எரேமியா 46 : 1 (RCTA)
புறவினத்து மக்களுக்கு விரோதமாய் ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
எரேமியா 46 : 2 (RCTA)
யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:
எரேமியா 46 : 3 (RCTA)
வாள், கேடயங்களைத் தயார் செய்யுங்கள், போருக்குப் புறப்படுங்கள்;
எரேமியா 46 : 4 (RCTA)
குதிரைகள் மேல் சேணங்களைப் பூட்டுங்கள், வீரர்களே, குதிரை மேல் ஏறுங்கள். தலைச்சீராவை அணிந்து கொள்ளுங்கள், ஈட்டிகளைத் தீட்டுங்கள், மார்க் கவசங்களைப் பூணுங்கள்;
எரேமியா 46 : 5 (RCTA)
என்ன இது? அவர்கள் திகில் கொண்டு பின்னிடுகிறார்கள், புறமுதுகு காட்டி ஓடுகிறார்கள்; அவர்களுடைய வலிமை மிக்க வீரர்கள் முறியடிக்கப்பட்டனர், போர்க்களத்தை விட்டு ஓடுகிறார்கள்; திரும்பிப் பாராமல் ஓடுகிறார்கள், எப்பக்கமும் திகில், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 46 : 6 (RCTA)
ஓட்டத்தில் வல்லவனும் ஓடித் தப்ப முடியாது, வலிமை மிக்கவனும் தப்பித்துக் கொள்ள முடியாது; வடக்கே எப்பிராத்து நதியோரத்தில், தோல்வியடைந்து சிதைந்து போனார்கள்.
எரேமியா 46 : 7 (RCTA)
நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வரும் இவன் யார்?
எரேமியா 46 : 8 (RCTA)
நைல் நதிப் பெருக்கைப் போல் ஓங்கியெழுந்து அலை மோதும் நதி போல் எழுந்து வருபவன் எகிப்தியனே! 'பொங்கியெழுவேன், பூமியை மூடிக்கொள்வேன், நகரங்களையும் குடிமக்களையும் அழிப்பேன்' என்கிறான்.
எரேமியா 46 : 9 (RCTA)
குதிரைகளே, முன்னேறித் தாக்குங்கள், தேர்ப்படைகளே, கொதித்தெழுங்கள்! போர் வீரர்கள் முன்னேறித் தாக்கட்டும்; எத்தியோப்பியரும் லிபியரும் கேடயம் பிடித்துப் போங்கள்; லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றுங்கள்.
எரேமியா 46 : 10 (RCTA)
அந்த நாளோ சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரின் நாள், தம்முடைய பகைவர்களைப் பழிவாங்கும் நாள்; அவர்கள் வாளுக்கு இரையாக்குவார்கள், வாளும் அவர்களின் இரத்தத்தை நிறையக் குடிக்கும்; குடித்துத் திருப்தியடைந்து வெறித்திருக்கும்; வடநாட்டில் எப்பிராத்து நதியருகில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவருக்கு ஒரு வேள்வி உண்டு.
எரேமியா 46 : 11 (RCTA)
எகிப்து என்னும் கன்னிப் பெண்ணே! கலாயத்துக்கு ஏறிப்போய்க் களிம்பு மருந்து தடவு; பல்வகை மருந்துகளைப் பயன்படுத்துவது வீணே, உன் காயங்கள் ஆறவே ஆறா.
எரேமியா 46 : 12 (RCTA)
வேற்றினத்தார் உன் மானபங்கத்தைக் கேள்விப்பட்டார்கள், உனது கூக்குரல் உலகெங்கும் பரவிற்று; ஏனெனில் போர்வீரர் ஒருவர் இன்னொரு வீரரோடு மோதிக் கொண்டு, இருவரும் ஒருமிக்க இடறி விழுந்தார்கள்."
எரேமியா 46 : 13 (RCTA)
பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் எகிப்து நாட்டை அழிக்கப் படையெடுத்து வருவதைப் பற்றி ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளிய வாக்கு:
எரேமியா 46 : 14 (RCTA)
எகிப்திலே அறிவியுங்கள், மிக்தோலிலே முரசொலியுங்கள், மேம்பீசிலும் தப்னீசிலும் பறைசாற்றுங்கள்: 'தயார் செய்யுங்கள், தயாராய் நில்லுங்கள்; ஏனெனில் உன்னைச் சுற்றிலும் உள்ளவை வாளுக்கு இரையாகும்' என்று கூறுங்கள்.
எரேமியா 46 : 15 (RCTA)
ஆப்பிஸ் விழக் காரணம் என்ன? உன் பலவான் விழுந்த காரணமென்ன? ஆண்டவர் அவனைத் தள்ளினதால் அன்றோ?
