எரேமியா 34 : 1 (RCTA)
யெருசலேமுக்கும், அதன் நகரங்கள் அனைத்திற்கும் விரோதமாய்ப் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரும், அவனுடைய எல்லாப் படைகளும், அவன் அரசுக்குட்பட்ட உலக அரசுகள் யாவும், எல்லா மக்களும் போர் புரிந்து கொண்டிருந்த நாளில், ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
எரேமியா 34 : 2 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: நீ போய் யூதாவின் அரசனாகிய செதேசியாசிடம் பேசு; அவனுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ நாம் இப்பட்டணத்தைப் பபிலோனிய மன்னனின் கையில் கொடுத்து விடுவோம்; அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.
எரேமியா 34 : 3 (RCTA)
நீ அவன் கைக்குத் தப்பமாட்டாய்; திண்ணமாய்ப் பிடிபடுவாய்; அவன் கையில் அளிக்கப்படுவாய்; நீயும் பபிலோனிய மன்னனும் ஒருவரையொருவர் நேருக்கு நேராய் பார்த்துப் பேசுவீர்கள்; நீ பபிலோனுக்குப் போவாய்.'
எரேமியா 34 : 4 (RCTA)
யூதாவின் அரசனான செதேசியாசே, ஆண்டவருடைய வாக்கை இன்னும் கேள்: உன்னைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: ' நீ வாளால் மடிய மாட்டாய்;
எரேமியா 34 : 5 (RCTA)
நீ அமைதியாகவே சாவாய்; உனக்கு முன்னிருந்த பண்டைய மன்னர்களான உன் முன்னோர்களுக்காக நறுமணப் பொருட்களைப் புகைத்தவாறே, உனக்காகவும் நறுமணப் பொருட்களை எரித்து, "ஐயோ, ஆண்டவனே!" என்று சொல்லி உன்னைக் குறித்துப் புலம்புவார்கள்;' ஏனெனில் நாமே இதைச் சொல்லியிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 34 : 6 (RCTA)
எரெமியாஸ் இறைவாக்கினர் யெருசலேமில் இவ்வார்த்தைகளையெல்லாம் யூதாவின் அரசனான செதேசியாசுக்கு அறிவித்தார்.
எரேமியா 34 : 7 (RCTA)
அப்போது பபிலோனிய அரசனது படை யெருசலேமுக்கு எதிராயும், எஞ்சியிருந்த யூதாவின் பட்டணங்களாகிய இலக்கீசு, அஜக்கா என்பவற்றிற்கு எதிராயும் போர் செய்து கொண்டிருந்தது. ஏனெனில், இவ்விரண்டு பட்டணங்களுந் தான் யூதாவின் கோட்டை சூழ்ந்த நகரங்களில் பிடிபடாமல் மீதியாய் நின்றவை.
எரேமியா 34 : 8 (RCTA)
விடுதலை பெற்ற அடிமைகள்: செதேசியாஸ் மன்னன் யெருசலேமில் யூத மக்கள் யாவருடனும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்ட பின்னர் ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
எரேமியா 34 : 9 (RCTA)
அவன் செய்த ஒப்பந்தம் பின்வருமாறு: ஒவ்வொருவனும் தன்னுடைய எபிரேய அடிமைகளை- ஆண், பெண் இருபாலாரையும்- உரிமைக் குடிமக்களாய் விடுதலை செய்வான்; இனித் தன் சகோதரனாகிய யூதனை வேறொரு யூதன் அடிமையாய் வைத்திருக்கக் கூடாது என்று ஒப்புக் கொண்டார்கள்.
எரேமியா 34 : 10 (RCTA)
அரசன் சொன்னதைக் கேட்டுத் தலைவர்களும் பொதுமக்களும் ஒத்துக் கொண்டு அவனவன் தன் தன் அடிமையை- ஆண், பெண் இருபாலாரையும்- விடுதலை செய்யவும், இனி அவர்களை அடிமைகளாய்க் கருதி நடத்தாதிருக்கவும் உடன்பட்டார்கள்; பின்னர் அந்தக் கட்டளையின்படியே தங்கள் அடிமைகளை விடுதலை செய்தார்கள்.
எரேமியா 34 : 11 (RCTA)
ஆனால் நாளடைவில் அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டு, ஏற்கனவே விடுதலை செய்த ஆண், பெண் இருபாலரான அடிமைகளை மறுபடியும் பிடித்து அடிமைகளாக்கிக் கொண்டார்கள்.
