எரேமியா 1 : 1 (RCTA)
பென்யமீன் நாட்டில் அநாத்தோத்து என்னும் ஊரில் இருந்த அர்ச்சகர்களுள் ஒருவராகிய எல்சியாஸ் என்பவரின் மகனான எரெமியாசின் வார்த்தைகள்.
எரேமியா 1 : 2 (RCTA)
யூதாவின் அரசனும் அமோனின் மகனுமான யோசியாசின் நாட்களில், அவனது அரசாட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது;
எரேமியா 1 : 3 (RCTA)
யூதாவின் அரசனும், யோசியாசின் மகனுமாகிய யோவாக்கீன் நாட்களிலும் அது அருளப்பட்டது, யூதாவின் அரசனும் யோசியாசின் மகனுமான செதேயாசின் பதினோராம் ஆட்சியாண்டின் முடிவுரையிலும் யெருசலேம் நகரத்தார் அடிமைகளாகக் சொண்டு போகப்பட்ட ஐந்தாம் மாதம் வரையில் ஆண்டவருடைய வாக்கு அவருக்கு அருளப்பட்டது.
எரேமியா 1 : 4 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது.
எரேமியா 1 : 5 (RCTA)
உன் தாய் வயிற்றில் உன்னை உருவாக்கு முன்பே நாம் உன்னை அறிந்திருந்தோம்; கருப்பையினின்று நீ வெளிப்படு முன்பே உன்னை நாம் அர்ச்சித்திருக்கிறோம்; மக்களினங்களுக்கு இறைவாக்கினாராக ஏற்படுத்தினோம்."
எரேமியா 1 : 6 (RCTA)
நான்: "ஐயோ, ஆண்டவராகிய இறைவா, எனக்குப் பேசத் தெரியாது; நான் சிறுபிள்ளை!" என்றேன்.
எரேமியா 1 : 7 (RCTA)
ஆனால் ஆண்டவர் சொன்னார்: "நான் சிறுபிள்ளை' என்று சொல்லாதே. ஏனெனில் நாம் யாரிடம் உன்னை அனுப்புகிறோமோ அவர்களிடம் நீ செல்வாய்; நாம் எதைச் சொல்லக் கற்பிக்கிறோமோ அதை நீ அறிவிப்பாய்;
எரேமியா 1 : 8 (RCTA)
நீ அவர்கள் முன் அஞ்சாதே; நாம் உன்னோடு இருக்கிறோம்; உன்னை அவர்களிடமிருந்து விடுவிப்போம் என்கிறார் ஆண்டவர்."
எரேமியா 1 : 9 (RCTA)
ஆண்டவர் தமது கையை நீட்டி என் வாயைத் தொட்டு, "இதோ நம் வார்த்தைகளை உனது வாயில் ஊட்டினோம்;
எரேமியா 1 : 10 (RCTA)
பிடுங்கிப் பறிக்கவும், இடித்துத் தகர்க்கவும், அழித்து ஒழிக்கவும், கவிழ்த்து வீழ்த்தவும், கட்டி உயர்த்தவும், நட்டு வைக்கவும் மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் இதோ உன்னை ஏற்படுத்தியிருக்கிறோம்" என்றார்.
எரேமியா 1 : 11 (RCTA)
ஆண்டவருடைய வாக்கு மீண்டும் எனக்கு அருளப்பட்டது: "எரெமியா, என்ன காண்கிறாய்?" என, நான், "விழிப்பாயிருக்கும் மரக்கிளையைக் காண்கிறேன்" என்றேன்.
எரேமியா 1 : 12 (RCTA)
அதற்கு ஆண்டவர்: "நீ கண்டது சரியே; அவ்வாறே நமது வார்த்தை நிறைவேறும்படி நாமும் விழிப்பாயிருப்போம்" என்று சொன்னார்.
எரேமியா 1 : 13 (RCTA)
ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: "நீ காண்பது என்ன?" என்று கேட்டார். "பொங்கிக் கொதிவரும் பானை; அது வடக்கிலிருந்து வருகிறது" என்று சொன்னேன். அதற்கு ஆண்டவர் சொன்னார்:
எரேமியா 1 : 14 (RCTA)
வடக்கிலிருந்தே இந்நாட்டு மக்கள் அனைவர் மேலும் தீங்கு பொங்கிப் பாயும்.
எரேமியா 1 : 15 (RCTA)
இதோ வடக்கிலுள்ள எல்லா அரசுகளின் மக்களையும் அழைத்து வரப்போகிறோம், என்கிறார் ஆண்டவர்; அந்த அரசர்கள் அனைவரும் வந்து ஒவ்வொருவனும் யெருசலேம் நகர வாயில்களின் முன்பும், அதன் மதிற் சுவர்களைச் சுற்றிலும், யூதாவின் நகரங்கள் அனைத்தின் எதிரிலும், தத்தம் அரியணையை அமைத்துக் கொள்வார்கள்.
எரேமியா 1 : 16 (RCTA)
அப்பொழுது, நம்மை விட்டகன்று அந்நிய தெய்வங்களுக்குத் தூபங் காட்டி தங்கள் கைவேலைப்பாடான சிலைகளை வழிப்பட்டவர்களுக்கு எதிராக, அவர்களுடைய அக்கிரமங்களுக்கெல்லாம் தீர்ப்புக் கூறப் போகிறோம்.
எரேமியா 1 : 17 (RCTA)
நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள்; எழுந்து போய் நாம் உனக்காகக் கட்டளையிடும் எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவி. அவர்கள் முன்னால் அச்சம் கொள்ளாதே, நாமும் உன்னை அஞ்ச விடோம்;
எரேமியா 1 : 18 (RCTA)
இதோ இன்று நாடெங்கணும் உன்னை, யூதாவின் அரசர்களுக்கும் தலைவர்களுக்கும், அர்ச்சகர்களுக்கும் நாட்டின் மக்களுக்கும், அரணுள்ள நகராகவும் இருப்புத் தூணாகவும்,வெண்கல மதிற் சுவராகவும் ஏற்படுத்தினோம்.
எரேமியா 1 : 19 (RCTA)
அவர்கள் உனக்கெதிராய்ப் போராடுவார்கள்; ஆயினும் உன்னை மேற்கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் நாம் உன்னோடிருக்கிறோம், உன்னை மீட்டுக் கொள்வோம், என்கிறார் ஆண்டவர்".
❮
❯