எரேமியா 18 : 1 (RCTA)
ஆண்டவர் எரெமியாசுக்கு அருளிய வாக்கு:
எரேமியா 18 : 2 (RCTA)
"நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ; அங்கு நம்முடைய வாக்கியங்களைக் கேட்பாய்."
எரேமியா 18 : 3 (RCTA)
அவ்வாறே நான் குயவன் வீட்டுக்குப் போனேன்; அவன் தன் சக்கரத்தினால் வேலை செய்து கொண்டிருந்தான்.
எரேமியா 18 : 4 (RCTA)
அவன் மண்ணால் வனையும் பாண்டம் சரியாக அமையாத போதெல்லாம், அவன் திரும்பவும் செய்ய முற்பட்டுத் தனக்குச் சரியெனத் தோன்றியவாறு அதனை வேறொரு கலமாகச் செய்தான்.
எரேமியா 18 : 5 (RCTA)
அப்பொழுது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எரேமியா 18 : 6 (RCTA)
இஸ்ராயேல் வீடே, இந்தக் குயவன் செய்ததைப் போல நாம் உனக்குச் செய்ய முடியாதா, என்கிறார் ஆண்டவர். இஸ்ராயேல் வீடே, இதோ, குயவன் கையில் இம்மண் எப்படியோ, அப்படியே நம் கையில் நீங்கள் இருக்கிறீர்கள்.
எரேமியா 18 : 7 (RCTA)
நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ வேரோடு பிடுங்கி, தகர்த்து அழிக்கப் போவதாக அறிவித்திருக்கலாம்.
எரேமியா 18 : 8 (RCTA)
ஆனால் நாம் குறிப்பிட்ட அந்த நாடு தன் தீமையை விட்டுத் திரும்புமாயின், அதற்கு நாம் தீமை செய்ய நினைத்ததற்காக மனம் வருந்துவோம்.
எரேமியா 18 : 9 (RCTA)
அவ்வாறே நாம் ஒரு நாட்டையோ ஓர் அரசையோ கட்டி நிலைநாட்டப் போவதாக அறிவித்திருக்கலாம்.
எரேமியா 18 : 10 (RCTA)
ஆனால், அது நம் சொல்லைக் கேளாமல், நம் முன்னிலையில் தீமை செய்யுமானால் அதற்கு நன்மை செய்ய நினைத்ததற்காக நாம் மனம் வருந்துவோம்.
எரேமியா 18 : 11 (RCTA)
ஆகையால் இப்பொழுது நீ யூதாவின் மக்களையும் யெருசலேமின் குடிகளையும் நோக்கிச் சொல்: 'ஆண்டவர் கூறுகிறார்: இதோ, நாம் உங்களுக்கு ஒரு தீங்குச் செய்யக் கருதுகின்றோம்; உங்களுக்கு எதிராய் ஒரு திட்டம் தீட்டுகின்றோம். ஆதலால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீய நெறியினின்று திரும்புங்கள்; உங்கள் நடத்தையையும் செயல்களையும் செவ்வைப்படுத்துங்கள்.'
எரேமியா 18 : 12 (RCTA)
ஆனால் அவர்கள், "சொல்லிப் பயனில்லை; நாங்கள் எங்களுடைய யோசனைகளையே பின்பற்றுவோம்; எங்களில் ஒவ்வொருவரும் அவரவருடைய தீய இதயத்தின் பிடிவாதப் போக்கிலேயே நடப்போம்' என்று சொல்லுகிறார்கள்.
எரேமியா 18 : 13 (RCTA)
"ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: இத்தகைய காரியத்தைப் பற்றி யாரேனும் கேள்விப்பட்டதுண்டா என, புறவினத்தார்களிடையே கேட்டுப் பாருங்கள்; இஸ்ராயேலாகிய கன்னிகை மிகவும் அருவருப்பான காரியத்தைச் செய்தாள்.
எரேமியா 18 : 14 (RCTA)
லீபான் மலையிலுள்ள உறைநீர் பாறையை விட்.டு அற்றுப் போவதுண்டோ? மிக்க வேகமாய்ப் பாய்ந்திடும் குளிர்ந்த தண்ணீர் நிறுத்தப்படுவதுண்டோ?
