எரேமியா 5 : 1 (RCTA)
யெருசலேமின் தெருக்களில் இங்குமங்கும் ஓடிச் சுற்றித் தேடி உற்றுப் பாருங்கள்; அதன் பொதுவிடங்களில் தேடி, நீதியைக் கடைப்பிடித்து உண்மையைத் தேடுபவன் எவனாவது உண்டோ என்று பாருங்கள்: அவனை முன்னிட்டுப் பட்டணத்துக்கு மன்னிப்பு அளிப்போம்.
எரேமியா 5 : 2 (RCTA)
உயிருள்ள ஆண்டவர்மேல் ஆணை!" என்று சொல்லி, அவர்கள் ஆணையிடலாம்; ஆனால் அது பொய்யாணை.
எரேமியா 5 : 3 (RCTA)
ஆண்டவரே, உம் கண்கள் நேர்மையையன்றோ தேடுகின்றன? நீர் அவர்களைத் தண்டித்தீர்; ஆயினும் அவர்கள் மனம் வருந்தவில்லை; நீர் அவர்களை நசுக்கினீர்; அவர்களோ திருத்தத்தை ஏற்க மறுத்து விட்டனர்; தங்கள் முகத்தைக் கல்லினும் கடியதாக்கிக் கொண்டனர்; மனம் வருந்த மறுத்து விட்டார்கள்.
எரேமியா 5 : 4 (RCTA)
அப்போது நான் சொன்னேன்: "இவர்கள் எளியவர்கள், அறிவில்லாதவர்கள்; இவர்கள் ஆண்டவரின் வழிகளை அறியாதவர்கள்; தங்கள் கடவுளின் சட்டத்தைக் கற்காதவர்கள்;
எரேமியா 5 : 5 (RCTA)
ஆதலால் நான் பெரியோர்களிடம் போய்ப் பேசுவேன்; ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வழியை அறிந்தவர்கள்; தங்கள் கடவுளின் சட்டத்தைக் கற்றவர்கள்." ஆயினும் அவர்கள் கூட நுகத்தை முறித்தார்கள்; கட்டுகளை அறுத்தெறிந்தார்கள்.
எரேமியா 5 : 6 (RCTA)
ஆதலால், காட்டுச் சிங்கம் அவர்களைக் கொன்றுவிடும்; பாலை நிலத்து ஓனாய் அவர்களை நாசமாக்கும்; வேங்கை அவர்கள் பட்டணங்கள் மீது கண்ணோக்குகிறது; அங்கிருந்து வெளியேறும் எவனையும் அது கிழித்தெறியும். ஏனெனில் அவர்களின் துரோகங்கள் மிகப் பல; அவர்கள் பல முறை ஆண்டவரை விட்டகன்றனர்.
எரேமியா 5 : 7 (RCTA)
நாம் உங்களை மன்னிப்பது எப்படி? உங்கள் மக்கள் நம்மைக் கைவிட்டார்கள்; கடவுளல்லாதவர்கள் பேரால் ஆணையிட்டார்கள்; நாம் அவர்களை வயிராற உண்பித்தோம்; அவர்கள் விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீடுகளுக்குக் கூட்டங் கூட்டமாய்ப் போனார்கள்.
எரேமியா 5 : 8 (RCTA)
குறையின்றித் தீனி தின்னும் அடங்காக் குதிரைகள் போல் ஒவ்வொருவனும் தன் இனத்தான் மனைவியின் பின்னே கனைக்கிறான்.
எரேமியா 5 : 9 (RCTA)
இந்த அக்கிரமங்களுக்காக அவர்களைத் தண்டிக்க மாட்டோமா? இத்தகைய மக்கள் மேல் பழிதீர்த்துக் கொள்ளாமல் விடுவோமா? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 5 : 10 (RCTA)
சுவர்கள் மேல் ஏறுங்கள்; அவற்றையெல்லாம் அழியுங்கள்; ஆனால் முற்றிலும் அழித்து விடாதீர்கள்; அவளுடைய கிளைகள் ஆண்டவருடையவை அல்ல; ஆதலால் அவற்றைப் பிய்த்தெறியுங்கள்.
எரேமியா 5 : 11 (RCTA)
ஏனெனில் இஸ்ராயேல் வீடும் யூதா வீடும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிரமாணிக்கமாய் இல்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 5 : 12 (RCTA)
அவர்கள் தங்கள் ஆண்டவரை மறுதலித்தனர்; 'அவர் ஒன்றுமில்லை, நமக்கு யாதோர் இடையூறும் வராது, வாளையும் பஞ்சத்தையும் நாம் பார்க்கப் போகிறதில்லை;
எரேமியா 5 : 13 (RCTA)
இறைவாக்கினர்கள் பேசுவது வீண், இறைவனின் வாக்கு இவர்களுக்குத் தரப்படவில்லை, இவர்கள் சொல்வது இவர்களுக்கே நேரிடட்டும்!" என்று சொன்னார்கள்.
