யோவான் 17 : 1 (RCTA)
இப்படிப் பேசியபின், இயேசு வானத்தை அண்ணாந்துபார்த்து மன்றாடியதாவது: "தந்தாய், நேரம் வந்துவிட்டது: உம் மகன் உம்மை மகிமைப்படுத்துமாறு நீர் உம் மகனை மகிமைப்படுத்தும்.
யோவான் 17 : 2 (RCTA)
ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் எல்லாருக்கும் அவர் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கும்பொருட்டு, மனுமக்கள் அனைவர்மீதும் நீர் அவருக்கு அதிகாரம் அளித்திருக்கிறீர்.
யோவான் 17 : 3 (RCTA)
முடிவில்லா வாழ்வு என்பது: உண்மையான ஒரே கடவுளாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே.
யோவான் 17 : 4 (RCTA)
நீர் எனக்குச் செய்யக் கொடுத்த பணியைச் செய்து முடித்து, நான் உம்மை உலகில் மகிமைப்படுத்தினேன்.
யோவான் 17 : 5 (RCTA)
தந்தாய், உலகம் உண்டாகுமுன்பு, உம்மிடம் எனக்கிருந்த அதே மகிமையை அளித்து, இப்பொழுது என்னை உம்முன் மகிமைப்படுத்தும்.
யோவான் 17 : 6 (RCTA)
உலகிலிருந்து பிரித்து நீர் எனக்கு அளித்த மக்களுக்கு உமது பெயரை வெளிப்படுத்தினேன். அவர்கள் உமக்கு உரியவர்களாயிருந்தார்கள்; அவர்களை என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உமது வார்த்தையைக் கேட்டார்கள்.
யோவான் 17 : 7 (RCTA)
நீர் எனக்குத் தந்ததெல்லாம் உம்மிடமிருந்தே வந்ததென்பது இப்பொழுது அவர்களுக்குத் தெரியும்.
யோவான் 17 : 8 (RCTA)
ஏனெனில், நீர் எனக்கு அறிவித்ததையே நான் அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன்; அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையாகவே அறிந்துகொண்டார்கள்; நீர் என்னை அனுப்பினீர் என்பதையும் விசுவசித்தார்கள்.
யோவான் 17 : 9 (RCTA)
அவர்களுக்காக நான் உம்மை மன்றாடுகிறேன்; நான் மன்றாடுவது உலகிற்காக அன்று, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே. ஏனெனில், அவர்கள் உமக்குரியவர்கள்.
யோவான் 17 : 10 (RCTA)
என்னுடையதெல்லாம் உம்முடையதே; உம்முடையதும் என்னுடையதே. அவர்களால் நான் மகிமை பெற்றிருக்கிறேன்.
யோவான் 17 : 11 (RCTA)
இனி, நான் உலகில் இரேன்; அவர்களோ உலகில் இருக்கின்றார்கள்; நான் உம்மிடம் வருகிறேன். பரிசுத்த தந்தாய், நாம் ஒன்றாய் இருப்பதுபோல, நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் ஒன்றாயிருக்கும்படி உமது பெயரால் அவர்களைக் காத்தருளும்.
யோவான் 17 : 12 (RCTA)
நான் அவர்களோடு இருந்தபொழுது, அவர்களை உமது பெயரால் காத்து வந்தேன். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களைக் காப்பாற்றினேன். அவர்களுள் ஒருவனும் அழிவுறவில்லை. மறைநூல் நிறைவேறும்படி, அழிவுக்குரியவன்மட்டுமே அழிவுற்றான்.
யோவான் 17 : 13 (RCTA)
இப்பொழுது உம்மிடம் வருகிறேன்; என் மகிழ்ச்சி அவர்கள் உள்ளத்தில் நிறைவேறும்படி, உலகிலிருக்கும்பொழுதே நான் இதைச் சொல்லுகிறேன்.
யோவான் 17 : 14 (RCTA)
உமது வார்த்தையை அவர்களுக்கு அளித்தேன், உலகமோ அவர்களை வெறுத்தது; ஏனெனில், நான் உலகைச் சார்ந்தவனாய் இராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.
யோவான் 17 : 15 (RCTA)
உலகிலிருந்து அவர்களை எடுத்துவிடும்படி நான் மன்றாடவில்லை, தீயவனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே உம்மை மன்றாடுகிறேன்.
யோவான் 17 : 16 (RCTA)
நான் உலகைச் சார்ந்தவனாயிராததுபோல் அவர்களும் உலகைச் சார்ந்தவர்களல்லர்.
யோவான் 17 : 17 (RCTA)
உண்மையினால் அவர்களை அர்ச்சித்தருளும்; உமது வார்த்தையே உண்மை.
யோவான் 17 : 18 (RCTA)
நீர் என்னை உலகிற்கு அனுப்பியதுபோல நானும் அவர்களை உலகிற்கு அனுப்பினேன்.
யோவான் 17 : 19 (RCTA)
அவர்கள் உண்மையினாலேயே அர்ச்சிக்கப்பெறும்படி அவர்களுக்காக என்னையே அர்ச்சனையாக்குகிறேன்.
யோவான் 17 : 20 (RCTA)
இவர்களுக்காகமட்டும் நான் மன்றாடவில்லை; இவர்களுடைய வார்த்தையின்வழியாக என்னில் விசுவாசம் கொள்பவர்க்காகவும் மன்றாடுகிறேன்.
யோவான் 17 : 21 (RCTA)
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக. தந்தாய், நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல், அவர்களும் நம்முள் ஒன்றாய் இருக்கும்படி மன்றாடுகிறேன்; நீர் என்னை அனுப்பினீர் என்று இதனால் உலகம் விசுவசிக்கும்.
யோவான் 17 : 22 (RCTA)
நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்கு அளித்த மகிமையை நான் அவர்களுக்கு அளித்தேன்.
யோவான் 17 : 23 (RCTA)
இவ்வாறு நான் அவர்களுள்ளும், நீர் என்னுள்ளும் இருப்பதால், அவர்களும் ஒருமைப்பாட்டின் நிறைவை எய்துவார்களாக; இங்ஙனம், நீர் என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்பால் அன்புகூர்ந்ததுபோல் அவர்கள்மீதும் அன்புகூர்ந்தீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
யோவான் 17 : 24 (RCTA)
தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால், உலகம் உண்டாகுமுன்பு நீர் என்மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்.
யோவான் 17 : 25 (RCTA)
நீதியுள்ள தந்தாய், உலகம் உம்மை அறியவில்லை, நானோ உம்மை அறிவேன். நீர் என்னை அனுப்பினீர் என்று இவர்களும் அறிந்துகொண்டார்கள்.
யோவான் 17 : 26 (RCTA)
நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்களுள் இருக்கவும், நானும் அவர்களுள் இருக்கவும் உமது பெயரை அவர்களுக்கு அறிவித்தேன், இன்னும் அறிவிப்பேன்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26