யோவான் 16 : 1 (RCTA)
"நீங்கள் இடறல்படாதவாறு, இவையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன்.
யோவான் 16 : 2 (RCTA)
உங்களைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்குவார்கள்; இதோ! நேரம் வருகிறது, அப்போது உங்களைக் கொல்லுபவர்கள் கடவுளுக்குப் பலி செலுத்துவதாக எண்ணிக்கொள்வார்கள்.
யோவான் 16 : 3 (RCTA)
தந்தையையோ என்னையோ அறியாதிருப்பதால்தான், உங்களை இப்படி நடத்துவார்கள்.
யோவான் 16 : 4 (RCTA)
அந்நேரம் வரும்பொழுது, முன்பே நான் இப்படி உங்களுக்குச் சொன்னதாக நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்; இதற்காகத்தான் இதெல்லாம் உங்களுக்குக் கூறினேன். "தொடக்கத்திலேயே இவற்றை உங்களுக்குச் சொல்லவில்லை; ஏனெனில், உங்களோடு இருந்தேன்;
யோவான் 16 : 5 (RCTA)
இப்பொழுதோ என்னை அனுப்பியவரிடம் போகிறேன். ஆயினும் ' எங்கே போகிறீர் ? ' என்று உங்களுள் யாரும் என்னைக் கேட்கவில்லை.
யோவான் 16 : 6 (RCTA)
ஆனால், நான் இதை உங்களுக்குக் கூறியதால், உங்கள் உள்ளத்தில் வருத்தம் நிறைந்துள்ளது.
யோவான் 16 : 7 (RCTA)
எனினும் நான் உங்களுக்குச் சொல்வது உண்மை: நான் போவதே உங்களுக்கு நல்லது; போகாவிடில், துணையாளர் உங்களிடம் வரமாட்டார்; போனால்தான் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
யோவான் 16 : 8 (RCTA)
பாவம் யாரைச் சாரும், நியாயம் யார்பக்கம் உள்ளது, இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்பதை அவர் வந்தபின் எடுத்துக்காட்டி, உலகினர் செய்த தவற்றை மெய்ப்பிப்பார்.
யோவான் 16 : 9 (RCTA)
பாவம் உலகினரையே சாரும் என்று காட்டுவார்: ஏனெனில், அவர்கள் என்னில் விசுவாசம் கொள்ளவில்லை.
யோவான் 16 : 10 (RCTA)
நியாயம் என் பக்கம் உள்ளது என்று காட்டுவார்: ஏனெனில், நான் தந்தையிடம் செல்கிறேன்; இனிமேல் நீங்கள் என்னைப் பார்க்கமுடியாது.
யோவான் 16 : 11 (RCTA)
இறைவனின் தீர்ப்பு எத்தகையது என்று காட்டுவார்: ஏனெனில், இவ்வுலகின் தலைவன் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டான்.
யோவான் 16 : 12 (RCTA)
நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியவை இன்னும் பல உண்டு; ஆனால் அவற்றை இப்பொழுது உங்களால் தாங்கமுடியாது.
யோவான் 16 : 13 (RCTA)
உண்மையின் ஆவியானவர் வந்தபின், நிறைஉண்மையை நோக்கி உங்களை வழி நடத்துவார்; அவர் பேசுவதைக் தாமாகப் பேசுவதில்லை; கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16 : 14 (RCTA)
உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்தே பெற்றுக்கொள்வதால், அவர் என்னை மகிமைப்படுத்துவார்.
யோவான் 16 : 15 (RCTA)
தந்தையுடையதெல்லாம் என்னுடையதே; எனவேதான், உங்களுக்கு அறிவிப்பதை எனக்குள்ளதிலிருந்து பெற்றுக்கொள்கிறார் என்றேன்.
யோவான் 16 : 16 (RCTA)
"இன்னும் சிறிதுகாலத்தில் என்னைக் காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள்."
யோவான் 16 : 17 (RCTA)
இதைக் கேட்டு அவருடைய சீடர், "இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள். பின்னும் சிறிது காலத்தில் மீண்டும் என்னைக் காண்பீர்கள் ' என்றும், ' தந்தையிடம் செல்கிறேன் ' என்றும் இவர் சொல்வதின் பொருள் என்ன?" என்று தங்களிடையே பேசிக்கொண்டனர்.
