எரேமியா 52 : 1 (RCTA)
செதேசியாஸ் ஆளத் தொடங்கிய போது அவனுக்கு வயது இருபத்தொன்று; அவன் யெருசலேமில் பதினோராண்டுகள் ஆட்சி செய்தான்; அவன் தாயின் பெயர் அமிதாள்; இவள் இலப்னா ஊரானாகிய எரெமியாசின் மகள்.
எரேமியா 52 : 2 (RCTA)
யோவாக்கீம் செய்தவாறெல்லாம் அவனும் ஆண்டவர் முன்னிலையில் தீமை செய்தான்;
எரேமியா 52 : 3 (RCTA)
ஆண்டவர் அவர்களைத் தம் முன்னிலையிலிருந்து தள்ளி விடும் அளவுக்கு யெருசலேமின் மேலும் யூதாவின் மேலும் அவருக்குக் கோபம் மூண்டது; செதேசியாஸ் மன்னனோ பபிலோனிய அரசனுக்கு எதிராகக் கலகம் செய்தான்.
எரேமியா 52 : 4 (RCTA)
நபுக்கோதனசாருடைய ஆளுகையின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் தன் எல்லாப் படைகளோடும் யெருசலேமுக்கு எதிராய் வந்து அதனை முற்றுகையிட்டான்; அதற்கு விரோதமாய் அதனைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
எரேமியா 52 : 5 (RCTA)
செதேசியாசின் பதினோராமாண்டு வரையில் பட்டணம் முற்றுகையிடப்பட்டிருந்தது.
எரேமியா 52 : 6 (RCTA)
நான்காம் மாதத்தின் ஒன்பதாம் நாள் பட்டணத்தில் கடும் பஞ்சம் உண்டாயிற்று; நகர மக்களுக்கு உணவு இல்லாமற்போயிற்று.
எரேமியா 52 : 7 (RCTA)
பட்டணத்தின் கோட்டைச் சுவர் ஒருபுறத்தில் இடிக்கப்பட்டது; போர்வீரர்கள் அனைவரும் அரசனுடைய தோட்டத்திற்குப் போகும் வழியாய் இரண்டு சுவர்களுக்கும் இடையில் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு, இரவோடு இரவாய்ப் பட்டணத்தை விட்டு வெளியேறிப் பாலை நிலத்தை நோக்கி. ஓடினார்கள்; அப்பொழுது கல்தேயர் நகரைச் சுற்றி முற்றுகை யிட்டிருந்தனர்.
எரேமியா 52 : 8 (RCTA)
ஆனால் அதைக் கண்ட கல்தேயருடைய படை அரசனை விரட்டிக் கொண்டு ஓடிற்று; யெரிக்கோ சமவெளியில் செதேசியாசைப் பிடித்தார்கள்; அவனுடைய படைகளெல்லாம் அவனை விட்டு ஓடிப்போயின;
எரேமியா 52 : 9 (RCTA)
அவர்கள் அரசனைப் பிடித்து, ஏமாத்து நாட்டின் இரபிளாத்தா என்னும் ஊரில் பாளைய மிறங்கியிருந்த பபிலோனிய மன்னனிடம் அழைத்து வந்தார்கள்; அரசன் அவனுக்கு விரோதமாய்த் தீர்ப்புச் சொன்னான்.
எரேமியா 52 : 10 (RCTA)
பபிலோனிய அரசன் செதேசியாவின் புதல்வர்களை அவன் கண் முன்னாலேயே கொலை செய்தான்; இன்றும் யூதாவின் தலைவர்கள் அனைவரையும் இரபிளாத்தாவில் கொல்லுவித்தான்;
எரேமியா 52 : 11 (RCTA)
பபிலோனிய அரசன் செதேசியாசின் கண்களைப் பிடுங்கி, அவனை விலங்கிட்டு, அவனைப் பபிலோனுக்குக் கொண்டு போய் அங்கே அவன் சாகும் வரையில் சிறைக் கூடத்தில் அடைத்து வைத்தான்.
