எரேமியா 25 : 1 (RCTA)
யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீமின் நான்காம் ஆண்டில்- அதாவது பபிலோனிய மன்னன் நபுக்கோதனசாரின் முதல் ஆண்டில்- யூதாவின் மக்கள் அனைவரையும் குறித்து எரெமியாசுக்கு அருளப்பட்ட வாக்கு இதுவே:
எரேமியா 25 : 2 (RCTA)
அதை இறைவாக்கினரான எரெமியாஸ் யூதாவின் எல்லா மக்களுக்கும், யெருசலேமின் குடிகள் அனைவருக்கும் அறிவித்தார்.
எரேமியா 25 : 3 (RCTA)
அவர் அறிவித்தது: "அம்மோனின் மகனும் யூதாவின் அரசனுமாகிய யோசியாசின் பதின்மூன்றாம் ஆண்டு முதல் இன்று வரைக்கும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகளாக ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது: நான் உங்களுக்கு ஒன்றும் விடாது அதைச் சொன்னேன்; நீங்களோ கேட்கவில்லை.
எரேமியா 25 : 4 (RCTA)
ஆண்டவர் தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களை உங்களிடம் திரும்பத் திரும்ப அனுப்பினார்; ஆனால் நீங்கள் கேட்கவுமில்லை, கேட்பதற்குக் காதுகளைச் சாய்க்கவுமில்லை.
எரேமியா 25 : 5 (RCTA)
ஆண்டவர் அவர்கள் வாயிலாய், ' உங்களுள் ஒவ்வொருவனும் தன் தீநெறியையும் தீய செயல்களையும் விட்டுத் திரும்பட்டும்; அப்போது ஆண்டவர் முன்னாளில் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்த நாட்டில் என்றென்றும் வாழ்வீர்கள்.
எரேமியா 25 : 6 (RCTA)
அந்நிய தெய்வங்களைச் சேவித்து வழிபாடு செய்ய அவர்களைத் தேடி ஓடாமலும், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டாமலும் இருப்பீர்களாகில், நாம் உங்களைத் துன்புறுத்தமாட்டோம்' என்று உங்களுக்குச் சொல்லி வந்தார்;
எரேமியா 25 : 7 (RCTA)
இருப்பினும், நீங்கள் நமக்குச் செவிசாய்க்காமல், உங்கள் கைவேலைப்பாடுகளான சிலைகளால் நமக்குக் கோபமூட்டி உங்கள் மேல் தீமையை வருவித்துக் கொண்டீர்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 25 : 8 (RCTA)
ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாததால்,
எரேமியா 25 : 9 (RCTA)
இதோ, வடநாட்டின் எல்லாக் குலத்தினரையும், பபிலோனிய அரசனும் நம் ஊழியனுமாகிய நபுக்கோதனசாரையும் சேர்த்து, இந்த நாட்டுக்கும், இதன் குடிகளுக்கும், சுற்றுப்புற நாடுகள் எல்லாவற்றுக்கும் எதிராக அவர்களைக் கொண்டு வருவோம்; கொண்டு வந்து இவர்களை எல்லாம் முற்றிலும் அழித்து, நகைப்புக்கும் திகைப்புக்கும் உள்ளாக்கி, அவர்களுடைய நாடு என்றென்றும் காடாகக் கிடக்கச் செய்வோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 25 : 10 (RCTA)
மேலும் அவர்களிடமிருந்து மகிழ்ச்சியின் சந்தடியையும், அக்களிப்பின் ஆரவாரத்தையும், மணவாளன், மணவாட்டியின் குரலொலிகளையும், இயந்திரங்களின் ஓசையையும், விளக்குகளின் ஒளியையும் ஒழியச் செய்வோம்.
எரேமியா 25 : 11 (RCTA)
இந்நாடு முழுவதும் பாழாகி, பார்ப்பவர்களுக்குத் திகைப்பை விளைவிக்கும்; இம்மக்கள் எல்லாரும், பபிலோனிய மன்னனுக்கு எழுபது ஆண்டுகள் அடிமை வேலை செய்வார்கள்.
எரேமியா 25 : 12 (RCTA)
அவ்வாறு எழுபது ஆண்டுகள் கடந்த பின்னர், பபிலோனிய மன்னனையும், அந்த நாட்டினரையும், கல்தேயர் நாட்டையும் அவர்களுடைய அக்கிரமத்துக்காகத் தண்டிப்போம்; அதனை என்றென்றைக்கும் பாலை நிலமாய் ஆக்கிவிடுவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 25 : 13 (RCTA)
இந்நாட்டுக்கு விரோதமாய் நாம் சொன்ன வாக்குகளும், இந்த நூலில் எழுதப்பட்டவை அனைத்தும், எரெமியாஸ் எல்லா இனத்தார்களுக்கும் விரோதமாய்ச் சொன்ன யாவும் நாம் இந்த நாட்டின் மேல் பலிக்கச் செய்வோம்."
