எரேமியா 49 : 1 (RCTA)
அம்மோன் மக்களைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "இஸ்ராயேலுக்குப் புதல்வர் இல்லையா? அவனுக்கு வாரிசு இல்லையா? இருந்தால், மெல்கோம், காது நாட்டைக் கைப்பற்றுவானேன்? அவன் மக்கள் அதன் நகரங்களில் குடியேறுவானேன்?
எரேமியா 49 : 2 (RCTA)
ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது அம்மோன் மக்களின் இராபாத்துக்கு எதிராகப் போர் முரசு ஒலிக்கச் செய்வோம். அது பாழடைந்து மண்மேடாகும், அதனுடைய ஊர்கள் நெருப்பினால் சுட்டெரிக்கப்படும்; அப்போது இஸ்ராயேலோ தன் நாட்டைக் கைப்பற்றியவர்களைக் கைப்பற்றிக் கொள்ளும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 3 (RCTA)
எசெபோனே, புலம்பியழு, ஏனெனில், ஆயி நகர் அழிவுற்றது, இராபாத்துப் பெண் மக்களே, ஓலமிடுங்கள், சாக்குத் துணிகளை உடுத்திக் கொள்ளுங்கள்; வேலிகளைச் சுற்றித் திரிந்து புலம்புங்கள்; ஏனெனில் மெல்கோமும் அவன் பூசாரிகளும் தலைவர்களும் ஒருமிக்க நாடு கடத்தப்படுவார்கள்.
எரேமியா 49 : 4 (RCTA)
பிரமாணிக்கமற்ற மகளே, உன் செல்வங்களில் நம்பிக்கையை வைத்து, 'எனக்கெதிராய் வருபவன் யார்?' என்று சொல்லிக் கொண்டு, உன் பள்ளத்தாக்குகளைப் பற்றித் தருக்கிக் கொள்வானேன்? உன் பள்ளத்தாக்கு பாழாயிற்றே.
எரேமியா 49 : 5 (RCTA)
சேனைகளின் ஆண்டவராகிய இறைவன் கூறுகிறார்: இதோ, உன்னைச் சுற்றியிருக்கும் அனைவரிடமிருந்தும் உனக்குத் திகில் உண்டாகச் செய்வோம். நீங்கள் ஒருவரையொருவர் காணாதபடி சிதறிப் போவீர்கள், பயந்தோடும் உங்களை ஒன்று சேர்ப்பவன் ஒருவனுமிரான்.
எரேமியா 49 : 6 (RCTA)
ஆனால் பிற்பாடு அம்மோன் மக்களை மீண்டும் நன்னிலைக்கு வரச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 49 : 7 (RCTA)
இதுமேயாவைப் பற்றிச் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "தேமானிலே இனி ஞானமில்லையோ? அதன் மக்களிடத்தில் யோசனை ஒழிந்து போனதோ! அவர்களுடைய ஞானம் அழிந்து விட்டதோ?
எரேமியா 49 : 8 (RCTA)
கேதான் குடிமக்களே, ஓடுங்கள், திரும்புங்கள், குழிகளில் இறங்கிக் கொள்ளுங்கள்; ஏனெனில் ஏசாவின் அழிவை அவன் மேல் கொண்டு வருவோம்; இது அவனது தண்டனைக் காலத்தில் நிறைவேறும்.
எரேமியா 49 : 9 (RCTA)
திராட்சைப் பழம் பறிப்பவர்கள் உன் தோட்டத்திற்கு வந்தால், திராட்சைப் பழங்களில் கொஞ்சமாவது விடமாட்டார்களா? இரவில் திருடர்கள் வருவார்களாயின், போதிய அளவுக்கு மேல் திருடமாட்டார்கள் அன்றோ?
எரேமியா 49 : 10 (RCTA)
நாமோ ஏசாவை வெளியே கொண்டு வருவோம், அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவோம், மறைந்திருக்க அவனால் இனி முடியாது; அவன் சந்ததியும் சகோதரரும் அயலாரும் அறிவார்கள்; அவனும் இல்லாமற் போவான்.
எரேமியா 49 : 11 (RCTA)
திக்கற்ற உன் பிள்ளைகளை நம்மிடம் விட்டு விடு, நாம் அவர்களை வாழ வைப்போம்; உன் கைம்பெண்கள் நம்மில் நம்பிக்கை வைப்பார்கள்."
