எரேமியா 23 : 1 (RCTA)
"நமது மேய்ச்சலின் ஆடுகளைச் சிதறடித்துப் பாழாக்கும் ஆயர்களுக்கு ஐயோ கேடு!" என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 2 (RCTA)
நம் மக்களாகிய மந்தையை நடத்தும் ஆயர்களுக்கு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைக்கும் வாக்கு இதுவே: "நீங்கள் நமது மந்தையைச் சிதறடித்தீர்கள்; அவர்களைத் துரத்தினீர்கள்; அவர்களுக்குப் பணிவிடை புரியவில்லை. ஆதலால் உங்கள் செயல்களின் கெடுதிக்கேற்ற தண்டனையை உங்கள் மேல் வருவிப்போம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 3 (RCTA)
பின்னர், நாம் நமது மந்தையில் மீதியாயிருக்கும் ஆடுகளை, அவை சிதறியுள்ள நாடுகள் அனைத்தினின்றும் சேர்த்து, அவற்றின் கழனிகளுக்குத் திரும்ப அழைத்து வருவோம்; அங்கு அவை பெருகிப் பலுகும்.
எரேமியா 23 : 4 (RCTA)
அவற்றைக் கண்கானிக்கப் புதிய ஆயர்களை ஏற்படுத்துவோம்; இவர்கள் அவற்றை மேய்ப்பார்கள்; அவை இனிப் பயப்படுவதுமில்லை; திகிலடைவதுமில்லை; காணாமற்போவதுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 5 (RCTA)
நாட்கள் வருகின்றன- ஆண்டவர் கூறுகிறார்- நீதியுள்ள 'தளிரை' தாவீதுக்குப் பிறப்பிப்போம்; அரசராக இருந்து அவர் ஆட்சி செய்வார்; அவர் ஞானமுள்ளவராய் இருப்பார்; நாட்டில் நியாயத்தையும் நீதியையும் செலுத்துவார்.
எரேமியா 23 : 6 (RCTA)
அந்நாட்களில் யூதா மீட்புப் பெறும்; இஸ்ராயேல் நம்பிக்கையோடு வாழும்; 'ஆண்டவர் நமது நீதி' என்பதே அவருக்குப் பெயராய் வழங்கும்.
எரேமியா 23 : 7 (RCTA)
ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அந்நாட்களில், 'எகிப்து நாட்டினின்று இஸ்ராயேல் மக்களை மீட்டு வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்று இனி சொல்ல மாட்டார்கள்;
எரேமியா 23 : 8 (RCTA)
வட நாட்டினின்றும், அவர்கள் துரத்தப்பட்டிருந்த எல்லா நாடுகளினின்றும், இஸ்ராயேல் வீட்டாரின் சந்ததியை மீட்டுத் திரும்ப அழைத்து வந்த ஆண்டவரின் உயிர் மேல் ஆணை' என்றே இனிச் சொல்வார்கள்; அப்போது அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழ்வார்கள்."
எரேமியா 23 : 9 (RCTA)
தீர்க்கதரிசிகளைப் பற்றிய இறைவாக்கு: என் இதயம் எனக்குள்ளே நைந்து போகின்றது; என் எலும்புகள் கலகலத்துப் போகின்றன; ஆண்டவரை முன்னிட்டும், அவருடைய பரிசுத்த வாக்கியங்களை முன்னிட்டும் நான் போதையடைந்த குடியன் போலவும், மதுவினால் மயங்கிய மனிதன் போலவுமானேன்.
எரேமியா 23 : 10 (RCTA)
ஏனெனில் நாடு விபசாரிகளால் நிறைந்திருக்கிறது; சாபச் சொற்களை முன்னிட்டு அழுகிறது; புல் வெளிகள் உலர்ந்த காடாயின; அவர்கள் தீமை செய்துகொண்டே வருகின்றார்கள்; அவர்கள் தீமையில் வலிமை வாய்ந்தவர்கள்.
எரேமியா 23 : 11 (RCTA)
தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் கடவுட்பற்று அற்றவர்கள்; நம் கோயிலில் அவர்கள் செய்யும் தீமையைக் கண்டோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 12 (RCTA)
ஆகையால் அவர்களுடைய வழி இருளில் இருக்கும், வழுக்கு வழி போல் ஆகும்; அங்குத் தள்ளுண்டு விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் ஆண்டில் அவர்கள் மேல் தீமைகளைப் பொழிவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 13 (RCTA)
சமாரியாவின் தீர்க்கதரிசிகளிடம் மூடத் தனத்தைக் கண்டோம்; அவர்கள் பாகால் பெயரால் தீர்க்கதரிசனம் உரைத்து, நம் இஸ்ராயேல் மக்களை வஞ்சித்தார்கள்.