எரேமியா 25 : 14 (RCTA)
எரெமியாஸ் வேற்றினத்தாரைப் பற்றிக் கூறியவை: ஏனெனில் அவர்களையும் கூட வேறு பல நாட்டினரும், மாமன்னர்களும் அடிமைகளாக்குவார்கள்; அவர்களுடைய செயல்களுக்கும், கை வேலைகளுக்கும் ஏற்றவாறு அவர்களுக்குக் கைம்மாறு தருவோம்.
எரேமியா 25 : 15 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் எனக்குக் கூறிய வாக்கு இதுவே: "இந்தக் கோபத்தின் கிண்ணத்தை நம் கையினின்று எடுத்து, நாம் உன்னை அனுப்பும் மக்கள் எல்லாருக்கும் அதனின்று குடிக்கக் கொடு.
எரேமியா 25 : 16 (RCTA)
அவர்கள் அதனைக் குடித்து மயங்கி, நாம் அவர்கள் நடுவில் அனுப்பும் வாளைக் கண்டு வெறி கொள்ளுவார்கள்."
எரேமியா 25 : 17 (RCTA)
அவ்வாறே நானும் ஆண்டவரின் கையிலிருந்து அந்தக் கிண்ணத்தை வாங்கி, ஆண்டவர் என்னை அனுப்பிய மக்கள் அனைவருக்கும் அதனைக் குடிக்கக் கொடுத்தேன்.
எரேமியா 25 : 18 (RCTA)
யெருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் குடிக்கக் கொடுத்தேன்; இன்றிருப்பது போல் அவை காடாகித் திகிலுக்கும் நகைப்புக்கும் சாபனைக்கும் உள்ளாகும்படி கொடுத்தேன்.
எரேமியா 25 : 19 (RCTA)
எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனுக்கும், அவனுடைய ஊழியர்கள், தலைவர்கள்,
எரேமியா 25 : 20 (RCTA)
குடிமக்கள் அனைவருக்கும், அவர்கள் நடுவில் வாழ்ந்த வேற்று நாட்டவர்களுக்கும், ஓசித்து நாட்டு மன்னர்கள், பிலிஸ்தேய நாட்டு மன்னர்கள், ஆஸ்காலோன், காஜா, அக்காரோன், ஆஜோத்து முதலிய நாட்டு மன்னர்கள் எல்லாருக்கும்;
எரேமியா 25 : 21 (RCTA)
இதுமேயா, மோவாபு, அம்மோன் மக்களுக்கும்;
எரேமியா 25 : 22 (RCTA)
தீரின் அரசர்கள், சீதோனின் மன்னர்கள், கடற்கரை நாடுகளின் மன்னர்கள் யாவருக்கும்;
எரேமியா 25 : 23 (RCTA)
தேதான், தேமா, பூஸ் முதலிய இனத்தவர்க்கும், தலைமயிரை வட்டமாய் வெட்டிக் கொள்ளும் அனைவருக்கும்;
எரேமியா 25 : 24 (RCTA)
அராபிய அரசர்கள் அனைவருக்கும், பாலைவெளியில் வாழ்ந்த கலப்பு இனத்தவர்களின் அரசர்கள் எல்லாருக்கும்;
எரேமியா 25 : 25 (RCTA)
ஜாம்பிரின் மன்னர்கள், ஏலாமின் அரசர்கள், மேதியரின் மன்னர்கள் ஆகிய எல்லா அரசர்களுக்கும்;
எரேமியா 25 : 26 (RCTA)
அருகிலும் தொலைவிலுமிருக்கிற வடநாட்டு மன்னர்கள் யாவருக்கும், பூமியில் உள்ள நாடுகளின் அரசர்கள் எல்லாருக்கும் அந்தக் கிண்ணத்தினின்று குடிக்கக் கொடுத்தேன்; இவர்கள் அனைவருக்கும் பிறகு, சேசாக்கின் அரசன் கடைசியில் குடிப்பான்.
எரேமியா 25 : 27 (RCTA)
மீண்டும் நீ அவர்களுக்குச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: குடியுங்கள், (குடித்து) மயங்குங்கள், கக்குங்கள், விழுங்கள்; நாம் உங்கள் நடுவில் அனுப்புகின்ற வாள் முகத்தினின்று எழவே மாட்டீர்கள்.'
