எரேமியா 13 : 1 (RCTA)
ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "நீ போய் உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி உன் இடையில் கட்டிக்கொள்; அதனைத் தண்ணீரில் துவைக்காதே."
எரேமியா 13 : 2 (RCTA)
ஆண்டவரின் வார்த்தைக்கேற்ப ஒரு கச்சை வாங்கி என் இடையில் கட்டிக் கொண்டேன்.
எரேமியா 13 : 3 (RCTA)
ஆண்டவரின் வாக்கு எனக்கு இரண்டாம் முறையாக அருளப்பட்டது:
எரேமியா 13 : 4 (RCTA)
நீ வாங்கி, இடையில் கட்டியிருக்கும் கச்சையை அவிழ்த்து எடுத்துக் கொண்டு, எழுந்து எப்பிராத்து நதிக்குப் போய் அங்கே கல் இடுக்கில் மறைத்து வை" என்றார்.
எரேமியா 13 : 5 (RCTA)
ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டவாறே நான் போய் அதனை எப்பிராத்து நதியின் ஓரத்திலே மறைத்து வைத்தேன். நாட்கள் பல கடந்த பின்னர் ஆண்டவர் ஒருநாள் என்னிடம்,
எரேமியா 13 : 6 (RCTA)
நீ எழுந்து எப்பிராத்துக்குப் போய் அங்கே நாம் மறைத்து வைக்கும்படி உனக்குச் சொன்ன அந்தக் கச்சையை அங்கிருந்து எடுத்துக் கொள்" என்றார்.
எரேமியா 13 : 7 (RCTA)
நான் அவ்வாறே எப்பிராத்துக்குப் போய், அந்தக் கச்சையைப் புதைத்த இடத்தைத் தோண்டி அதனை எடுத்தேன்; இதோ அந்தக் கச்சை ஒன்றுக்கும் பயன்படாதபடி நைந்து போயிருந்தது.
எரேமியா 13 : 8 (RCTA)
பின்னர், ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
எரேமியா 13 : 9 (RCTA)
ஆண்டவர் கூறுகிறார்: இவ்வாறு யூதாவின் செருக்கையும் யெருசலேமின் மிஞ்சின இறுமாப்பையும் நையச் செய்வோம்.
எரேமியா 13 : 10 (RCTA)
நம் சொற்களைக் கேளாமல் தங்கள் இதயத்தின் பிடிவாதப் போக்கில் நடந்து, அந்நிய தெய்வங்களைப் பின்சென்று, சேவித்து, வழிபட்டு வருகிற இந்தக் கொடிய மக்கள் ஒன்றுக்கும் உதவாத இக்கச்சையைப் போல் ஆவார்கள்.
எரேமியா 13 : 11 (RCTA)
கச்சை மனிதனின் இடையில் ஒட்டிச் சேர்ந்திருப்பது போல், இஸ்ராயேல் வீடு முழுவதையும், யூதாவின் வீடு முழுவதையும், நம்மோடு ஒன்றித்திருக்கச் செய்தோம்; அவர்கள் நமக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மகிமையாகவும் இருக்கும்படி செய்திருந்தோம்; ஆயினும் அவர்கள் நமக்குச் செவிசாய்க்கவில்லை", என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 13 : 12 (RCTA)
"நீ அவர்களுக்கு இவ்வார்த்தையைச் சொல்: 'இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: "சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும்." அவர்கள்: 'சித்தைகள் யாவும் திராட்சை இரசத்தால் நிரப்பப்படும் என்று எங்களுக்குத் தெரியாதா?' என்பார்கள்.
எரேமியா 13 : 13 (RCTA)
அப்போது நீ அவர்களுக்குச் சொல்: 'ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ, தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர்கள், அர்ச்சகர்கள், இறைவாக்கினர்கள், யெருசலேமில் வாழும் எல்லாக் குடிகளும் உட்பட, இந்நாட்டு மக்களனைவரையும் நாம் போதையால் நிரப்புவோம்.
எரேமியா 13 : 14 (RCTA)
ஒருவனோடு ஒருவன் மோதி நொறுங்கச் செய்வோம்; பிள்ளைகள் தங்கள் தந்தையோடு முட்டிக் கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர். அவர்கள் மேல் நாம் இரக்கம் காட்டவோ, அவர்களைக் காப்பாற்றவோ, அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டோம்; அவர்களை அழிக்காமல் விடோம்."
