எரேமியா 15 : 1 (RCTA)
அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "மோயீசனும் சாமுவேலும் நம் முன்னிலையில் வந்து நின்று மன்றாடினாலும் நம் உள்ளம் இந்த மக்கள் பக்கம் திரும்பாது; நமது முன்னிலையிலிருந்து அவர்களை விரட்டு; தூரமாய் அவர்கள் தொலைந்து போகட்டும்!
எரேமியா 15 : 2 (RCTA)
'நாங்கள் எங்கே போவோம்? 'என்று அவர்கள் கேட்பார்களாகில், நீ அவர்களுக்குச் சொல்ல வேண்டியது இதுவே: ஆண்டவர் கூறுகிறார்: எவன் சாவுக்குரியவனோ அவன் சாவுக்கும், எவன் வாளுக்குரியவனோ அவன் வாளுக்கும், எவன் பஞ்சத்துக்குரியவனோ அவன் பஞ்சத்துக்கும், எவன் அடிமைத்தனத்திற்கு உரியவனோ அவன் அடிமைத்தனத்திற்கும் போகட்டும்!"
எரேமியா 15 : 3 (RCTA)
நால்வகை நாசக்காரரை அவர்களுக்கு எதிராய் நாம் ஏற்படுத்துவோம்: அவர்களை வதைக்க வாளையும், கிழிக்க நாய்களையும், அடித்துக் கடித்து விழுங்க வானத்துப் பறவைகளையும், பூமியின் மிருகங்களையும் அனுப்புவோம்.
எரேமியா 15 : 4 (RCTA)
யூதாவின் அரசனாகிய எசேக்கியாசின் மகனான மனாசே என்பவன் யெருசலேமில் செய்த எல்லா அக்கிரமங்களுக்காகவும் அவர்களை உலகிலுள்ள அரசுகளுக்கெல்லாம் கொடூரக் காட்சியின் அடையாளமாக்குவோம்.
எரேமியா 15 : 5 (RCTA)
"யெருசலேமே, உன்மேல் இரக்கம் காட்டுகிறவன் யார்? உனக்காக வருத்தப்படுகிறவன் யார்? உன்னிடம் திரும்பி உன் நலத்தை விசாரிக்கிறவன் யார்?
எரேமியா 15 : 6 (RCTA)
நீ நம்மைக் கைவிட்டாய்; பின்னடைந்து போனாய்; ஆதலால் நம் கரத்தை உனக்கெதிராய் நீட்டி உன்னை வதைத்தோம். உனக்கு இரக்கம் காட்டி நாம் சலித்துப் போனோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 15 : 7 (RCTA)
பூமியின் நாற்புறங்களிலும் அவர்களை நாம் தூற்றுக் கூடையால் தூற்றியிறைத்தோம். அவர்களை வதைத்தோம்; நம் மக்களைச் சிதறடித்தோம். ஆயினும் அவர்கள் தீ நெறிகளினின்று திரும்பி வரவில்லை.
எரேமியா 15 : 8 (RCTA)
கடற்கரை மணலை விட அவர்களுள் கைம்பெண்களை மிகப் பலராக்கினோம்; வாலிபர்களின் தாய்மார்களுக்கு எதிராகப் பட்டப் பகலில் கொலைகாரனைக் கூட்டி வந்தோம்; கவலையும் திகிலும் அவர்களைத் திடீரெனத் தாக்கச் செய்தோம்.
எரேமியா 15 : 9 (RCTA)
ஏழு பேரைப் பெற்றவள் சோர்வுற்றாள்; அவள் மயங்கி விழுந்தாள்; வெளிச்சம் இருக்கும் போதே அவள் வாழ்வின் மாலை நேரம் வந்து விட்டது, வெட்கமும் நாணமுமே அவளுக்குரியன. அவளுடைய மீதிப் பிள்ளைகளைப் பகைவர் முன்னிலையில் வாளுக்கு இரையாக்குவோம், என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 15 : 10 (RCTA)
"என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நாடெங்கும் வழக்குக்கும் விவாதத்துக்கும் காரணமாய் இருக்கும்படி என்னை நீ பெற்றாயே! நான் வட்டிக்குப் பணம் கொடுக்கவுமில்லை; அல்லது வட்டிக்குக் கடன் வாங்கியதுமில்லை; இருப்பினும் என்னை எல்லாரும் சபிக்கிறார்கள்."
