எரேமியா 2 : 1 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எரேமியா 2 : 2 (RCTA)
யெருசலேம் நகரத்தார் அனைவருக்கும் கேட்கும்படி நீ போய் அறிவி: ஆண்டவர் கூறுகிறார்: உன் இளமையின் அன்பை நினைவு கூர்கிறோம், பத்தினிக்குரிய உன் அன்பை அறிவோம், விதைக்கப்படாத இடமாகிய பாலைநிலத்தில் நம்மை எவ்வாறு பின்பற்றினாய் என்பதையும் நாம் நினைவு கூர்கிறோம்.
எரேமியா 2 : 3 (RCTA)
இஸ்ராயேல் இனம் ஆண்டவருக்கென அர்ச்சிக்கப்பட்டதாகவும், அவருடைய அறுவடையின் முதற்கனியாகவும் இருந்தது; அதை உண்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள்; தீங்கு அவர்களைச் சூழ்ந்து கொண்டது, என்கிறார் ஆண்டவர்
எரேமியா 2 : 4 (RCTA)
யாக்கோபின் வீட்டாரே, இஸ்ராயேல் வீட்டாரின் எல்லாக் குடும்பங்களே, ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்:
எரேமியா 2 : 5 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: உங்கள் தந்தையர் நம்மிடம் என்ன குறை கண்டார்கள்? வீணான சிலைகளை வழிபட்டு வீண் ஆனார்கள்?
எரேமியா 2 : 6 (RCTA)
நம்மை எகிப்து நாட்டினின்று விடுவித்து, பாலை நிலத்தின் வழியாகவும், கரடு முரடானதும் வறண்டதுமான நாட்டிலும், நீரற்றதும் இருள் சூழ்ந்ததுமான வழியிலும், மனிதன் வாழாததும் நடமாடாததுமான நாட்டிலும் நம்மை நடத்தி வந்த ஆண்டவர் எங்கே?' என்று உங்கள் தந்தையர் கேட்டார்களில்லையே!
எரேமியா 2 : 7 (RCTA)
செழிப்பான நாட்டுக்கு உங்களைக் கூட்டி வந்தோம்; நீங்கள் உண்டு இன்பமுறக் கூட்டி வந்தோம். ஆனால், நீங்கள் அங்கே போய்ச் சேர்ந்ததும் நமது நாட்டைத் தீட்டுப்படுத்தினீர்கள்; நமது உரிமைச் சொத்தை அருவருப்பாக்கினீர்கள்.
எரேமியா 2 : 8 (RCTA)
அர்ச்சகர்கள்கூட, 'ஆண்டவர் எங்கே?' என்று கேட்கவில்லையே! நம் திருச்சட்டத்தைக் கற்றவர்களும் நம்மை அறிந்தார்கள் அல்லர்; மேய்ப்பர்கள் நம்மை எதிர்த்தார்கள்; இறைவாக்கினர்கள் பாகால் பேரால் பேசினார்கள்; பயனற்ற பொருட்களைப் பின்பற்றிச் சென்றார்கள்.
எரேமியா 2 : 9 (RCTA)
ஆதலால் இன்னும் உங்களோடு வழக்காடுவோம். உங்கள் பிள்ளைகளின் பின்னைகளோடும் வழக்காடுவோம்;
எரேமியா 2 : 10 (RCTA)
சேத்தீம் தீவுக்களுக்குப் போய்ப் பாருங்கள், சேதாருக்கு ஆளனுப்பிப் கேளுங்கள், இத்தகைய செயல் அங்குண்டோ, பாருங்கள்.
எரேமியா 2 : 11 (RCTA)
அந்த மக்கள் வழிபடுவது உண்மையில் கடவுளர் அல்லர்; இருப்பினும், அவர்கள் தங்கள் தெய்வங்களை மாற்றிக் கொண்டாடாகளோ? ஆனால், நம் மக்கள் தங்கள் மகிமையை, பயனற்ற ஒன்றுக்காக மாற்றி விட்டனர்.
எரேமியா 2 : 12 (RCTA)
வானங்களே, இதைக் கண்டு வியப்புடையுங்கள்; மிகவும் அஞ்சித் திடுக்கிடுங்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 2 : 13 (RCTA)
நம் மக்கள் இரண்டு தீமைகள் செய்தார்கள்: உயிருள்ள நீர் சுரக்கும் ஊற்றாகிய எம்மைக் கைவிட்டனர், நீரை வைத்திராத ஓட்டைத் தொட்டிகளைத் தங்களுக்கெனக் கட்டிக் கொண்டனர்.