எரேமியா 23 : 14 (RCTA)
யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடமும் வெறுப்புக்குரியதைக் கண்டோம்; அவர்கள் விபசாரம் செய்கின்றனர்; பொய்யில் நடக்கிறார்கள்; தீயோருடைய மனத்திற்கு ஊக்கம் தருகிறார்கள்; அதனால் எவனும் தன் தீநெறியை விட்டுத் திரும்புவதில்லை. அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப் போல் ஆனார்கள்; அதன் குடிகள் கொமோராவைப் போல் ஆனார்கள்."
எரேமியா 23 : 15 (RCTA)
ஆகவே சேனைகளின் ஆண்டவர் தீர்க்கதரிசிகளைக் குறித்துக் கூறுவது இதுவே: "இதோ, அவர்களுக்கு உண்ண எட்டியையும், குடிக்க நஞ்சு கலந்த நீரையும் கொடுப்போம்; யெருசலேமின் தீர்க்கதரிசிகளிடம் இருந்தே கடவுட்பற்றின்மை நாடெங்கும் பரவிற்று."
எரேமியா 23 : 16 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லி வீண் நம்பிக்கைகளை உங்களுக்குத் தந்து, உங்களை மயக்கும் தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளுக்குக் காது கொடாதீர்கள்; அவர்கள் பேசுவது ஆண்டவருடைய வாய்மொழியன்று; அவர்களுடைய சொந்த மனக்காட்சியே ஆகும்.
எரேமியா 23 : 17 (RCTA)
நம்மைப் பழித்துரைப்பவர்களைப் பார்த்து அவர்கள், 'உங்களுக்குச் சமாதானம்' என்கிறார் ஆண்டவர் என்று சொல்லி வருகிறார்கள்; தன் தீயமனம் போலப் பிடிவாதமாய் நடக்கிற எவனுக்கும், ' உங்களுக்குத் தீமை நேராது' என்கிறார்கள்,"
எரேமியா 23 : 18 (RCTA)
ஆனால் ஆண்டவரின் ஆலோசனைக் குழுவில் இருந்தவன் யார்? அவருடைய வார்த்தையைப் பார்த்தவன் யார்? கேட்டவன் யார்? அவருடைய வாக்கியத்தைக் கவனித்துக் கேட்டவன் யார்?
எரேமியா 23 : 19 (RCTA)
இதோ, ஆண்டவருடைய கோபத்தின் சூறாவளி எழும்பும், அக்கிரமிகள் தலை மேல் கொடிய புயலடிக்கும்;
எரேமியா 23 : 20 (RCTA)
ஆண்டவருடைய கடுஞ்சினம் அவர்தம் இதய எண்ணங்களைச் செயல்படுத்தி முடிக்கும் வரை தணியாது; இதை நீங்கள் கடைசி நாட்களில் அறிவீர்கள்.
எரேமியா 23 : 21 (RCTA)
நாம் தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை; அவர்களாகவே ஓடினார்கள்; நாம் அவர்களிடத்தில் பேசினதுமில்லை; அவர்களாகவே தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
எரேமியா 23 : 22 (RCTA)
அவர்கள் நமது ஆலோசனைக் குழுவிலே இருந்திருந்தால், நம் வாக்கியங்களை நம் மக்களுக்கு அறிவித்து, மெய்யாகவே அவர்களை அவர்களுடைய தீய வழியினின்றும், தீய எண்ணங்களினின்றும் விலக்கியிருப்பார்கள்.
எரேமியா 23 : 23 (RCTA)
தாம் அருகில் இருக்கும் போது தான் கடவுளா? தொலைவில் இருக்கும் போதும் கடவுள் அல்லவா? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 24 (RCTA)
நம் கண்களுக்குப் புலப்படாதபடி மனிதன் மறைவிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டுள்ளோமன்றோ? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 25 (RCTA)
நமது திருப்பெயரால் பொய்களைச் சொல்லி, 'கனவு கண்டேன், கனவு கண்டேன்' என்று தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கேட்டோம்.
எரேமியா 23 : 26 (RCTA)
பொய் உரைத்துத் தங்கள் இதய வஞ்சனையைத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்லும் தீர்க்கதரிசிகளின் மனத்தில் இந்தப் பொய் எவ்வளவு காலத்திற்கு இருக்கும்?
எரேமியா 23 : 27 (RCTA)
அவர்களுடைய முன்னோர்கள் பாகாலை முன்னிட்டு நமது பெயரை மறந்தது போல், ஒவ்வொருவனும் தன் அயலானுக்குத் தன்னுடைய கனவுகளைச் சொல்லி, நம் மக்கள் நமது பெயரை மறக்கும்படி செய்ய நினைக்கிறானே!
