எரேமியா 40 : 1 (RCTA)
சேனைத் தலைவனாகிய நபுஜார்தான், யெருசலேமினின்றும் பபிலோனுக்கு அடிமைகளாய்க் கூட்டிக் கொண்டு போனவர்களின் கூட்டத்திலிருந்து எரெமியாசைக் கூப்பிட்டு அவருக்குப் பூட்டுப்பட்டிருந்த சங்கிலிகளை அறுத்து அவரை ராமா என்னுமிடத்தில் விடுதலை செய்த பின்னர், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது.
எரேமியா 40 : 2 (RCTA)
சேனைத் தலைவன் எரெமியாசைத் தனியாக அழைத்துச் சென்று அவரிடம், "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் இந்த இடத்துக்கு விரோதமாய்ப் பேசினார்;
எரேமியா 40 : 3 (RCTA)
பேசினவாறே செய்து முடித்து விட்டார்; ஏனெனில் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கேட்காமல் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்தீர்கள்; ஆகவே உங்களுக்கு இந்தத் துன்பங்கள் நேர்ந்தன.
எரேமியா 40 : 4 (RCTA)
இப்போது நான் உன் கைவிலங்குகளைத் தறித்து விடுகிறேன்; என்னோடு பபிலோனுக்கு வர விரும்பினால் வா, நான் உன்னைக் கண்காணித்துக் காப்பாற்றுவேன்; என்னோடு பபிலோனுக்கு வர விருப்பமில்லையாயின், இங்கேயே இருந்துகொள்; இதோ, நாடெல்லாம் உன்முன் பரந்து கிடக்கிறது; உனக்கு விருப்பமானதைத் தேர்ந்துகொள்; போக விருப்பமுள்ள இடத்திற்கு நீ போகலாம்.
எரேமியா 40 : 5 (RCTA)
நீ என்னோடு வரவில்லையெனில், பபிலோனிய அரசன் யூதாவின் பட்டணங்களுக்குத் தலைவனாய் ஏற்படுத்தியுள்ள சாவான் என்பவனின் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசுடன் போய், மற்ற மக்கள் நடுவில் நீ வாழலாம்; அல்லது உனக்கு எங்கே போக விருப்பமோ அங்கே போகலாம்" என்று சொல்லி, சாப்பாட்டுக்குத் தேவையானவற்றையும், ஓர் அன்பளிப்பையும் அவருக்குக் கொடுத்தனுப்பினான்.
எரேமியா 40 : 6 (RCTA)
எரெமியாஸ் மஸ்பாத்துக்குப் போய், அங்கே அயிக்காமின் மகன் கொதோலியாசுடன் நாட்டில் விடப்பட்டிருந்த மற்ற மக்கள் நடுவில் வாழ்ந்து வந்தார்.
எரேமியா 40 : 7 (RCTA)
நாடெங்கும் சிதறிக் கிடந்த யூத படைத் தலைவர் அனைவரும், அவர்களுடைய கூட்டாளிகளும், பபிலோனிய அரசன் அயிக்காமுடைய மகன் கொதோலியாசை ஆளுநனாக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும், ஆண்களையும் பெண்களையும் பிள்ளைகளையும், பபிலோனுக்கு நாடு கடத்தப்படாத ஏழை மக்களையும் அவன் கண்காணிப்பில் விட்டுச் சென்றிருக்கிறான் என்று கேள்விப்பட்டு, மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் வந்தார்கள்;
எரேமியா 40 : 8 (RCTA)
அவர்களுள் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலும், காரை மக்கள் யோகனானும் யோனத்தானும், தனவுமேத்து மகன் சாரேயாசும், ரெத்தோபாத்து ஊரானாகிய ஒப்பீ என்பவனின் மக்களும், மகாகாத்தி மகன் யோசோனியாசும், இன்னும் பலரும் இருந்தார்கள்.