எரேமியா 46 : 16 (RCTA)
பல பேர் சோர்ந்து வீழ்ந்தனர், அவனவன் தனக்கடுத்தவனிடம், 'எழுந்திரு,கொடியவனின் வாளுக்குக் தப்பித்துக் கொள்ள, நம் இனத்தாரிடமும் பிறந்த நாட்டுக்கும் திரும்பிப் போவோம்' என்று சொல்வான்.
எரேமியா 46 : 17 (RCTA)
எகிப்து அரசன் பார்வோன் பெயரை, 'வெறும் ஆரவாரம், காலத்தை நழுவ விட்டான்' என்று சொல்லுங்கள்.
எரேமியா 46 : 18 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் என்னும் பெயருடைய மாமன்னர் கூறும் வாக்கு இதுவே: மலைகளுக்குள் தாபோர் மலை போலவும், கடலோரத்துக் கர்மேல் போலவும் வருவான்.
எரேமியா 46 : 19 (RCTA)
எகிப்து நாடென்னும் உரிமை மகளே, நாடு கடத்தப்பட்ட வாழ்க்கை நடத்தத் தேவையானவற்றை மூட்டை கட்டிக்கொள். ஏனெனில் மேம்பீஸ் காடாகும், பாழடைந்து குடியற்றுப் போகும்.
எரேமியா 46 : 20 (RCTA)
எகிப்து அழகும் சிறப்பும் வாய்ந்த ஓர் இளம் பசு, தாற்றுக் கோல் அதற்கு வடக்கிலிருந்து வருகிறது;
எரேமியா 46 : 21 (RCTA)
கொழுத்த காளைகள்போல் அதன் நடுவிலுள்ள கூலிப் படைகள் கூட எதிர்த்து நிற்க முடியாமல் ஒருமிக்க ஓட்டம் பிடித்தார்கள்; ஏனெனில் அவர்களுடைய அழிவின் நாள் அவர்கள் மேல் வந்துற்றது; அதுவே அவர்களுக்குத் தண்டனை நாள்.
எரேமியா 46 : 22 (RCTA)
நழுவிச் செல்லும் பாம்பைப் போல் எகிப்து சீறும், அதன் பகைவர்கள் அணி அணியாய் வருவார்கள், மரம் வெட்ட வருகிறவர்களைப் போலக் கோடாரிகளோடு வருவார்கள்;
எரேமியா 46 : 23 (RCTA)
அவர்கள் அதன் காட்டை வெட்டுவார்கள், அது ஆள் நுழைய முடியாத காடாயினும் வெட்டப்படும். வெட்டுகிளிகளைப் போல் எண்ணிக்கையில் அடங்காதவர்கள், அவர்களைக் கணக்கிட முடியாது, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 46 : 24 (RCTA)
எகிப்து என்னும் மகள் அவமானத்துக்குள்ளாவாள், வடநாட்டு மக்கள் கையில் அகப்படுவாள்."
எரேமியா 46 : 25 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "இதோ, தீப்ஸ் நகரத்தின் அம்மோனையும் பார்வோனையும் எகிப்தையும் அதன் தெய்வங்களையும், அரசர்களையும் பார்வோனையும், அவன் மேல் நம்பிக்கை வைக்கிறவர்களையும் தண்டிக்கப் போகிறோம்.
எரேமியா 46 : 26 (RCTA)
அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் கையிலும், அவனுடைய ஊழியர் கையிலும், அவர்களை ஒப்புவிப்போம்; பிறகு பண்டை நாளில் இருந்தது போல், எகிப்து குடியேற்றப்படும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 46 : 27 (RCTA)
ஆனால் நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே; இஸ்ராயேலே, நீ கலங்காதே; ஏனெனில் உன்னைத் தொலை நாட்டினின்று மீட்போம், உன் சந்ததியை அடிமைத்தனத்தினின்று விடுவிப்போம்; யாக்கோபு திரும்பி வந்து அமைதியுடன் இளைப்பாறுவான், அவனை எவனும் அச்சுறுத்த மாட்டான்;
எரேமியா 46 : 28 (RCTA)
நம் ஊழியனாகிய யாக்கோபே, அஞ்சாதே, என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் உன்னோடு இருக்கிறோம்; நீ சிதறி வாழ்ந்த நாட்டு மக்கள் அனைவரையும் முற்றிலும் அழிப்போம்; ஆனால் உன்னை முற்றிலும் அழிக்க மாட்டோம்; உன்னை நீதியோடு தண்டிப்போம்; உன்னைத் தண்டியாமலும் விட மாட்டோம்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28