யோவேல் 1 : 1 (RCTA)
பத்துவேல் என்பவனின் மகனாகிய யோவேல் என்பவருக்கு அருளப்பட்ட ஆண்டவருடைய திருவாக்கு:
யோவேல் 1 : 2 (RCTA)
முதியோரே, இதைக் கேளுங்கள், நாட்டுமக்களே, நீங்கள் அனைவரும் செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலோ, உங்கள் தந்தையரின் நாட்களிலோ இதைப் போன்றதொன்று நடந்ததுண்டோ?
யோவேல் 1 : 3 (RCTA)
உங்கள் பிள்ளைகளுக்கு இதைப்பற்றிச் சொல்லுங்கள்; உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லட்டும். அவர்கள் பிள்ளைகள் அடுத்த தலைமுறைக்குக் கூறட்டும்.
யோவேல் 1 : 4 (RCTA)
கம்பளிப் புழுவுக்குத் தப்பியதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளிக்குத் தப்பியதை பச்சைப் புழு தின்றது, பச்சைப் புழுவுக்குத் தப்பியதை பயிர்ப் புழு தின்றது.
யோவேல் 1 : 5 (RCTA)
எழுங்கள், குடிவெறியர்களே, எழுந்து அழுங்கள்; இனிய மதுவருந்துகிறவர்களே, அனைவரும் புலம்புங்கள்; ஏனெனில் இனிமேல் அவ்வினிய மது உங்கள் வாய்க்கு எட்டாமல் போகும்.
யோவேல் 1 : 6 (RCTA)
ஆற்றல் மிக்கதும், எண்ணிக்கையில் அடங்காததுமான மக்கள் இனமொன்று நம் நாட்டுக்கு எதிராய் வருகின்றது; அதன் பற்கள் சிங்கத்தின் பற்களைப் போன்றவை, அதன் கடைவாய்ப் பற்கள் பெண் சிங்கத்தின் கடைவாய்ப் பற்கள் போன்றவை.
யோவேல் 1 : 7 (RCTA)
நம் திராட்சைக் கொடிகளை அது பாழாக்கிற்று, நம் அத்திமரங்களைப் பிளந்தெறிந்தது; அவற்றின் பட்டைகளை உரித்து விட்டுக் கீழே வீழ்த்தியது, அதன் கிளைகள் உலர்ந்து வெளிறிப் போயின.
யோவேல் 1 : 8 (RCTA)
இளமையிலேயே கணவனை இழந்த கன்னிப் பெண்ணைப் போல, கோணியுடுத்திக் கொண்டு கதறி அழுங்கள்.
யோவேல் 1 : 9 (RCTA)
ஆண்டவருடைய கோயிலில் உணவுப் பலியும் பானப் பலியும் இல்லாமல் ஒழிந்து போயின. ஆண்டவருடைய ஊழியர்களாகிய அர்ச்சகர்கள் அழுகின்றார்கள்.
யோவேல் 1 : 10 (RCTA)
வயல்வெளிகள் பாழாகின, நிலமும் புலம்புகின்றது; ஏனெனில் கோதுமை விளைச்சல் அழிவுற்றது, திராட்சை இரசம் வற்றிற்று, எண்ணெய் வறண்டு போயிற்று.
யோவேல் 1 : 11 (RCTA)
உழவர்களே, கலங்கி நில்லுங்கள், திராட்சைத் தோட்டக்காரர்களே, புலம்புங்கள்; ஏனெனில் கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமல் போயின; வயலின் விளைச்சல் அழிந்து போயிற்று.
யோவேல் 1 : 12 (RCTA)
திராட்சைக் கொடி வாடிப்போயிற்று, அத்திமரம் உலர்ந்து போனது; மாதுளை, பேரீந்து, பேரிலந்தை முதலிய வயல் வெளி மரங்கள் யாவும் வதங்கி விட்டன; மகிழ்ச்சியும் மனிதர்களை விட்டு அகன்று விட்டது.
யோவேல் 1 : 13 (RCTA)
அர்ச்சகர்களே, கோணியுடுத்திக் கொண்டு அழுங்கள், பீடத்தில் பணிசெய்வோரே, புலம்புங்கள்; என் கடவுளின் ஊழியர்களே, கோணியுடை அணிந்து இரவைக் கழியுங்கள்; ஏனெனில் உங்கள் கடவுளின் கோயிலில் உணவுப்பலியும் பானப்பலியும் இல்லாதாகின.
யோவேல் 1 : 14 (RCTA)
உண்ணா நோன்புக்கெனக் காலத்தைக் குறிப்பிடுங்கள், வழிபாட்டுக் கூட்டத்தைக் கூட்டுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் கோயிலுக்கு மூப்பர்களையும், நாட்டு மக்கள் அனைவரையும் வரவழைத்து, ஆண்டவரை நோக்கிக் கதறுங்கள்.
யோவேல் 1 : 15 (RCTA)
இந்த நாளுக்கு ஐயோ கேடு! ஏனெனில் ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது, எல்லாம் வல்லவரிடமிருந்து அழிவைப் போல் அது வருகிறது.
யோவேல் 1 : 16 (RCTA)
நம் கண் முன்னாலேயே உணவுப் பொருளெல்லாம் அழியவில்லையா? நம் கடவுளின் வீட்டிலிருந்து அகமகிழ்ச்சியும் அக்களிப்பும் அகன்று போயினவன்றோ?
யோவேல் 1 : 17 (RCTA)
விதைகள் மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயின, பண்டகச்சாலைகள் வெறுமையாய் கிடக்கின்றன, களஞ்சியங்கள் பாழடைந்து போயின; ஏனெனில் கோதுமை விளைச்சல் இல்லாமல் போயிற்று.
யோவேல் 1 : 18 (RCTA)
மிருகங்கள் தவிப்பதை என்னென்பது! மாட்டு மந்தைகள் திகைத்து நிற்கின்றன; ஏனெனில் அவற்றிற்கு மேய்ச்சல் கிடையாது; ஆட்டு மந்தைகளும் இன்னலுறுகின்றன.
யோவேல் 1 : 19 (RCTA)
ஆண்டவரே, உம்மை நோக்கிக் கதறுகின்றேன்; ஏனெனில் காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு பாழ்படுத்தி விட்டது. வயல் வெளியில் இருந்த மரங்களை எல்லாம் தீயானது சுட்டெரித்து விட்டது.
யோவேல் 1 : 20 (RCTA)
காட்டு மிருகங்கள் கூட உம்மை நோக்கிக் கதறுகின்றன. ஏனெனில் நீரோடைகள் வற்றிப் போய்விட்டன; காட்டிலிருந்த மேய்ச்சல் இடங்களை நெருப்பு சுட்டெரித்தது.
❮
❯