எரேமியா 40 : 9 (RCTA)
அவர்களைக் கண்ட சாப்பான் மகனாகிய அயிக்காமின் மகன் கொதோலியாஸ் அவர்களுக்கும் அவர்களுடைய துணைவர்களுக்கும் ஆணையிட்டு, "கல்தேயருக்கு ஊழியம் செய்ய அஞ்சாதீர்கள். இந்த நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, பபிலோனிய அரசனுக்கு ஊழியஞ் செய்யுங்கள்; அப்போது நீங்கள் நலமாய் வாழலாம்.
எரேமியா 40 : 10 (RCTA)
நானோ நம்மிடம் வரப்போகும் கல்தேயர்களுக்குப் பொறுப்பாளியாய் இருக்கும் படி இங்கே மஸ்பாத்திலேயே இருப்பேன்; ஆனால் நீங்கள் போய்த் திராட்சைக் கனிகளைக் கொய்து, நிலத்தின் மற்றுமுள்ள விளைச்சல்களை அறுத்து, எண்ணெய் முதலியவற்றையும் களஞ்சியங்களில் சேர்த்துக் கொண்டு, நீங்கள் பிடித்திருக்கும் பட்டணங்களில் வாழுங்கள்" என்று சொன்னான்.
எரேமியா 40 : 11 (RCTA)
மோவாபு நாட்டிலும், அம்மோன் மக்கள் நடுவிலும், இதுமேயாவிலும், இன்னும் பல நாடுகளிலும் இருந்த யூதர் அனைவரும், பபிலோனிய அரசன் யூதேயாவில் இன்னும் சிலரை விட்டுப் போயிருக்கிறான் என்றும், சாப்பான் மகனான அயிக்காமின் மகன் கொதோலியாசை அவர்களுக்குத் தலைவனாக ஏற்படுத்தியிருக்கிறான் என்றும் கேள்விப்பட்டார்கள்.
எரேமியா 40 : 12 (RCTA)
அவர்கள் தாங்கள் ஓடிப்போயிருந்த எல்லா இடங்களினின்றும் திரும்பி வந்து யூதா நாட்டில் மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் போய் ஏராளமான கனிகளும் திராட்சை இரசமும் சேர்த்து வைத்தார்கள்.
எரேமியா 40 : 13 (RCTA)
ஆனால் காரை மகன் யோகானானும், நாடெங்கும் சிதறியிருந்த படைத்தலைவர் அனைவரும் மஸ்பாத்துக்குக் கொதோலியாசிடம் வந்து, அவனை நோக்கி,
எரேமியா 40 : 14 (RCTA)
அம்மோன் மக்களின் அரசனாகிய பாகாலிஸ் உன்னைக் கொல்லுவதற்காக நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலை அனுப்பியிருக்கிறேனே, அது உனக்கு தெரியுமா?" என்றார்கள். ஆனால் அயிக்காம் மகன் கொதோலியாஸ் அவர்கள் சொன்னதை நம்பவில்லை.
எரேமியா 40 : 15 (RCTA)
பிறகு காரை மகன் யோகனான் மஸ்பாத்திலிருநத் கொதோலியாசிடம் தனியாய்ச் சென்று, நான் போய் நத்தானியாஸ் மகன் இஸ்மாயேலை இரகசியமாய்க் கொல்லுவேன்; ஏனெனில், அவன் உன்னை கொலை செய்தால் உன் கண்காணிப்பில் சேர்ந்து வாழும் யூதர் அனைவரும் சிதறடிக்கப்படுவார்கள்; யூதாவில் எஞ்சியிருக்கும் மக்களும் அழிந்து போவார்களே" என்றான்.
எரேமியா 40 : 16 (RCTA)
அயிக்காம் மகன் கொதோலியாஸ் காரை மகன் யோகானானைப் பார்த்து, "வேண்டாம், நீ அந்தச் செயலைச் செய்யாதே; இஸ்மாயேலைப் பற்றி நீ சொன்னது முற்றிலும் பொய்" என்றான்.
❮
❯