எரேமியா 15 : 11 (RCTA)
அதற்கு ஆண்டவர் கூறினார்: "நீ இறுதிக் காலத்தில் நலமடைவாய்; உன் துன்ப நாட்களிலும் இடையூறு காலத்திலும் உன் பகைவர்க்கு எதிராய் நாம் உனக்கு உதவி செய்வோம் என்று ஆணையிடுகிறோம்.
எரேமியா 15 : 12 (RCTA)
வட நாட்டிலிருந்து வந்த இரும்பையும் வெண்கலத்தையும் உடைக்க வல்லர் யார்?
எரேமியா 15 : 13 (RCTA)
உங்கள் எல்லைப் புறங்களின் எல்லா இடங்களிலும், உங்கள் பாவங்கள் அனைத்திற்கும் தண்டனையாக உங்கள் செல்வங்கள், கருவூலங்கள் முதலியவற்றை இலவசக் கொள்ளைப் பொருளாய்க் கொடுப்போம்.
எரேமியா 15 : 14 (RCTA)
நீங்கள் அறியாத நாட்டில் உங்கள் பகைவர்க்கு உங்களை ஊழியம் செய்ய வைப்போம்: ஏனெனில் நமது கோபத் தீ மூண்டுவிட்டது; அது என்றென்றைக்கும் எரிந்துகொண்டிருக்கும்."
எரேமியா 15 : 15 (RCTA)
ஆண்டவரே, நீர் என்னை அறிவீர்; என்னை நினைவு கூர்ந்து, என்னைக் காத்தருளும்; என்னைத் துன்புறுத்துகிறவர்களை எனக்காகப் பழிவாங்கும்; என்னை ஆதரிக்கக் காலந்தாழ்த்தாதேயும்; நான் உமக்காகத் துன்புறுகிறேன் என்பதை நினைத்தருளும்.
எரேமியா 15 : 16 (RCTA)
உம் வார்த்தைகளைக் கண்டடைந்தேன்; அவற்றை உண்டேன்; உம் வார்த்தைகள் எனக்கு மகிழ்ச்சியாயின; என் உள்ளத்திற்கு இன்பந் தந்தன. சேனைகளின் கடவுளாகிய ஆண்டவரே, உமது திருப் பெயரன்றோ எனக்கு வழங்குகிறது?
எரேமியா 15 : 17 (RCTA)
களிப்பவர் கூட்டத்தில் நான் அமர்ந்து மகிழ்ந்ததில்லை, நான் தனியனாய் அமர்ந்திருந்தேன்; ஏனெனில் உம் கரம் என் மேல் இருந்தது, நீர் என்னைச் சினத்தால் நிரப்பியிருந்தீர்.
எரேமியா 15 : 18 (RCTA)
ஏன் என் துன்பம் நீடித்திருக்கின்றது? என் காயம் ஆறாத கொடிய புண்ணாயிருப்பதேன்? நீர் எனக்கு வஞ்சகக் கானல் நீராயும், பயனற்று வற்றிப் போகும் நீரோடையாயும் இருப்பீரோ?"
எரேமியா 15 : 19 (RCTA)
ஆதலால் ஆண்டவர் கூறுகிறார்: "நீ திரும்பி வந்தால், நாம் உன்னைப் பழைய நிலையில் வைப்போம், நீ நம் முன்னிலையில் நிற்பாய்; உயர்வானதை உரைத்துப் பயனற்றதை விலக்கினால் நீ நமது வாயாக இருப்பாய்; அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப மாட்டாய்.
எரேமியா 15 : 20 (RCTA)
இந்த மக்களின் முன்னிலையில் நாம் உன்னை அசைக்க முடியாத வெண்கலச் சுவர் போலாக்குவோம்; அவர்கள் உனக்கெதிராய்ப் போரிடுவார்கள்; ஆனால் உன்னை மேற்கொள்ள அவர்களால் இயலாது; ஏனெனில் உன்னை மீட்கவும் விடுவிக்கவும் நாம் உன்னோடிருக்கிறோம், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 15 : 21 (RCTA)
கொடியவர்களின் கையினின்று நாம் உன்னை விடுவிப்போம்; முரடர்கள் பிடியினின்று உன்னை மீட்போம்."
❮
❯