எரேமியா 2 : 14 (RCTA)
இஸ்ராயேல் ஓர் அடிமையோ? வீட்டில் பிறந்த ஓர் ஊழியனோ? பின்னர் ஏன் மற்றவர்களுக்கு இரையாக வேண்டும்?
எரேமியா 2 : 15 (RCTA)
அவனுக்கு எதிராய்ச் சிங்கங்கள் சீறுகின்றன, பயங்கரமாய் சீறுகின்றன; அவன் நாட்டைப் பாழாக்கி விட்டன; அவன் நகரங்கள் சுட்டெரிக்கப்பட்டன; அங்கே குடியிருப்பார் யாருமில்லை.
எரேமியா 2 : 16 (RCTA)
மெம்பீஸ், தப்னேஸ் நகரத்தார் உன்னை அடி முதல் முடி வரையில் நொறுக்கினார்கள்.
எரேமியா 2 : 17 (RCTA)
உன்னை வழி நடத்திச் செல்லும் போதே உன் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிட்டதால் அன்றோ இது நேர்ந்தது?
எரேமியா 2 : 18 (RCTA)
இப்பொழுது நைல் நதி நீரைக் குடிக்க நீ எகிப்துக்குப் போவதால் பயனென்ன? யூப்ரட்டீஸ் நதி நீரைக் குடிக்க நீ அசீரியாவுக்குப் போவதால் பயனென்ன?
எரேமியா 2 : 19 (RCTA)
உன் தீய செயலே உன்னைக் குற்றம் சாட்டும், எம்மை நீ விட்டகன்ற குற்றமே உன்னைக் கண்டிக்கும்; உன் கடவுளாகிய ஆண்டவரைக் கைவிடல் எத்துணைத் தீயது, எத்துணைக் கசப்பானது என்பதை நீ கண்டுணர்ந்து கொள். எம்மைப்பற்றிய அச்சம் உன்னிடம் இல்லையே, என்கிறவர் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர்.
எரேமியா 2 : 20 (RCTA)
நெடுநாளுக்கு முன்பே உனது நுகத்தடியை ஒடித்தாய், உனது அன்புக் கயிற்றை அறுத்தாய், 'நான் ஊழியஞ் செய்வேன்' என்று சொன்னாய், ஆம், உயர்ந்த குன்றுகள் தோறும், தழைத்த மரங்களின் நிழல்களிலெல்லாம், விலைமாதைப் போல விபசாரம் செய்து வந்தாயே.
எரேமியா 2 : 21 (RCTA)
நல்ல விதையினின்று முளைத்த திராட்சைக் கொடியாய், உன்னைத் தேர்ந்தெடுத்து நட்டு வைத்தோம்; பின்னர் எவ்வாறு நீ கெட்டுப் போனாய்? எவ்வாறு நீ காட்டுத் திராட்சையானாய்?
எரேமியா 2 : 22 (RCTA)
நீ உன்னை வெள்ளை உப்பினால் கழுவினாலும், சவுக்காரப் புல்லினால் தேய்த்து முழுகினாலும் உன் அக்கிரமத்தின் கறை நம் கண் முன்பாக மறைவதில்லை, என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
எரேமியா 2 : 23 (RCTA)
நான் தீட்டுப்படவில்லை, நான் பாகாலைத் தொழவில்லை' என்று நீ சொல்வதெப்படி? இதோ, கணவாயில் உன் கால் சுவடுகளைப் பார்; நீ செய்ததென்ன என எண்ணிப்பார்; இங்கு மங்கும் குதித்தோடும் பெண்ணொட்டகம் நீ;
எரேமியா 2 : 24 (RCTA)
பாலைநிலத்திலே பழகினதும், தன் இச்சையின் மத வெறியில் காம வாடை பிடிக்கிறதுமான காட்டுக் கழுதை நீ! அதன் காமத்தைக் கட்டுப்படுத்துபவன் யார்? அதனை யாரும் தேடி வருந்த வேண்டியதில்லை; அதன் அசுத்த நிலைமையில் எளிதில் காண்பார்கள்.
எரேமியா 2 : 25 (RCTA)
நாம்: 'செருப்புத் தேய ஓடாதே, உன் தொண்டை வறள அலையாதே' என்றோம். நீயோ: 'நம்பிக்கையெல்லாம் அற்றுப் போயிற்று, உமது வார்த்தையை ஒரு போதும் கேளேன், அந்நியர் மேல் ஆசை கொண்டேன், அவர்கள் பின்னே ஓடுவேன்' என்றாய்.