எரேமியா 52 : 12 (RCTA)
பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரின் பத்தொன்பதாம் ஆண்டின் ஐந்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனான நபுக்கோதனசாரின் படைத்தலைவன் நபுஜார்தான் யெருசலேமுக்குள் நுழைந்தான்;
எரேமியா 52 : 13 (RCTA)
நுழைந்து ஆண்டவரின் கோயிலையும் அரசனது அரண்மனைனையும் யெருசலேமின் வீடுகள் அனைத்தையும் கொளுத்தி விட்டான்; பெரிய வீடுகளையெல்லாம் தீக்கிரையாக்கினான்.
எரேமியா 52 : 14 (RCTA)
படைத்தலைவனோடிருந்த கல்தேய வீரர்கள் அனைவரும் யெருசலேமைச் சுற்றிலுமிருந்த மதில்களை முற்றிலும் தகர்த்து விட்டனர்.
எரேமியா 52 : 15 (RCTA)
சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் மக்களுள் ஏழைகளாயிருந்த சிலரையும், பட்டணத்தில் இருந்த மற்றப் பொது மக்களையும், தப்பியோடிப் பபிலோனிய மன்னனிடம் சரணடைந்தவர்களையும், மீதியாயிருந்த தொழிலாளிகளையும் பபிலோனுக்குக் கொண்டு போனான்.
எரேமியா 52 : 16 (RCTA)
சேனைத் தலைவனாகிய நபுஜார்தான் நாட்டின் ஏழைகளுள் சிலரையும், திராட்சைப் பயிரிடுவோரையும் விவசாயிகளையும் யூதாவிலேயே விட்டுச் சென்றான்.
எரேமியா 52 : 17 (RCTA)
ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலத் தூண்களையும், ஆதாரங்களையும், ஆண்டவரின் கோயிலில் இருந்த வெண்கலக் கடல் தொட்டியையும் உடைத்து, அவற்றின் வெண்கலத்தையெல்லாம் பபிலோனுக்குக் கொண்டு போய்விட்டான்.
எரேமியா 52 : 18 (RCTA)
சட்டிகளையும் கரண்டிகளையும் திரிவெட்டிகளையும், குப்பிகளையும் உரல்களையும், திருப்பணிக்குப் பயன்பட்ட எல்லாப் பித்தளைப் பாத்திரங்களையும் கொண்டு போனார்கள்.
எரேமியா 52 : 19 (RCTA)
சேனைத்தலைவன் குடங்களையும் தூபக்கலசங்களையும் தட்டுக்களையும் சாடிகளையும் விளக்குத் தண்டுகளையும், குந்தாணிகளையும் தாம்பாளங்களையும், தங்கப் பாத்திரங்கள் எல்லாவற்றையும், வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கொண்டுபோனான்.
எரேமியா 52 : 20 (RCTA)
சாலமோன் அரசன் ஆண்டவருடைய கோயிலுக்கென்று செய்திருந்த தூண்கள் இரண்டு, கடல் தொட்டி ஒன்று, ஆதாரங்களின் கீழ் நிற்க வைத்திருந்த வெண்கல எருதுகள் பன்னிரண்டு ஆகியவற்றையும் கொண்டு போனான். இவற்றின் வெண்கலத்துக்கு நிறை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாது.
எரேமியா 52 : 21 (RCTA)
தூண்களில் ஒவ்வொன்றும் பதினெட்டு முழம் உயரமுள்ளது; பன்னிரண்டு முழமுள்ள நூல் அதனைச் சுற்றிக் கொண்டிருந்தது; அதன் கனம் நான்கு விரற்கடை; உள்ளே குழாயாய் இருந்தது.
எரேமியா 52 : 22 (RCTA)
இரண்டு தூண்களின் உச்சியிலும் ஐந்து முழ உயரமான வெண்கலக் கும்பம் இருந்தது; அதனுச்சியைச் சுற்றிலும் வலை போலப் பின்னலும் மாதுளம் பழச் சித்திரங்களும் செதுக்கப் பட்டிருந்தன; எல்லாம் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இரண்டாவது தூணிலும் அவ்வாறே மாதுளம்பழம் முதலியவை செதுக்கப்பட்டிருந்தன.
