எரேமியா 38 : 1 (RCTA)
அப்படியிருக்க மாத்தான் மகன் சாப்பாத்தியாசும், பாசூர் மகன் கெதேலியாசும், செலேமியாஸ் மகன் யூக்காலும், மெல்கியாஸ் மகன் பாசூரும் எரெமியாஸ் மக்கள் எல்லாருக்கும் சொல்லிக் கொண்டிருந்த வார்த்தைகளைக் கேள்வியுற்றார்கள்:
எரேமியா 38 : 2 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: இப் பட்டணத்திலேயே இருப்பவன் வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மடிவான்; ஆனால் (பட்டணத்தை விட்டு வெளியேறிக்) கல்தேயரிடம் ஓடிவிடுபவன் உயிர் பிழைப்பான்; அவன் உயிரே அவனுக்குக் கிடைத்த கொள்ளைப் பொருளாய் இருக்கும்; அவன் உயிர் வாழ்வான்.
எரேமியா 38 : 3 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: இப்பட்டணம் பபிலோனிய அரசனுடைய படையின் கையில் விடப்படும் என்பது திண்ணம்; அவர்கள் அதைப் பிடிப்பார்கள்."
எரேமியா 38 : 4 (RCTA)
அப்போது தலைவர்கள் அரசனை நோக்கி, "இம்மனிதனைக் கொன்று போடுங்கள்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இப்பட்டணத்திலிருக்கிற போர் வீரர்களின் ஊக்கத்தையும் மக்கள் எல்லோருடைய ஊக்கத்தையும் வேண்டுமென்றே தளரச்செய்கிறான்; ஆதலால் இவன் மக்களுக்குத் தீமையைத் தேடுகிறானேயன்றி நன்மையைத் தேடுவதில்லை" என்றார்கள்.
எரேமியா 38 : 5 (RCTA)
அதற்குச் செதேசியாஸ் அரசன், 'இதோ, அவனை உங்களுக்கே கையளிக்கிறேன்; நீங்கள் கேட்கும் எதையும் அரசன் மறுக்க இயலாது" என்றான்.
எரேமியா 38 : 6 (RCTA)
அவர்களோ எரெமியாசைக் கொண்டு போய் அமெலேக்கின் மகனான மெல்கியாசுடைய சிறைக்கூடத்து முற்றத்திலிருந்த பாழ்கிணற்றில் கயிற்றால் இறக்கி விட்டார்கள்; அந்தக் கிணற்றில் நீரினின்று வெறும் சேறு மட்டுமே இருந்தது; இவ்வாறு எரெமியாஸ் அச் சேற்றில் இறங்கினார்.
எரேமியா 38 : 7 (RCTA)
அரசனுடைய மாளிகையிலிருந்த அப்தேமேலேக்கு என்றும் எத்தியோப்பிய அண்ணகன் ஒருவன் எரெமியாசைக் குழியில் தள்ளினார்கள் என்று கேள்விப்பட்டான்; அப்போது அரசன் பென்யமீன் வாயிலில் கொலு வீற்றிருந்தான்;
எரேமியா 38 : 8 (RCTA)
அப்தேமேலேக்கு அரசன் மாளிகையை விட்டுப் புறப்பட்டு அரசனிடம் சென்று,
எரேமியா 38 : 9 (RCTA)
என் ஆண்டவனே, அரசே, இறைவாக்கினரான எரெமியாசுக்கு அந்த மனிதர்கள் செய்ததெல்லாம் அநியாயம்; பட்டணத்தில் உணவு நெருக்கடி இருக்கும் இக்காலத்தில் அவரைக் குழியில் தள்ளிப் போட்டால், அவர் பட்டினியால் செத்துப் போவாரே!" என்றான்.