எரேமியா 34 : 12 (RCTA)
அப்போது ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது.
எரேமியா 34 : 13 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: நாம் உங்கள் தந்தையரை அடிமைத் தன வீடாகிய எகிப்து நாட்டினின்று மீட்டு வந்த நாளில் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்தோம்.
எரேமியா 34 : 14 (RCTA)
அதன்படி அவனவன் தனக்கு அடிமையாய் விற்கப்பட்ட எபிரேய சகோதரனை ஏழாம் ஆண்டில் விடுதலை செய்ய வேண்டும். அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் பணிபுரிவான்; அதன் பின் நீ அவனை விடுதலை செய்து அனுப்பி விட வேண்டும்; ஆனால் நம் சொல்லுக்கு உங்கள் முன்னோர் செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை.
எரேமியா 34 : 15 (RCTA)
இன்று நீங்கள் நம்மை அணுகி வந்து, ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு விடுதலை அளித்தோம் என்று வெளிப்படையாய்ச் சொல்லி, நம் முன்னிலையில் செம்மையான செயலைச் செய்தீர்கள்; அன்றியும் இவ்வொப்பந்தத்தை நமது பெயரால் வழங்கப்படும் இந்தக் கோயிலில் நம் முன்னிலையில் செய்தீர்கள்.
எரேமியா 34 : 16 (RCTA)
ஆனால், பின்பு நீங்கள் சொன்ன சொல்லை மீறி, நமது திருப்பெயரைப் பங்கப்படுத்தினீர்கள்; அவனவன் தன் தன் விருப்பப்படி விடுதலை செய்தனுப்பிய ஆண், பெண் அடிமைகளைத் திரும்பவும் உங்களுக்கு அடிமைகளாகச் செய்து கொண்டீர்கள்.
எரேமியா 34 : 17 (RCTA)
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: நமக்குக் கீழ்ப்படிய மறுத்து, உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் அயலானையும் அடிமைத்தனத்தினின்று போக விடை தராததால், வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவை உங்கள் மேல் வரும்படி நாம் விடை தருகிறோம். நாம் உங்களை உலகத்தின் எல்லா அரசுகளுக்கும் திகில் தரும் காட்சியாக்குவோம்.
எரேமியா 34 : 18 (RCTA)
இரண்டாய்ப் பிளந்து, அந்த இரு துண்டங்களின் இடையில் கடந்து போவதற்காகத் தாங்கள் பயன்படுத்திய கன்றுக்குட்டியின் நிலையையே, நம் முன்னிலையில் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல் அவ்வுடன்படிக்கையை மீறினவர்களும் அடையச் செய்வோம்.
எரேமியா 34 : 19 (RCTA)
யூதாவின் தலைவர்களும் யெருசலேமின் தலைவர்களும் அண்ணகரும் அர்ச்சகர்களும், நாட்டின் மக்களனைவரும் கன்றின் இரு துண்டங்களின் இடையில் கடந்து போனார்கள்;
எரேமியா 34 : 20 (RCTA)
அவர்களை அவர்களுடைய பகைவர் கைகளிலும், அவர்களுடைய உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களின் கைகளிலும் விட்டு விடுவோம்; அவர்களுடைய உடல்கள் வானத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
எரேமியா 34 : 21 (RCTA)
யூதாவின் அரசனாகிய செதேசியாசையும், அவனுடைய தலைவர்களையும் அவர்களின் பகைவர் கையிலும், அவர்கள் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், உங்களை விட்டகன்றிருக்கும் பபிலோனிய அரசன் படைகளின் கைகளிலும் விட்டுவிடுவோம்;
எரேமியா 34 : 22 (RCTA)
இதோ, நாமே ஆணை தருவோம்; நாமே அவர்களை இந்தப் பட்டணத்திற்குத் திரும்பக் கூட்டி வருவோம்; அவர்கள் இதற்கு விரோதமாய்ப் போரிட்டு இதனைப் பிடித்துத் தீவைத்துக் கொளுத்துவார்கள்; யூதாவின் பட்டணங்களையோ குடியற்றுப் போன காடாக்குவோம், என்கிறார் ஆண்டவர்,"
❮
❯