எரேமியா 27 : 1 (RCTA)
யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமாகிய செதேசியாஸ் ஆட்சியின் துவக்கத்தில் இவ்வாக்கியம் எரெமியாசுக்கு ஆண்டவரிடமிருந்து அருளப்பட்டது.
எரேமியா 27 : 2 (RCTA)
ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "கயிறுகளையும் நுகத்தடியையும் செய்து அவற்றை உன் கழுத்தில் பூட்டிக் கொள்.
எரேமியா 27 : 3 (RCTA)
யெருசலேமுக்குச் செதேசியாசிடம் வந்துள்ள தூதர்கள் வழியாய் ஏதோம் அரசனுக்கும், மோவாப் அரசனுக்கும், அம்மோனியரின் அரசனுக்கும், தீர் அரசனுக்கும், சீதோன் அரசனுக்கும் செய்தி சொல்லி அனுப்பு:
எரேமியா 27 : 4 (RCTA)
அவர்களுடைய தலைவர்களுக்குச் சொல்லும்படி நீ அவர்களுக்குக் கட்டளையிடு; அவர்கள் சொல்ல வேண்டியது: 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் உங்கள் தலைவர்களிடம் போய்ச் சொல்லுங்கள்:
எரேமியா 27 : 5 (RCTA)
நமது மிகுந்த வல்லமையாலும் கைவன்மையாலும் பூமியையும் அதிலிருக்கும் மனிதரையும் மிருகங்களையும் நாமே படைத்தோம்; நமக்கு விருப்பமானவரிடம் அவற்றைக் கொடுக்கிறோம்.
எரேமியா 27 : 6 (RCTA)
இப்பொழுது நம் ஊழியனும் பபிலோனிய மன்னனுமான நபுக்கோதனசாருடைய கைகளில் இந்த நாடுகளையெல்லாம் ஒப்புவித்திருக்கிறோம்; பூமியின் மிருகங்கள் அனைத்தையும் அவனுக்குச் சேவை செய்யுமாறு கொடுத்திருக்கிறோம்.
எரேமியா 27 : 7 (RCTA)
மக்களினம் எல்லாம் அவனுக்கும், அவன் மகனுக்கும், மகனுடைய மகனுக்கும் ஊழியம் செய்து வருவார்கள்; அவனுடைய நாட்டுக்குக் காலம் வரும் வரையில் ஊழியம் செய்து வருவார்கள்; அதன் பின் பல்வேறு இனத்தாரும் மாமன்னர்களும் அவனை அடிமையாக்கி ஆளுவார்கள்.
எரேமியா 27 : 8 (RCTA)
ஆனால் (இப்பொழுது) பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசாருக்கு ஊழியம் செய்யாமல், ஏதேனும் மக்களினமோ அரசோ இருக்குமாயின்-பபிலோனிய அரசனின் நுகத்தைக் கழுத்தில் தாங்க மறுக்குமாயின், அதை அவன் கையால் முற்றிலும் அழிக்கும் வரை அந்த மக்களினத்தை வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றால் தண்டிப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 27 : 9 (RCTA)
ஆதலால், 'பபிலோனிய அரசனுக்குத் தொண்டு புரிய மாட்டீர்கள்' என்று உங்களுக்குச் சொல்லும் உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் நிமித்திகர்களுக்கும் கனவு காரார்களுக்கும் குறி சொல்வோர்க்கும் சூனியக் காரருக்கும் செவிமடுக்காதீர்கள்.
எரேமியா 27 : 10 (RCTA)
நீங்கள் தாய் நாட்டை விட்டுத் தொலை நாட்டுக்குத் துரத்தப்பட்டுப் போய் அங்கே மடியும்படி உங்களுக்கு அவர்கள் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
எரேமியா 27 : 11 (RCTA)
பபிலோனிய அரசனின் ஆளுகைக்கு உட்பட்டு, அவனுக்குச் சேவை புரியும் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிலேயே விட்டு வைப்போம்; அவர்கள் அதனைப் பயிரிட்டு அங்கேயே வாழ்ந்திருப்பார்கள்."
எரேமியா 27 : 12 (RCTA)
இவ்வார்த்தைகளையே செதேசியாஸ் மன்னனிடமும் சொன்னேன்; "பபிலோனிய அரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுக்கும் அவன் நாட்டினருக்கும் ஊழியம் செய்யுங்கள்; நீங்கள் பிழைப்பீர்கள்.
