எரேமியா 29 : 1 (RCTA)
நபுக்கோதனசார் யெருசலேமினின்று பபிலோனுக்குக் கொண்டு போனவர்களுள் மீதியான மூப்பர்கள், அர்ச்சகர்கள், தீர்க்கதரிசிகள், இன்னும் மக்கள் எல்லாருக்கும் எரெமியாஸ் இறைவாக்கினர் எழுதியனுப்பிய திருமுகத்தின் வாக்கியங்கள்.
எரேமியா 29 : 2 (RCTA)
எக்கோனியாஸ் அரசனும் அரசியும், அவனுடைய அண்ணகரும், யூதா, யெருசலேமின் தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் யெருசலேமை விட்டுப் போன பின்னர்,
எரேமியா 29 : 3 (RCTA)
யூதாவின் அரசனான செதேசியாஸ் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாரிடம் பபிலோனுக்கு அனுப்பிய சப்பானின் மகன் எலாசா வழியாகவும், எல்சியாசின் மகன் காமாரியாஸ் வழியாகவும் எரெமியாஸ் அந்தத் திருமுகத்தை அனுப்பினார்.
எரேமியா 29 : 4 (RCTA)
அதில் எழுதியிருந்தது: "யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கொண்டுபோகப்பட்ட அனைவருக்கும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் சொல்லுகிறார்:
எரேமியா 29 : 5 (RCTA)
வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை வைத்து அவற்றின் விளைவைச் சாப்பிடுங்கள்.
எரேமியா 29 : 6 (RCTA)
பெண் தேடி மணமுடித்துக் கொண்டு, புதல்வர் புதல்வியரைப் பெற்று வாழுங்கள்; உங்கள் புதல்வியருக்கு மாப்பிள்ளைகளைத் தேடுங்கள்; உங்கள் புதல்வர்களுக்குப் பெண் பார்த்து மண முடியுங்கள்; அவர்களும் புதல்வர் புதல்வியரைப் பெற்றெடுக்கட்டும்; அங்கேயே பெருகிப் பலுகுங்கள்; எண்ணிக்கையில் குறைந்து விடாதீர்கள்.
எரேமியா 29 : 7 (RCTA)
நாடு கடத்தப்பட்டு நீங்கள் குடியிருக்கும்படி நாம் செய்த அந்தப் பட்டணத்திற்குச் சமாதானத்தைத் தேடுங்கள்; அந் நகருக்காக ஆண்டவரை மன்றாடுங்கள்; ஏனெனில் அதன் சமாதானத்தில் தான் உங்கள் சமாதானமும் அடங்கியிருக்கிறது.
எரேமியா 29 : 8 (RCTA)
ஏனெனில் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் நிமித்திகரும் உங்களை மயக்காதிருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவர்கள் காணும் கனவுகளையும் பொருட்படுத்தாதீர்கள்; ஏனெனில், அவர்கள் நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைச் சொல்லுகிறார்கள்;
எரேமியா 29 : 9 (RCTA)
நாம் அவர்களை அனுப்பவில்லை, என்கிறார் ஆண்டவர். இதோ, ஆண்டவர் கூறுகிறார்:
எரேமியா 29 : 10 (RCTA)
பபிலோனில் எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், நாம் உங்களை வந்து சந்திப்போம்; உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்து சேர்ப்போம் என்று உங்களுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவோம்.
எரேமியா 29 : 11 (RCTA)
ஏனெனில் நாம் உங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் எண்ணங்கள் நமக்குத் தெரியும்; அவை உங்களுக்கு வளமான பிற்காலத்தையும் நம்பிக்கைகையும் தரும்படி நாம் கொண்ட சமாதானத்தின் எண்ணங்களே தவிர, துன்பத்தின் எண்ணங்கள் அல்ல.
எரேமியா 29 : 12 (RCTA)
நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.