எரேமியா 18 : 15 (RCTA)
நம் மக்களோ நம்மை மறந்துவிட்டார்கள்; பொய்த் தெய்வங்களுக்குத் தூபம் காட்டுகிறார்கள்; தங்கள் வழிகளிலும் பழைய சாலைகளிலும் தடுமாறினார்கள்; நெடுஞ்சாலையை விட்டுக் காட்டு வழிகளிலே சென்றார்கள்;
எரேமியா 18 : 16 (RCTA)
இவ்வாறு நடந்து, தங்கள் நாடு திகிலுக்குரியதாகவும், என்றென்றும் பழிக்கத் தக்கதாகவும் ஆக்கினர்; அவ்வழியாய்க் கடந்து செல்லும் ஒவ்வொருவனும் திகைத்துத் தனது தலையை அசைக்கிறான்.
எரேமியா 18 : 17 (RCTA)
கீழைக் காற்றைப் போல நாம் அவர்களை அவர்களின் பகைவர் முன் சிதறடிப்போம்; அவர்களுடைய துன்ப காலத்தில் அவர்களுக்கு நம் முகத்தைக் காட்டாமல் முதுகையே காட்டுவோம்."
எரேமியா 18 : 18 (RCTA)
அப்போது அவர்கள், "வாருங்கள், எரெமியாசுக்கு எதிராய்ச் சூழ்ச்சிகள் செய்வோம்; அர்ச்சகரிடமிருந்து சட்டம் அழியாது; ஞானியிடமிருந்து அறிவுரை போகாது; இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கு ஒழியாது. ஆதலால் வாருங்கள், நாவினால் அவனைத் தாக்குவோம்; அவன் வார்த்தைகளை நாம் பொருட்படுத்தலாகாது" என்று சொன்னார்கள்.
எரேமியா 18 : 19 (RCTA)
ஆண்டவரே, எனக்குக் காதுகொடும்; என் பகைவர்கள் சொல்வதைக் கேளும்;
எரேமியா 18 : 20 (RCTA)
நன்மைக்குத் தீமை செய்யலாமா? என் உயிருக்குக் குழி வெட்டியிருக்கிறார்களே! நான் அவர்களுக்கு நன்மையைக் கோரிடவும், உம் கோபத்தை அவர்களிடமிருந்து தடுத்து நீக்கவும் உம் முன்னிலையில் வந்து நின்றதை நினைத்தருளும்.
எரேமியா 18 : 21 (RCTA)
ஆதலால், அவர்களுடைய மக்களைப் பஞ்சத்திற்குக் கையளியும்; அவர்களை வாளுக்கு இரையாக்கும்; அவர்களின் மனைவிமார் பிள்ளையில்லாதவர்களாகவும், கைம்பெண்களாகவும் ஆகட்டும்; அவர்களின் கணவர்மார் கொள்ளை நோயால் சாகட்டும்; அவர்களுடைய வாலிபர்கள் போரில் வாளால் மடியட்டும்.
எரேமியா 18 : 22 (RCTA)
நீர் திடீரென அவர்கள்மேல் கொள்ளைக் கூட்டத்தைக் கொண்டு வந்து விடும் போது, அவர்களின் வீடுகளிலிருந்து கூக்குரல் கேட்கப்படுவதாக! ஏனெனில், அவர்கள் என்னைப் பிடிக்கப் படுகுழி வெட்டினார்கள்; என் கால்களுக்குக் கண்ணி வைத்தார்கள்.
எரேமியா 18 : 23 (RCTA)
ஆயினும், ஆண்டவரே, என்னைக் கொல்ல அவர்கள் செய்யும் சூழ்ச்சியை நீர் அறிவீர். அவர்களுடைய அக்கிரமத்தை மன்னியாதேயும்; அவர்கள் குற்றத்தை உம் பார்வையிலிருந்து போக்காதேயும்; அவர்கள் உம் முன்னிலையில் வீழ்ச்சியடைக! உமது கோபத்தின் காலத்தில் அவர்களைக் கொடுமையாய் நடத்தும்.
❮
❯