யோவான் 13 : 1 (RCTA)
பாஸ்காத் திருவிழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகினின்று தந்தையிடம் செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டதென்று இயேசு அறிந்திருந்தார். உலகிலிருந்த தம்மவர்மேல் அன்புகூர்ந்திருந்த அவர், இறுதிவரை அவர்கள்மேல் அன்புகூரலானார்.
யோவான் 13 : 2 (RCTA)
இராவுணவு நடைபெறலாயிற்று. இயேசுவைக் காட்டிக்கொடுக்குமாறு சீமோனின் மகனான யூதாஸ் இஸ்காரியோத்தை ஏற்கனவே அலகை தூண்டியிருந்தான்.
யோவான் 13 : 3 (RCTA)
தந்தை தம் கையில் அனைத்தையும் ஒப்படைத்துள்ளார் என்றும், தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல கடவுளிடம் திரும்பிச் செல்லவேண்டும் என்றும் அறிந்தவராய்,
யோவான் 13 : 4 (RCTA)
இயேசு பந்தியிலிருந்து எழுந்து, மேலாடையைக் களைந்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.
யோவான் 13 : 5 (RCTA)
பின்னர், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய பாதங்களைக் கழுவி, இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.
யோவான் 13 : 6 (RCTA)
சீமோன் இராயப்பரிடம் வந்தார்; அவர் இயேசுவிடம், "ஆண்டவரே, நீரா என் பாதங்களைக் கழுவுவது ?" என்றார்.
யோவான் 13 : 7 (RCTA)
அதற்கு இயேசு, "நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது தெரியாது, பின்னரே விளங்கும்" என்றார்.
யோவான் 13 : 8 (RCTA)
இராயப்பரோ, "நீர் என் பாதங்களை ஒருபோதும் கழுவ விடமாட்டேன்! " என, இயேசு, "நான் உன்னைக் கழுவாவிடில், உனக்கு என்னோடு பங்கில்லை" என்றார்.
யோவான் 13 : 9 (RCTA)
அப்போது சீமோன் இராயப்பர், "அப்படியானால், ஆண்டவரே, என் பாதங்களை மட்டுமன்று, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்!" என்றார்.
யோவான் 13 : 10 (RCTA)
இயேசு அவரை நோக்கி, "குளித்துவிட்டவன் தன் பாதங்களைமட்டும் கழுவினால் போதும்; மற்றப்படி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் தூய்மையாயில்லை" என்றார்.
யோவான் 13 : 11 (RCTA)
தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவனென்று அவருக்குத் தெரிந்திருந்ததால், "நீங்கள் எல்லோரும் தூய்மையாய் இல்லை" என்றார்.
யோவான் 13 : 12 (RCTA)
அவர்களுடைய பாதங்களைக் கழுவியபின், அவர் தம் மேலாடையை அணிந்துகொண்டு, மீண்டும் பந்தியில் அமர்ந்து, அவர்களை நோக்கிக் கூறினார்: "நான் உங்களுக்குச் செய்தது இன்னதென்று விளங்கிற்றா ?
யோவான் 13 : 13 (RCTA)
நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள். நீங்கள் சொல்லுவது சரியே; நான் அவர்தாம்.
யோவான் 13 : 14 (RCTA)
ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவவேண்டும்.
யோவான் 13 : 15 (RCTA)
நான் உங்களுக்கு மாதிரி காட்டினேன்: நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்.
யோவான் 13 : 16 (RCTA)
"உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன்; அப்போஸ்தலனும் தன்னை அனுப்பியவருக்கு மேற்பட்டவன் அல்லன்.
யோவான் 13 : 17 (RCTA)
"இதையெல்லாம் அறிந்து அதன்படி நடப்பீர்களாகில் நீங்கள் பேறுபெற்றவர்கள்.
யோவான் 13 : 18 (RCTA)
நான் சொல்வது உங்கள் எல்லோரையும்பற்றி அன்றி; நான் தேர்ந்துகொண்டவர்கள் எனக்குத் தெரியும். ஆனால், ' என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான் ' என்ற மறைநூல் வாக்கு நிறைவேற வேண்டும்.
யோவான் 13 : 19 (RCTA)
"அப்படி நிகழும்போது, நானே இருக்கிறேன் என்று நீங்கள் விசுவசிக்கும்பொருட்டு, நிகழ்வதற்கு முன்னதாக, இப்பொழுதே உங்களுக்குக் கூறுகிறேன்.
யோவான் 13 : 20 (RCTA)
உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்பவன் என்னை ஏற்றுக்கொள்கிறான்; என்னை ஏற்றுக்கொள்பவனோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறான்."
