எரேமியா 37 : 1 (RCTA)
பபிலோனிய அரசனான நபுக்கோதனசார் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்த யோசியாசின் மகன் செதேசியாஸ், யோவாக்கீமுடைய மகன் யேக்கோனியாசுக்குப் பதிலாய் அரசாளத் தொடங்கினான்.
எரேமியா 37 : 2 (RCTA)
ஆண்டவர் எரெமியாஸ் இறைவாக்கினரின் வாயிலாக அறிவித்த வார்த்தைகளை அவனோ அவனுடைய ஊழியர்களோ நாட்டு மக்களோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
எரேமியா 37 : 3 (RCTA)
செதேசியாஸ் அரசன் செலேமியாஸ் மகன் யூக்காலையும், மவாசியாஸ் மகன் சோப்போனியாஸ் என்னும் அர்ச்சகரையும் எரெமியாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பி, "நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று கேட்டுக் கொண்டான்.
எரேமியா 37 : 4 (RCTA)
அந்நாட்களில் எரெமியாஸ் உரிமையாய் மக்கள் நடுவில் நடமாடிக் கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை;
எரேமியா 37 : 5 (RCTA)
(4b) அப்போது பார்வோரின் படை எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தது; யெருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு யெருசலேமை விட்டகன்றார்கள்.
எரேமியா 37 : 6 (RCTA)
(5) அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாஸ் இறைவாக்கினருக்கு அருளப்பட்டது:
எரேமியா 37 : 7 (RCTA)
(6) இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் ஆலோசனை கேட்க உங்களை அனுப்பின யூதாவின் அரசனிடம் போய் இவ்வாறு சொல்லுங்கள்: 'இதோ உங்களுக்கு உதவியாக வந்த பார்வோனின் படை தன் சொந்த நாடாகிய எகிப்துக்குத் திரும்பிப் போகும்;
எரேமியா 37 : 8 (RCTA)
(7) கல்தேயர் திரும்பி வந்து இப்பட்டணத்திற்கு விரோதமாய்ப் போர் புரிந்து, அதனைக் கைப்பற்றி நெருப்பினால் எரிப்பார்கள்.
எரேமியா 37 : 9 (RCTA)
(8) ஆண்டவர் இன்னும் கூறுகிறார்: "கல்தேயர் திண்ணமாய் நம்மை விட்டகலுவார்கள்" என்று சொல்லி உங்களையே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்; அவர்கள் போகமாட்டார்கள்.
எரேமியா 37 : 10 (RCTA)
(9) உங்களுக்கு எதிராய்ப் போர்புரியும் கல்தேயரின் படையை முற்றிலும் நீங்கள் தோற்கடித்தாலும், அவர்களுள் காயம்பட்டவர்கள் சிலேரேனும் இருப்பார்களாகில், அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் கூடாரத்தை விட்டு வெளியேறி இப்பட்டணத்தை நெருப்பினால் சுட்டெரிப்பான்."
எரேமியா 37 : 11 (RCTA)
(10) அப்படியிருக்கும் போது, பார்வோன் படை நெருங்கி வந்த செய்தியைக் கேட்டுக் கல்தேயர் படைகள் யெருசலேமை விட்டகன்ற பின்னர்,
எரேமியா 37 : 12 (RCTA)
(11) எரெமியாஸ் பென்யமீன் நாட்டுக்குப் போய், அங்கிருந்த தமது சொத்தைக் குடிமக்கள் முன்னிலையில் பாகம் பிரிக்கக் கருதி யெருசலேமை விட்டுப் புறப்பட்டார்.
எரேமியா 37 : 13 (RCTA)
(12) அவர் பென்யமீன் வாயிலை அணுகி வந்தார்; அங்கே தன் முறைப்படி காவல் காத்துக் கொண்டிருந்த அனானியாஸ் மகனான செலேமியாசின் மகன் யேரியாஸ் என்பவன் எரெமியாசைக் கண்டு, "நீ கல்தேயர் பக்கம் சேரப்போகிறாய்" என்று சொல்லி அவரைப் பிடித்துக் கொண்டான்.
எரேமியா 37 : 14 (RCTA)
(13) அதற்கு எரெமியாஸ், "இது பொய்; நான் கல்தேயர் பக்கம் சேர்வதற்காகப் போகவில்லை" என்றார்; ஆனால் யேரியாஸ் அதைப் பொருட்படுத்தாமல், ஏரெமியாசைப் பிடித்துத் தலைவர்களிடம் கொண்டு வந்தான்.
எரேமியா 37 : 15 (RCTA)
(14) தலைவர்கள் சினங்கொண்டு, எரெமியாசை அடித்து, யோனத்தான் என்னும் செயலாளனின் வீட்டில் அடைத்தார்கள். இவ்வீடு ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது.
எரேமியா 37 : 16 (RCTA)
(15) எரெமியாஸ் அடிமைகள் போடப்படும் நிலவறைச் சிறைக் கூடத்தில் அடைக்கப்பட்டார்; எரெமியாஸ் நெடுநாள் அங்கிருந்தார்.
எரேமியா 37 : 17 (RCTA)
(16) ஒரு நாள் செதேசியாஸ் அரசன் அவரைத் தன்னிடம் கூட்டிவரச் சொல்லி, தன் வீட்டில் தனிமையில், "ஆண்டவர் கூறிய வாக்கு ஏதெனும் உண்டோ?" என்று அவரை வினவினான்; எரெமியாஸ், "ஆம், உண்டு" என்றார். தொடர்ந்து, "நீர் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவீர்" என்று சொன்னார்.
எரேமியா 37 : 18 (RCTA)
(17) மீண்டும் எரெமியாஸ் அரசனை நோக்கி, "உமக்கோ, உம் ஊழியருக்கோ, இந்த மக்களுக்கோ நான் செய்த தீமை என்ன? ஏன் என்னைச் சிறையிலடைத்தீர்?
எரேமியா 37 : 19 (RCTA)
(18) உங்களுக்கும் இந்த நாட்டுக்கும் விரோதமாய்ப் பபிலோனிய அரசன் படையெடுத்து வரமாட்டான்' என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய அந்தத் தீர்க்கதரிசிகள் எங்கே?
எரேமியா 37 : 20 (RCTA)
(19) ஆகையால் என் ஆண்டவனே, அரசே உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்; என் மன்றாட்டு உம்முன் ஏற்கப்படுவதாக! செயலாளனாகிய யோனத்தானின் வீட்டிலிருக்கும் சிறைக்கூடத்திற்குத் திரும்ப என்னை அனுப்பாதீர்; அனுப்பினால் அங்கேயே நான் மடிந்தாலும் மடியலாம்" என்றார்.
எரேமியா 37 : 21 (RCTA)
(20) ஆகையால் எரெமியாசைச் சிறைக்கூடத்தின் முற்றத்தில் வைத்திருக்குமாறும், பட்டணத்திலுள்ள உரொட்டிகளெல்லாம் தீரும் வரையில் நாடோறும் அவருக்கு இறைச்சியின்றி வட்ட உரொட்டி மட்டும் ஒன்று கொடுக்குமாறும் செதேசியாஸ் அரசன் கட்டளையிட்டான்; அவ்வாறே எரெமியாஸ் சிறைக்கூடத்தின் முற்றத்தில் இருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21