எரேமியா 22 : 1 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "நீ யூதாவின் அரசன் வீட்டுக்குச் சென்று அங்குச் சொல்ல வேண்டிய வாக்கு இதுவே:
எரேமியா 22 : 2 (RCTA)
தாவீதின் அரியணையில் உட்கார்ந்திருக்கிற யூதாவின் அரசே, ஆண்டவருடைய வாக்கைக் கேளும்; நீரும், உம் ஊழியர்களும், இந்த வாயில்களுக்குள் நுழையும் உம் மக்களும் ஆண்டவர் சொல்வதற்குச் செவி கொடுங்கள்.
எரேமியா 22 : 3 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: நீதியையும் நேர்மையையும் கடைப்பிடியுங்கள்; ஒடுக்குகிறவன் கையினின்று இடுக்கண்படுகிறவனை விடுதலை செய்யுங்கள்; அந்நியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் மனநோகப் பண்ணவேண்டாம்; அவர்களைக் கொடுமை செய்யாதீர்கள்; இந்த இடத்தில் மாசற்ற இரத்தத்தைச் சிந்தவேண்டாம்;
எரேமியா 22 : 4 (RCTA)
இவ்வார்த்தையை நுணுக்கமாய் நிறைவேற்றுவீர்களாகில், தாவீதின் குலத்தில் தோன்றிய அரசர்கள் அவரது அரியணையில் அமர்வார்கள்; தேர்களிலும் குதிரைகளிலும் ஏறிக் கொண்டு அவர்களும், அவர்களின் ஊழியர்களும், மக்களும் இவ்வீட்டின் வாயில்கள் வழியாய் உள்ளே நுழைவார்கள்.
எரேமியா 22 : 5 (RCTA)
இவ்வார்த்தைகளை நீங்கள் கேளாவிடில்,- நமதுபேரில் ஆணை!- இவ்வீடு காடாகும், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 22 : 6 (RCTA)
மீண்டும் யூதாவின் அரச குலத்துக்கு விரோதமாய் ஆண்டவர் உரைத்த வாக்கு இதுவே: ' நீ நமக்கு கலஹாத்தைப் போலவும், லீபான் மலையின் கொடுமுடி போலவும் இருக்கிறாய்; இருப்பினும், உன்னைப் பாலை நிலமாக்குவோம், குடிகளற்ற நகரமாக்குவோம்.
எரேமியா 22 : 7 (RCTA)
உனக்கு மாறாய் எழும்பும் கொலைஞர்களையும், அவர்களின் ஆயுதங்களையும் நாம் தயாராக்குவோம்; உன்னுடைய சிறந்த கேதுரு மரங்களை வெட்டி நெருப்பில் போடுவார்கள்.
எரேமியா 22 : 8 (RCTA)
பல்வேறு மக்கள் இப்பட்டணத்தின் வீதிகளில் சுற்றித் திரிந்து, ஒவ்வொருவனும் தன் அயலானை நோக்கி," இப்பெரிய பட்டணத்திற்கு ஆண்டவர் ஏன் இவ்வாறு செய்தார்?" என்பான்.
எரேமியா 22 : 9 (RCTA)
அதற்கு அவர்கள், "தங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை அவர்கள் புறக்கணித்து, அந்நிய தெய்வங்களை ஆராதித்துத் தொண்டு புரிந்தமையாலே" என்று பதில் கூறுவார்கள்."
எரேமியா 22 : 10 (RCTA)
இறந்தவனைப் பற்றி அழவேண்டாம்; அவனுக்காகத் துக்கம் கொண்டாட வேண்டாம்: புறப்படுகிறவனைப் பற்றியே அழுங்கள்; ஏனெனில் அவன் ஒருகாலும் திரும்பி வர மாட்டான், தன் பிறந்த நாட்டையும் மறுபடி பாரான்.
எரேமியா 22 : 11 (RCTA)
தன் தந்தை யோசியாசுக்குப் பதிலாய் அரசாண்டு வந்த யோசியாசின் மகனும், யூதாவின் அரசனுமாகிய செல்லோமைக் குறித்து ஆண்டவர் கூறிய வாக்கு இதுவே: "இந்த இடத்திலிருந்து புறப்பட்டுப் போன அவன் இனி ஒருபோதும் மீண்டுவரான்.
எரேமியா 22 : 12 (RCTA)
அவன் அடிமையாய்க் கொண்டு போகப்பட்ட இடத்திலேயே சாவான்; இனி ஒருபோதும் இந்நாட்டைப் பாரான்."
எரேமியா 22 : 13 (RCTA)
"அநியாயமாய்த் தன் வீட்டையும், அக்கிரமமாய்த் தன் அறைகளையும் கட்டுகிறவனுக்கு ஐயோ கேடு! அவன் தன் அயலானைக் கூலியின்றி உழைக்கச் செய்கிறான்; அவனுக்குக் கூலி கொடுக்கிறதில்லை.
எரேமியா 22 : 14 (RCTA)
அவன், 'பெரிய வீட்டையும் அகலமான மேலறைகளையும் எனக்குக் கட்டிக் கொள்வேன்' என்கிறான்; அவன் தனக்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கிறான்; கேதுரு பலகையால் சுவரை மூடிச் சிவப்பு வண்ணம் பூசி அழகுபடுத்துகிறான்.