யோவான் 13 : 21 (RCTA)
இப்படிச் சொன்னபின், இயேசு மனக்கலக்கத்தோடு, "உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்" என்று வெளிப்படையாகக் கூறினார்.
யோவான் 13 : 22 (RCTA)
இப்படிக் கூறியது யாரைப்பற்றி என்று சீடர் அறியாமல் திகைப்புற்று ஒருவரையொருவர் பார்த்தனர்.
யோவான் 13 : 23 (RCTA)
இயேசுவுடைய சீடர்களுள் ஒருவர் அவருடைய மார்புபக்கமாய் அமர்ந்திருந்தார். அவர்மேல்தான் இயேசு அன்புகொண்டிருந்தார்.
யோவான் 13 : 24 (RCTA)
சீமோன் இராயப்பர் அவருக்குச் சைகை காட்டி, "யாரைப்பற்றிச் சொல்கிறார் என்று கேள்" என்றார்.
யோவான் 13 : 25 (RCTA)
அவர் இயேசுவின் மார்பில் சாய்ந்துகொண்டு, "ஆண்டவரே, அவன் எவன் ?" என்று கேட்டார்.
யோவான் 13 : 26 (RCTA)
இயேசு மறுமொழியாக, "அப்பத்துண்டை நான் எவனுக்குத் தோய்த்துக் கொடுக்கிறேனோ, அவன்தான்" என்றுசொல்லி, அப்பத்தைத் தோய்த்து, சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.
யோவான் 13 : 27 (RCTA)
யூதாஸ் அப்பத்துண்டைப் பெற்றபின், அவனுக்குள் சாத்தான் நுழைந்தான். அப்போது இயேசு அவனிடம், "செய்யவேண்டியதை விரைவில் செய்" என்றார்.
யோவான் 13 : 28 (RCTA)
எதற்காக அவனிடம் இப்படிச் சொன்னார் என்பதைப் பந்தியில் இருந்த யாரும் கண்டுணரவில்லை.
யோவான் 13 : 29 (RCTA)
யூதாசிடம் பொதுப்பணம் இருந்ததால், "திருநாளுக்கு வேண்டியதை வாங்கிவா," அல்லது "ஏழைகளுக்கு ஏதாவது கொடு" என்று இயேசு அவனுக்குச் சொல்லியிருக்கலாம் எனச் சிலர் எண்ணிக்கொண்டனர்.
யோவான் 13 : 30 (RCTA)
அப்பத்துண்டை அவன் பெற்றுக்கொண்டவுடனே வெளியே போனான். அப்பொழுது இரவு.
யோவான் 13 : 31 (RCTA)
அவன் வெளியே போனபின், இயேசு சொன்னதாவது: "இப்பொழுது மனுமகன் மகிமை பெற்றார், கடவுளும் அவரால் மகிமை பெற்றார்.
யோவான் 13 : 32 (RCTA)
கடவுள் அவரால் மகிமை பெற்றாரானால், கடவுளும் தம்மில் அவரை மகிமைப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார்.
யோவான் 13 : 33 (RCTA)
"அன்புச் குழந்தைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். என்னைத் தேடுவீர்கள்; நான் யூதர்களுக்குச் சொன்னதுபோல் உங்களுக்கும் இப்பொழுது சொல்லுகிறேன்: நான் செல்லுமிடத்திற்கு உங்களால் வரமுடியாது.
யோவான் 13 : 34 (RCTA)
நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளை கொடுக்கிறேன்: நீங்கள் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள். நான் உங்களுக்கு அன்புசெய்ததுபோல நீங்களும் ஒருவருக்கொருவர் அன்புசெய்யுங்கள்.
யோவான் 13 : 35 (RCTA)
நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."
யோவான் 13 : 36 (RCTA)
அப்போது சீமோன் இராயப்பர், "ஆண்டவரே, எங்குச் செல்லுகிறீர் ?" என்றார். இயேசு மறுமொழியாக, "நான் செல்லுமிடத்திற்கு என்னைப் பின்தொடர இப்பொழுது உன்னால் முடியாது; பின்னரே என்னைப் பின்தொடர்வாய்" என்றார்.
யோவான் 13 : 37 (RCTA)
அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, ஏன் இப்பொழுது நான் உம்மைப் பின்தொடர முடியாது ? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்" என்றார்.
யோவான் 13 : 38 (RCTA)
அதற்கு இயேசு கூறியது: "நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ ? உண்மையிலும் உண்மையாக உனக்குச் சொல்லுகிறேன்: நீ மும்முறை என்னை மறுதலிக்குமுன், கோழி கூவாது.
❮
❯