எரேமியா 52 : 23 (RCTA)
தொண்ணுற்றாறு மாதுளங்கனிகள் தொங்கின; பின்னலைப் போலச் செதுக்கியிருந்ததைச் சுற்றி மொத்தம் நூறு மாதுளங்கனிகள் இருந்தன.
எரேமியா 52 : 24 (RCTA)
சேனைத்தலைவன், முதல் அர்ச்சகராகிய சராயியாசையும், இரண்டாம் அர்ச்சகராகிய சொப்போனியாசையும், தலைவாயில் காவலர் மூவரையும் பிடித்துக் கொண்டான்.
எரேமியா 52 : 25 (RCTA)
பட்டணத்தில் போர்வீரருக்குத் தலைவனான ஓர் அண்ணகனையும், பட்டணத்திலிருந்து அரசன் முன்னிலையில் தொண்டு புரியும் ஏழு பேரையும், புதியவர்களைச் சேனையில் சேர்த்துப் பயிற்சி தரும் சேனைத்தலைவனின் செயலாளனையும், நாட்டின் மக்களுள் பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபது பேர்களையும் பிடித்துக் கொண்டான்.
எரேமியா 52 : 26 (RCTA)
படைத்தலைவனாகிய நபுஜார்தான் அவர்களைப் பிடித்து, அரபிளாத்தாவிலிருந்த பபிலோனிய அரசனிடம் கூட்டிச் சென்றான்.
எரேமியா 52 : 27 (RCTA)
பபிலோனிய அரசன் ஏமாத்து நாட்டில் இரபிளாத்தா என்னும் ஊரில் அவர்களை வதைத்துக் கொல்லுவித்தான்.
எரேமியா 52 : 28 (RCTA)
நபுக்கோதனசார் தன் ஏழாம் ஆண்டில் சிறைபிடித்துச் சென்ற மக்கட் தொகை மூவாயிரத்து இருபத்து மூன்று;
எரேமியா 52 : 29 (RCTA)
நபுக்கோதனசார் தன் பதினெட்டாம் ஆண்டில் யெருசலேமிலிருந்து கொண்டு போன மக்களின் எண்ணிக்கை எண்ணுற்று முப்பத்திரண்டு.
எரேமியா 52 : 30 (RCTA)
நபுக்கோதனசாரின் இருபத்து மூன்றாம் ஆண்டில் சேனைத்தலைவன் நபுஜார்தான் கூட்டிப்போன மக்களின் எண்ணிக்கை எழுநூற்று நாற்பத்தைந்து; ஆக மொத்தம் நாலாயிரத்து அறுநூறு பேர் கொண்டு போகப்பட்டார்கள்.
எரேமியா 52 : 31 (RCTA)
யூதாவின் அரசனாகிய யோவாக்கீம் பிடிப்பட்டுக் கொண்டுபோகப்பட்ட முப்பத்தேழாம் ஆண்டில், பபிலோனிய அரசனான எவில்- மேரோதாக்கு தன் ஆளுகையின் முதல் ஆண்டிலேயே பன்னிரண்டாம் மாதத்தின் இருபத்தைந்தாம் நாள் யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை கண்ணியப்படுத்திச் சிறைக் கூடத்தினின்று விடுவித்தான்.
எரேமியா 52 : 32 (RCTA)
அவனோடு மிகுந்த அன்புடன் அளவளாவினான்; மேலும் பபிலோனில் தனக்குக் கீழ்ப்பட்ட அரசர்களின் அரியணைக்கு மேல் அவனுடைய அரியணையை உயர்த்தித் தனக்கடுத்த இடத்தைத் தந்தான்.
எரேமியா 52 : 33 (RCTA)
அவனுடைய சிறைக்கூடத்து ஆடைகளை மாற்றுவித்து, அவன் தன் வாழ்நாளெல்லாம் எப்போதும் தன்னோடு உண்ணும்படி செய்தான்.
எரேமியா 52 : 34 (RCTA)
அவனுடைய அன்றாடச் செலவுக்கு வேண்டியது, பபிலோனிய அரசனின் கட்டளைப்படி நாடோறும், அவனுடைய வாழ்நாள் முழுவதும், சாகுமட்டும் அவனுக்குக் கொடுக்கப்பட்டு வந்தது.
❮
❯