எரேமியா 23 : 28 (RCTA)
கனவு கண்ட தீர்க்கதரிசி தன் கனவைச் சொல்லட்டும்; நமது வாக்கியத்தைக் கேட்கிறவன் நம் வாக்கியத்தை நேர்மையோடு பேசட்டும். "கோதுமைக்கும் வைக்கோலுக்கும் ஒப்புமை என்ன? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 29 (RCTA)
நம்முடைய வார்த்தை நெருப்பைப் போன்றதன்றோ? கற்பாறை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றதன்றோ? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 30 (RCTA)
ஆகையால் இதோ, ஒருவனிடமிருந்து ஒருவர் நம் வார்த்தைகளைத் திருடுகிற தீர்க்க தரிசிகளுக்கு விரோதமாய் நாம் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 31 (RCTA)
இதோ, தங்கள் நாவைப் பயன்படுத்தி, 'ஆண்டவர் கூறுகிறார்' என்று பேசுகிற தீர்க்கதரிசிகளுக்கு நாம் எதிராய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 32 (RCTA)
இதோ, பொய்க் கனவுகளைத் தீர்க்கதரிசனமாய் உரைத்துத் தங்கள் பொய்களாலும் நடிப்புகளாலும் நம் மக்களை மயக்குகின்ற தீர்க்கதரிசிகளுக்கு நாம் விரோதமாய் இருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்; ஏனெனில் நாம் அவர்களை அனுப்பவுமில்லை; அவர்களுக்கு ஆணை தந்ததுமில்லை; அவர்களால் இந்த மக்களுக்கு ஒரு பயனுமில்லை, என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 23 : 33 (RCTA)
இந்த மக்களாவது, ஒரு தீர்க்கதரிசியாவது, ஓர் அர்ச்சகராவது, 'ஆண்டவருடைய சுமை என்ன?' என்று உன்னிடம் கேட்டால், ' நீங்களே அவருடைய சுமை, உங்களை எறிந்து விடுவோம் என்கிறார் ஆண்டவர்' என்று நீ அவர்களுக்குச் சொல்:
எரேமியா 23 : 34 (RCTA)
ஆண்டவருடைய சுமை' என்று தீர்க்கதரிசியோ, அர்ச்சகரோ, மக்களுள் ஒருவனோ சொன்னால், நாம் அவனையும் அவன் வீட்டையும் தண்டிப்போம்.
எரேமியா 23 : 35 (RCTA)
உங்களுள் ஒவ்வொருவனும் தன் தன் அயலானிடம் அல்லது சகோதரனிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்.
எரேமியா 23 : 36 (RCTA)
ஆனால் 'ஆண்டவருடைய சுமை' என்று எவனும் குறிப்பிடலாகாது; ஏனெனில், அப்படிக் குறிப்பிடுவதோ அவனுக்குச் சுமையாகலாம்; நீங்களோ நம் கடவுளும் சேனைகளின் ஆண்டவருமான உயிருள்ள கடவுளின் வார்த்தைகளைத் திரித்து விடுகிறீர்கள்.
எரேமியா 23 : 37 (RCTA)
தீர்க்கதரிசியிடம், 'ஆண்டவர் என்ன பதில் சொன்னார்?' அல்லது, 'ஆண்டவர் என்ன சொன்னார்?' என்று தான் கேட்க வேண்டும்;
எரேமியா 23 : 38 (RCTA)
ஆனால் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று குறிப்பிடுவீர்களாகில், அதற்கு ஆண்டவரின் வாக்கு இதுவே: 'நீங்கள், "ஆண்டவருடைய சுமை" என்று சொல்லாதீர்கள்' என்று உங்களை அனுப்பிய போது நாம் உங்களிடம் சொல்லியிருந்தும் நீங்கள், 'ஆண்டவருடைய சுமை' என்று சொன்னபடியால்,
எரேமியா 23 : 39 (RCTA)
இதோ, உங்களையும், நாம் உங்கள் தந்தையர்க்கும் உங்களுக்கும் கொடுத்திருக்கும் நகரத்தையும் நம் முன்னிலையிலிருந்து தூக்கித் தொலைவில் எறிவோம்;
எரேமியா 23 : 40 (RCTA)
மேலும் முடிவில்லாத இழிச்சொல்லையும், நீடித்த வெட்கத்தையும் உங்கள் மேல் வரச் செய்வோம்; அவை என்றும் மறக்கப்படமாட்டா."
❮
❯