எரேமியா 12 : 1 (RCTA)
ஆண்டவரே, உம்மோடு நான் வழக்காடினால், நீரே நீதியுள்ளவர் என்று விளங்கும்; இருப்பினும் நான் உம்மிடம் சில முறையீடுகளைச் செய்து கொள்கிறேன்: தீயவர்கள் வாழ்க்கையில் வளமுடன் இருப்பது ஏன்? அநியாமும் அக்கிரமும் செய்கிறவர்கள் நலமாய் வாழ்வதேன்?
எரேமியா 12 : 2 (RCTA)
நீர் அவர்களை நாட்டினீர்; அவர்கள் வேர்விட்டுப் பெருகி, வளர்ந்து கனி கொடுக்கிறார்கள்; அவர்கள் தங்கள் வாயால் உம்மைப் புகழ்கிறார்கள்; ஆனால், அவர்கள் உள்ளமோ எவ்வளவோ தொலைவிலுள்ளது.
எரேமியா 12 : 3 (RCTA)
ஆண்டவரே, நீர் என்னை அறிவீர், என்னைப் பார்த்தீர்; என் உள்ளத்தைப் பரிசோதிக்கிறீர்; அது உம்மோடு உள்ளது. அடிக்கப்படுவதற்கென இருக்கும் ஆடுகளைப் போல் அவர்களையும் ஒன்று சேர்த்துக் கொலை நாளுக்காக அவர்களைத் தயாராய் வைத்தருளும்.
எரேமியா 12 : 4 (RCTA)
எத்தனை நாட்களுக்கு நாடு அழுகையில் மூழ்கியிருக்கும்? எந்நாள் வரையில் பூமியின் புற்களெல்லாம் உலரும்? நாட்டுக் குடிகள் செய்த கொடுமையின் காரணமாய் மிருகங்களும் பறவைகளும் அழிக்கப்பட்டன; ஏனெனில் மனிதர்கள், "நமது இறுதி முடிவை அவர் காணமாட்டார்" என்று சொன்னார்கள்.
எரேமியா 12 : 5 (RCTA)
கால் நடையாய்ச் செல்பவர்களோடு ஓடும் போதே நீ களைத்துப் போவாயாகில், குதிரைகளோடு எவ்வாறு நீ போட்டியிடுவாய்? அமைதியான நாட்டிலேயே நீ அஞ்சி நடுங்குவாயாகில், யோர்தானுக்கடுத்த காடுகளில் நீ என்ன செய்வாய்?
எரேமியா 12 : 6 (RCTA)
உன் சகோதரரும் உன் தந்தையின் வீட்டாரும் கூட உன்னிடத்தில் வஞ்சமாய் நடந்துகொண்டார்கள்; உனக்குப் பின்னால் சத்தமிட்டு ஆரவாரம் செய்தார்கள்; அவர்கள் உன்னிடம் இனிய வார்த்தைகளைப் பேசினாலும் நீ அவர்களை நம்பாதே."
எரேமியா 12 : 7 (RCTA)
"நாம் நமது வீட்டைக் கைவிட்டு விட்டோம்; நம் உரிமைச் சொத்தைப் புறக்கணித்து விட்டோம்; நம் உயிருக்குயிரானவளை அவளுடைய பகைவர்களின் கையில் ஒப்படைத்து விட்டோம்;
எரேமியா 12 : 8 (RCTA)
நம் உரிமைச் சொத்து நமக்குக் காட்டுச் சிங்கமாயிற்று; நமக்கு எதிராய்க் கர்ச்சனை செய்கிறது; ஆகவே நாம் அதனைப் பகைக்கிறோம்.
எரேமியா 12 : 9 (RCTA)
நம் உரிமைச் சொத்து பல வண்ணப் பறவையாயிற்றோ? அதைச் சூழ்ந்து பட்சிக்கும் பறவைகள் கூடினவோ? காட்டிலுள்ள எல்லாக் கொடிய மிருகங்களையும் கூட்டுங்கள்; அதனை விழுங்க விரைந்து வரச் செய்யுங்கள்.
எரேமியா 12 : 10 (RCTA)
ஆயர்கள் பலர் நம் திராட்சைத் தோட்டத்தை அழித்தார்கள்; நமது பாகத்தை மிதித்துத் தள்ளினார்கள்; நம் இன்பப் பானத்தைப் பாழான பாலை நிலமாக்கி விட்டனர்.
எரேமியா 12 : 11 (RCTA)
அவர்கள் அதைப் பாழ்வெளியாக்கினர்; பாழாயின பின் அது நம்மை நோக்கி ஓலமிடுகிறது; நாடெல்லாம் காடாகி விட்டது; ஏனெனில் அதை ஆழ்ந்து சிந்திப்பவர் யாருமில்லை.
எரேமியா 12 : 12 (RCTA)
பாலை நிலத்தில் உள்ள மொட்டை மேடுகளின் மேல் எங்கும் பாழாக்குவோர் வந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எல்லாவற்றையும் அழிக்கும்; யாரும் அமைதியாய் இருக்க முடியாது.
எரேமியா 12 : 13 (RCTA)
கோதுமை விதைத்தார்கள்; ஆனால் முட்களை அறுத்தார்கள்; உடல் வருத்தி உழைத்தார்கள்; ஆனால் பலனேதும் பெறவில்லை; தங்கள் அறுவடையைப் பார்த்து வெட்கி நாணுவார்கள்; ஆண்டவரின் கடுஞ் சினமே அதற்குக் காரணம்."
எரேமியா 12 : 14 (RCTA)
நம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு நாம் பகிர்ந்து கொடுத்த சொத்தைப் பிடுங்கும் கொடிய மக்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: "இதோ நாம் அவர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வேரோடு களைவோம்; யூதாவின் வீட்டையும் அவர்கள் நடுவிலிருந்து களைவோம்;
எரேமியா 12 : 15 (RCTA)
இவ்வாறு அவர்களை நாம் களைந்த பின்னர், மீண்டும் அவர்கள் மேல் நாம் இரங்குவோம்; அவர்களுள் ஒவ்வொருவரையும் தத்தம் உரிமைச் சொத்துக்கும், சொந்த நாட்டுக்கும் திரும்பக் கூட்டிவருவோம்;
எரேமியா 12 : 16 (RCTA)
அவர்களும் நம் மக்களின் நன்னெறிகளை அக்கறையாய்க் கற்றுக் கொண்டு முன்னொருகால் பாகால் பெயரால் ஆணையிடும்படி நம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தது போல், இப்போது 'உயிருள்ள ஆண்டவர் மேல் ஆணை' என்று நம் பெயரால் ஆணையிடுவார்களாகில், அவர்களும் நம் மக்கள் நடுவில் நலமாக வாழ்வார்கள்;
எரேமியா 12 : 17 (RCTA)
ஆனால், எந்த மக்களினமாவது நம் சொற்களைக் கேளாமல் போனால், அந்த இனம் முழுவதையும் வேரோடு களைந்து அழிப்போம், என்கிறார் ஆண்டவர்,"
❮
❯