யோவான் 16 : 18 (RCTA)
"இந்தச் 'சிறிது காலம்' என்பது என்ன ? அவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே! " என்றனர்.
யோவான் 16 : 19 (RCTA)
அவர்கள் தம்மை வினவ விரும்புவதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி, "'இன்னும் சிறிது காலத்தில் என்னை காணமாட்டீர்கள், பின்னும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்' என்று நான் சொன்னதைப்பற்றி உங்களுக்குள் உசாவுகிறீர்கள் அல்லவா ?
யோவான் 16 : 20 (RCTA)
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள், உலகமோ மகிழும்; நீங்கள் துன்புறுவீர்கள், ஆனால் உங்கள் துன்பம் இன்பமாக மாறும்.
யோவான் 16 : 21 (RCTA)
குழந்தை பிறக்கும்போது தாயானவள் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் துன்புறுகிறாள்; குழந்தையைப் பெற்றெடுத்த பின்போ, உலகில் மனிதன் ஒருவன் தோன்றினான் என்ற மகிழ்ச்சியால் தன் வேதனையை மறந்துவிடுகிறாள்.
யோவான் 16 : 22 (RCTA)
அதுபோலவே, இப்பொழுது நீங்களும் துன்புறுகிறீர்கள்; ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்பொழுது உங்கள் உள்ளம் மகிழ்வுறும்; உங்கள் மகிழ்ச்சியை உங்களிடமிருந்து எவனும் பறித்துவிடமாட்டான்.
யோவான் 16 : 23 (RCTA)
அந்நாளில் என்னிடம் எதுவும் கேட்கமாட்டீர்கள். உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் தந்தையிடம் எதைக் கேட்டாலும், அதை என் பெயரால் உங்களுக்குத் தருவார்.
யோவான் 16 : 24 (RCTA)
இதுவரையில் என் பெயரால் நீங்கள் எதையும் கேட்டதில்லை. கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; அப்போது உங்கள் மகிழ்ச்சி நிறைவுபெறும்.
யோவான் 16 : 25 (RCTA)
இவையெல்லாம் நான் உங்களிடம் உருவகமாய்ப் பேசினேன். இதோ! நேரம் வருகிறது; அப்போது உருவகமாய் உங்களிடம் பேசேன்; என் தந்தையைப்பற்றித் தெளிவாய் எடுத்துச்சொல்வேன்.
யோவான் 16 : 26 (RCTA)
அந்நாளில் என் பெயரால் நீங்கள் வேண்டுவீர்கள்; ஆயினும், உங்களுக்காகத் தந்தையிடம் மன்றாடுவேன் என்று நான் சொல்லவில்லை.
யோவான் 16 : 27 (RCTA)
தந்தையே உங்களை நேசிக்கிறார்; ஏனெனில், நீங்கள் என்னை நேசித்து நான் கடவுளிடமிருந்து வந்தேன் என்று விசுவசித்தீர்கள்.
யோவான் 16 : 28 (RCTA)
தந்தையிடமிருந்து புறப்பட்டு உலகிற்கு வந்தேன். இப்பொழுது உலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்கின்றேன்" என்றார்.
யோவான் 16 : 29 (RCTA)
அப்பொழுது அவருடைய சீடர்கள், "இப்பொழுதுதான் தெளிவாகப் பேசுகிறீர்; உருவகம் ஒன்றும் இல்லை!
யோவான் 16 : 30 (RCTA)
உமக்கு எல்லாம் தெரியும், யாரும் உம்மைக் கேள்விகேட்கத் தேவையில்லை என்று இப்பொழுது தெரிகிறது. கடவுளிடமிருந்து நீர் வந்தீர் என்று இதனால் விசுவசிக்கிறோம்" என்றார்கள்.
யோவான் 16 : 31 (RCTA)
அதற்கு இயேசு "இப்பொழுது நீங்கள் விசுவசிக்கிறீர்களா ?
யோவான் 16 : 32 (RCTA)
இதோ! நேரம் வருகிறது, வந்தேவிட்டது; அப்பொழுது நீங்கள் சிதறுண்டு, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியாய் விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்.
யோவான் 16 : 33 (RCTA)
என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33