எரேமியா 22 : 15 (RCTA)
கேதுரு மர வேலைப்பாட்டில் உன் வீடு பிறர் வீட்டினும் மேம்பட்டிருப்பதாலேயே நீ அரசனாய் இருக்கிறாயோ? உன் தந்தை உண்டு குடித்து இன்பமாய் வாழ்ந்த போதும், நீதியாயும் நேர்மையாயும் நடக்கவில்லையா?
எரேமியா 22 : 16 (RCTA)
ஏழையின் வழக்கையும் எளியவனின் வழக்கையும் தீர்த்து, அதனால் தனக்கு நன்மை தேடிக் கொண்டான்; இதெல்லாம் செய்வதே நம்மை அறிதல் அன்றோ? என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 22 : 17 (RCTA)
ஆனால் உன் கண்களும் உன் இதயமும், அநியாயமாய்ச் செல்வம் சேர்ப்பதிலும், மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும், பிறரை ஒடுக்கித் துன்புறுத்துவதிலுமே நோக்கம் கொண்டவை."
எரேமியா 22 : 18 (RCTA)
ஆதலால் யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான யோவாக்கீமுக்கு ஆண்டவர் கூறும் வாக்கு இதுவே: 'ஐயோ, சகோதரனே! ஐயோ, சகோதரியே!" என்று அவனைக் குறித்து அழமாட்டார்கள்; 'ஐயோ, ஆண்டவனே! ஐயோ, மாட்சியுள்ளோனே!' என்று சொல்லிப் புலம்ப மாட்டார்கள்;
எரேமியா 22 : 19 (RCTA)
ஒரு கழுதையைப் போல் அவன் புதைக்கப்படுவான்; புழுத்து யெருசலேமின் வாயில்களுக்கப்பால் எறியப்படுவான்."
எரேமியா 22 : 20 (RCTA)
"லீபான் மலை மேலேறிக் கூவு; பாசானில் உனது குரலையுயர்த்தி, உன் அன்பரெல்லாரும் இதோ நசுக்கப்பட்டார்கள் என்று அவரிடம் மலை மேலிருந்து கூவு.
எரேமியா 22 : 21 (RCTA)
நல்ல காலத்திலேயே உனக்குச் சொன்னோம்; நீயோ 'நான் கேட்க மாட்டேன்' என்றாய்; நம்முடைய வாக்கைக் கேளாத வழக்கம் உனக்கு இளமையிலிருந்தே இருக்கிறது.
எரேமியா 22 : 22 (RCTA)
உன்னுடைய மேய்ப்பர்களைக் கடுங்காற்றே மேய்த்து நடத்தும்; உன் அன்பர்கள் உன்னோடு அடிமைத் தனத்திற்குச் செல்வார்கள்; அப்போது நீ உன் கெடு மதியை எண்ணி வெட்கி நாணுவாய்.
எரேமியா 22 : 23 (RCTA)
லீபானில் விற்றிருக்கும் நீ, கேதுரு மரத்தில் கூடு கட்டியிருக்கும் நீ, பிரசவிக்கும் பெண்ணின் துன்பங்களைப் போன்ற துன்பங்கள் உனக்கு நேரும் போது நீ எவ்வாறு விம்முவாயோ!"
எரேமியா 22 : 24 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: நம் உயிர் மேல் ஆணை! யூதாவின் அரசனாகிய யோவாக்கீமுடைய மகன் எக்கோனியாஸ் நமது வலக்கை விரலின் மோதிரம் போலிருப்பினும், அதிலிருந்து உன்னைக் கழற்றி விடுவோம்;
எரேமியா 22 : 25 (RCTA)
உன் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்கள் கையிலும், நீ எவருடைய முகத்தைப் பார்க்க அஞ்சுகிறாயோ, அவர்கள் கையிலும், பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் கையிலும், கல்தேயர் கையிலுமே உன்னை ஒப்புவிப்போம்.
எரேமியா 22 : 26 (RCTA)
உன்னையும் உன்னைப் பெற்ற தாயையும் நீங்கள் பிறவாத அந்நிய நாட்டுக்குத் துரத்துவோம். நீங்கள் அங்கேயே சாவீர்கள்.
எரேமியா 22 : 27 (RCTA)
திரும்பி வருவதற்கு மிக விரும்பும் இந்நாட்டிற்கோ அவர்கள் மீண்டும் வரவே மாட்டார்கள்."
எரேமியா 22 : 28 (RCTA)
எக்கோனியாஸ் என்கிற அந்த மனிதன் உடைந்த மட்கலந்தானோ? ஒருவரும் விரும்பாத பானையோ? ஏன் அவனும் அவன் பிள்ளைகளும் தள்ளப்பட்டார்கள்? அறியாத நாட்டுக்குத் துரத்தப்பட்டார்கள்?
எரேமியா 22 : 29 (RCTA)
நாடே! நாடே! நாடே! ஆண்டவருடைய வார்த்தையைக் கேள்:
எரேமியா 22 : 30 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: "இந்த மனிதன் மக்கட் பேறற்றவன், தன் வாழ்நாளில் வெற்றி காணாதவன் என்று எழுது; ஏனெனில் தாவீதின் அரியணையில் உட்காரவும், இனி யூதாவில் அரசு செலுத்தவும், இவனது சந்ததியில் யாருமிரார்."
❮
❯