எரேமியா 38 : 10 (RCTA)
அதைக்கேட்ட அரசன் எத்தியோப்பியனான அப்தேமேலேக்கை நோக்கி, "உன்னோடு இங்கிருந்து முப்பது பேரைக் கூட்டிக் கொண்டு போய், இறைவாக்கினராகிய எரெமியாஸ் சாவதற்குள் அவரைக் குழியிலிருந்து தூக்கி விடு" என்று கட்டளையிட்டான்.
எரேமியா 38 : 11 (RCTA)
அவ்வாறே அப்தேமேலேக்கு அந்த மனிதர்களைத் தன்னோடு கூட்டிக் கொண்டு, அரசனுடைய மாளிகையில் துணியறைக்குப் போய்க் கிழிந்த துணிகளையும், பழங்கந்தல்களையும் எடுத்துக் கயிற்றில் கட்டிக் குழியில் எரெமியாசுக்கு விட்டான்:
எரேமியா 38 : 12 (RCTA)
விட்டு எத்தியோப்பியனான அப்தேமேலேக்கு எரெமியாசை நோக்கி, "இந்தக் கிழிந்த துணிகளையும், நைந்த பழங்கந்தல்களையும் உமது அக்குளில் போட்டுக் கயிற்றிலும் சுற்றிக் கொள்ளும்" என்றான்; எரெமியாஸ் அவ்வாறே செய்தார்.
எரேமியா 38 : 13 (RCTA)
அப்போது அவர்கள் எரெமியாசை கயிற்றின் வழியாய் இழுத்துக் குழியை விட்டு மேலே தூக்கினார்கள்; அதன் பின் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.
எரேமியா 38 : 14 (RCTA)
செதேசியாஸ் அரசன் ஆளனுப்பி எரெமியாஸ் இறைவாக்கினரை வரவழைத்து, ஆண்டவருடைய திருக்கோயிலின் மூன்றாம் வாயிலில் அவரைச் சந்தித்து, அவரை நோக்கி, "நான் உம்மை ஒன்று கேட்கிறேன்; நீர் எதையும் என்னிடம் மறைக்கக் கூடாது" என்றான்.
எரேமியா 38 : 15 (RCTA)
எரெமியாஸ் செதேசியாசை நோக்கி, "நான் உமக்கு உண்மையைச் சொன்னால், நீர் என்னை கொல்ல மாட்டீரோ? நான் உமக்கு ஆலோசனை கொடுத்தாலும் நீர் கேட்க மாட்டீரே? என்றார்.
எரேமியா 38 : 16 (RCTA)
அப்போது செதேசியாஸ் இரகசியமாய் எரெமியாசிடம் ஆணையிட்டு, "உமக்கும் எனக்கும் இவ்வுயிரைக் கொடுத்த ஆண்டவர் பேரில் ஆணை! நான் உம்மைக் கொல்ல மாட்டேன்; உம் உயிரைப் பறிக்கத் தேடும் இந்த மனிதர்களுக்கு உம்மைக் கையளிக்கவும் மாட்டேன்" என்று வாக்குக் கொடுத்தான்.
எரேமியா 38 : 17 (RCTA)
அப்போது எரெமியாஸ் செதேசியாசைப் பார்த்து, "இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீர் வெளியேறிப் பபிலோனிய அரசனுடைய தலைவர்களிடம் சரணடைந்தால், உம் உயிர் தப்பும்; இப்பட்டணம் நெருப்புக்கு இரையாகாது; உம் வீட்டாரும் நீரும் உயிர் பிழைப்பீர்கள்.
எரேமியா 38 : 18 (RCTA)
நீர் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் சரணடையாவிடில், இப்பட்டணம் கல்தேயருக்குக் கையளிக்கப்படும்; அவர்கள் அதனை நெருப்பினால் எரிப்பார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பமாட்டீர்" என்றார்.
