எரேமியா 7 : 1 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
எரேமியா 7 : 2 (RCTA)
நீ ஆண்டவருடைய வீட்டின் வாயிலில் நின்று கொண்டு அறிவிக்க வேண்டியது இதுவே: இவ்வாயில் வழியாய் ஆண்டவரை வழிபட உள்ளே போகும் யூதாவின் மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
எரேமியா 7 : 3 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமானவர் கூறுகிறார்: உங்கள் வழிகளையும் செயல்களையும் செவ்வைப்படுத்திக் கொள்ளுங்கள்; அப்போது இவ்விடத்தில் உங்களோடு குடியிருப்போம்.
எரேமியா 7 : 4 (RCTA)
இது ஆண்டவருடைய கோயில்! ஆண்டவருடைய கோயில்!! ஆண்டவருடைய கோயில்!!!' என்று சொல்லும் வஞ்சக வார்த்தைகளை நீங்கள் நம்ப வேண்டாம்.
எரேமியா 7 : 5 (RCTA)
உங்களுடைய வழிகளையும் செயல்களையும் நீங்கள் உண்மையாகவே திருத்திக் கொண்டால், ஒருவனுக்கும் மற்றொருவனுக்கும் உண்டாகும் வழக்கில் உண்மையாகவே நீதி வழங்கினால்,
எரேமியா 7 : 6 (RCTA)
அந்நியரையும் அநாதைகளையும் கைம்பெண்களையும் நீங்கள் ஒடுக்காதிருந்தால், மாசற்ற இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீமையாக வேற்றுத் தெய்வங்களைப் பின்தொடராதிருந்தால்,
எரேமியா 7 : 7 (RCTA)
உங்கள் தந்தையர்க்கு முற்காலத்தில் நாம் கொடுத்த இந்த நாட்டில் உங்களோடு என்றென்றும் குடியிருப்போம்.
எரேமியா 7 : 8 (RCTA)
ஆனால், இதோ உங்களுக்குப் பயன் தராத பொய் வார்த்தைகளை நம்புகின்றீர்கள்.
எரேமியா 7 : 9 (RCTA)
களவு, கொலை, விபசாரம், பொய்யாணை, பாகாலுக்கு வழிபாடு, நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களைத் தொழுதல் இவற்றையெல்லாம் செய்து விட்டு,
எரேமியா 7 : 10 (RCTA)
நீங்கள் இங்கு வந்து நம் பெயரால் வழங்கப்படும் இவ் வீட்டில் நம் முன்னிலையில் நின்றுகொண்டு,' நாங்கள் விடுதலை பெற்றோம்' என்று சொல்லுகிறீர்கள்; சொல்லிக் கொண்டு தொடர்ந்து அதே அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள்.
எரேமியா 7 : 11 (RCTA)
என் பெயரால் குறிக்கப்படும் இந்த வீடு உங்கள் கண்களுக்குக் கள்ளர் குகையாய்த் தோன்றுகிறதோ? இதோ நாமே நேரில் பார்த்தோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 7 : 12 (RCTA)
நாம் முன்னாளில் சீலோவில் குடியிருந்த இடத்துக்குப் போய், நம் மக்களாகிய இஸ்ராயேல் செய்த தீமைக்காக நாம் அதற்குச் செய்தவற்றைக் கவனியுங்கள்.
எரேமியா 7 : 13 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: 'நீங்கள் இச் செயல்களையெல்லாம் செய்ததாலும், முதலிலிருந்தே நாம் உங்களுக்கு வற்புறுத்திச் சொல்லியும் நீங்கள் நமக்குச் செவி சாய்க்காததாலும், நாம் உங்களை அழைத்தும் நீங்கள் பதில் தராததாலும்,
எரேமியா 7 : 14 (RCTA)
நம் திருப்பெயரால் குறிக்கப்படுவதும் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கிறதுமான இந்தக் கோயிலுக்கும், உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் நாம் கொடுத்த இந்த நாட்டிற்கும் சீலோவுக்குச் செய்தது போலவே நாம் செய்யப் போகிறோம்.
எரேமியா 7 : 15 (RCTA)
உன் இனத்தார் அனைவரையும், எப்பிராயீம் மக்கள் எல்லாரையும் முற்றிலும் தள்ளி விட்டது போல், உங்களையும் நாம் நம் முன்னிலையிலிருந்து தள்ளிப் போடுவோம்.
எரேமியா 7 : 16 (RCTA)
"(எரெமியாசே), நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். இவர்களுக்காக அழுகையோ வேண்டுதலோ செய்ய வேண்டாம்; பரிந்து பேசவும் வேண்டாம்; ஏனெனில் உன் மன்றாட்டை நாம் கேட்க மாட்டோம்.
எரேமியா 7 : 17 (RCTA)
யூதாவின் பட்டணங்களிலும், யெருசலேமின் தெருக்களிலும் இவர்கள் செய்வதை நீ பார்க்கவில்லையா?
எரேமியா 7 : 18 (RCTA)
பிள்ளைகள் விறகுக் கட்டைகளைச் சேர்க்கின்றார்கள்; பெண்கள் மாவில் எண்ணெய் விட்டுப் பிசைந்து அப்பம் சுட்டு விண்ணரசிக்கும் வேற்றுத் தெய்வங்களுக்கும் படைக்கிறார்கள்; பானப்பலிகளையும் இடுகிறார்கள்.
