யோவான் 11 : 1 (RCTA)
லாசர் என்னும் ஒருவன் பிணியுற்றிருந்தான். அவன் பெத்தானியா ஊரினன். அதுவே மரியாள், அவளுடைய சகோதரி மார்த்தாள் இவர்களுடைய ஊர். -
யோவான் 11 : 2 (RCTA)
இந்த மரியாள்தான், முன்னொருநாள் ஆண்டவருக்குப் பரிமளத்தைலம் பூசி, அவருடைய பாதங்களைக் கூந்தலால் துடைத்தவள். பிணியுற்றிருந்த லாசர் அவளுடைய சகோதரன். -
யோவான் 11 : 3 (RCTA)
அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்" என்று தெரிவித்தார்கள்.
யோவான் 11 : 4 (RCTA)
இயேசு இதைக் கேட்டு, "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று; இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்றார்.
யோவான் 11 : 5 (RCTA)
மார்த்தாள், அவளுடைய சகோதரி மரியாள், லாசர் இவர்களிடம் இயேசு அன்பு கொண்டிருந்தார்.
யோவான் 11 : 6 (RCTA)
அவன் பிணியுற்றிருந்த செய்தியைக் கேட்ட பின்பு, அவர் அங்கேயே இரண்டு நாள் தங்கிவிட்டார்.
யோவான் 11 : 7 (RCTA)
அந்த இரண்டு நாள் கழித்துத் தம் சீடரிடம், "மீண்டும் யூதேயாவுக்குப் போவோம், வாருங்கள்" என்றார்.
யோவான் 11 : 8 (RCTA)
அவருடைய சீடர், "ராபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியப்பார்த்தார்களே; நீர் மீண்டும் அங்குப் போகிறீரா ?" என,
யோவான் 11 : 9 (RCTA)
இயேசு மறுமொழியாகக் கூறினார்: "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உண்டன்றோ ? பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை; ஏனெனில், அவன் இவ்வுலகின் ஒளியைக் காண்கிறான்.
யோவான் 11 : 10 (RCTA)
இரவில் நடப்பவனோ இடறி விழுகிறான்; ஏனெனில், அவனிடம் ஒளியில்லை."
யோவான் 11 : 11 (RCTA)
இதைக் கூறியபின் அவர் அவர்களிடம், "நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்." என்றார்.
யோவான் 11 : 12 (RCTA)
அவருடைய சீடரோ, "ஆண்டவரே, தூங்கினால் நலம் அடைவான்" என்றனர்.
யோவான் 11 : 13 (RCTA)
இயேசு குறிப்பிட்டது அவனுடைய சாவையே. அவர்களோ வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக நினைத்தார்கள்.
யோவான் 11 : 14 (RCTA)
அப்போது இயேசு, "லாசர் இறந்துவிட்டான்.
யோவான் 11 : 15 (RCTA)
உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்" என்று தெளிவாகச் சொன்னார்.
யோவான் 11 : 16 (RCTA)
திதிமு என்னும் தோமையார் உடன்சீடரிடம், "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என்றார்.
யோவான் 11 : 17 (RCTA)
இயேசு அங்கு வந்தபொழுது, லாசரைக் கல்லறையில் வைத்து ஏற்கெனவே நான்கு நாள் ஆகியிருந்தது.
யோவான் 11 : 18 (RCTA)
பெத்தானியா யெருசலேமுக்கு அருகில் உள்ளது. இரு ஊருக்கும் ஏறக்குறைய இரண்டு கல் தொலை.
யோவான் 11 : 19 (RCTA)
சகோதரன் இறந்ததற்காக மார்த்தாள், மரியாள் இவர்களுக்கு ஆறுதல் அளிக்க யூதர் பலர் வந்திருந்தனர்.
யோவான் 11 : 20 (RCTA)
இயேசு வந்திருப்பதைக் கேள்வியுற்றதும் மார்த்தாள் அவரை எதிர்கொண்டு போனாள்.
யோவான் 11 : 21 (RCTA)
மரியாளோ வீட்டிலேயே இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.
யோவான் 11 : 22 (RCTA)
இப்பொழுதுகூட நீர் கடவுளிடமிருந்து கேட்பதெல்லாம் அவர் உமக்கு அருள்வார் என்று எனக்குத் தெரியும்" என்றாள்.
யோவான் 11 : 23 (RCTA)
இயேசு அவளை நோக்கி, "உன் சகோதரன் உயிர்த்தெழுவான்" என்றார்.
யோவான் 11 : 24 (RCTA)
அதற்கு மார்த்தாள், "இறுதிநாளில் எல்லாரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றாள்.
யோவான் 11 : 25 (RCTA)
அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.
யோவான் 11 : 26 (RCTA)
உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.
யோவான் 11 : 27 (RCTA)
அவளோ, "ஆம் ஆண்டவரே, நீர் மெசியா; இவ்வுலகிற்கு வரும் கடவுளின் மகன் நீர்தான் என்று நான் விசுவசிக்கிறேன்" என்றாள்.
யோவான் 11 : 28 (RCTA)
இப்படிச் சொன்னபின் மார்த்தாள் தன் சகோதரி மரியாளை அழைக்கச் சென்றாள். அவளிடம் வந்து, "போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னாள்.
யோவான் 11 : 29 (RCTA)
அதைக் கேட்டதும் மரியாள் விரைந்தெழுந்து அவரிடம் போனாள்.