எரேமியா 49 : 12 (RCTA)
ஏனெனில் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, இந்தத் தண்டனைப் பாத்திரத்தில் குடிக்கத் தக்க குற்றம் செய்யாதவர்களும் அதனைக் குடித்திருக்க, நீ மட்டும் தண்டனைக்குத் தப்புவாயோ? நீ தண்டனைக்குத் தப்ப முடியாது; நீயும் குடித்தே தீருவாய்.
எரேமியா 49 : 13 (RCTA)
ஏனெனில், ஆண்டவர் கூறுகிறார்: நமது பேரில் ஆணை! போஸ்ரா காடாகி, பாலைநிலமாகி மான பங்கத்திற்கும் சாபணைக்கும் இலக்காகும்; அதனைக் கண்டு யாவரும் திகிலடைவர்; அதன் பட்டணங்கள் யாவும் என்றென்றைக்கும் பாலையாய்க் கிடக்கும்."
எரேமியா 49 : 14 (RCTA)
ஆண்டவரிடமிருந்து எனக்கொரு செய்தி வந்தது, புறவினத்தார் நடுவில் ஒரு தூதுவன் அனுப்பப்பட்டான்: "ஒருமிக்கச் சேருங்கள், அதற்கெதிராய் வாருங்கள், போருக்குப் புறப்படுங்கள்!" என்று சொன்னான்.
எரேமியா 49 : 15 (RCTA)
இதோ, உன்னை மக்களினங்களுள் சிறியவனாகச் செய்வோம், மனிதருக்குள் உன்னை நிந்தைக்கு உரியவனாக்குவோம்;
எரேமியா 49 : 16 (RCTA)
பாறையின் வெடிப்புகளில் வாழ்கிறவனே, குன்றின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே, நீ விளைத்த அச்சமும், உன் உள்ளத்தின் இறுமாப்பும் உன்னை மயக்கி விட்டன; கழுகைப் போல் உன் கூட்டை உயரத்தில் நீ கட்டினாலும், உன்னை அங்கிருந்து இழுத்துப் போடுவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 17 (RCTA)
இதுமேயா பாழாகும்; அதன் வழியாய்ப் போகிறவன் எவனும் திகைப்புறுவான்; அதற்குற்ற அழிவுகளைப் பற்றி நகைப்பான்.
எரேமியா 49 : 18 (RCTA)
சோதோம், கொமோரா, அதன் சுற்றுப்புற நகரங்கள் யாவும் அழிக்கப்பட்ட போது நிகழ்ந்தது போல், இதிலும் மனிதன் எவனும் குடியிருக்கமாட்டான்; அதில் குடியேறவும் மாட்டான், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 19 (RCTA)
இதோ யோர்தான் ஆற்றையடுத்துள்ள அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வரும் சிங்கம் துரத்துவது போல் அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்; நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம்; நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடத் தக்கவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பன் எவன்?
எரேமியா 49 : 20 (RCTA)
ஆதலால் ஏதோமுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும், தேமான் குடிமக்களுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியனவும் இழுத்துப் போகப்படும்; அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்.
எரேமியா 49 : 21 (RCTA)
அவர்களுடைய வீழ்ச்சியின் ஒலியால் நிலம் நடுங்கும்; அவர்களின் கூக்குரல் செங்கடல் வரை கேட்கும்.
எரேமியா 49 : 22 (RCTA)
இதோ, கழுகைப் போல் ஒருவன் எழுந்து பறந்து வருவான், தன் இறக்கைகளைப் போஸ்ராவின் மேல் விரிப்பான்; அந்நாளில் இதுமேயாவின் வீரர்களுடைய மனம், பிரசவ வேதனையுறும் பெண்ணின் மனத்தைப் போலிருக்கும்."
எரேமியா 49 : 23 (RCTA)
தமஸ்குவைப் பற்றிய இறைவாக்கு: "ஏமாத்தும் ஆற்பாதும் கலங்குகின்றன; ஏனெனில் அவர்கள் தீய செய்தியைக் கேள்விப்பட்டனர்! அவர்களுடைய இதயம் கவலையால் நொறுங்குகிறது, அதற்கு அமைதி கிடையாது.
எரேமியா 49 : 24 (RCTA)
தமஸ்கு வலிமையிழந்து ஓட்டம் பிடிக்கிறது, அதனைக் கிலி பிடித்துக் கொண்டது; இடையூறும் துன்பங்களும் அதனைச் சுற்றிப் பிரசவப் பெண்ணை வளைப்பது போல வளைத்துக் கொண்டன;
எரேமியா 49 : 25 (RCTA)
புகழ் வாய்ந்த நகரம், மகிழ்ச்சி பொங்கும் பட்டணம், எப்படித்தான் கைவிடப்பட்டதோ!
