எரேமியா 14 : 1 (RCTA)
மழையில்லா வறட்சியைப் பற்றி எரெமியாசுக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு:
எரேமியா 14 : 2 (RCTA)
யூதா கதறியழுகிறது; அதன் வாயில்கள் சோர்ந்து போயின; அதன் மக்கள் தரையில் உட்கார்ந்து புலம்புகிறார்கள்; யெருசலேமின் கூக்கூரல் எழும்புகிறது.
எரேமியா 14 : 3 (RCTA)
அதன் பெருங்குடி மக்கள் தங்கள் ஊழியரைத் தண்ணீருக்கனுப்புகிறார்கள்; அவர்கள் கேணிக்குச் செல்கிறார்கள்; தண்ணீரைக் காணாமல் வெறும் குடத்தோடு திரும்புகிறார்கள்; வெட்கி நாணித் தங்கள் தலையை மூடிக் கொள்கிறார்கள்.
எரேமியா 14 : 4 (RCTA)
பூமியில் மழையில்லாமையால், கழனியெல்லாம் வெடித்திருக்கிறது; உழவர்கள் நாணித் தலையில் முக்காடிட்டுக் கொள்கிறார்கள்.
எரேமியா 14 : 5 (RCTA)
கன்று போடும் பெண் மானும் காட்டிலே புல்லில்லாமையால் தன் கன்றைக் கைவிட்டு ஓடிப் போகும்.
எரேமியா 14 : 6 (RCTA)
காட்டுக் கழுதைகள் மொட்டைக் குன்றுகள் மேல் நின்று, குள்ள நரிகளைப் போலக் காற்றுக்காக மூச்சுத் திணறுகின்றன; பச்சையே காணாததால் கண் பூத்து விழுகின்றன.
எரேமியா 14 : 7 (RCTA)
ஆண்டவரே, எங்கள் பாவங்களுக்கு எண்ணிக்கையில்லை; உமக்கு விரோதமாய் நாங்கள் துரோகம் செய்தோம்; எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொன்னாலும், உமது பெயரை முன்னிட்டு இரங்கியருளும்.
எரேமியா 14 : 8 (RCTA)
இஸ்ராயேலின் நம்பிக்கையே, துன்ப வேளையில் அதன் மீட்பரே, உமது நாட்டில் நீர் அந்நியனைப் போல் இருப்பதேன்? இராத்தங்க நின்ற வழிப்போக்கனைப் போல் இருப்பதேன்?
எரேமியா 14 : 9 (RCTA)
மதி மயங்கிய மனிதனைப் போல நீர் ஆவானேன்? காப்பாற்றும் திறனற்ற வீரனுக்கு ஒப்பாவானேன்? ஆயினும் ஆண்டவரே, நீர் எங்கள் நடுவில் இருக்கின்றீர்; நாங்கள் உம் பெயரைப் பூண்டிருக்கிறோம்; ஆதலால் எங்களைக் கைவிட வேண்டாம்."
எரேமியா 14 : 10 (RCTA)
இந்த மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுகிறார்: "அவர்கள் இவ்வாறு அலைந்து திரிய விரும்பினார்கள்; தங்கள் கால்களைக் கட்டுப்படுத்தவில்லை; ஆகையால் ஆண்டவர் அவர்களை ஏற்றுக் கொள்கிறதில்லை; இப்பொழுது அவர்களுடைய அக்கிரமத்தை நினைவு கூர்ந்து அவர்களைத் தண்டிப்பார்."
எரேமியா 14 : 11 (RCTA)
ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "இந்த மக்களின் நன்மையைக் கோரி நீ மன்றாட வேண்டாம்;
எரேமியா 14 : 12 (RCTA)
அவர்கள் உண்ணா நோன்பு இருந்தாலும், அவர்கள் கூக்குரலை நாம் கேட்கமாட்டோம்; அவர்கள் நமக்குத் தகனப் பலிகளையும் தானியக் காணிக்கைகளையும் சமர்ப்பித்தாலும், அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்; அவர்களை வாளாலும் பஞ்சத்தாலும் கொள்ளை நோயாலும் மாய்த்து விடப் போகிறோம்."
எரேமியா 14 : 13 (RCTA)
அப்போது நான்: "ஐயோ ஆண்டவராகிய இறைவனே, இதோ, 'வாளும் பஞ்சமும் உங்களுக்கு வாரா. ஆனால், இந்த இடத்தில் உங்களுக்கு நீடித்த சமாதானத்தைத் தருவோம்' என்று அவர்களுக்குத் தீர்க்கதரிசிகள் கூறுகிறார்களே" என்றேன்.
