யோவேல் 2 : 1 (RCTA)
சீயோனில் எக்காளம் ஊதுங்கள், நமது பரிசுத்த மலைமேலிருந்து கூக்குரலிடுங்கள்; உலக மக்கள் அனைவரும் நடுங்குவார்களாக! ஏனெனில் ஆண்டவரின் நாள் வருகிறது, மிக அண்மையில் உள்ளது.
யோவேல் 2 : 2 (RCTA)
அதுவோ இருளும் காரிருளும் கவிந்த நாள், கார்முகிலும் மந்தாரமும் சூழ்ந்த நாள்; காலை வெயில் மலை மீது நொடிப் பொழுதில் பரவுவது போல் ஆற்றல் மிக்க பெருங் கூட்டம் வருகின்றது. பண்டு முதல் இதற்கொப்பாய்க் கண்டதுமில்லை, ஊழிக்காலம் வரை இனிக் காணப்போவதுமில்லை.
யோவேல் 2 : 3 (RCTA)
அக்கூட்டத்திற்கு முன்னால் தீயானது சுட்டெரிக்கிறது, அதற்குப் பின்னால் நெருப்புத் தழல் பொசுக்குகிறது; அதன் வருகைக்கு முன் நாடு ஏதேன் சோலை போல் இருக்கிறது; அது போன பின் பாலை நிலம் போல் ஆகிவிடும்; யாதுமே அதற்குத் தப்ப முடியாது.
யோவேல் 2 : 4 (RCTA)
பார்வைக்கு அவை குதிரைகள் போல் இருக்கும், போர்க் குதிரைகள் மேல் அவை விரைந்தோடும்.
யோவேல் 2 : 5 (RCTA)
தேர்ப்படையின் கிறீச்சொலி போல் இரைந்து கொண்டு மலைகளின் உச்சிகள் மேல் தாவிச் செல்லும்; சருகுகளைச் சுட்டெரிக்கும் தீத்தழல் போல் இரைச்சல் செய்து, போருக்கு அணிவகுத்த வலிமை மிக்க சேனை போல முன்னேறும்.
யோவேல் 2 : 6 (RCTA)
அவற்றின் முன் மக்களினங்கள் வேதனையால் துடிக்கும், அச்சத்தால் முகங்கள் எல்லாம் வெளிறிப் போகும்.
யோவேல் 2 : 7 (RCTA)
போர் வீரர்களைப்போல் அவை தாக்குகின்றன, படை வீரர்களைப் போலச் சுவர் மேல் ஏறுகின்றன; ஒவ்வொன்றும் தன் போக்கின்படி முன்னேறுகிறது, தங்கள் வழிகளை விட்டு அவை பிறழ்வதில்லை.
யோவேல் 2 : 8 (RCTA)
ஒன்றையொன்று வரிசையில் நெருக்குவதில்லை, ஒவ்வொன்றும் தன் வழியே செல்லுகின்றது; அம்புமாரி அவற்றின் மேல் பொழிந்தாலும், வரிசை கலையாமல் அவை முன்னேறுகின்றன.
யோவேல் 2 : 9 (RCTA)
நகருக்குள் பாய்கின்றன, மதில்கள் மேல் ஓடுகின்றன, வீடுகள் மேல் ஏறிப் பலகணி வழியாய்த் திருடனைப் போல நுழைகின்றன.
யோவேல் 2 : 10 (RCTA)
அக்கூட்டத்தின் முன்னிலையில் நிலம் நடுங்குகிறது, வானம் விடவிடத்துப் போகிறது; கதிரவனும் வெண்ணிலவும் இருளுகின்றன; விண்மீன்கள் ஒளியிழந்து நிற்கின்றன.
யோவேல் 2 : 11 (RCTA)
ஆண்டவர் தம் சேனைக்கு முன் குரலொலி எழுப்புகிறார், அவருடைய சேனை மிகமிகப் பெரிது; அவராணையை நிறைவேற்றுபவன் ஆற்றல் மிக்கவன், ஏனெனில் ஆண்டவரின் நாள் பெரியது, மிகுந்த அச்சத்தைத் தரக்கூடியது, அதனைத் தாங்கிக் கொள்ளக் கூடியவன் யார்?
யோவேல் 2 : 12 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "இப்பொழுதாவது நோன்பிருந்து, அழுது புலம்பிக் கொண்டு உங்கள் முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வாருங்கள்;
யோவேல் 2 : 13 (RCTA)
உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.
யோவேல் 2 : 14 (RCTA)
ஒரு வேளை அவர் திரும்பவும் மனத்தை மாற்றிக் கொண்டு, நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு உணவுப் பலியும் பானப் பலியும் ஒப்புக் கொடுப்பதற்காக, உங்களுக்கு ஆசி வழங்கமாட்டாரென யார் அறிவார்?
யோவேல் 2 : 15 (RCTA)
சீயோனில் எக்காளம் ஊதுங்கள், உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள் வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்.
யோவேல் 2 : 16 (RCTA)
மக்களைக் கூட்டுங்கள். பரிசுத்த சபையை ஒன்று சேருங்கள், முதியோரைத் திரட்டுகள், சிறுவர்களைக் கூப்பிடுங்கள். பால் குடிக்கும் குழந்தைகளையும் ஒன்று கூட்டுங்கள்; மணமகன் தன் அறையை விட்டு வெளியேறட்டும், மணமகள் தன் மணமஞ்சத்தை விட்டுப் புறப்படட்டும்.