யோவான் 11 : 30 (RCTA)
இயேசு ஊருக்குள் இன்னும் வரவில்லை. தம்மை மார்த்தாள் எதிர்கொண்ட இடத்திலேயே இருந்தார்.
யோவான் 11 : 31 (RCTA)
மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர், அவள் விரைந்தெழுந்து வெளியே சென்றதைக் கண்டு, அழுவதற்குத்தான் கல்லறைக்குச் செல்லுகிறாள் என்றெண்ணி அவளோடு போனார்கள்.
யோவான் 11 : 32 (RCTA)
இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் வந்ததும், அவரைக் கண்டு காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்" என்றாள்.
யோவான் 11 : 33 (RCTA)
மரியாள் அழுவதையும், அவளோடு வந்த யூதர் அழுவதையும் இயேசு கண்டபொழுது,
யோவான் 11 : 34 (RCTA)
மனம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள் ?" என்று கேட்க, "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
யோவான் 11 : 35 (RCTA)
அப்போது இயேசு கண்ணீர் விட்டார்.
யோவான் 11 : 36 (RCTA)
அதைக் கண்ட யூதர்கள், "அவன்மேல் இவருக்கு எவ்வளவு நேசம், பாருங்கள்!" என்றனர்.
யோவான் 11 : 37 (RCTA)
அவர்களுள் சிலர், "குருடனுக்குப் பார்வையளித்த இவர், இவன் சாகாமலிருக்கச் செய்ய முடியவில்லையா ?" என்றனர்.
யோவான் 11 : 38 (RCTA)
இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார். அது ஒரு குகை; அதைக் கல் ஒன்று மூடியிருந்தது.
யோவான் 11 : 39 (RCTA)
"கல்லை எடுத்து விடுங்கள்" என்றார் இயேசு. செத்தவனுடைய சகோதரி மார்த்தாள் அவரை நோக்கி, "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! " என்றாள்.
யோவான் 11 : 40 (RCTA)
அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.
யோவான் 11 : 41 (RCTA)
அப்பொழுது கல்லை அப்புறப்படுத்தினர். இயேசு கண்களை ஏறெடுத்து, "தந்தாய், நீர் எனக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
யோவான் 11 : 42 (RCTA)
நீர் என்றும் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சூழ்ந்து நிற்கும் கூட்டத்தின் பொருட்டே நான் இப்படிச் சொல்கிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவசிக்கவே இப்படிச் சொல்கிறேன்" என்றார்.
யோவான் 11 : 43 (RCTA)
இதைச் சொன்னபின், உரத்த குரலில், "லாசரே, வெளியே வா" என்றார்.
யோவான் 11 : 44 (RCTA)
என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன. அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.
யோவான் 11 : 45 (RCTA)
மரியாளிடம் வந்திருந்த யூதர் பலர் இயேசு செய்ததைக் கண்டு அவரில் விசுவாசங்கொண்டனர்.
யோவான் 11 : 46 (RCTA)
சிலரோ பரிசேயர்களிடம் சென்று இயேசு செய்ததெல்லாம் அறிவித்தனர்.
யோவான் 11 : 47 (RCTA)
தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அருங்குறிகளைச் செய்கிறானே, என்ன செய்யலாம் ?
யோவான் 11 : 48 (RCTA)
இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவனில் விசுவாசம்கொள்வர். உரோமையர் வந்து நம் புனித இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே" என்றனர்.
யோவான் 11 : 49 (RCTA)
அவ்வாண்டின் தலைமைக்குருவாயிருந்த கைப்பாஸ், சங்கத்தில் எழுந்து மற்றவர்களை நோக்கி, "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
யோவான் 11 : 50 (RCTA)
நம் இனம் முழுவதுமே அழிந்துபோகாதபடி ஒருவன் மட்டும் மக்களுக்காக இறப்பது நலம் என்பதை நீங்கள் உணரவில்லையே" என்றார்.
யோவான் 11 : 51 (RCTA)
இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவ்வாண்டின் தலைமைக் குருவாயிருந்தபடியால், இயேசு தம் இனத்தினருக்காக இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இறைவாக்காகக் கூறினார்.
யோவான் 11 : 52 (RCTA)
உள்ளபடி அவர் இறப்பது தம் இனத்தினருக்காக மட்டுமன்று. சிதறிக் கிடந்த கடவுளின் மக்களை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காகவுமே.
யோவான் 11 : 53 (RCTA)
அவரைக் கொல்ல அன்றே முடிவுசெய்தனர்.
யோவான் 11 : 54 (RCTA)
அதுமுதல் இயேசு யூதர்களிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. பாலைவனத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போய், எப்பிராயீம் என்ற ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
யோவான் 11 : 55 (RCTA)
யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையிலிருந்தது. பாஸ்காவுக்கு முன்னே, பலர் துப்புரவுச் சடங்கு செய்வதற்காக நாட்டுப் புறங்களிலிருந்து யெருசலேமுக்குப் போனார்கள்.
யோவான் 11 : 56 (RCTA)
அங்கே இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? என்ன நினைக்கிறீர்கள் ?" என்று கோயிலில் கூடிவந்தவர்களிடையே பேச்சு நடந்தது.
யோவான் 11 : 57 (RCTA)
தலைமைக் குருக்குளும் பரிசேயரும் அவரைப் பிடிக்கவிரும்பி, அவர் இருக்குமிடம் யாருக்காவது தெரிந்தால், தங்களிடம் வந்து அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57