எரேமியா 27 : 13 (RCTA)
பபிலோனிய மன்னனுக்கு ஊழியஞ் செய்ய மனமில்லாத மக்களுக்கு அனுப்புவதாக ஆண்டவர் சொன்ன வாள், பஞ்சம், கொள்ளை நோய் இவற்றுக்கு நீரும் உம் நாட்டு மக்களும் ஏன் இரையாகிச் சாகவேண்டும்?
எரேமியா 27 : 14 (RCTA)
'பபிலோனிய அரசனுக்கு ஊழியஞ் செய்ய மாட்டீர்கள்' என்று சொல்லும் தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள்; ஏனெனில் அவர்கள் உங்களுக்குச் சொல்வது பொய்;
எரேமியா 27 : 15 (RCTA)
நாம் அவர்களை அனுப்பவில்லை; உங்கள் நாட்டினின்று உங்களை நாம் தொலை நாட்டிற்குத் துரத்தவும், அங்கே நீங்களும், உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன அந்தத் தீர்க்கதரிசிகளும் மடியவுமே, அவர்கள் இவ்வாறு நமது பெயரால் பொய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள், என்கிறார் ஆண்டவர்" என்று சொன்னேன்.
எரேமியா 27 : 16 (RCTA)
பின்னர் நான் அர்ச்சகர்களையும், இந்த மக்கள் அனைவரையும் நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: 'இன்னும் கொஞ்ச நாட்களுக்குள் ஆண்டவருக்குரிய பாத்திரங்களைப் பபிலோனிலிருந்து திரும்பக் கொண்டு வரப் போகிறார்கள்' என்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் உரைக்கும் தீர்க்கதரிசிகளின் சொற்களைக் கேட்காதீர்கள்; ஏனெனில் அவர்கள் உங்களுக்குப் பொய்யைத் தான் சொல்லுகிறார்கள்;
எரேமியா 27 : 17 (RCTA)
ஆதலால் அவர்களுக்குக் காது கொடாதீர்கள்; நீங்கள் வாழ விரும்பினால் பபிலோனிய மன்னனுக்கு ஊழியம் பண்ணுங்கள்; இப்பட்டணம் ஏன் பாழாக வேண்டும்?
எரேமியா 27 : 18 (RCTA)
அவர்கள் உண்மையாகவே தீர்க்கதரிசிகளாய் இருந்தால், ஆண்டவருடைய வார்த்தை அவர்களோடு இருப்பது உண்மையானால், ஆண்டவரின் கோயிலிலும், அரசனது அரண்மனையிலும், யெருசலேமிலும் மீதியாய் விடப்பட்டிருக்கும் பாத்திரங்களாவது பபிலோனுக்குப் போகாதபடி, அவர்கள் சேனைகளின் ஆண்டவர் முன்னிலையில் போய் மன்றாடட்டுமே!
எரேமியா 27 : 19 (RCTA)
பபிலோன் அரசனாகிய நபுக்கோதனசார் யூதாவின் அரசனும் யோவாக்கீமினுடைய மகனுமான எக்கோனியாசையும், யூதாவிலும் யெருசலேமிலிருந்த பெருங்குடி மக்களையும் யெருசலேமிலிருந்து பபிலோனுக்குக் கொண்டு போகையில்,
எரேமியா 27 : 20 (RCTA)
தன்னோடு கொண்டு போகாமல் விட்டுச்சென்ற தூண்கள், கடல், ஆதாரங்கள், இந்த நகரத்தில் மீதியாயுள்ள பாத்திரங்கள் ஆகியவற்றைக் குறித்துச் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
எரேமியா 27 : 21 (RCTA)
ஆண்டவரின் கோயிலிலும் யூதாவின் அரசனுடைய அரண்மனையிலும் யெருசலேமிலும் மீதியாய் விடப்பட்ட பாத்திரங்களைப் பற்றி இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்:
எரேமியா 27 : 22 (RCTA)
அவை யாவும் பபிலோனுக்குக் கொண்டு போகப்படும்; நாம் அவற்றைக் கொண்டுவரும் நாள் வரைக்கும் அவை அங்கேயே இருக்கும்; பின்பு அவற்றைக் கொண்டு வந்து, இந்த இடத்தில் திரும்பவும் வைக்கச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

BG:

Opacity:

Color:


Size:


Font: