக்காதை வெட்டினார். அவ்வூழியனின் பெயர் மால்குஸ்.
யோவான் 18 : 11 (RCTA)
இயேசு இராயப்பரை நோக்கி, "உன் வாளை உறையில் போடு. தந்தை எனக்குக் கொடுத்த துன்பகலத்தில் நான் குடிக்காதிருப்பேனோ ?" என்றார்.
யோவான் 18 : 12 (RCTA)
படைவீரரும் படைத்தலைவனும் யூத காவலரும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,
யோவான் 18 : 13 (RCTA)
முதலில் அன்னாசிடம் கொண்டுபோயினர். ஏனெனில், அவர் அவ்வாண்டில் தலைமைக்குருவாயிருந்த கைப்பாசுக்கு மாமனார்.
யோவான் 18 : 14 (RCTA)
இந்தக் கைப்பாசுதான் "மக்களுக்காக ஒருவன்மட்டும் இறப்பது நலம்" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்.
யோவான் 18 : 15 (RCTA)
சீமோன் இராயப்பரும் வேறொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். இந்தச் சீடர் தலைமைக்குருவுக்கு அறிமுகமானவராயிருந்ததால், இயேசுவோடு அப்பெரியகுருவின் வீட்டுமுற்றத்தில் நுழைந்தார்.
யோவான் 18 : 16 (RCTA)
இராயப்பரோ வெளியில் வாயிலருகே நின்றுகொண்டிருந்தார். தலைமைக்குருவுக்கு அறிமுகமாயிருந்த சீடர் வெளியே சென்று வாயில்காப்பவளிடம் சொல்லி, இராயப்பரை உள்ளே அழைத்துவந்தார்.
யோவான் 18 : 17 (RCTA)
வாயில்காக்கும் ஊழியக்காரி இராயப்பரை நோக்கி, "நீயும் அம்மனிதனின் சீடர்களுள் ஒருவன் அன்றோ ?" என, அவர், "நான் அல்லேன்" என்றார்.
யோவான் 18 : 18 (RCTA)
அப்போது குளிராயிருந்ததால், ஊழியரும் காவலரும் கரிநெருப்பு மூட்டிச் சுற்றிநின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தனர். இராயப்பரும் அவர்களோடு நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்.
யோவான் 18 : 19 (RCTA)
தலைமைக்குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரை வினவினார்.
யோவான் 18 : 20 (RCTA)
இயேசு மறுமொழியாக, "நான் உலகிற்கு வெளிப்படையாகப் பேசினேன்; செபக்கூடங்களிலும், யூதர் அனைவரும் கூடிவருகிற கோயிலிலும் எப்பொழுதும் போதித்தேன்: மறைவாகப் பேசியது ஒன்றுமில்லை.
யோவான் 18 : 21 (RCTA)
என்னை ஏன் வினவுகிறீர் ? அவர்களுக்கு என்ன சொன்னேன் என்று நான் சொன்னதைக் கேட்டவர்களிடம் விசாரித்துப்பாரும்; நான் கூறியது அவர்களுக்குத் தெரியுமே" என்றார்.
யோவான் 18 : 22 (RCTA)
என்றதும், அங்கு நின்றுகொண்டிருந்த காவலன் ஒருவன், "தலைமைக்குருவுக்கு இப்படியா மறுமொழி கூறுவது ?" என்று சொல்லி, இயேசுவைக் கன்னத்தில் அறைந்தான்.
யோவான் 18 : 23 (RCTA)
அதற்கு இயேசு, "நான் பேசியது தவறாயிருந்தால், எது தவறு என்று காட்டு; பேசியது சரியானால் ஏன் என்னை அடிக்கிறாய் ?" என்றார்.
யோவான் 18 : 24 (RCTA)
பின்பு, அன்னாஸ் அவரைக் கட்டுண்டிருந்தவாறே தலைமைக்குருவாகிய கைப்பாசிடம் அனுப்பினார்.
யோவான் 18 : 25 (RCTA)
சீமோன் இராயப்பர் அங்கு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தார். அங்கிருந்தவர்கள் அவரைப் பார்த்து, "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவனன்றோ ?" என்று கேட்டார்கள். அவர், "நான் அல்லேன்" என்று மறுத்தார்.