எரேமியா 38 : 19 (RCTA)
அதற்குச் செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "கல்தேயரிடம் ஓடிப்போன யூதர்களைக் குறித்து எனக்கு அச்சமாயிருக்கிறது; ஒருகால் கல்தேயர் என்னை அந்த யூதர்களிடம் கையளித்தால், அவர்கள் என்னை ஏளனம் செய்வார்களோ என்னவோ!" என்றான்.
எரேமியா 38 : 20 (RCTA)
அதற்கு எரெமியாஸ், "இல்லை; அவர்களிடம் உம்மைக் கையளிக்க மாட்டார்கள்; நான் உம்மைக் கேட்டுக் கொள்கிறேன்: நான் உமக்கு அறிவித்த ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும் நலமாயிருப்பீர்; உம் உயிரும் பிழைத்திருக்கும்.
எரேமியா 38 : 21 (RCTA)
ஆனால் நீர் வெளியேறிச் சரணடைய மறுப்பீராகில், ஆண்டவர் எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
எரேமியா 38 : 22 (RCTA)
இதோ யூதாவின் அரசனுடைய மாளிகையில் எஞ்சியிருந்த பெண்கள் எல்லாரும் பபிலோனிய அரசனின் தலைவர்களிடம் அழைத்துச் செல்லப்படுவார்கள்; அப்போது அவர்கள், ' நீர் நம்பியிருந்த நண்பர்கள் உம்மை வஞ்சித்தார்கள்; உம்மை மேற்கொண்டு விட்டார்கள்; உம் கால்கள் சேற்றில் அமிழ்ந்திருக்கும் நேரத்தில் அவர்கள் உம்மை விட்டு அகன்று போயினர்' என்று சொல்லிக் கொண்டு போவார்கள்.
எரேமியா 38 : 23 (RCTA)
உம்முடைய மனைவியர் அனைவரும் உம் மக்களும் கல்தேயரிடம் கொண்டு போகப்படுவார்கள்; நீரும் அவர்களுடைய கைகளுக்குத் தப்பமாட்டீர்; பபிலோனிய அரசன் கையில் பிடிபடுவீர்; அவன் இந்நகரத்தைத் தீக்கிரையாக்குவான்" என்றார்.
எரேமியா 38 : 24 (RCTA)
செதேசியாஸ் எரெமியாசை நோக்கி, "இவ்வார்த்தைகளை யாருக்கும் சொல்லாதீர்; அப்போது உம்மைக் கொல்லமாட்டேன்;
எரேமியா 38 : 25 (RCTA)
ஆனால் தலைவர்கள் நான் உம்மோடு உரையாடியதாகக் கேள்விப்பட்டு, உம்மிடம் வந்து, 'அரசனோடு நீ என்ன பேசினாய்? மறைக்காமல் சொல், நாங்கள் உன்னைக் கொல்லமாட்டோம்; அரசன் உன்னிடம் என்ன சொன்னான்?' என்றுகேட்டால்,
எரேமியா 38 : 26 (RCTA)
நீ அவர்களுக்கு விடையாக, நான் அரசனை நோக்கி, ' யோனத்தான் வீட்டில் என்னைச் சிறை வைக்க வேண்டாம்; நான் அங்கேயே செத்துப் போவேன் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டேன்' என்று சொல்லிவிடும்" என யோசனை கொடுத்தான்.
எரேமியா 38 : 27 (RCTA)
அவ்வாறே, தலைவர்கள் அனைவரும் எரெமியாசிடம் வந்து, அவரை வினவினார்கள்; அவர் அரசன் சொல்லிக் கொடுத்தபடியே எல்லாவற்றுக்கும் விடைகொடுத்தார்; அவர்கள் அவரை ஒன்றும் செய்யாமல் விட்டு விட்டார்கள். ஏனெனில் அவர் அரசனுடன் பேசியதை எவரும் மறைந்திருந்து கேட்கவில்லை.
எரேமியா 38 : 28 (RCTA)
யெருசலேம் பிடிபட்ட நாள் வரையில் எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்திலேயே இருந்தார்.
❮
❯