எரேமியா 5 : 14 (RCTA)
ஆகையால், சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் அவ்வாறு பேசினமையால், இதோ அக்கினி மயமான நம் வார்த்தைகளை உன் வாயில் ஊட்டுவோம்; அவை கட்டைகளாகிய இம்மக்களைச் சுட்டெரிக்கும்;
எரேமியா 5 : 15 (RCTA)
இஸ்ராயேல் வீடே, உனக்கு விரோதமாகத் தொலைவிலிருந்து ஓர் இனத்தை அழைத்து வருவோம்; அது வல்லமை பொருந்திய இனம்; நெடுங்காலத்திலிருந்து நிலைத்திருக்கும் இனம்; அதன் மொழி உனக்குத் தெரியாது. அவர்கள் பேசுவதும் உனக்குப் புரியாது, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 5 : 16 (RCTA)
அதன் அம்பறாத் தூணியோ கல்லறை போன்றது; அவர்கள் அனைவரும் போர்த் திறமை வாய்ந்தவர்கள்;
எரேமியா 5 : 17 (RCTA)
அவர்கள் நீ வைத்திருக்கும் தானியங்களையும், சாப்பிட வைத்திருக்கும் அப்பத்தையும் உண்டு தீர்ப்பார்கள்; உன் புதல்வர், புதல்வியரை விழுங்குவார்கள்; ஆட்டுக் கிடைகளையும், மாட்டு மந்தையையும் கொன்றொழிப்பார்கள்; திராட்சைக் கொடியையும், அத்திமரங்களையும் தீர்த்து விடுவார்கள்; நீ நம்பிக்கை வைத்திருந்த அரண் சூழ்ந்த உன் பட்டணங்களையும் வாளால் அழிப்பார்கள்.
எரேமியா 5 : 18 (RCTA)
ஆயினும் அந்நாட்களில் உங்களை முற்றிலும் நாம் அழித்து விட மாட்டோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 5 : 19 (RCTA)
அவர்கள்: 'எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களுக்கு இவற்றையெல்லாம் ஏன் செய்தார்?' என்று கேட்பார்களாகில், நீ அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி சொல்: ' நீங்கள் நம்மைக் கைவிட்டு விட்டு உங்கள் சொந்த நாட்டில் அந்நிய தெய்வங்களை வணங்கியது போல, நாம் உங்களை அந்நிய நாட்டில் அந்நியர்க்கு ஊழியஞ் செய்ய வைப்போம்."
எரேமியா 5 : 20 (RCTA)
யாக்கோபு வீட்டார்க்கு இதைச் சொல்லுங்கள்; யூதா நாட்டில் இதனை அறியப் படுத்துங்கள்:
எரேமியா 5 : 21 (RCTA)
அறிவற்ற மக்களே, உணர்வற்றவர்களே, கேளுங்கள்: உங்களுக்குக் கண்ணிருந்தும் நீங்கள் பார்க்கிறதில்லை, காதிருந்தும் நீங்கள் கேட்கிறதில்லை.
எரேமியா 5 : 22 (RCTA)
ஆண்டவர் கேட்கிறார்: நீங்கள் நமக்கு அஞ்சுவதில்லையோ? நம் முன்னிலையில் நீங்கள் நடுங்குவதில்லையா? கடலுக்கு வரம்பாக நாம் மணலை வைத்தோம், அந்த வரம்பை என்றென்றைக்கும் அது கடக்க முடியாது; அலைகள் அடித்தாலும் அதை மேற்கொள்வதில்லை; சீறி எழுந்தாலும் அதை மீறி வருவதில்லை.
எரேமியா 5 : 23 (RCTA)
ஆனால் இம் மக்களோ, கடின உள்ளமும் அடங்காத இதயமும் கொண்டவர்கள்; நம் சொல்லுக்கடங்காமல் நம்மை விட்டகன்றார்கள்.
எரேமியா 5 : 24 (RCTA)
தக்க பருவகாலத்தில் முன் மாரி பின் மாரி மழையை நமக்கு அனுப்பி ஆண்டு தோறும் மிகுந்த விளைவு தரும், நம் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடப்போம்' என்று இம் மக்கள் நினைக்கவே இல்லை.
எரேமியா 5 : 25 (RCTA)
அத்தகைய நல்லெண்ணங்களை விலக்கி, உங்களுக்கு நன்மை வராமல் தடுத்தவை நீங்கள் செய்த பாவ அக்கிரமங்களே.
எரேமியா 5 : 26 (RCTA)
ஏனெனில் குருவி பிடிக்கிற வேடர்கள் கண்ணி வைப்பது போல, சில அக்கிரமிகள் நம் மக்கள் நடுவில் தோன்றி, படுகுழி வெட்டி மனிதரை வீழ்த்துகிறார்கள்.
எரேமியா 5 : 27 (RCTA)
பறவைகளால் நிறைந்த வலை போல் அவர்கள் வீடு சூழ்ச்சிகளால் நிறைந்துள்ளது; இவ்வாறு அவர்கள் பெரியவர்களாகவும் செல்வர்களாகவும் ஆனார்கள்.
எரேமியா 5 : 28 (RCTA)
அவர்கள் கொழுத்துப் பருத்தார்கள்; அவர்கள் செய்த தீய செயல்களுக்குக் கணக்கில்லை: வழக்குகளை நீதியுடன் விசாரிப்பதில்லை, பெற்றோரை இழந்தவர்களுக்கு வாழ வழி செய்வதில்லை, ஏழைகளின் உரிமைகளைக் காப்பதுமில்லை.
எரேமியா 5 : 29 (RCTA)
இவற்றுக்காக அவர்களைத் தண்டியாமல் விடுவோமோ? இத்தகைய மக்களைப் பழிதீர்க்காமல் இருப்போமோ? என்று கேட்கிறார் ஆண்டவர்."
எரேமியா 5 : 30 (RCTA)
திகைத்துத் திடுக்கிடும் நிகழ்ச்சி நாட்டிலே நடக்கிறது:
எரேமியா 5 : 31 (RCTA)
தீர்க்கதரிசிகள் பொய் வாக்குரைக்கின்றனர்; அர்ச்சகர்கள் அவர்கள் சொற்படி ஆளுகிறார்கள்; மக்களும் அதைக் கண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் முடிவு வரும் போது என்ன செய்வீர்கள்?

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31