எரேமியா 29 : 13 (RCTA)
நீங்கள் நம்மைத் தேடுவீர்கள்; முழு இதயத்தோடு தேடி நம்மைக் கண்டடைவீர்கள்;
எரேமியா 29 : 14 (RCTA)
ஆம், மெய்யாகவே நம்மைக் கண்டடைவீர்கள், என்கிறார் ஆண்டவர்; உங்களை அடிமைத்தனத்தினின்று மீட்டுக்கொண்டு வருவோம்; நாம் உங்களை விரட்டின எல்லா இடத்தினின்றும், எல்லா மக்களிடமிருந்தும் உங்களை ஒருமிக்கச் சேர்ப்போம், என்கிறார் ஆண்டவர். எந்த இடத்திலிருந்து நாம் உங்களை அனுப்பினோமோ, அந்த இடத்திற்கே திரும்பி வரச் செய்வோம்.
எரேமியா 29 : 15 (RCTA)
ஆண்டவர் பபிலோனில் எங்களுக்கு இறைவாக்கினர்களைத் தோற்றுவித்துள்ளார்' என்கிறீர்கள்.
எரேமியா 29 : 16 (RCTA)
ஆதலால், தாவீதின் அரியணையில் வீற்றிருக்கும் அரசனைப் பற்றியும், இப்பட்டணத்தில், வசிக்கும் எல்லா மக்களைக் குறித்தும், உங்களோடு கூடச் சிறையிருப்புக்குக் கொண்டு போகப்படாத உங்கள் சகோதரரைப் பற்றியும் ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்.
எரேமியா 29 : 17 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் அவர்களுக்குப் பஞ்சம், வாள், கொள்ளை நோய்களையும் அனுப்புவோம்; தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போன காட்டத்திப் பழங்களுக்கு அவர்களைச் சமமாக்குவோம்.
எரேமியா 29 : 18 (RCTA)
அன்றியும் நாம் அவர்களைப் பஞ்சம், வாள், கொள்ளைநோய் இவற்றால் துன்புறுத்துவோம்; உலகத்தின் எல்லா நாடுகளுக்கும் திகிலாய் இருக்கச் செய்வோம்; நாம் அவர்களைச் சிதறடித்த எல்லா இனத்தார் நடுவிலும் அவர்களைச் சாபனைக்கும் திகைப்புக்கும் நகைப்புக்கும் அவமானத்திற்கும் உள்ளாக்குவோம்.
எரேமியா 29 : 19 (RCTA)
ஏனெனில், நாம் தொடக்க முதல் நம்முடைய ஊழியர்களாகிய இறைவாக்கினர்கள் வழியாய்த் திரும்பத் திரும்பத் தெரிவித்த வாக்கியங்களை அவர்கள் கேட்கவில்லை; நீங்களும் கேட்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.'
எரேமியா 29 : 20 (RCTA)
ஆதலால் யெருசலேமிலிருந்து பபிலோனுக்கு நாம் நாடு கடத்திய நீங்கள் அனைவரும் ஆண்டவருடைய வாக்கைக் கேளுங்கள்:
எரேமியா 29 : 21 (RCTA)
நமது பெயரால் உங்களுக்குப் பொய்யைப் பிதற்றும் கோலியாஸ் மகன் ஆக்காபைக் குறித்தும், மாவாசியாஸ் மகன் செதேசியாசைப் பற்றியும் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நாம் அவர்களைப் பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசாருக்குக் கையளிப்போம்; அவன் அவர்களை உங்கள் கண் முன்பாகக் கொலை செய்வான்,
எரேமியா 29 : 22 (RCTA)
யூதாவிலிருந்து பபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட அனைவரும் இனி மேல் அவர்களை உதாரணமாக வைத்து, யாதொருவனைச் சபிக்கும் போது, "பபிலோனிய அரசன் நெருப்பினால் சுட்டெரித்த செதேசியாசைப் போலவும், ஆக்காபைப் போலவும் ஆண்டவர் உன்னை நடத்துவாராக!" என்பார்கள்.