எரேமியா 14 : 14 (RCTA)
அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி, "அந்தத் தீர்க்கதரிசிகள் நமது திருப்பெயரால் பொய்களைத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்; நாம் அவர்களை அனுப்பவில்லை; அவர்களுக்குக் கற்பிக்கவுமில்லை; அவர்களோடு பேசவுமில்லை; அவர்கள் உங்களுக்குத் தீர்க்க தரிசனமாய்ச் சொல்பவை வெறும் பொய்க் காட்சிகள், பயனற்ற குறிகள், தங்கள் சொந்த மனத்தின் வஞ்சகங்கள்.
எரேமியா 14 : 15 (RCTA)
ஆதலால் ஆண்டவர் இந்தத் தீர்க்கதரிசிகளைப் பற்றிக் கூறுகிறார்: நாம் அனுப்பாமலே இந்தத் தீர்க்கதரிசிகள், 'வாளும் பஞ்சமும் இந்நாட்டின் மேல் வாரா' என்று நமது திருப்பெயரால் தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். ஆயினும் இந்தத் தீர்க்கதரிசிகளே வாளாலும் பஞ்சத்தாலும் மாய்வார்கள்.
எரேமியா 14 : 16 (RCTA)
மேலும் அவர்கள் தீர்க்கதரிசனத்தைக் கேட்கும் மக்களும் பஞ்சத்துக்கும் வாளுக்கும் இரையாகி, யெருசலேமின் தெருக்களில் தள்ளுண்டு கிடப்பார்கள். இவர்களையும், அவர்களின் மனைவியரையும், புதல்வர், புதல்வியரையும் புதைக்க யாருமில்லை; ஏனெனில் அவர்கள் தீமையை அவர்கள் மேலேயே பொழிவோம்.
எரேமியா 14 : 17 (RCTA)
நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: 'என் கண்கள் இடைவிடாது இரவும் பகலும் கண்ணீர் சொரியட்டும்; ஏனெனில் என் இனமாகிய கன்னிப்பெண் நொறுக்குண்டு நைந்து படுகாயமுற்றாள்;
எரேமியா 14 : 18 (RCTA)
நான் வெளியே போனால், இதோ, இங்கே வாளால் மடிந்தவர்கள்! நான் பட்டணத்துக்குள் நுழைந்தால், இதோ, அங்கே பட்டினியால் மாய்ந்தவர்கள்! தீர்க்கதரிசியும் அர்ச்சகரும் நாடெல்லாம் அலைந்து திரிகிறார்கள்; ஆனால் அவர்களுக்கு அறிவு இல்லை."
எரேமியா 14 : 19 (RCTA)
ஆண்டவரே, யூதாவை முற்றிலும் வெறுத்து விட்டீரா? சீயோன் உமது மனத்துக்கு அருவருப்பாகி விட்டதோ? நாங்கள் நலமாக முடியாத வகையில் ஏன் எங்களைக் காயப்படுத்தினீர்? நாங்கள் சமாதானத்தைத் தேடினோம்; ஆனால் ஒரு நன்மையும் விளையவில்லை; நலமாக்கப்படும் காலத்தை எதிர்ப்பார்த்தோம்; இதோ திகில் தான் ஆட்கொண்டது.
எரேமியா 14 : 20 (RCTA)
ஆண்டவரே, எங்கள் கெடு மதியையும் எங்கள் தந்தையரின் அக்கிரமத்தையும் ஒப்புக்கொள்கிறோம்; ஏனெனில் உமக்கெதிராய் நாங்கள் பாவம் செய்தோம்.
எரேமியா 14 : 21 (RCTA)
உமது திருப்பெயரை முன்னிட்டு, எங்களை வெறுத்துத் தள்ளாதிரும்; உமது மகிமை மிகு அரியணையை அவமதிக்காதேயும்; எங்களோடு நீர் செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்து விடாதேயும்.
எரேமியா 14 : 22 (RCTA)
புறவினத்தாரின் பொய்த் தெய்வங்களுள் மழை பெய்விக்கக் கூடியவர் உண்டோ? அல்லது வானந்தான் தானாகவே மழை பெய்யுமா? எங்கள் கடவுளாகிய ஆண்டவரே, நீரல்லவோ அப்படிப்பட்டவர்? உம் மீது தான் எங்கள் நம்பிக்கையை வைக்கிறோம்; ஏனெனில் இவற்றையெல்லாம் செய்பவர் நீரே.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22