எரேமியா 2 : 26 (RCTA)
திருடன் அகப்படுகிற போது எவ்வாறு மானபங்கமடைவானோ, அவ்வாறே இஸ்ராயேல் மக்களும், அவர்களுடைய அரசர்களும் தலைவர்களும், அர்ச்சர்களும் இறைவாக்கினர்களும் மானபங்கமடைவர்.
எரேமியா 2 : 27 (RCTA)
ஒரு மரத்தை நோக்கி: 'நீ என் தந்தை' ஒரு கல்லை நோக்கி: "நீ என்னைப் பெற்றவள் என்று சொல்லி, அவற்றுக்கு முகத்தைத் திருப்பி நமக்கு முதுகையே காட்டுகின்றனர்; ஆனால் தங்கள் துன்ப வேளையில்: 'ஆண்டவரே எழுந்திரும், எங்களை விடுவியும்' என்கிறார்கள்.
எரேமியா 2 : 28 (RCTA)
நீ உண்டாக்கிக் கொண்ட தெய்வங்கள் எங்கே? உன் இடையூறு காலத்தில், முடிந்தால் அவர்கள் எழுந்து உன்னை மீட்கட்டுமே; யூதா நாடே, உன் பட்டணங்கள் எத்தனையோ, உனக்கு அத்தனை தெய்வங்கள் இருக்கிறார்கள்
எரேமியா 2 : 29 (RCTA)
நமக்கெதிராய் நீங்கள் முறையிடுவானேன்? நீங்கள் அனைவரும் நம்மைக் கைவிட்டீர்கள், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 2 : 30 (RCTA)
நாம் உங்கள் மக்களைத் தண்டித்தும் பயனில்லை; அவர்கள் தண்டனையால் திருந்தினார்கள் அல்லர்; சீறியெழும் சிங்கம் போன்றது உங்கள் இனம், உங்கள் வாளே உங்கள் இறைவாக்கினர்களை ஒழித்தது.
எரேமியா 2 : 31 (RCTA)
மக்களே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்: நாம் இஸ்ராயேலுக்குப் பாலை நிலமா? அல்லது இருள் அடைந்த பூமியா? நம் மக்கள்: 'உம்மை விட்டு அகன்றோம், இனி என்றும் உம்மிடம் திரும்பி வரமாட்டோம்' என்று சொல்லுவானேன்?
எரேமியா 2 : 32 (RCTA)
ஒரு கன்னிப்பெண் தன் ஆபரணங்களை மறப்பாளா? மணப்பெண் தன் போர்வையை மறப்பதுண்டா? ஆயினும், நம் மக்கள் நம்மை நெடுநாளாய் மறந்து விட்டனர்.
எரேமியா 2 : 33 (RCTA)
காதலர்களைத் தேடுவதில் உனக்கு எவ்வளவு திறமை! உன் வழிகளைக் கெட்ட பெண்களுக்கும் கற்றுக்கொடுத்தாயே!
எரேமியா 2 : 34 (RCTA)
மாசற்ற ஏழைகளின் இரத்தக் கறை உன் முன்றானையில் படிந்திருக்கின்றது. அது கன்னமிட்டவனைக் கொன்ற இரத்தமன்று.
எரேமியா 2 : 35 (RCTA)
நீயோ, 'நான் குற்றமற்றவன், என்னிடம் மாசுமில்லை; ஆதலால் உம் கடுஞ்சினம் என்னை விட்டகன்று விட்டது' என்கிறாய். 'நான் குற்றவாளியல்ல' என்று நீ சொன்னதால் இதோ, நாம் உன்னை தீர்ப்புக்குக் கொண்டு வருவோம்.
எரேமியா 2 : 36 (RCTA)
எவ்வளவு எளிதாக நீ உன் நெறிகளை மாற்றிக்கொள்கிறாய்! அசீரியாவால் நீ அவமானம் பட்டது போல், எகிப்தாலும் அவமானப்படுவாய்.
எரேமியா 2 : 37 (RCTA)
உன் கைகளைத் தலை மேல் வைத்துக் கொண்டு தான் அந்நாட்டை விட்டும் திரும்பி வருவாய்; உனது நம்பிக்கைக்கு ஆதாரமானவர்களை ஆண்டவர் நொறுக்கி விட்டதால் உனக்குப் பயன் ஒன்றுமிராது."
❮
❯