எரேமியா 25 : 28 (RCTA)
அவர்கள் குடிப்பதற்கு உன் கையிலிருந்து கிண்ணத்தை வாங்க மறுப்பார்களாயின், அவர்களுக்கு நீ இவ்வாறு சொல்: 'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: நீங்கள் குடிக்கத் தான் வேண்டும்;
எரேமியா 25 : 29 (RCTA)
ஏனெனில், இதோ, நமது திருப்பெயரைத் தாங்கியுள்ள இந்த நகரத்திலேயே முதலில் துன்புறுத்தப் போகிறோம்; நீங்கள் மாசில்லாதவர்களைப் போலத் தண்டனை பெறாமல் போவீர்களோ? நீங்கள் தண்டனைக்குத் தப்பவே மாட்டீர்கள்; ஏனெனில் பூமியில் வாழும் மனிதர்கள் அனைவர் மேலுமே வாளை வரச் சொன்னோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.'
எரேமியா 25 : 30 (RCTA)
ஆகையால் நீ அவர்களுக்கு விரோதமாய் இந்த வார்த்தைகளைச் சொல்லி அவர்களுக்கு அறிவி: 'ஆண்டவர் வானத்தினின்று கர்ச்சிப்பார்; தம் பரிசுத்த இருப்பிடத்திலிருந்து தம் குரலெழுப்புவார்; தம் மந்தைக்கு விரோதமாய்க் கர்ச்சிப்பார்; திராட்சைக் கனிகளை மிதிப்போரின் ஆர்ப்பரிப்புக்கொத்த கூக்குரலைப் பூமியின் மக்கள் யாவர்க்கும் எதிராய் எழுப்புவார்.
எரேமியா 25 : 31 (RCTA)
அந்த முழக்கம் பூமியின் கடை கோடி வரை முழங்கும்; ஏனெனில் மக்களினத்தோடு ஆண்டவர் வழக்காடுவார்; எல்லா மனிதர்களையும் தீர்ப்பிடத் தொடங்குகிறார்; கொடியவர்களை வாளுக்கு இரையாக்குவார், என்கிறார் ஆண்டவர்.'
எரேமியா 25 : 32 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, துன்பம் ஓரினத்தாரிடமிருந்து இன்னுமோர் இனத்தாருக்குச் செல்லும்; பெரும் புயல் பூமியின் கோடிகளினின்று புறப்பட்டு வரும்!
எரேமியா 25 : 33 (RCTA)
அந்நாளில் ஆண்டவரால் கொல்லப்பட்டவர்கள் பூமியின் ஒரு கோடி முதல் மறு கோடி வரையில் (நிரம்பிக்) கிடப்பார்கள்; அழுவாரற்று, எடுப்பாரற்று, புதைப்பாரற்றுக் குப்பை போல் அவர்கள் பூமியில் கிடப்பார்கள்.
எரேமியா 25 : 34 (RCTA)
ஆயர்களே, அழுது புலம்புங்கள், கதறுங்கள்; மந்தையின் தலைவர்களே, சாம்பலில் புரளுங்கள்; ஏனெனில் நீங்கள் கொலையுண்டு சிதறிப் போகும் நாட்கள் வந்துவிட்டன; விலையுயர்ந்த பாத்திரத்தைப் போல நம் கையினின்று விழுந்து போவீர்கள்.
எரேமியா 25 : 35 (RCTA)
ஆயர்களுக்கு புகலிடம் இராது, மந்தையின் தலைவர்களும் தப்பித்துக் கொள்ள வகையிராது.
எரேமியா 25 : 36 (RCTA)
ஆயர்களின் அழுகுரலும், மந்தையின் தலைவர்களுடைய கூக்குரலும் கேட்கிறது. ஏனெனில் ஆண்டவர் அவர்களுடைய மேய்ச்சல் நிலத்தைப் பாழாக்கி விட்டார்.
எரேமியா 25 : 37 (RCTA)
ஆண்டவருடைய கோபத்தின் காரணமாய் அமைதியாயிருந்த கிடைகள் பாழாயின.
எரேமியா 25 : 38 (RCTA)
குகையினின்று வெளியேறும் சிங்கத்தைப் போல், இந்த நாட்டை விட்டு அவர் வெளியேறினார்; கொலைஞனின் வாளாலும், அவருடைய கோபத் தீயாலும், அவர்களின் நாடு பாழாயிற்று."
❮
❯