யாக்கோபு 5 : 1 (RCTA)
பணக்காரரே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் அவல நிலையை நினைத்து அலறி அழுங்கள்.
யாக்கோபு 5 : 2 (RCTA)
உங்கள் செல்வம் மட்கிப்போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டு விட்டன.
யாக்கோபு 5 : 3 (RCTA)
உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சாட்சியாய் இருக்கும்; உங்கள் சதையைத் தின்று விடும். இறுதி நாளுக்காக நீங்கள் உங்களுக்கென நெருப்பைத் தான் குவித்து வைத்திருக்கிறீர்கள்.
யாக்கோபு 5 : 4 (RCTA)
உங்கள் வயலில் அறுவடை செய்தவர்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள். கொடுக்காத கூலி கூக்குரலிடுகிறது. அறுவடையாளர் எழுப்பும் அப்பேரொலி வான்படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.
யாக்கோபு 5 : 5 (RCTA)
இவ்வுலகிலே இன்பப் பெரு வாழ்வில் மூழ்கியிருந்தீர்கள். உங்களுடைய அழிவு நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்திருக்கிறீர்கள்.
யாக்கோபு 5 : 6 (RCTA)
நீதிமானுக்குத் தண்டனைத் தீர்ப்பளித்துக் கொலைசெய்தீர்கள். அவனோ உங்களை எதிர்க்கவில்லை.
யாக்கோபு 5 : 7 (RCTA)
ஆகவே சகோதரர்களே, ஆண்டவரின் வருகை வரை பொறுமையாயிருங்கள். பயிரிடுபவனைப் பாருங்கள். நிலத்தில் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன் மாரியும் பின் மாரியும் வருமளவும் பொறுமையோடு காத்திருக்கிறான்.
யாக்கோபு 5 : 8 (RCTA)
நீங்களும் பொறுமையாயிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரது வருகை அண்மையிலுள்ளது.
யாக்கோபு 5 : 9 (RCTA)
சகோதரர்களே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதபடி ஒருவர்க்கெதிராய் ஒருவர் குறை கூறி முறையிடாதீர்கள். இதோ! நடுவர், வாசலிலே நிற்கிறார்.
யாக்கோபு 5 : 10 (RCTA)
சகோதரர்களே, ஆண்டவர் பெயரால் பேசின இறைவாக்கினரை நினைத்துக் கொள்ளுங்கள். துன்பத்தைத் தாங்குவதிலும், பொறுமையைக் கடைப்பிடிப்பதிலும் அவர்களை மாதிரிகளாகக் கொள்ளுங்கள்.
யாக்கோபு 5 : 11 (RCTA)
இத்தகைய மனவுறுதியுள்ளவர்களைப் பேறு பெற்றவர்கள் என்கிறோம். யோபின் மன உறுதியைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் அவருக்கு என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆண்டவர் மிகுந்த இரக்கமும் தயவுமுள்ளவர் என்று அறிந்திருக்கிறீர்கள்.
யாக்கோபு 5 : 12 (RCTA)
குறிப்பாக, என் சகோதரர்களே, ஆணையிடாதீர்கள். விண்ணுலகின் மீதோ மண்ணுலகின் மீதோ, வேறெதன் மீதோ ஆணையிட வேண்டாம். நீங்கள், ஆம் என்றால் ஆம் என்றிருக்கட்டும்; இல்லை என்றால் இல்லை என்றிருக்கட்டும். இப்படிச் செய்தால் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.
யாக்கோபு 5 : 13 (RCTA)
உங்களுள் யாரேனும் துன்புற்றால் செபிக்கட்டும். மகிழ்ச்சியாயிருந்தால் இறைப்புகழ் பாடட்டும்.
யாக்கோபு 5 : 14 (RCTA)
உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர்.
யாக்கோபு 5 : 15 (RCTA)
விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார்.
யாக்கோபு 5 : 16 (RCTA)
அவன், பாவம் செய்தவனாயிருந்தால், மன்னிப்புப் பெறுவான். ஆகவே, ஒருவர்க்கொருவர் பாவ அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவருக்காக ஒருவர் செபியுங்கள்; அப்போது குணமடைவீர்கள். நீதிமான் முழு உள்ளத்தோடு செய்யும் மன்றாட்டு ஆற்றல் மிக்கது.
யாக்கோபு 5 : 17 (RCTA)
எலியாஸ் நம்மைப் போல் எளிய நிலைக்குட்பட்ட மனிதர் தான். ஆயினும், மழை பெய்யக் கூடாது என்று உருக்கமாகச் செபித்தார். மூன்று ஆண்டு ஆறு மாதங்கள் மழையில்லாது போயிற்று.
யாக்கோபு 5 : 18 (RCTA)
திரும்பவும் செபித்தார் வானம் பொழிந்தது; நிலம் விளைந்தது.
யாக்கோபு 5 : 19 (RCTA)
என் சகோதரர்களே, உங்களுள் ஒருவன் உண்மையை விட்டு விலகித் திரியும் போது, அவனை ஒருவன் மனந்திருப்பினால்,
யாக்கோபு 5 : 20 (RCTA)
தவறான வழியினின்று பாவியை மனந்திருப்புகிறவன் அவனது ஆன்மாவையே இறப்பினின்று மீட்பான் என்றும், திரளான பாவங்கள் அகலச் செய்வான் என்றும் அறிவீர்களாக.
❮
❯