எரேமியா 19 : 1 (RCTA)
ஆண்டவர் எனக்குச் சொன்ன வாக்கு: "நீ போய்க் குயவனிடம் மட்கலம் ஒன்றை வாங்கிக் கொண்டு, மக்களின் மூப்பர்களுள் சிலரையும், அர்ச்சகர்களுள் முதியோர் சிலரையும் உன்னுடன் கூட்டிக் கொண்டு,
எரேமியா 19 : 2 (RCTA)
இன்னோம் மகனின் பள்ளத்தாக்குக்குச் சென்று, 'பானை ஓட்டு வாயில்' அருகே நின்று, நாம் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி:
எரேமியா 19 : 3 (RCTA)
நீ சொல்ல வேண்டியது: 'யூதாவின் மன்னர்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: கேட்பவன் எவனும் தன் காதைப் பொத்திக் கொள்ளும் அளவுக்கு மாபெரும் தீங்கை இந்த இடத்தின் மேல் கொண்டு வருவோம்;
எரேமியா 19 : 4 (RCTA)
ஏனெனில், அவர்கள் நம்மைக் கைவிட்டு, இந்த இடத்தை அசுத்த இடமாக்கி, தாங்களும் தங்கள் முன்னோரும், யூதாவின் அரசர்களும் அறியாத அந்நிய தெய்வங்களுக்கு இவ்விடத்தில் தூபங்காட்டினார்கள்; மேலும் இந்த இடத்தை மாசற்றவர்களின் இரத்தத்தால் நிரப்பினார்கள்;
எரேமியா 19 : 5 (RCTA)
பாகாலுக்குத் தகனப் பலிகளாகத் தங்கள் பிள்ளைகளைச் சுட்டெரிக்க, பாகாலுக்கெனப் பீடங்களைக் கட்டினார்கள்; அவற்றை நாம் அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; சொல்லித் தரவுமில்லை; நமது மனத்தில் கருதவுமில்லை.
எரேமியா 19 : 6 (RCTA)
ஆதலால், இதோ நாட்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர்; அப்போது இவ்விடம் இனி தோப்பேத்து என்றோ, இன்னோம் மகனின் பள்ளத்தாக்கு என்றோ சொல்லப்படாது; ஆனால் படுகொலையின் பள்ளத்தாக்கு என்றே சொல்லப்படும்.
எரேமியா 19 : 7 (RCTA)
இவ்விடத்தில் யூதாவின் திட்டங்களையும், யெருசலேமின் எண்ணங்களையும் அழிப்போம்; அவர்களின் பகைவர் முன்னிலையில் அவர்களை வாளால் வீழ்த்துவோம்; அவர்கள் உயிரைப் பறிக்கத் தேடுகிறவர்களின் கையில் அவர்களை ஒப்புவிப்போம்; அவர்களுடைய உடல்களை வானத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகப் போடுவோம்.
எரேமியா 19 : 8 (RCTA)
இப்பட்டணத்தைத் திகைப்புக்கும் நகைப்புக்கும் இலக்காகச் செய்வோம்; அதன் வழியாய்ப் போகிறவன் எவனும் அதன் ஆக்கினைகளையெல்லாம் கண்டு,
எரேமியா 19 : 9 (RCTA)
திகைத்து நிந்தை கூறுவான். தங்களுடைய சொந்தப் புதல்வர், புதல்வியரின் சதையையே அவர்கள் தின்னும்படி செய்வேன்; அவர்களுடைய பகைவர்கள் முற்றுகையிட்டு, வளைத்துக் கொண்டு, நெருக்கி, அவர்களின் உயிரைப் பறிக்கத் தேடுகையில், ஒவ்வொருவனும் தன் அயலானின் சதையைப் பிடுங்கித் தின்பான்.'
எரேமியா 19 : 10 (RCTA)
அப்போது உன்னுடன் வந்த அந்த மனிதர்களின் முன்னிலையில் மட்கலத்தை உடைத்துப் போட்டு, அவர்களுக்குச் சொல்:
எரேமியா 19 : 11 (RCTA)
'சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: திரும்பச் செப்பனிட முடியாத விதமாய் உடைந்து போன குயவனின் மட்கலத்தைப் போல். இந்த மக்களையும், இந்தப் பட்டணத்தையும் உடைப்போம்; அவர்களைப் புதைக்க வேறிடமில்லாமையால் தோப்பேத்திலேயே புதைப்பார்கள்;
எரேமியா 19 : 12 (RCTA)
இந்த இடத்தின் மட்டிலும், இதன் குடிகள் மட்டிலும் இவ்வாறே நடந்து கொள்வோம்; இப்பட்டணத்தைத் தோப்பேத்தைப் போலாக்குவோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 19 : 13 (RCTA)
யெருசலேமின் வீடுகளும், யூதா மன்னர்களின் வீடுகளும்- எந்த வீடுகளின் கூரைகளில் வான் படைகளுக்குத் தூபம் காட்டி, அந்நிய தெய்வங்களுக்குப் பானப் பலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளனைத்தும், தோப்பேத்து என்னும் இடத்தைப் போலத் தீட்டுப்படுத்தப்படும்."
எரேமியா 19 : 14 (RCTA)
ஆண்டவர் இறைவாக்குரைக்கும்படி அனுப்பின தோப்பேத்து என்னும் இடத்திலிருந்து எரெமியாஸ் திரும்பி வந்து, ஆண்டவரின் கோயில் தலைவாயிலில் நின்று கொண்டு, மக்கள் அனைவருக்கும் அறிவித்தார்:
எரேமியா 19 : 15 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் இந்தப் பட்டணத்திற்கு விரோதமாய் அறிவித்த எல்லாத் தீமைகளையும், இப்பட்டணத்தின் மீதும், இதைச் சுற்றியுள்ள நகரங்கள் மீதும், கொண்டு வருவோம்; ஏனெனில் அவர்கள் நம்முடைய வார்த்தைகளைக் கேளாமல் வணங்காக் கழுத்தினராயினர்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15