எரேமியா 7 : 19 (RCTA)
நமக்கோ சினத்தை மூட்டுகிறார்கள். எனக்கு மட்டுமா கோபத்தை மூட்டுகிறார்கள்? தங்களுக்கே அல்லவா வெட்கத்தை வருவித்துக் கொள்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 7 : 20 (RCTA)
ஆகையால் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, நம் சினமும் ஆத்திரமும் இந்த இடத்தின் மேலும், மக்கள் மேலும் மிருகங்கள் மேலும் நாட்டின் மரங்கள் மேலும் பூமியின் பலன்கள் மேலும் காட்டப்படும். அவற்றை அழித்தே தீரும்; அவிக்க முடியாது."
எரேமியா 7 : 21 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்கள் தகனப்பலிகளை மற்றப் பலிகளோடு சேர்த்து அவற்றின் இறைச்சியை நீங்களே புசியுங்கள்.
எரேமியா 7 : 22 (RCTA)
உங்கள் முன்னோரை எகிப்து நாட்டிலிருந்து விடுவித்த போது நமக்குத் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்த வேண்டுமென்று அவர்களுக்கு நாம் சொல்லவுமில்லை, கற்பிக்கவுமில்லை.
எரேமியா 7 : 23 (RCTA)
ஆனால் நாம் அவர்களுக்குக் கொடுத்த கட்டளை இதுவே: 'நம் வாக்குக்குச் செவிசாயுங்கள்; அப்போது நாம் உங்களுக்குக் கடவுளாய் இருப்போம்; நீங்கள் நமக்கு மக்களாய் இருப்பீர்கள்; நீங்கள் நலமாய் இருக்கும்படி உங்களுக்கு நாம் கட்டளையிடும் நெறியில் ஒழுகுங்கள்.'
எரேமியா 7 : 24 (RCTA)
ஆனால் அவர்கள் கீழ்ப்படியவுமில்லை, செவிசாய்க்கவுமில்லை; அதற்கு மாறாகத் தங்கள் சொந்தச் சிந்தனைகளின்படியும் தீய உள்ளத்தின் பிடிவாதப் போக்கிலும் நடந்தார்கள்; முன்னேறிச் செல்லாமல் பின்னிட்டுப் போனார்கள்.
எரேமியா 7 : 25 (RCTA)
உங்கள் தந்தையர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய நாளிலிருந்து இன்று வரை நம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை நாளுக்கு நாள் அவர்களிடம் இடைவிடாமல் அனுப்பிக் கொண்டிருந்தோம்.
எரேமியா 7 : 26 (RCTA)
ஆயினும் நமக்கு அவர்கள் செவி சாய்க்கவில்லை; நாம் சொன்னதையும் கேட்கவில்லை; அதற்கு மாறாக வளையாத கழுத்தினராய், தங்கள் தந்தையர்களிலும் கெட்டவர்களாய் நடந்தார்கள்.
எரேமியா 7 : 27 (RCTA)
நீ போய் இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்வாய்: ஆயினும் அவர்கள் உன் சொற்களைக் கேட்க மாட்டார்கள்; நீ அவர்களைக் கூப்பிடுவாய்; அவர்கள் உனக்குப் பதில் கொடுக்க மாட்டார்கள்.
எரேமியா 7 : 28 (RCTA)
நீ அவர்களைப் பார்த்து, ' தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் சொல்லைக் கேட்காமலும், அவரால் திருத்தப்பட விரும்பாமலும் இருந்து வரும் மக்களினம் இதுவே; உண்மை அழிந்து போயிற்று; அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போயிற்று என்று சொல்.
எரேமியா 7 : 29 (RCTA)
"உன் தலைமயிரை மழித்து எறிந்து விடு: மொட்டைக் குன்றுகளில் நின்று புலம்பியழு; ஏனெனில் தம் சினத்துக்காளான தலைமுறையை ஆண்டவர் புறக்கணித்துத் தள்ளிவிட்டார்.'
எரேமியா 7 : 30 (RCTA)
யூதாவின் மக்கள் நம் கண்முன் தீங்கு புரிந்தார்கள், என்கிறார் ஆண்டவர். நம் பெயரால் குறிக்கப்படும் இந்த வீட்டைத் தீட்டுப்படுத்த அவர்கள் அருவருப்பானவற்றை இதிலே நிலைநாட்டினார்கள்.
எரேமியா 7 : 31 (RCTA)
என்னோன் மகனின் பள்ளத்தாக்கில் இருக்கும் தொப்பேத்து குன்றுகளில் தங்கள் புதல்வர், புதல்வியரை நெருப்பினால் சுட்டெரிக்கும்படி பீடங்களைக் கட்டினார்கள். இவற்றை நாம் கற்பிக்கவுமில்லை, நினைக்கவுமில்லை.
எரேமியா 7 : 32 (RCTA)
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாட்கள் வருகின்றன. அப்போது இந்தப் பள்ளத்தாக்கு தொப்பேத்து என்றோ, என்னோன் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும். ஏனெனில் பிணங்களைப் புதைக்க இடமில்லாது தொப்பேத்திலேயே புதைப்பார்கள்.
எரேமியா 7 : 33 (RCTA)
இம்மக்களின் உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். அவற்றை விரட்ட யாருமிருக்கமாட்டார்.
எரேமியா 7 : 34 (RCTA)
அந்நாளிலே யூதாவின் பட்டணங்களிலும் யெருசலேமின் தெருக்களிலும் மகிழ்ச்சியின் முழக்கத்தையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளனின் குரலையும், மணவாட்டியின் குரலையும் ஓயப் பண்ணுவோம்; ஏனெனில் நாடெல்லாம் காடாகும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34