எரேமியா 29 : 23 (RCTA)
ஏனெனில், அவர்கள் இஸ்ராயேலுக்கு மதிகேடானதைச் செய்தார்கள்; தங்கள் அயலாருடைய மனைவியரோடு விபசாரம் செய்தார்கள்; நாம் கட்டளையிடாதிருக்கும்போதே, நமது திருப்பெயரால் பொய்த் தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்; அதெல்லாம் நமக்கு நன்றாய்த் தெரியும்; நாமே அதற்குச் சாட்சி, என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 29 : 24 (RCTA)
எரெமியாசின் திருமுகத்திற்கு மறுப்பு: மறுபடியும் ஆண்டவர் என்னை நோக்கி: நீ நெக்கோலமித்தனான செமேயியாசைப் பார்த்துச் சொல்:
எரேமியா 29 : 25 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீ யெருசலேமில் இருக்கும் எல்லா மக்களுக்கும், மாவாசியாசின் மகனும் அர்ச்சகர்களுமாகிய செப்போனியாசுக்கும், மற்ற அர்ச்சகர்களுக்கும் உன் பெயரால் திருமுகங்களை எழுதியனுப்பினாய்;
எரேமியா 29 : 26 (RCTA)
அவற்றில்: வெறி பிடித்துத் தீர்க்கதரிசனம் உரைக்கும் எம்மனிதனையும் நீர் விசாரித்துத் தொழுவிலும் சிறையிலும் போடுமாறு, ஆண்டவருடைய கோயிலில் நீர் தலைவராயிருக்கும்படி, ஆண்டவர் உம்மை யோயாதாவுக்குப் பதிலாய் அர்ச்சகராக ஏற்படுத்தினாரே!
எரேமியா 29 : 27 (RCTA)
அப்படியிருக்க, உங்களுக்குத் தீர்க்க தரிசனம் சொல்லும் அநாத்தோத்து ஊரானாகிய எரெமியாசை நீர் ஏன் கண்டிக்கவில்லை?
எரேமியா 29 : 28 (RCTA)
ஏனெனில் பபிலோனிலுள்ள எங்களுக்கு அவன், "உங்கள் அடிமை வாழ்வு நெடுங்காலம் நீடிக்கும்; வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழுங்கள்; தோட்டம் துரவுகளை அமைத்து அவற்றின் பலனைச் சாப்பிடுங்கள்" என்று எழுதியிருக்கிறான்' என்று சொல்லியிருக்கிறாய்?"
எரேமியா 29 : 29 (RCTA)
அர்ச்சகராகிய சொப்போனியாஸ் அடிக்கடி தந்தை இறைவக்கினரான எரெமியாசுக்குப் படித்துக் காட்டினார்;
எரேமியா 29 : 30 (RCTA)
அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எரெமியாசுக்கு அருளப்பட்டது:
எரேமியா 29 : 31 (RCTA)
நாடுகடத்தப்பட்டவர்கள் எல்லாருக்கும் நீ இவ்வாறு எழுதியனுப்பு: 'நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசைக் குறித்து ஆண்டவர் கூறுகின்றார்: நாம் அனுப்பாமலே செமேயியாஸ் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தான்; உங்களுக்குப் பொய் சொல்லி அதை நம்ப வைத்தான்;
எரேமியா 29 : 32 (RCTA)
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நெக்கேலாம் ஊரானாகிய செமேயியாசையும் அவன் சந்ததியாரையும் நாம் தண்டிப்போம்; நம் மக்களுக்கு நாம் செய்யும் நன்மைகளைச் காண அவன் சந்ததியில் ஒருவனும் இரான்; ஏனெனில் அவன் ஆண்டவருக்கு எதிராய்ப் பேசினான், என்கிறார் ஆண்டவர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32