எரேமியா 13 : 15 (RCTA)
கேளுங்கள்; காது கொடுத்துக் கேளுங்கள்; செருக்கடையாதீர்கள்; ஏனெனில் ஆண்டவர் பேசுகிறார்:
எரேமியா 13 : 16 (RCTA)
உங்களை இருள் மூடிக்கொள்வதற்கு முன்னும், உங்கள் கால்கள் மலைகளின் இருளில் இடறு முன்னரும், உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மகிமைப் படுத்துங்கள்; நீங்கள் ஒளியைத் தேடிப் பார்ப்பீர்கள்; அவரோ அதனை உங்களுக்கு மந்தாரமாகவும் காரிருளாகவும் மாற்றி விடுவார்.
எரேமியா 13 : 17 (RCTA)
ஆனால் நீங்கள் இதனைக் கேளாவிடில், உங்கள் இறுமாப்புக்காக என் உள்ளம் மறைவில் அழும்; என் கண்கள் கலங்கிக் கண்ணீர் விடும்; ஏனெனில் ஆண்டவரின் மந்தை அடிமையாய்ப் பிடிபட்டது.
எரேமியா 13 : 18 (RCTA)
அரசனுக்கும் அரசிக்கும் சொல்: "தாழ்ந்த இருக்கையில் உட்காருங்கள்; ஏனெனில் உங்கள் மகிமையான மணிமுடி உங்கள் தலையிலிருந்து விழுந்து போயிற்று."
எரேமியா 13 : 19 (RCTA)
தென்னாட்டுப் பட்டணங்களெல்லாம் அடைக்கப்பட்டன; அவற்றைத் திறப்பவர் யாருமில்லை; யூதேயா முழுவதும் நாடுகடத்தப்பட்டது;
எரேமியா 13 : 20 (RCTA)
"உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கிலிருந்து வருகிறவர்களைப் பாருங்கள். உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட மந்தை, அந்தச் சிறந்த மந்தை எங்கே?
எரேமியா 13 : 21 (RCTA)
உன் நண்பர்களாக உன்னிடம் வரும்படி நீ பழக்கினவர்களை உன் மேல். அதிகாரம் உள்ளவர்களாக ஏற்படுத்தும் போது நீ என்ன சொல்லுவாய்? பிரசவிக்கும் பெண்ணின் வேதனைக்கு ஒப்பான வேதனைகள் உன்னைப் பீடிக்காமல் இருக்குமோ?
எரேமியா 13 : 22 (RCTA)
இவை யாவும் எனக்கு ஏன் நேர்ந்தன?' என்று உன் உள்ளத்தில் கேட்பாயாகில் உன் மிகுதியான அக்கிரமத்தாலேயே உன் மானம் பறந்து போனது; உன் கால்கள் அவமானத்துக்கு உள்ளாயின.
எரேமியா 13 : 23 (RCTA)
எத்தியோப்பியன் தன் தோல் நிறத்தை மாற்ற இயலுமா? சிறுத்தை தன் புள்ளிகளை மாற்ற முடியுமா? அப்படி முடியுமானால், தீமையே செய்யப் பழகிக் கொண்ட நீங்களும் நன்மை செய்யக் கூடும்.
எரேமியா 13 : 24 (RCTA)
பாலை நிலக் காற்றில் பறந்தோடும் துரும்பைப் போல, நாம் உங்களை எங்கணும் சிதறடிப்போம்.
எரேமியா 13 : 25 (RCTA)
இதுவே உன் கதி; தீமைக்கேற்ப நாம் அளந்து கொடுத்த பலன்; ஏனெனில் நீ நம்மை அறவே மறந்து விட்டாய்; பொய்களை நம்பினாய், என்கிறார் ஆண்டவர்.
எரேமியா 13 : 26 (RCTA)
நாமே உன் ஆடைகளை உன் முகத்துக்கு மேல் தூக்குவோம்; அப்போது உன் மானம் காணப்படும்;
எரேமியா 13 : 27 (RCTA)
உன் அருவருப்பான செயல்களும் விபசாரங்களும், உன் காமக் கனைப்புகளும், பரந்த வெளியில் குன்றுகளின் மேல் நீ செய்த வெறிகொண்ட வேசித்தனங்களும் நம் பார்வைக்குத் தப்பவில்லை. யெருசலெமே, உனக்கு ஐயோ கேடு! நீ சுத்தமாக்கப்படாமல் இன்னும் எத்துணைக் காலம் இருப்பாய்?"
❮
❯