யோவேல் 2 : 17 (RCTA)
ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் கோயில் முகமண்டபத்திற்கும் பீடத்திற்கும் நடுவில் நின்று கொண்டு, "ஆண்டவரே, உம் மக்கள் மேல் இரங்கியருளும்; உம்முடைய உரிமைச் சொத்தைப் புறவினத்தார் நடுவில் வசை மொழிக்கும் பழிச் சொல்லுக்கும் ஆளாக்காதீர்; 'அவர்களுடைய கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று மக்களினங்களின் நடுவில் ஏன் சொல்லப்படல் வேண்டும்?" என்று சொல்லி அழுவார்களாக!
யோவேல் 2 : 18 (RCTA)
ஆண்டவர் தம் நாட்டின் மேல் ஆர்வங்கொண்டார், தம்முடைய மக்கள் மீது இரக்கம் காட்டினார்.
யோவேல் 2 : 19 (RCTA)
ஆண்டவர் தம் மக்களுக்குச் சொன்ன மறுமொழி இதுவே: "இதோ, நாம் உங்களுக்குச் கோதுமையும் திராட்சை இரசமும் எண்ணெய்யும் கொடுக்கிறோம்; நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இனிமேல் புறவினத்தார் நடுவில் உங்களை நிந்தைக்கு ஆளாக்க மாட்டோம்.
யோவேல் 2 : 20 (RCTA)
வடநாட்டுப் படையை உங்களிடமிருந்து தொலைவிலோட்டுவோம், வறண்ட பாலைநிலத்திற்கு விரட்டி விடுவோம்; அதன் முன் பகுதியைக் கீழ்க்கடலுக்குள்ளும், பின் பகுதியை மேற்கடலுக்குள்ளும் ஆழ்த்துவோம். நாற்றமும் தீய வாடையும் அங்கே கிளம்பும், ஏனெனில் அப்படையானது பெரியன செய்தது.
யோவேல் 2 : 21 (RCTA)
இஸ்ராயேல் நாடே, அஞ்சாதே, மகிழ்ச்சி கொள், அக்களிப்பு அடை; ஏனெனில் ஆண்டவர் பெரியன செய்தார்.
யோவேல் 2 : 22 (RCTA)
வயல்வெளி மிருகங்களே, அஞ்சாதீர்கள்; ஏனெனில் காட்டிலுள்ள மேய்ச்சலிடங்கள் பசுமையாய் உள்ளன; மரம் தன் கனியைக் கொடுக்கிறது, அத்தி மரமும் திராட்சைக் கொடியும் நிறைந்த பலன் தருகின்றன.
யோவேல் 2 : 23 (RCTA)
சீயோனின் மக்களே, அகமகிழுங்கள், உங்கள் கடவுளாகிய ஆண்டவரில் அக்களியுங்கள்; ஏனெனில் நீதியைக் காட்ட உங்களுக்கு முன்மழை தந்தார், முன்னாளில் தந்தது போலவே உங்களுக்காக முன்மழையும் பின்மழையும் மிகுதியாய்ப் பொழிந்தார்.
யோவேல் 2 : 24 (RCTA)
புணையடிக்கும் களங்களில் தானியம் நிறைந்திருக்கும், ஆலைகளில் திராட்சை இரசமும் எண்ணெயும் வழிந்தோடும்.
யோவேல் 2 : 25 (RCTA)
நாம் உங்கள் மேல் அனுப்பிய நம் பெரும்படையாகிய வெட்டுக்கிளிகள், பச்சைப்புழுக்கள், பயிர்ப் புழுக்கள், கம்பளிப்புழுக்கள் ஆகியவை அழித்து விட்ட ஆண்டின் பலன்களைத் திரும்ப உங்களுக்குத் தந்திடுவோம்.
யோவேல் 2 : 26 (RCTA)
அவற்றை வயிறார உண்டு நிறைவுபெறுவீர்கள். உங்களுக்காக விந்தைகள் புரிந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் திருப்பெயரை வாழ்த்துவீர்கள். இனி மேல் நம்முடைய மக்கள் ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
யோவேல் 2 : 27 (RCTA)
இஸ்ராயேல் நடுவில் நாம் இருக்கிறோம் என்றும், ஆண்டவராகிய நாமே உங்கள் கடவுள், நம்மையன்றி வேறெவரும் இல்லையென்றும் அப்போது நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; நம் மக்கள் இனி ஒருபோதும் அவமானத்துக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள்.
யோவேல் 2 : 28 (RCTA)
அதற்கு பின்பு, எல்லார் மேலும் நம் ஆவியைப் பொழிந்திடுவோம், உங்கள் புதல்வர் புதல்வியர் இறைவாக்குரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகள் காண்பர், உங்கள் இளைஞர்கள் காட்சிகள் அருளப்பெறுவர்.
யோவேல் 2 : 29 (RCTA)
ஆம், அடிமைகளாய் இருக்கும் ஆண்கள், பெண்கள் மீதும் அந்நாட்களில் நம் ஆவியைப் பொழிந்திடுவோம்.
யோவேல் 2 : 30 (RCTA)
இன்னும் விண்ணிலும் மண்ணிலும், அற்புதங்களைக் காட்டுவோம்; எங்குமே இரத்தமும் நெருப்பும் புகையும் இருக்கும்.
யோவேல் 2 : 31 (RCTA)
அச்சந்தரும் பெருநாளாம் ஆண்டவரின் நாள் வருமுன், கதிரோன் இருளாகும், நிலவோ இரத்தமாய் மாறும்.
யோவேல் 2 : 32 (RCTA)
அப்பொழுது ஆண்டவரின் பெயரைச் சொல்லி மன்றாடும் எவனும் மீட்புப் பெறுவான்; ஏனெனில் ஆண்டவர் சொன்னவாறே, சீயோன் மலையிலும் யெருசலேமிலும் தப்பியவர் வாழ்வர், ஆண்டவர் அழைத்தவர்களும் தப்பிப்பிழைத்தவர்கள் நடுவில் இருப்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32