எரேமியா 17 : 1 (RCTA)
"யூதாவின் அக்கிரமம் இரும்பெழுத்தாணியால், வைரத்துண்டின் முனையால் வரையப்பட்டிருக்கின்றது; அது அவர்களின் இதயப் பலகையிலும், பீடங்களின் மூலைகளிலும் எழுதப்பட்டிருக்கிறது.
எரேமியா 17 : 2 (RCTA)
அவர்களுடைய பிள்ளைகள், அவர்களின் பீடங்களும் புனித கோலங்களும், தழை செறிந்த மரங்களின் கீழும் உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும் திறந்த வெளிகளிலும் இருப்பதை நினைத்துக் கொண்டனர்.
எரேமியா 17 : 3 (RCTA)
ஆகையால், நீ கட்டிக் கொண்ட பாவத்திற்காக உன் நாடெங்குமுள்ள செல்வங்களையும் கருவூலங்களையும் நாம் சூறையாடுவோம்.
எரேமியா 17 : 4 (RCTA)
நாம் உனக்குக் கொடுத்த உரிமைச் சொத்து, உன்னிடத்தினின்று பறிமுதல் செய்யப்படும்; நீ அறியாத நாட்டில் உன் பகைவர்களுக்கு உன்னை நாம் அடிமையாக்குவோம்; ஏனெனில் நமது கோபத் தீயை மூட்டினாய்; அது என்றென்றும் மூண்டெரியும்."
எரேமியா 17 : 5 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: 'மனிதனை நம்புகிறவன் சபிக்கப்பட்டவன்; மனித பலவீனத்தையே அவன் தன் வலிமையாய்க் கொள்கிறான்; தன் இதயத்தை ஆண்டவரிடமிருந்து அகற்றுகிறான்.
எரேமியா 17 : 6 (RCTA)
அவன் பாலைநிலத்துப் பூண்டுக்குச் சமம்; நன்மை வந்தாலும் அதில் பலனைக் காண மாட்டான்; வறட்சி மிக்க பாலை நிலத்திலும் வாழ முடியாத உவர் நிலத்திலுமே அவன் குடியிருப்பு
எரேமியா 17 : 7 (RCTA)
ஆண்டவரை நம்புகிறவனோ ஆசி பெற்றவன்; ஆண்டவரே அவனுடைய நம்பிக்கை;
எரேமியா 17 : 8 (RCTA)
அவன் நீரருகில் நடப்பட்ட மரத்திற்கு ஒப்பானவன்; அது ஈரத்தில் வேரூன்றி இருக்கும்; கோடைக்காலத்தில் அதற்கு அச்சமில்லை; அதன் இலைகள் பசுமையோடிருக்கும்; வறட்சிக் காலத்தில் அதற்குக் கவலையில்லை; அது ஒருகாலும் கனி கெடாதிருக்காது."
எரேமியா 17 : 9 (RCTA)
இதயம் அனைத்தையும் விட வஞ்சனையுள்ளது; மிகவும் கெட்டுப் போனது; அதனை அறிகிறவன் எவன்?
எரேமியா 17 : 10 (RCTA)
ஆண்டவராகிய நாம் உள்ளத்தை ஆராய்கிறோம், இதயத்தைப் பரிசோதிக்கிறோம்; ஒவ்வொருவனுடைய நடத்தைக்கும் செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறு பலனளிக்கிறோம்."
எரேமியா 17 : 11 (RCTA)
அநியாயமாய்ச் செல்வம் திரட்டுகிறவன், தானிடாத முட்டைகளை அடைகாக்கும் கவுதாரிக்கு ஒப்பாவான்; பாதி நாட்களிலேயே இவற்றை இழந்து, கடைசி நாளில் பைத்தியனென்று சொல்லப்படுவான்.
எரேமியா 17 : 12 (RCTA)
ஆதி முதல் மகிமைக்குரிய உயர்ந்த அரியணை நமக்குண்டு; நமது பரிசுத்ததனத்தின் இடம் அதுவே;
எரேமியா 17 : 13 (RCTA)
ஆண்டவரே, இஸ்ராயேலின் நம்பிக்கையே, உம்மைக் கைவிட்டவர்கள் வெட்கி நாணுவார்கள்; உம்மை விட்டு விலகினவர்கள் மண்ணில் வரையப்பட்டவர்கள்; ஏனெனில் உயிருள்ள நீரின் ஊற்றாகிய ஆண்டவரைக் கைவிட்டு விட்டார்கள்.
எரேமியா 17 : 14 (RCTA)
ஆண்டவரே, என்னைக் குணப்படுத்தும், நான் குணமாவேன்; என்னை மீட்டருளும், நான் மீட்படைவேன்; ஏனெனில் நீரே என் பெருமை.
எரேமியா 17 : 15 (RCTA)
இதோ, அவர்கள்: "ஆண்டவரின் வாக்கெங்கே? அது நிறைவேறட்டும்" என்று என்னிடம் சொல்லுகிறார்கள்.