யோவான் 18 : 26 (RCTA)
தலைமைக் குருக்களின் ஊழியருள் ஒருவன் இராயப்பரால் காது அறுபட்டவனுக்கு உறவினன்; அவன் இராயப்பரிடம், "தோட்டத்தில் நான் உன்னை அந்த ஆளோடு காணவில்லையா ?" என்று கேட்டான்.
யோவான் 18 : 27 (RCTA)
இராயப்பர் மீண்டும் மறுத்தார்; உடனே கோழி கூவிற்று.
யோவான் 18 : 28 (RCTA)
அதன்பின் இயேசுவைக் கைப்பாசிடமிருந்து பிலாத்துவின் அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். அப்பொழுது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்பதற்குத் தீட்டுப்படாமலிருக்க அரண்மனைக்குள் அவர்கள் நுழையவில்லை.
யோவான் 18 : 29 (RCTA)
எனவே பிலாத்து அவர்களைக் காண வெளியே வந்து, "இவன்மேல் நீங்கள் சாட்டும் குற்றம் என்ன ?" என்று கேட்டார்.
யோவான் 18 : 30 (RCTA)
அதற்கு அவர்கள், "இவன் குற்றவாளியாய் இராதிருந்தால் நாங்கள் இவனை உமக்குக் கையளித்திருக்கமாட்டோம்" என்றார்கள்.
யோவான் 18 : 31 (RCTA)
அப்போது பிலாத்து, "இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி நீங்களே தீர்ப்பிடுங்கள்" என, யூதர்கள், "எவனையும் கொல்ல எங்களுக்கு உரிமையில்லை" என்றார்கள்.
யோவான் 18 : 32 (RCTA)
தமக்கு எத்தகைய சாவு நேரிடும் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியது இப்படி நிறைவேற வேண்டியிருந்தது.
யோவான் 18 : 33 (RCTA)
பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவை வரச்சொல்லி, "நீ யூதர்களின் அரசனோ ?" என்று கேட்டார்.
யோவான் 18 : 34 (RCTA)
இயேசு மறுமொழியாக, "நீராகவே இதைக் கேட்கின்றீரா, மற்றவர் என்னைப்பற்றி உம்மிடம் கூறினரா ?" என்றார்.
யோவான் 18 : 35 (RCTA)
அதற்குப் பிலாத்து, "நான் யூதனா ? உன் இனத்தாரும் தலைமைக்குருக்களும் உன்னை என்னிடம் கையளித்தார்களே, என்ன செய்தாய் ?" என்றார்.
யோவான் 18 : 36 (RCTA)
இயேசுவோ, "என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று; என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததாயிருந்தால், நான் யூதரிடம் கையளிக்கப்படாதபடி என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால், என் அரசு இவ்வுலகைச் சார்ந்ததன்று" என்றார்.
யோவான் 18 : 37 (RCTA)
எனவே, பிலாத்து அவரை நோக்கி, "அப்படியானால் நீ அரசன்தானா ?" என்று கேட்க, இயேசு, " ' அரசன் ' என்பது நீர் சொல்லும் வார்த்தை. உண்மைக்குச் சாட்சியம் கூறுவதே எனது பணி; இதற்காகவே பிறந்தேன், இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவன் எவனும் எனது குரலுக்குச் செவிமடுக்கிறான்" என்றார்.
யோவான் 18 : 38 (RCTA)
அதற்குப் பிலாத்து, "உண்மையா! அது என்ன ?" என்று சொல்லிவிட்டு, மீண்டும் வெளியே சென்று யூதரை நோக்கி, "இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை.
யோவான் 18 : 39 (RCTA)
பாஸ்காத் திருவிழாவின்போது உங்களைப் பிரியப்படுத்த ஒருவனை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே. அதன்படி யூதரின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா ?" என்று வினவினார்.
யோவான் 18 : 40 (RCTA)
அதற்கு எல்லாரும், "இவன் வேண்டாம், பரபாசே வேண்டும்! " என்று மீண்டும் உரக்கக் கூவினர். அந்தப் பரபாசோ ஒரு கள்வன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40