எரேமியா 47 : 1 (RCTA)
பாரவோன் காஜா நகரத்தைப் பிடிப்பதற்கு முன்னர், பிலிஸ்தியரைக் குறித்து ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு.
எரேமியா 47 : 2 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: இதோ, வடதிசையினின்று பெருவெள்ளம் புறப்படுகிறது, கரை புரண்டோடும் காட்டாறு போல வருகிறது; நாட்டையும் நாட்டிலுள்ள யாவற்றையும் மூழ்கடிக்கும், நகரத்தையும் குடிகளையும் வளைத்துக் கொள்ளும்; மனிதர்கள் கூக்குரலிடுவார்கள், நாட்டின் குடிகளனைவரும் அலறியழுவார்கள்;
எரேமியா 47 : 3 (RCTA)
அவர்களுடைய போர்க் குதிரைகளின் குளம்பொலியையும், தேர்ப்படையின் கடகடப்பையும், உருளைகளின் இரைச்சலையும் கேட்டு அஞ்சுவார்கள்; தந்தையர் தங்கள் கைகள் சோர்ந்தமையால், தங்கள் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;
எரேமியா 47 : 4 (RCTA)
ஏனெனில் அது பிலிஸ்தியர் அனைவரும் அழியும் நாள், தீரும் சீதோனும் அதன் துணைவர்களும் அழியும் நாள்; ஏனெனில் ஆண்டவர் பிலிஸ்தியரை அழிக்கிறார், காத்தோர் தீவில் எஞ்சியிருந்தோரையும் அழிக்கிறார்.
எரேமியா 47 : 5 (RCTA)
காஜா நகரம் மொட்டையடிக்கப்படும்; அஸ்காலோன் மௌனங் காக்கும் அனாக்கியரில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் எம்மட்டும் உங்களையே சீறிக் கொள்வீர்கள்?
எரேமியா 47 : 6 (RCTA)
ஆண்டவரின் வாளே, எது வரையில் நீ ஓயாதிருப்பாய்? உன் அறைக்குள் நுழைந்து ஓய்ந்திரு, பேசாதிரு;
எரேமியா 47 : 7 (RCTA)
அது எப்படி ஓய்ந்திருக்க முடியும்? அஸ்காலோனுக்கும், அதன் கடல்துறை நாடுகளுக்கும் விரோதமாக ஆண்டவர் அதற்குக் கட்டளை கொடுத்து, அது செய்ய வேண்டியதைச் சொல்லியனுப்பினாரே!"
❮
❯