எரேமியா 17 : 16 (RCTA)
நானோ தீமையை அனுப்பும்படி உம்மை வற்புறுத்தவில்லை; அழிவின் நாளையும் நான் ஆசிக்கவில்லை; இதெல்லாம் உமக்குத் தெரியுமே! என் உதடுகளினின்று புறப்பட்டது உம் முகத்தின் முன்னால் இருக்கின்றதே!
எரேமியா 17 : 17 (RCTA)
நீர் எனக்குத் திகிலாய் இராதீர்; தீமையின் நாளில் என் புகலிடம் நீரே.
எரேமியா 17 : 18 (RCTA)
என்னைத் துன்புறுத்துகிறவர்கள் நாணக் கடவார்கள்; ஆனால், நான் நாணமுறாதிருக்கச் செய்யும்; அவர்கள் நடுங்கித் திகில் அடையட்டும்; நான் நடுங்காதிருப்பேனாக! துன்ப நாளை அவர்கள் மீது கொண்டு வாரும், இரட்டிப்பான அழிவினால் அவர்களை நசுக்கும்!
எரேமியா 17 : 19 (RCTA)
ஆண்டவர் என்னிடம் சொன்னார்: "நீ போய், யூதாவின் மன்னர்கள் உள்ளே போவதற்கும் வெளியே வருவதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும், யெருசலேமின் ஒவ்வொரு வாயிலிலும் நின்று கொண்டு,
எரேமியா 17 : 20 (RCTA)
அவர்களுக்கு அறிவி: "இந்த வாயில்கள் வழியாய் உள்ளே போகின்ற யூதாவின் மன்னர்களே, யூதா நாட்டு மக்களே, யெருசலேமின் குடிகளே, ஆண்டவருடைய வாக்கியத்தைக் கேளுங்கள்:
எரேமியா 17 : 21 (RCTA)
ஆண்டவர் கூறுவது இதுவே: உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளுங்கள்; ஓய்வு நாளில் சுமை தூக்க வேண்டாம்; அல்லது அதை யெருசலேமின் வாயில்கள் வழியாய் உள்ளே கொண்டு வரவும் வேண்டாம்.
எரேமியா 17 : 22 (RCTA)
ஓய்வு நாளில் உங்கள் வீடுகளினின்று சுமைகள் எடுக்க வேண்டாம். எந்த வேலையும் செய்யாதீர்கள்; உங்கள் முன்னோருக்கு நாம் கற்பித்தவாறு ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்துங்கள்.
எரேமியா 17 : 23 (RCTA)
ஆயினும் அதனை அவர்கள் கேட்டவர்களுமல்லர்; அதற்குக் காது கொடுத்தவர்களுமல்லர்; கேட்டுக் கற்றுக் கொள்ளாதபடி வணங்காக் கழுத்தாயினர்.
எரேமியா 17 : 24 (RCTA)
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: நீங்கள் நம் சொல்லுக்கமைந்து, ஓய்வு நாளில் இப்பட்டணத்தின் வாயில்கள் வழியாய்ச் சுமைகள் கொண்டு வராமலும், எந்த வேலையும் செய்யாமலும், ஓய்வு நாளைப் பரிசுத்தமாய்க் காப்பீர்களாகில்,
எரேமியா 17 : 25 (RCTA)
அரசர்களும் தலைவர்களும், தேர்களிலும் குதிரைகளிலும் ஏறி இப்பட்டணத்தின் வாயில் வழியாய் உள்ளே வந்து, தாவீதின் அரியணையில் அமர்வார்கள்; அவர்களுடன் அவர்களின் தலைவர்களும், யூதாவின் மனிதர்களும், யெருசலேமின் குடிகளும் உள்ளே போவார்கள்; இப்பட்டணம் என்றென்றும் மனிதர்களின் குடியிருப்பாய் விளங்கும்.
எரேமியா 17 : 26 (RCTA)
அப்போது, யூதாவின் பட்டணங்கள், யெருசலேமின் சுற்றுப்புறங்கள், பென்யமீன் நாடு, சிற்றூர்கள், மலைநாடு, தென்னாடு முதலிய இடங்களிலிருந்து மக்கள் தகனப் பலிகளையும் மற்றப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் கொண்டு வந்து, ஆண்டவரின் கோயிலில் அர்ப்பணம் செய்வார்கள்.
எரேமியா 17 : 27 (RCTA)
ஆனால் நமது சொல்லுக்கமைந்து ஓய்வு நாளைப் பரிசுத்தப்படுத்தாமலும், ஓய்வு நாளில் யெருசலேமின் வாயில் வழியாய்ச் சுமை தூக்கிக் கொண்டு உள்ளே வருவதை நிறுத்தாமலும் இருந்தீர்களாகில், அதன் வாயில்களில் தீ வைப்போம்; யெருசலேமின் அரண்மனைகள் அதற்கு இரையாகும்; தீயும் அவியாது மூண்டெரியும்"
❮
❯