எரேமியா 49 : 26 (RCTA)
ஆகையால் அதன் இளைஞர்கள் தெருக்களில் மாய்வார்கள், போர்வீரர் அனைவரும் அந்நாளில் செய்வதறியாது திகைப்பார்கள், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.
எரேமியா 49 : 27 (RCTA)
தமஸ்குவின் மதில்களில் நெருப்பை மூட்டுவோம், அது பெனாதாதின் அரண்களைச் சுட்டெரிக்கும்."
எரேமியா 49 : 28 (RCTA)
பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் அழித்த கேதார், ஆஜோர் அரசுகளைப் பற்றிய இறைவாக்கு: ஆண்டவர் கூறுகிறார்: "போருக்கு எழுங்கள், கேதாருக்கு எதிராய் முன்னேறுங்கள், கீழ்த்திசை மக்களை அழியுங்கள்;
எரேமியா 49 : 29 (RCTA)
அவர்களின் கூடாரங்களும் மந்தைகளும் பிடிக்கப்படும், குடில்களும் பொருட்களும் கைப்பற்றப்படும், அவர்களுடைய ஒட்டகங்கள் பறிக்கப்படும், 'எப்பக்கமும் பேரச்சம்' என்று மனிதர் அலறுவார்கள்.
எரேமியா 49 : 30 (RCTA)
ஆஜோரின் குடிகளே, ஓடிப் போங்கள்; தொலைவாக ஓடிக் குழிகளில் ஒளிந்து கொள்ளுங்கள்; ஏனெனில் பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் உங்களுக்கு விரோதமாகத் திட்டம் தீட்டியுள்ளான், உங்களுக்கு எதிராக யோசனை செய்திருக்கிறான், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 31 (RCTA)
போருக்கு எழுங்கள், அமரிக்கையாய் அச்சமின்றி வாழும் மக்களுக்கு எதிராக முன்னேறுங்கள்; அவர்கள் ஊருக்கு வாயில்களும் தாழ்ப்பாள்களும் இல்லை; அவர்கள் தனித்து வாழ்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 32 (RCTA)
அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையடிக்கப்படும், அவர்களுடைய கணக்கற்ற மந்தைகள் பறிமுதலாகும்; வட்டமாய் மயிர் வெட்டியிருக்கும் அம்மக்களைக் காற்றில் பறக்கடிப்போம், எப்பக்கமுமிருந்து அவர்கள் மேல் தீமையை வரச்செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 33 (RCTA)
ஆஜோர் குள்ளநரிகளின் உறைவிடமாகும், என்றென்றைக்கும் பாழடைந்து கிடக்கும்; மனிதர் யாரும் குடியிருக்க மாட்டார்கள், எவனும் அங்கே தங்கியிருக்க மாட்டான்."
எரேமியா 49 : 34 (RCTA)
யூதாவின் அரசனாகிய செதேசியாஸ் ஆளுகையின் தொடக்கத்தில், ஏலாமுக்கு எதிராக ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு:
எரேமியா 49 : 35 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, நாம் ஏலாமின் வில்லை முறிப்போம், அவர்கள் வலிமையின் மையத்தை அழிப்போம்;
எரேமியா 49 : 36 (RCTA)
ஏலாமின் மேல் வானத்தின் நான்கு மூலைகளிலிருந்தும் நான்கு வகைக் காற்றைக் கொண்டு வருவோம்; அவர்களை எல்லா வகைக் காற்றிலும் தூற்றுவோம், ஏலாமினின்று ஓடியவர்கள் செல்லாத நாடே இராது.
எரேமியா 49 : 37 (RCTA)
பகைவர் முன்னிலையிலும், உயிரைப் பறிக்கத் தேடுவார் முன்னும், ஏலாபித்தாரை நடுங்கச் செய்வோம்: அவர்கள் மேல் தீமையைக் கொண்டு வருவோம், நம் ஆத்திரத்தைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர். அவர்கள் முற்றிலும் சிதைகிற வரையில் அவர்களை வாளுக்கிரையாகக் கொடுப்போம்.
எரேமியா 49 : 38 (RCTA)
ஏலாமில் நம் அரியணையை அமைப்போம், அவர்களின் அரசனையும் தலைவர்களையும் அழிப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 49 : 39 (RCTA)
ஆயினும் கடைசி நாட்களில் ஏலாமின் துன்ப நிலையை மாற்றுவோம், என்கிறார் ஆண்டவர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39